சிறுகதை – “பெரியவர்”

“நீயா நானா” பார்க்க தயாரான ரியாஸிடம், “சர்வீசுக்கு கொடுத்த மொபைலை வாங்கிட்டு வரலாம், வா” என்று அழைத்தேன்.

“என்னோட மொபைலை வேணும்னா யூஸ் பண்ணிகோடா. 9 மணி ஆகுது. ஞாயிற்றுக்கிழமை வேற. கடை திறந்திருக்குமா?”- ரியாஸ்.

“கடைக்காரர்ட்ட பேசிட்டேன். வரச்சொன்னார். இன்னைக்கு சண்டே, அட்ஜஸ்ட் பண்ணியாச்சு. மொபைல் இல்லாம நாளைக்கெல்லாம் ஒரு மணி நேரத்தைக் கூட ஓட்ட முடியாது.”

ரியாஸூடன் வெளியில் வந்து வண்டியை எடுக்கும்போது, மழை சன்னமாக விழுந்து கொண்டிருந்தது. என்னைப் போல் அவனும் “மழைவிரும்பி”, அதனால் மழையில் நனைந்தபடி மிதமான வேகத்தில் சென்றோம்.

 

மேம்பாலம் ஏறி இறங்கும்போது கவனித்தேன். ஒரு பைக் நடுரோட்டில் கீழே விழுந்து கிடந்தது. வண்டியின் அடியில் கால்கள் சிக்கியவாறு ஒரு 60 வயது மதிக்கத்தக்க பெரியவர், உடலில் எந்த சலனமுமின்றி கிடந்தார். வண்டியை நிறுத்திவிட்டு அவர் அருகில் செல்லும்போது தான் தெரிந்தது உயிரோடு தான் இருக்கிறார் என்று. விபத்தும் இப்போது தான் நடந்திருக்க வேண்டும். வண்டி இன்னும் அணையாமல் ஓடிக்கொண்டிருந்தது.

அவர் வண்டியை எடுத்து நிறுத்தி, அவரை ஒரு மாதிரியாக எழுப்பி நடைப்பாதை திண்டில் அமர வைக்கவும், கூட்டம் சேரவும் சரியாக இருந்தது. கொஞ்சம் தள்ளி நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்து அதன் டிரைவரும் அருகில் வந்தார். “என்னங்க, ஆச்சு, இருக்காரா?” என்றார் அவர், பதட்டமாக.

“ஏங்க, எப்டிங்க ஆச்சு?” இது இன்னொருவர்.

“ஒன்வேல வந்திருப்பார் போல. வண்டியைப் பாருங்க, இங்கிட்டு பார்த்து நிக்கிது.” என்றார் புதிதாய் வந்தவர்.

எல்லாத்துக்கும் மேல ஒருத்தர் என்னை மத்தியமாய்ப் பார்த்தபடி, “நீங்க வேகமாக வரும்போதே நெனச்சேன். இப்டி ஆகும்னு.” என்றார்.

“அட, நீங்க வேற, அவர் கீழே விழுந்துகிடப்பதைப் பார்த்துவிட்டு தான் நான் என் வண்டியை நிறுத்தினேன்.” என்றேன்.

நான் சொன்னது உண்மைதான் என்பதை ஆமோதிப்பதைப் போல, “ஆமாங்க” என்று சொல்லிவிட்டு, என்னைப்பார்த்து சிநேகமாய் புன்னகைத்தார் ஒருவர்.

நல்லவேளை என் தலை தப்பியது.

அந்த பெரியவர் மழைக்காக ஒரு கோட்டும் அதோடு சேர்ந்து குல்லாவை கழுத்தோடு சேர்த்தும் கட்டியிருந்தார். என்னால் அதைக் கழட்டவே முடியவில்லை. கையெல்லாம் ரத்தம். எனக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது. ஒருவழியாகப் பிரித்து தலையைப் பார்த்தால், நல்ல அடி. ஏதோ ஒன்று தலையைக் கிழித்திருந்தது. என் கட்டை விரலளவு நெளிநெளியாகப் பிளந்திருந்தது. ரத்தம் குபுக்கென்று வெளியேறிக் கொண்டிருந்தது. தலையிலிருந்து கழுத்து, கழுத்திலிருந்து சட்டை, அப்படியே கீழே ரோடு வரை வழிந்து கொண்டிருந்தது.

“பெருசு நல்ல மப்பு போல.”

“எதுனா பேசுதா பாரேன்…வலிக்கிற மாதிரி எந்த ரியாக்ஷனும் இல்லை.”

“ஏம்பா, அவருக்கு கான்ஷியஸ் இல்லன்னு நினைக்கிறேன்.”

“யாராவது ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுங்கப்பா.”

போன் என்ற வார்த்தையைக் கேட்டதும், ரியாஸிடம் திரும்பி சொன்னேன்,. “அடடே, கடையை இந்நேரம் மூடியிருப்பாங்களே”. இப்ப அது ரொம்ப முக்கியம் என்பது போல ஒரு பார்வை பார்த்தான்.

பெரியவர் லேசாக அசைந்து கண்விழித்து, “அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. சின்ன காயம் தான், ஆம்புலன்ஸ்லாம் வேணாம். கீழே விழுந்தததில் அடிபட்டிருக்கும்.” என்றவாறே தலையில் காயம்பட்ட இடத்த்தில் தொட்டு அவர் கையில் ஆன ரத்தத்தை எல்லோர்க்கும் காட்டிவிட்டு காலடியில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் கழுவினார்.

“சார், ஆம்புலன்ஸ் வர லேட்டாகும் போல, ஒரு வண்டியில் கூட்டிட்டு போயிடலாமுங்க. டி.எம்.ஃப் ஹாஸ்பிட்டல் பக்கத்துல தானே இருக்கு. ரத்தம் போயிட்டு இருக்குங்க.” என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர் ஒருவித பரபரப்புடன்.

எனக்கும் அதுவே சரின்னுப்பட, அவர் வண்டியிலேயே அவரைப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டேன். என்னுடைய வண்டியை ரியாஸ் எடுத்துக்கொண்டான். திரும்பி கூட்டத்தைப் பார்த்து கேட்டேன். “வேற யாரும் வரீங்களா?”

“……………………………”

“நீங்க போங்க தம்பி” என்றார் பின்னால் உட்கார்ந்திருந்த பெரியவர்.

மெதுவாக ஆஸ்பித்திரி வந்து சேர்ந்தோம். இடையே அவறது மகன் போன் நம்பரை வாங்கிக்கொண்டேன். அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து விட்டு ரியாஸ் போனில் பெரியவருடைய மகனுக்கு விவரத்தை சொன்னேன்.

“சரி, வா. போகலாம். இனியென்ன அவங்க இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க. அட்மிஷன்ல அவர் பையன் பேரையும், போன் நம்பரையும் கொடுத்துட்டு வாடா, கிளம்பலாம்.” என்றான் ரியாஸ்.

“இருடா, இன்னும் பத்து நிமிஷம் தானே, வந்தவுடனே சொல்லிட்டு புறப்படலாம்.”

சொன்னபடியே பத்து நிமிஷத்துல வந்து சேர்ந்தார்கள். காரிலிருந்து பதட்டமாக இறங்கி முன்னால் ஓடியவரிடம் கேட்டேன். “நீங்க கண்ணனா?”

“ஆமாங்க”

“நாங்கதான் போன் பண்ணோம். ஒண்ணும் பயப்பட தேவையில்லை.நல்லாத்தான் இருக்றார். போய் பாருங்..” நான் சொல்லி முடிக்கும் முன்பே ஓடிவிட்டார்.

பின்னால் வாட்டசாட்டமாக வந்தவர், எங்களைப் பார்த்து கேட்டார்., “யாருங்க உட்டது, நீங்களா?”

அவர் கேட்ட தொனியிலிருந்தே அந்த கேள்வியை சரியாகப் புரிந்து கொண்ட ரியாஸ், “உட்டதுன்னா? இங்க கொண்டு வந்து உட்டதா? இல்ல அவரு வண்டியில கொண்டு விட்டதா?” என்றான் நக்கலாக.

நான் மெல்ல அவன் கையைப் பிடித்து அழுத்தியவாறே, “நாம கிளம்பலாம்” என்றேன்.

“இருடா, பெரியவர்ட்ட சொல்லிட்டு போகலாம்.” இப்போ ரியாஸுக்கு சொல்லிவிட்டு போவதை விட நாங்கள்  குற்றமற்றவர்கள் என்பதை நிருபிக்க வேண்டியதன் அவசியம் அதிகமாகிப்போனது.

உள்ளே பெரியவர் தெளிவாக அமர்ந்திருந்தார். அடிபட்ட இடம்  ஷேவ் செய்யப்பட்டு தையல் போட்டிருந்தார்கள். ரியாஸ் அவரிடம், “ஐயா அடி எப்டி பட்டுசுங்க?” என்று கேட்டான்.

“முன்னால் போன ஆட்டோக்காரர் இடிச்சிட்டார் தம்பி. மழை நேரங்கிறதால ஆட்டோ சைடுல சீட் போட்டு ஓட்டி இருக்கிறாரு. அதனால இடிச்சதுகூட அவருக்கு தெரியல. கீழே விழுந்த சத்தம் கேட்டதுக்கு அப்புறம் தான் வந்தார்.” – என்றார் பெரியவர்.

“எந்த ஆட்டோ? நமக்கு கொஞ்சம் முன்னாடி நின்னுட்டு இருந்ததே. அந்த வண்டியா? – ரியாஸ்.

“ஆமா, தம்பி”.

“ஏங்க இதை அங்கேயே சொல்லியிருந்தா, ஒரு காட்டு காட்டியிருக்கலாம்ல.”

“அதாம்பா சொல்லல”. என்றார் பெரியவர், புன்முறுவலோடு.

“ஓ! அதான் அவ்ளோ பதட்டமா இருந்தாரா அந்த ஆட்டோக்காரர்” என நினைத்துக் கொண்டேன். மேலும், அந்த விஷயத்தை எவ்வளவு ஈஸியாக எடுத்துக்கிட்டாரு என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது. எனக்கு இப்டி அடிபட்டால் இதுமாதிரி யோசிக்க முடியுமா என நினைத்துப் பார்த்தேன்.

ஆஸ்பித்திரிக்கு வெளியே, அந்த ஆட்டோக்காரர் ரொம்ப பவ்யமாக நின்றுக்கொண்டிருந்தார். அவரை நானும் ரியாஸும் எதிர்பார்க்கவே இல்லை. எங்களிடம் வந்து, “சார், அவர் எப்டிங்க? நல்லா இருக்காருங்களா” எனக் கேட்டார்.

ரியாஸ் பதிலளித்தான் “நல்லவரா இருக்றாரு”.

 

–    முரளிகுமார் பத்மநாபன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s