தேசிங்கு ராஜன் கதை

நீண்ட காலமாக தெருப்பாடலாக பாடப்பட்டு வரும் தேசிங்கு ராஜன் கதை மிகவும் பிரபலமானது. மகாமேரு மலைத்தொடரில் முனிவர்கள் பலர் கடுந்தவத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். மாய மந்திரங்களில் தேர்ந்த ஒரு முனிவரும் அந்த மலைத் தொடரில் இருந்தார். ஒருநாள் திடிரென்று பேரும் சத்தம் கேட்டது. வனவிலங்குகள் அனைத்தும் அச்சமுற்று ஓடின. வானத்தில் இருந்து பாராசாரிக் குதிரை இறங்கி வந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்ததைக் கண்டார். தன் தவ வலிமையால் அக்குதிரை வானில் இருந்து வந்ததை அறிந்தார். மனிதர் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அக்குதிரையை தன் தவ சக்தியை பயன்படுத்தி அடக்கி டெல்லிக்கு அழைத்து சென்றார். டெல்லி மாநகரை ஆட்சி செய்து கொண்டிருந்தவர் ஷா ஆலம் பாதுஷா. அந்த பாதுஷாவிற்கு பரிசளிக்க பாராசாரிக் குதிரையை அழைத்து சென்றார் முனிவர். நகருக்கு வெளியே அந்த குதிரையைக் கட்டி அதன் மேல் பிரயோகித்திருந்த சக்தியை அகற்றினார். குதிரை மீண்டும் அட்டகாசம் புரியத் தொடங்கியது. அது எழுப்பிய பெரும்ச்சத்ததை கேட்ட மக்கள் அஞ்சினர். பாதுஷாவிடம் மக்கள் முறையிட, அவர் அமைச்சரை விவரம் அறிந்து வர அனுப்பினார். அமைச்சர் அந்த திசையில் சென்ற போது முனிவரையும் குதிரையையும் கண்டார். அவரிடம் முனிவர், “அமைச்சரே, இது தேவலோகக் குதிரை. நான் ஏன் தவ வலிமையால் அடக்கி வைத்திருந்தேன். இதன் மீது யாரும் ஏறியதில்லை. தெய்வஅருள் பெற்றவரால் தான் இதனை அடக்க முடியும். பாதுஷாவிற்கு என் பரிசு.” எனக்கூறி சென்றுவிட்டார். பாதுஷா குதிரையை அடக்க யாராவது வர மாட்டார்களா என ஆர்வமாய் இருந்தார். அவர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய போது, அமைச்சர்களில் ஒருவர், “தெற்கே செஞ்சிக்கோட்டையை ஆளும் தேரணியும், தரணி சிங்கும் பராக்கிரமசாலிகள். இக்குதிரையை அடக்க அவர்களால் தான் முடியும்.” எனக் கூறினார். அவர்களுக்கும் மற்ற அரசர்களுக்கும் ஓலை அனுப்ப பாதுஷா உத்தரவிட்டார். டெல்லி பாதுஷாவிற்கு உட்பட்ட ஆற்காட்டு பகுதியை முஸ்லிம்கள் ஆட்சி செய்து வந்தார்கள். ஆற்காட்டு மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட குருநிலப் பகுதியாக செஞ்சி விளங்கியது.

காலங்காலமாக சுதந்திர நாடாக திகழ்ந்து வந்தது செஞ்சி. இடையில் ஆக்கிரமித்திருந்த சுல்தான்கள் கப்பம் கட்ட வற்புறுத்தினார்கள். தன்மான உணர்வுள்ள செஞ்சி மன்னன் கப்பம் கட்ட மறுத்தான். செஞ்சி மன்னனை பணிய வைக்க ஆற்காட் நவாப் சைதுல்லா பலமுறை செஞ்சி மீது போர் தொடுத்தான். ஆனால் தோல்வியையே கண்டான். இந்நிலையில் தான் டெல்லி பாதுஷாவின் ஓலை கிடைத்தது. அதனைப் படித்த தேரணி மன்னன் தன் தம்பி தாரணி சிங்குடன் டெல்லி புறப்பட்டான். அப்போது தேரணி மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.

பல்வேறு நாட்டு மன்னர்கள் பாதுஷாவின் அழைப்பை ஏற்று வந்திருந்தனர். அவர்களிடம் “உங்கள் அனைவரின் வீரத்திற்கு ஒரு சோதனை வைக்கவே உங்களை அழைத்துள்ளேன். என்னிடம் ஒரு முரட்டுக் குதிரையை யாராவது அடக்கினால், பரிசாக ஒரு லட்சம் பொன்னையும், குறுநில ஆட்சியையும் அளிப்பேன். தோல்வியடைந்தால் ஏழாண்டு காலம் கடுங்காவல் தண்டனை கிடைக்கும்” எனக் கூறினார். மன்னர்கள் அனைவரையும் குதிரை இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார் பாதுஷா. குதிரையின் அட்டகாசத்தைப் பார்த்ததும் எல்லோரும் பின் வாங்கினர். தேரணி மன்னன் மட்டும் முன்வந்து “பெரும்படை திரண்டு வரும் போது சிறுபடையுடைய மன்னன் மானம் கருதி போரிடுவது மரபு. தோல்வி நிச்சயம் என்ற நிலையிலும், போரிட்டு மடிவது வீரமரணம். ஆகவே இந்த புதுமையான போட்டிக்கு நான் தயார். குதிரையின் கட்டை அவிழ்த்து விட சொல்லுங்கள்.” என்றான். அதனைக் கேட்டு வியந்த பாதுஷா போட்டிக்கு ஏற்பாடு செய்தார். தேரணியால் குதிரையை அடக்க முடியவில்லை. பலமாகத் தாக்கி கீழே சாய்த்தது. தரணி சிங்கும் குதிரையை அடக்க முயற்சித்தான். அவனுக்கும் இதே நிலை தான். இருவரும் பலமாக தாக்கப்பட்டு மயக்கமுற்றனர். கடைசியில் இருவரையும் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிலநாட்களில் அவர்கள் குணமடைந்தனர். அவர்களிடம் பாதுஷா, “உங்கள் வீரத்தைப் பாராட்டுகிறேன். எல்லோரும் பின்வாங்கிய நிலையில் நீங்கள் மட்டுமே துணிந்து நின்றீர்கள். தேவலோகக் குதிரையை மனிதர்கள் யாரும் அடக்க முடியாது. நீங்கள் உங்கள் நாட்டிற்கு திரும்பலாம்.” என்றார். தேரணி “உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. ஆனால் போட்டியில் தோல்வியடைந்தால் சிறை தண்டனை என்றீர்களே. ஆகவே நாங்கள் சிறைக்கு செல்கிறோம் எனக் கூறி விட்டு சிறைக்கு சென்றனர்.

தேரணி மன்னன் டெல்லி சென்ற ஏழாம் நாள் அரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அனைவரும் மகிழ்ச்சியுற்றனர். அரசி மட்டும் மன்னன் வரவில்லையே எனக் கவலை கொண்டால். சில நாட்களில் மன்னன் பாதுஷாவிடம் சிறைபட்டுள்ள செய்தி வந்தது. அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் அரசி. ஆண்குழந்தை பிறந்த செய்தியை தேரணிக்கு சொல்லி அனுப்பினாள். அரசி தன் குழந்தைக்கு தேசிங்கு எனப் பெயரிட்டாள்.

குழந்தை சுட்டித்தனத்துடனும், வீர விளையாட்டுகளில் ஈடுப்பாட்டுடனும் வளர்ந்தான். அவனுக்கு மகமத்கான் என்ற இஸ்லாமியத் தோழன் ஒருவன் இருந்தான். இருவரும் குதிரை ஏற்றம், வாள்சண்டை என அனைத்திலும் ஈடுப்பட்டனர். தேசிங்கு ஐந்து வயதானபோது தன் தாயிடம் சென்று “தந்தையைப் பற்றியும் சிறியத் தந்தையைப் பற்றியும் அனைவரும் புகழ்ந்து பேசுகிறார்களே, அவர்கள் எங்கே? இதுவரை நான் பார்த்தது இல்லையே?” என வினவினான். அரசி நடந்த கதையைக் கூறினாள். அதனைக் கேட்ட தேசிங்கு அந்த பாரசாரிக் குதிரையை அடக்கி, தன் தந்தையையும், சிறியத் தந்தையையும் மீட்டு வருவேன் எனக் கூறி, மகமத்கானுடன் டெல்லி சென்றான்.

டெல்லி சென்று பாதுஷாவை அவர் அரசவையில் சந்தித்தான் தேசிங்கு. “தங்களிடம் உள்ள பாரசாரிக் குதிரையை அடக்க வந்துள்ளேன்” என்றான். அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். பாதுஷா, “ஐந்து வயது கூட நிரம்பாத பாலகனான உன் பேச்சு வியப்பாக இருக்கிறது. யாரப்பா நீ” என வினவினார். தேரணியின் மகன் தேசிங்கு. குதிரையை அடக்கி என் தந்தையை மீட்கவே வந்துள்ளேன் என பதிலளித்தான். பாதுஷா “தேவலோக குதிரையை மனிதர்கள் அடக்க முடியாது. நீ தாராளமாக உன் தந்தையையும், சிறிய தந்தையையும் அழைத்து செல்லலாம்” என்றார். ஆனால் தேசிங்கு கேட்கவில்லை. தோழன் மகமத்கானிடம், “இவர்கள் நம்மை அனுமதிக்க மாட்டார்கள். நாமே சென்று குதிரையை அடக்கலாம் எனக்கூறி அவனுடன் வெளியேறினான். இருவரும் குதிரையைக் கட்டப்பட்டிருக்கும் கூடாரத்தை அடைந்தார்கள். “நண்பா, குதிரையை கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை உடை” என மகமத்கானிடம் கூறினான் தேசிங்கு. உடனே தன் உடைவாளால் சங்கிலியை உடைத்தான் மகமத்கான்.மிகவும் போராடி குதிரையின் மீது ஏறி அமர்ந்தான் தேசிங்கு. அவனைக் கீழே தள்ளிவிட குதிரை முயன்றது. முடியாமல் போகவே அவனை சுமந்துகொண்டு வானை நோக்கிப் பறந்தது. தேரணிக்கும், தரணிக்கும் செய்தி சொல்லப்பட்டது. அவர்கள் இருவரும் பாதுஷாவுடன் கூடாரத்துக்கு வந்தனர். அங்கே மகமத்கான் மட்டுமே நின்று கொண்டிருந்தான்.

குதிரையின் மீது அமர்ந்திருந்த தேசிங்கு அஞ்சாமல் குதிரையை அடக்க முயற்சித்தான். அப்போது குதிரைக்கு மட்டும் அசிரீரி கேட்டது. “உன் கர்வம் இன்னும் அடங்கவில்லையா? உன் கர்வ மிகுதியால் சாபத்துக்குள்ளாகி பூலோகம் சென்றாய். தேசிங்கு தெய்வ அருள் உடையவன். அவனால் மட்டுமே உனக்கு சாப விமோசனம் கொடுக்க முடியும். அவனை பூலோகத்தில் கொண்டு போய் சேர். அவன் ஆயள் முழுவதும் அவனுக்கு துணையாய் இரு.”

தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு பூலோகம் திரும்பியது குதிரை. குதிரை கீழே இறங்கியதும் மகமத்கான் ஓடி சென்று தன் நண்பனைக் கட்டியணைத்து பாராட்டினான். பின், அவன் தந்தை, சிறிய தந்தை, பாதுஷா என எல்லோரும் வாழ்த்தினர்.

பாதுஷா ராஜா என்ற பட்டத்தை வழங்கினார். அன்றிலிருந்து தேசிங்கு ராஜா என்றழைக்கப்பட்டான். பாதுஷா பாராசாரிக் குதிரையை பரிசாக அளித்ததுடன், மேலும் பல வெகுமானங்களையும் அளித்தான். தேரணியையும், தரணிசிங்கையும் தேசிங்கு ராஜாவுடன் அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். தேசிங்கு குதிரையை அடக்கி, தன் தந்தையுடனும் சிறிய தந்தையுடனும் வந்து கொண்டிருக்கும் செய்தி செஞ்சிக்கு தெரிவிக்கப்பட்டது. அரசியும், மக்களும் கோலாகலத்துடன் அவர்களை வரவேற்றனர்.

தேசிங்கு ராஜாவுக்கு பத்து வயதாகும் போது அவன் தாயும், தந்தையும் ஒருவர் பின் மற்றவராக இறந்தனர். தரணி சிங் தேசிங்கு ராஜாவுக்கு பட்டம் கட்டி, அரசாங்கப் பொறுப்புகளை தானே கவனித்து வந்தான். தேசிங்கு ராஜாவுக்கு இருபது வயதானபோது அவனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி தரணி சிங் டெல்லி பாதுஷாவின் தளபதி பீம்சிங்குடன் ஆலோசனை நடத்தினான். அவன் மகள் ராணி பத்மினியை தேசிங்குக்கு திருமணம் செய்து வைத்தனர். அவற்கள் குல மரபுப்படி திருமணத்திற்கு பின் ஆறு மாதத்திற்கு பின் தான் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியும். இதுவரை இளவரசனாக இருந்த தேசிங்கு மன்னனாக பட்டம் சூட்டிக் கொண்டு சிறப்புற ஆட்சி செய்தான்.

டெல்லி பாதுஷா தன் ஆளுகைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களிடம் இருந்து கப்பம் சரியாக வருகிறதா என விசாரித்தார். ஆற்காடு நவாப் சரியாக கப்பம் கட்டவில்லை. சரியான காரணமும் இல்லை என்றனர் அமைச்சர்கள். ஆற்காடு நவாப் கப்பம் கட்டாததோடு அதற்கான காரணத்தையும் தெரிவிக்காதது தன்னை அலட்சியப்படுத்துவதாகவே நினைத்து கடும் கோபம் கொண்டார், பாதுஷா. அர்க்காரு பாப்பையா என்பவரை அனுப்பி தக்க காரணத்தை அறிந்து வருமாறு பாதுஷா அனுப்பினார். பாதுஷாவின் பகையைப் பெற நவாப் விரும்பவில்லை. தன் ஆளுகைக்கு உட்பட்ட நூற்றி எழுபத்திரண்டு பாளையங்களில் இருந்து கப்பம் சரியாக வருகிறதா எனத் தன் தலைமை கணக்கரிடம் கேட்டான் நவாப். செஞ்சியில் இருந்து மட்டும் கப்பம் வரவில்லை. சுமார் பன்னிரண்டு ஆண்டு கால நிலுவை உள்ளது என்றார்.

நவாப் தன் படைத்தளபதி தோன்றமல்லண்ணை அழைத்து, “பாதுஷாவிற்கு நாம் சரியாக கப்பம் கட்டவில்லையென்று அமைச்சரை அனுப்பி விட்டார். அவருக்கு செலுத்த போதிய தொகை நம்மிடம் இல்லை. அதனால் சிறிய படையுடன் செஞ்சிக்கு சென்று தேசிங்குவிடம் கப்பம் கேள். அவன் மறுத்தால் சிறை பிடித்து இழுத்து வா.” என்று கட்டளையிட்டான். பிறகு  அர்க்காரு பாப்பையாவிடம் இன்னும் இருபது நாட்களுக்குள் நானே பாதுஷாவை சந்தித்துக் கப்பம் கட்டி விடுவதாக கூறி அவரை அனுப்பி வைத்தான்.

நவாபின் கட்டளைப்படி தோன்றமல்லண்ணன் படையுடன் புறப்பட்டான். வழியில் திமிரி என்ற நகரை ஆண்ட ஷேக் முகமதுவை சந்தித்தான். அவன் தேசிங்குவின் வீரதீர பராக்கிரமங்களை பற்றிக் கூறினான். தேசிங்குவிடம் மோதினால் தோல்வி நிச்சயம் என்று கூறினான். தோன்றமல்லண்ணன் அஞ்சவில்லை. தன் வலிமையைக் காட்டுவதாகக் கூறிப் புறப்பட்டான். பிறகு ஆரணிக்கு வந்தான். அப்போது ஆரணியை வேங்கடராயன், சீனிவாசராவ், சந்திரராஜன் ஆகியோர் கூட்டாக ஆட்சி செய்தனர். அவர்களும் தேசிங்குவின் பெருமைகளை கூறினர். இவ்வாறு பலரும் தேசிங்குவைப் பற்றி கூறுவதைக்கேட்ட தோன்றமல்லண்ணன் குழப்பத்துக்குள்ளானான்.

நவாப் பேச்சைக் கேட்டு தேசிங்குவுடன் மோதினால் உயிருக்கே ஆபத்து வந்து விடுமோ? பின்வாங்கி ஆற்காட்டுக்கு திரும்பி சென்றால் நவாப் கடுமையான தண்டனை விதிப்பாரே! என செய்வதறியாது செஞ்சிக்கோட்டைக்கு சற்று தொலைவில் இருந்த தேவனூர் பேட்டையை அடைந்தான். போர்புரிய நகருக்குள் நுழையும் முன் முரசு கொட்டி அறிவிக்க வேண்டும் – இது தான் மரபு. எனவே தோன்றமல்லண்ணன் முரசு கொட்டினான். அம்முரசைக் கேட்ட தேசிங்கும், தரணி சிங்கும் ஆலோசனை நடத்தினர். “தேசிங்கு, நாம் பன்னிரெண்டு ஆண்டுகளாக கப்பம் கட்டவில்லை. இது நவாபுக்கு ஆத்திரத்தை உண்டாக்கலாம். நீ சிறியவன். இப்போது தான் திருமணம் முடிந்து பட்டமும் ஏற்றிருக்கிறாய். சிறிது காலமாவது நிம்மதியுடன் நீ வாழா வேண்டுமென நினைக்கிறேன் என்றான் தரணி சிங்.

“சிற்றப்பா, நாம் அடங்கிப் போக வேண்டும் என்பது தான் உங்கள் எண்ணமா? என்று கேட்டான் தேசிங்கு. “அடங்க சொல்லவில்லை மகனே, நிலைமையை அனுசரித்துப் போ என்கிறேன். நம் படை சிறியது. நவாபின் படை பெரியது. அதனால் இந்த சமயத்தில் அடங்கி படை பலத்தை பெருக்கிய பின் போரிடலாம்.” என நயமாகக் கூறினான் தரணி சிங். தேசிங்கு அதற்கு பதில் கூறாமல், வீரர்களை அழைத்து, “தேவனூர் ஆற்றங்கரையில் முகாமிட்டிருக்கும் நவாபின் படைத்தளபதியை அழைத்து வாருங்கள்” என உத்தரவிட்டான்.  தோன்றமல்லண்ணன் அரண்மனைக்கு வந்து வணங்கி நின்றான். “இதுவரை எங்கள் ஆளுகைக்குட்பட்ட எல்லையில் யாரும் படையுடன் வந்து நின்றதில்லை. அதற்கான காரணம் என்ன?” என்று தேசிங்கு ராஜா கேட்டான். அதற்கு, “ஆற்காடு நவாப் சைதுல்லாவின் தூதுவனாக நான் வந்துள்ளேன். எங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைவரும் கப்பம் கட்டி வருகின்றனர். உங்களைத் தவிர.” என்றான் தோன்றமல்லண்ணன்.

ஆவேசமடைந்த தேசிங்கு, “கப்பம் கட்டுவதா? யாருக்கு யார் கப்பம் கட்டுவது? உங்கள் நவாப் இதனைத் தெரிவித்து இருந்தால் இந்நேரம் எமலோகம் சென்று இருப்பார். கப்பம் கட்ட முடியாது. தைரியமிருந்தால் உங்கள் நவாபை வரச்சொல்லுங்கள்.” என்றான். தங்கள் கருத்தை அப்படியே கூறுகிறேன் எனக் கூறி தோன்றமல்லண்ணன் புறப்பட்டான்.

ஆற்காடு நவாப் தன் தளபதி கப்பத்தொகையுடன் செஞ்சியிலுருந்து வருவான் என எதிர்பார்த்தான். ஆனால் தளபதி சொன்னதைக் கேட்ட நவாப் கொதித்தெழுந்தான். தன் அமைச்சரிடம், “நம் ஆளுகைக்கு உட்பட்ட பாளையக்காரர்களை ஒன்று திரட்டி செஞ்சியின் மீது போர் தொடுக்கத் தயாராகுங்கள்.” என உத்தரவிட்டான்.

நவாபின் படை செஞ்சியை நோக்கி வருவதை அறிந்த தரணிசிங், தேசிங்குவிடம் “எண்பதானாயிரம் குதிரை வீரர்களுடனும், நவீன போர் ஆயுதங்களுடனும் நவாப் வருகிறான். நம்மிடம் இருப்பது முந்நூறு குதிரை வீரர்கள் தான். ஆகவே நன்றாக யோசிக்க வேண்டும்” எனக் கூறினான். ஆனால் தேசிங்கு இதனை ஏற்கவில்லை. “அவர்களிடம் ஆயிரமாயிரம் வீரர்கள் இருக்கலாம். ஆனால் என் நண்பன் மகமதுகான் ஒருவன் எல்லா வீரர்களையும் சிதறடித்து விடுவான். ஆற்காட்டு நவாப் போர் திரட்டி வந்து விட்டான். இந்நேரத்தில் சமரசம் பேசுவது கோழைத்தனம் இல்லையா! என்ன நடந்தாலும் நாம் போரிட்டே தீருவோம்.” என்றான். அச்சமயம் மகமதுகானுக்கு திருமண ஏற்பாடாகி இருந்தது. தேசிங்கு அனுப்பிய செய்தி கிடைத்ததும் மறுயோசனை செய்யாமல் உடனே புறப்பட்டான், மகமதுகான். தன் திருமனததைக் கூட உதறிவிட்டு நண்பனுக்காக போர்க்கோலம் பூண்டு வந்த மகமத்கானின் தியாக உள்ளத்தின் சிறப்பை எண்ணி தேசிங்கு வியந்தான். தேசிங்குக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் முடிவடையாததால் இருவருக்கும் இடையே திரைக்கட்டி பேச அனுமதித்தார்கள். ராணிபத்மினி தேசிங்குவிடம் நம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பேசினாலும் கண் கலங்கினாள். அவளிடம் விடைபெற்றுக் கொண்டு தேசிங்கு போர்முனைக்கு புறப்பட்டான். தேசிங்கு ராஜாவும் மகமதுகானும் வழி நடத்த தரணிசிங்கும் மற்ற வீரர்களும் வீர முழக்கமிட்டு சென்றனர். தேசிங்கு எதிரி படையினுள் புகத் துணிந்தான். நண்பா, நீ இரு. நான் படைகளை சிதறடித்து வருகிறேன் எனக்கூறி மகமதுகான் எதிரிப்படையினுள் நுழைந்தான். தன் வாளை எடுத்து நாலாப்பக்கமும் சுழற்றி வீரர்களின் தலைகளைக் கொய்தான். அவனின் வீரத்தைக் கண்டு திகைத்த நவாப் பீரங்கித் தாக்குதலை நிகழ்த்தினான். நிலைகுலைந்த மகமதுகான் பீரங்கி குண்டால் தாக்கப்பட்டு இறந்தான். நண்பன் இறந்த செய்தியைக் கேட்ட தேசிங்கு சீற்றம் கொண்டு எதிரிப் படையினுள் நுழைந்தான். வீரர்களைக் கொன்று குவித்தான். நவாப் படை தோற்று விடுமோ என்ற நிலை வந்த போது சுபாங்கித்துரை என்பவன் மறைந்திருந்து தேசிங்கின் மார்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s