நாவல்களின் அரசி

வார்த்தைகள் வசப்பட வேண்டும் என வேள்வி செய்கிற என்னைப் போன்ற வளரும் தலைமுறை எழுத்தாளர்கள் பார்த்து பிரமிக்கும் எழுத்தாளர் திருமதி. ரமணி சந்திரன். ஒரு எழுத்தாளருக்கும் நாவலாசிரியருக்கும் மிகப்பெரிய அளவு வித்தியாசங்கள் இல்லை. கவிஞருக்கும் பாடலாசிரியருக்கும் இருக்கும் இடைவெளி தான். 150க்கும் மேற்பட்ட நாவல்களை, சிறுகதைகளை தன் எழுத்தால் வடித்து ஆண் வாசகர்களை விட பெண் வாசகர்கள் பலரை வசியம் செய்து தன் விசிறிகளாக மாற்றிய பெருமை திருமதி.ரமணிசந்திரனையே சாரும். இல்லத்து அரசியாக இருந்து இல்லறம் சமைக்கும் இவரின் முழு நேர பணியே “எழுத்து” தான். ஆண் எழுத்து குமுகாயம் மட்டுமே ஆளுமை செய்த நாவல் உலகில் பெண்ணும் ஆளும் தன்மை உருவானது இவர் கைகளில் பேனா எடுத்த பின் தான்.

 

“விடியலைத் தேடும் பூபாளம்” என்று நினைக்கிறேன். அந்த நூலில் ஒரு அழகான வாசகம் நான் படித்த பின் தொடர்ந்து 3 நாட்கள் அசைபோட்டுக் கொண்டிருந்த வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அந்த கதையில் சுமித்ரா அம்மா இறந்து விட்டாள். அந்த இடத்தில் சித்தி இருக்கிறாள். இதை தான் எழுத்துகளில், “சுமித்ராவின் தாய் – தாய் என்றால் பத்து மாதம சுமந்து பெற்றவள் அல்ல. பெற்றவளின் இடத்துக்கு வந்த அடுத்தவள். ஆனால் அந்த வித்தியாசத்தை சுமித்ரா ஒருநாளும் அறிந்தவள் இல்லை; அன்னையாகவே உணர்ந்ததால்.”- பெற்றவளின் இடத்துக்கு வந்த அடுத்தவள் இந்த நான்கு சொல்லாட்சிகளின் கூட்டிணைவு என் நெஞ்சத்தை நெகிழ வைத்தது.

 

என் நெஞ்சில் இருக்கும் கதாபாத்திரம் “காற்றினிலே அவள் தென்றல்” – சுமனஸி. அதில் சுமனஸி அருகில் ஒரு ஆண் அமரும் அழகான நிமிடத்தை அம்மையார் தனக்கே உரித்தான பாணியில் சொல்லுகிறாள். “முகம் சுளிக்கிற அளவுக்கு அருகில் என்றும் சொல்ல முடியாது. அதே போல் யாரோ போல தூரம் என்றும் சொல்லிவிட முடியாது. ஒரு கண்ணியமான இடைவெளி விட்டு அவன் அமர்ந்த விதம் பற்றி குறைப்படுவதற்கு இல்லை” என்று சுமனஸி நினைக்கிறாளாம். வழக்கம் இல்லாத ஒரு பெயரைப் பயன்படுத்தி அதன் மூலம் புதிய கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் அவரின் பாணி மிக அழகு.

 

ரமணியார் படைத்துக் காட்டும் மாந்தர்கள் மட்டுமல்ல. அதன் தலைப்புகளும் நம்மோடு உறவாடக்கூடியது. “எல்லாம் உனக்காக”, “ஜோடி புறாக்கள்”, “காதல் வைபோகம்”, “இடைவெளி அதிகம் இல்லை”, “அவனும், அவளும்”, “மைவிழி மயக்கம்”, “காற்றினிலே அவள் தென்றல்”, “நிலவோடு வான்முகில்”, “விடியலைத் தேடும் பூபாளம்” – என அழகிய ரொமான்ஸ் தலைப்புக்கள் இவரின் ப்ளஸ் என்று ஒரு பெண்தோழி என்னிடம் கூறியிருக்கிறார்.

 

இப்படி, கையாளும் கதாபாத்திரம் அதற்கு அவர் வைக்கும் தலைப்பு, புத்தகத்தை கீழே வைக்ககூடாது எனப் படிப்போரை அவர் செய்யும் வசீகரம் என முழுமையான எழுத்தாளராக,எழுத்தை ஆள்பவராக திருமதி. இரமணிச்சந்திரனை நான் பார்க்கிறேன். ஒரு முனைவர் பட்ட ஆய்வுக்கு ஆய்வு செய்ய வேண்டிய அற்புத எழுத்து பேழைகள் இவரின் நூல்கள்.

–    சிதம்பரம் இலக்கியப்பித்தன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s