கடலென்னும் அனுபவம்

ஒரு மாடர்ன் பெயிண்டிங்கைப் போலவே கடலும் நம் புரிதலைக் கோரி நிற்கும் ஒரு கலைப்படைப்பு.

01

கடல் பல உள்ளாட்டோங்களையும், அடுக்குகளையும் கொண்ட திரைப்படம். அந்த உள்ளாட்டோங்களை விட்டுவிட்டு வெறும் திரைப்படமாகப் பார்த்தால் எஞ்சுவது கொஞ்சமே. அதிலும் கூட துல்லிய மீனவ கிறித்துவ பின்னணியும், மெல்லிய காதலும், அழகிய இசையும், ஒரு தீவிர பழிவாங்கும் கதையும் பல உச்சங்களை கொண்ட திரைக்கதையும் உள்ளது. ஆனால், அது மட்டுமே கொண்ட ஒரு படத்தை உருவாக்க ஜெயமோகனும், மணிரத்னமும் எதற்கு? ஒரு சாதாரண பழிவாங்கும், மனம் திரும்பும் கதையை தங்கள் துறையில் உச்சங்களில் இருக்கும் இருவர் படமாக்குவார்களா?

mani-rathnam11aaimages

இராமனின் கதையைக் கொஞ்சம் பெரிய ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால் இராமாயணம் பல நூறு கதைகள் கொண்ட ஒரு காப்பியமாக உருவாகியது. அதேபோன்றதொரு காப்பியத்தன்மை கொண்டதே கடல். ஒரு ஆன்மா இந்த உலகில் செய்யும் ஒரு பெரும்பயணத்தின் கதையைச் சொல்கிறது கடல். அது வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது. நன்மைக்கும் தீமைக்கும் குழந்தைமைக்கும் மத்தியில் நின்று தள்ளாடுகிறது; எழுகிறது; விழுகிறது; அலைகிறது; மீள்கிறது.

படம் நேரடியாக கதைக்குள் செல்கிறது. சிலுவை ஒன்றை நோக்கி நடந்து வரும் ஒரு மனிதன் முதல் காட்சி. அவன் பெயர் சாம் ஃபெர்னாண்டோ. ஒரு பெரும் பணக்காரரின் மகன். அவன் வந்திருப்பதோ துறவியாக, கிறித்துவ சாமியாராக மாற. அவன் ஒரு தூய்மைவாதியாக, நீதிமானாக தோன்றுகிறான். ஜெபிக்காமல் சாப்பிடுவதில்லை. மனம் நிறைந்து சிரிப்பதில்லை. இறுக்கமான நீதிமான். அதுவே இயேசுவை பின்பற்றும் வழி என்று நினைக்கிறான். அவன் அங்கே மனிதனுக்கும் சாத்தானுக்கும் நடுவில் நின்று அல்லாடும் ஒருவனை சந்திக்கிறான். அவன் பாவம் செய்வதைக் கண்டு அவனைத் தண்டனைக்கு இட்டுச்செல்கிறான். பெர்க்மான்ஸ் என்னும் அம்மனிதன் முழுமையாக சாத்தானாகிறான். சாமைக் கொல்ல முயற்சிக்கிறான். ஆனால் உடல் இறப்பது என்பது விரைவானதொரு முடிவு. சாத்தான் அவனது ஆன்மாவுக்கு குறிவைக்கிறான். ‘என்னைப்போல உன்னைப் பாவத்தில் தலைகுப்புற விழவைக்கிறேன்’ என சவால் விடுகிறான். மிக விரைவாக சொல்லப்படும் இந்த காட்சிகள் ஆழமானவை. நம் முழு கவனத்தையும் கோருபவை. இந்த முன் கதையில் பெர்க்மான்ஸ் விடும் சவாலின் தீவிரமும் சுவாரஸ்யமும் புரியாதவர்கள் அல்லது பிடிக்காதவர்களுக்கு கடல் படத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது.

arj

இது சாதாரணமாக நம் ஹீரோக்கள் தொடையைத் தட்டி விடும் சவால் போலத் தோன்றினாலும் ஆழமானது. பெர்க்மான்சுக்கு பழிதீர்க்க சாம் கொல்லப்படுவது எளிதான தண்டனையாக இருந்திருக்கும். ஆனால் சாத்தான் அவனை நித்தியத்துக்கும் சபிக்க நினைக்கிறான். இதில் உள்ள இறையியல்தன்மையை கொண்டே நாம் படத்தை முழுமையாக ரசிக்க முடியும். உடலைக்கொல்வது உடனடித்தண்டனை. ஆன்மாவைக் கொல்வதோ நித்தியத்துக்கும் தண்டனை.

அடுத்து நாம் காண்பவை மிக உக்கிரமான காட்சிகள். பாலியல் தொழிலாளியான தன் தாய் இறந்துபோயிருப்பதை உணராமல் அவள் மீது படுத்துறங்கும் ஒரு குழந்தை. ஊருக்கு ஒதுங்கிய அந்த குடிலில் ஒரு ஆன்மா அனாதையாகி நிற்கிறது. வேசியின் ஆன்மாவுக்கு கோவிலில் இடமில்லை. அவள் உடலுக்கு கூட மரியாதையில்லை. அவளின் வளைந்து நீட்டிய ஊனமான கால் மண்வெட்டியால் உடைக்கப்பட்டு பழைய ஐஸ் பெட்டிக்குள் அடைக்கப்பட்டு ‘தெம்மாடிக்குழி’ யில் புதைக்கபடுகிறது. அவளின் மகன் தாமஸ் தனியனாக நிற்கிறான்.

தன் தந்தையென்று தாயால் அடையாளப்படுத்தவரான ஊர்ப்பெரியவரைத் தேடி செல்கிறான். இந்த தாமஸ்-செட்டி உறவு மிக சிறப்பாக பல காட்சிகளில் சொல்லப்படுகிறது. தந்தையின் வீட்டிலிருந்து துரத்தப்படுகிறான் தாமஸ். கடற்கரையில் மீனைப்பொறுக்கி அடிவாங்குகிறான். செட்டி அவனுக்கு மீன் தருகிறான். ஒருவன் ‘என்ன இருந்தாலும் மவனில்லையா?’ என்கிறான். ‘எவனுக்கு மவன்ல்ல’ என்று கோபப்படுகிறார் செட்டி. காட்சியின் பின்னணியிலேயே நிகழும் இந்த உரையாடல்களைப் போல படத்தில் தொடர்ந்து பல மெல்லிய பின்னணி உரையாடல்களும் காட்சிகளும் விரவியுள்ளன. அவை அனைத்தும் உள்வாங்கும்போதே படம் முழுமையான அனுபவத்தை தரும்.

arav

சிலவருடங்கள் கழித்து ஊருக்கு ஒரு பாதிரியார் வருகிறார். சாமியாரே இல்லாத பாழடைந்த கோவில் இருக்கும் ஊர் ஒன்றில் இயேசுவின் பிரதிநிதியாக சாம் வந்திறங்குகிறார். கடவுளில்லாத ஊரில் வந்திறங்கும் கடவுளின் தேவதூதன். இப்போது சாம் மனமாற சிரிக்கிறார்; குடிகாரர்களுடன் பழகுகிறார்; ஏழைகளுடன் உறவாடுகிறார். அவர் பழைய இறுக்கமான நீதிமான் அல்ல. அவர் கடற்கரையில் ஒரு ஆன்மாவைக் கண்டெடுக்கிறார். ‘சாத்தானின் பிள்ளை”யை தெய்வத்தின் மகனாக மாற்றுகிறார். இந்த காட்சிகளும் மிக உக்கிரமாகவும் மனதைத் தொடும் வகையிலும் அமைந்துள்ளன. மணிரத்னத்தால் இப்படி ஒரு கிராமிய படத்தை எடுக்கவே முடியாது என்பது நம் சினிமா பண்டிதர்களின் கூற்று. கடலின் முதல் பாகத்தில் வரும் காட்சிகளில் அவர் தனக்கு துளிகூட பரிச்சயமில்லாத மீனவகிராமத்தையும் கிறித்துவ பின்னணியையும் மிகச் சிறப்பாக சொல்கிறார். ஒரு நல்ல படைப்பாளிக்கு பின்னணி என்பது ஒரு படம் வரைபவனுக்கு கிடைக்கும் தாளைப் போலத்தான் இல்லையா? தாமஸ் நல்லவனாகிறான். திருமுழுக்கு(ஞானஸ்நானம்) பெறமுயல்கிறான். செட்டியை தன் தந்தையாக பதிவு செய்கிறான். செட்டியோ அதை ஊருடன் சேர்ந்து எதிர்க்கிறான். ஃபாதர் சாமின் மீது வன்மம் கொள்கிறான். கதை மீண்டும் பழைய சவாலுக்கு திரும்புகிறது. பெர்க்மான்ஸ் இப்போது முழுநேர சாத்தானாகி விட்டான். சாம் குறித்து அவன் மறந்துவிடவில்லை. அவரைக்கண்டதும் ஃபாதர் சாம் என்கிறான். பெர்க்மான்ஸ் சாமை ஃபாதர் சாம் என்று அழைப்பது மிக முக்கியமானதொரு தொடர்பைக் காட்டுகிறது. சாம் ஃபாதர் ஆகிவிட்டதெல்லாம் அவனுக்கு தெரியும். அவன் ஒரு நல்ல தருணத்துக்கு இன்னமும் காத்திருக்கிறான். செமினரிக்கு போகிறவர்களெல்லாம் சாமியாராகி விடுவதில்லை. சாம் சாத்தானின் சதியால் நரகத்துக்கே (சிறை) அனுப்பப்படுகிறார்.

thul

இதற்கிடையே தாமஸ் ஒரு புதிய உறவுக்குள் நுழைகிறான். அவன் ஆன்மா ஒரு தேவதையை கண்டுகொள்கிறது. குழந்தைமையே வடிவானதொரு தேவதை. நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்கு அழைத்து சென்ற பியாட்ரிஸ் என்னும் தேவதை. தாமஸிடம் பழகும் இவள் பெயரும் பியாட்ரிஸ் தான்.

பெர்கமான்ஸின் சவால் இப்போது ஒரு பெரும் தடையை சந்திக்கிறது. சாம் தாமஸின் ஆன்மாவை மீட்டெடுத்த்தன் மூலம் பரலோகத்தில் தனக்கான இடத்தை முன்பதிவு செய்துவிட்டான். சாமை நித்தியத்துக்கும் வீழ்த்த இப்போது சாத்தானுக்கு ஒரே வழிதான். அது தாமஸை தன் வழிக்கு கொண்டுவருவது. அது பெர்க்மான்சுக்கு கிடைக்கும் வாய்ப்பும் கூட. ஒரு biblical காட்சியில் மிகக்கவனமாக செதுக்கப்பட்ட வசனங்களின் வழியே தாமஸின் ஆன்மா சாத்தானின் பக்கம் சாய்வது சொல்லப்பட்டிருக்கிறது. தாமஸ் வழிமாறி தன்னிடம் வந்துவிட்ட மகிழ்ச்சியான செய்தியை பெர்கமான்ஸ் சிறைக்கு சென்று தாமஸிடம் சொல்கிறான். பெர்கமான்ஸ் உலக வெற்றிகளை தாமஸுக்கு வழங்குகிறான். கொலைசெய்வதின் சுகத்தை சாத்தான் தாமஸுக்கு காண்பிக்கிறான். பியாட்ரிஸ் உயிர் பிறப்பின் அருமையை தாமஸிற்கு காண்பிக்கிறான். பியாட்ரிஸ் உயிர் பிறப்பின் அருமையை தாமசிற்கு காண்பிக்கிறான். இரண்டு இரத்தங்களின் வித்தியாசத்தையும் ஆழமாகவே உணர்ந்து கொள்கிறது தாமஸின் ஆன்மா.

சாம் சிறையிலிருந்து திரும்பி தாமஸை மீட்க மீண்டும் வருகிறார். அவரிடம் தாமஸுக்கு சொல்வதற்கு எதுவுமில்லை. அவர் அவனிடம் கேட்பது ‘உலகத்துல ஒரு மனுசனுக்குள்ளேயும் நீ ஆண்டவரோட ஒளிய பாக்கலையா’ என்பதுதான். அவனோ உண்மையிலேயே சாத்தானின் பிள்ளையாகிவிட்டான். குற்ற உணர்வு கிறித்துவ இறையியலில் மிக அடிப்படையான ஒன்று. அவனுக்கு பாவமன்னிப்பு தேவைப்படுகிறது. தன் தேவதையிடம் பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெறுகிறான். ‘இனிமே செய்யாத என்ன!’ என்று சொல்கிறாள் அவள். பாவமன்னிப்பில் சொல்லப்படுவதும் இதுதானே?

பியாட்ரிஸ் சாம் வழியாக (டேப் ரிக்கார்டர்) தாமஸின் ஆன்மாவை உணர்கிறாள். ஒரு குழந்தை தாயாகும் தருணம் நிகழ்கிறது. பெர்கமான்ஸ் வெகுண்டெழுகிறான். தனக்குள் இருக்கும் கடைசி நன்மைத்தனத்தையும் அழித்து பேருருவெடுத்து முழுமையான சாத்தானாகவே மாறிவிட முடிவெடுக்கிறான். அதற்கு அவன் தன் மகளைக் கொன்றாக வேண்டும். கடல் பிரமாண்டமாக கொந்தளிக்கிறது. முடிவில் தாமஸின் ஆன்மா சாமின் ஆன்மாவை மீட்டெடுக்கிறது. பியாட்ரிஸிடம் சென்று அடைக்கலம் புகுகிறது.

படத்தின் பல காட்சிகள் மிக அடர்த்தியாக உள்ளது. பார்வையாளன் ஒரு உச்சத்தை வாங்கிக்கொள்ளும் முன்பே இன்னொன்று வந்துவிடுகிறது. இத்தனை ஆழமான படத்திற்கு இத்தனை வேகம் அதிகமென்றே சொல்வேன். பலரும் இசையால் வசனம் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது என்கிறார்கள். ஆனால் பின்னணி இசை (மகுடி, மகுடி தவிர்த்து) பல இடங்களில் சாந்தமாகவே உள்ளது.

தொடர்ந்து முக்கியமான வசனங்கள் வந்துகொண்டேயிருப்பதால் அவற்றை உள்வாங்கிக்கொள்ள நேரமில்லாமல் போய்விடுகிறது.

images (1)

கடலில் பல சரடுகள் கையாளப்படுகின்றன. இதுவும் பார்வையாளனிடம் அதிக கவனத்தையும் பங்களிப்பையும் கோருகிறது. சாம்+பெர்கமான்ஸ், தாமஸ்+தாமஸின் அம்மா, தாமஸ்+செட்டி, செட்டியின் குடும்பம், தாமஸ்+சாம், தாமஸ்+பெர்கமான்ஸ், ஃபாதர்+ஊர்மக்கள், ஃபாதர்+கோவில்பிள்ளை, பெர்க்மான்ஸ்+செலினா, பியா+தாமஸ், பியா+பெர்க்மான்ஸ், பியா+மதர், பெர்க்மான்ஸின் பின்னணி, தாமஸின் பின்னணி இவை எல்லாவற்றிற்கும் ஊடே கத்தோலிக்க திருச்சபையின் ஊடாடல். இந்த மேல் அடுக்குகளின் கீழே ஓடும் ஆன்மாக்களின் போராட்டம். இப்படி படம் பல விஷயங்களையும் பேசிக்கொண்டே இருப்பது சாதாரண சினிமா பார்வையாளன் பழக்கப்பட்ட விஷயமல்ல.

சாதாரண பார்வையாளர்கள் படம் Complicatedஎன்கிறார்கள். ஆனால், பல சினிமா பண்டிதர்களும் படம் மிக எளிமையான, மிக வழக்கமான நன்மை தீமைக்குமான போராட்டம் என்றே தீர்ப்பளிக்கிறார்கள். படத்தில் நேட்டிவிட்டி இல்லை என்று தீர்ப்பெழுதுகிறார் ஒரு பண்டிதர். கிறித்தவம் நம் பொதுஜன மனதில் ‘அல்லேலுயா கோஷ்டி’ என்பதைத்தவிர வேறெந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையோ எனும் பரிதாபமான கேள்வியே எழுகிறது. இல்லையேல் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் ஐநூறு வருட பாரம்பரியம் கொண்ட கிறித்துவமும், ஆயிரக்கணக்கான வருடங்களாக தமிழ் கலாச்சாரத்தில் நீங்காமல் இடம்பெற்றுவரும் நம் தென்தமிழக மீனவர்களும் நேட்டிவிட்டிக்குள் வராது போவதெப்படி? படம் சமரசமின்றி மீனவர்களின் மொழிவழக்குகளை கையாளுகிறது. கித்தாப்பு, தொட்டி, கச்சோடம், எழுப்பம், தெம்மாடிக்குழி போன்ற வார்த்தைகளும், ‘சாமுக்கு தீபந்தம் தூக்கிட்டு திரியுத?”, ‘அம்மைக்கு மத்தவனால (மண்ணை) அள்ளி வாயுள போட்டுடுவா’ எனும் வழக்குகளும் கடல் முழுக்க நிரவிக்கிடக்கின்றன.

கடல் ஒரு பிரச்சார படம் என்கிறார்கள் சிலர். ஆனால், கடல் பல காத்திரமான விமர்சனங்களை நிறுவன கிறித்துவத்தின் மீது வைத்திருக்கிறது. சாப்பாடுக்கு வழியில்லாமல் சாமியாராவதற்கு வருவதாக, வேசியிடம் சென்றவர்களுக்கெல்லாம் மன்னிப்பும், ஏழை வேசிக்கு தெம்மாடிக்குழியுமாக, காசுக்கு மோட்சம் வாங்கித் தருபவர்களாக என்று சிலவற்றை கோடிட்டு காட்டலாம். தாமஸின் ஆன்மா நிறுவன கிறித்துவத்துக்கு வெளியேயே மீட்பைப் பெறுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் பல்வேறு வடிவங்களில் திருச்சபைக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளன. ஆகவே ஒரு சாதாரண கிறித்துவன் இவற்றை எதிர்க்கப் போவதில்லை. இவை மிக நேர்மையான விமர்சனங்கலேயாகும்.

“நீங்கள் ஒரு குழந்தையாக மாறாவிடில் பரலோக ராஜ்ஜியத்தில் உங்களுக்கு இடமில்லை” என்பதை ஒரு இன்ஸிபிரேஷனாக ஜெயமோகன் எடுத்திருக்கலாம். இதை மையமாக வைத்து ஒரு தமிழ்ப்படம் வருவதென்பது எத்தனை அரிதானது?

கடல் கிறித்துவ இறையியலை மிகச்சரியாக கையாண்டிருக்கிறது. சாத்தான் ‘உலகின் வெற்றிகளை’ அளிப்பவன் என்பது தொடர்ந்து பெர்க்மான்ஸின் பாத்திரம் மூலம் வெளிப்படுகிறது. ஃபாதர் சாமோ உலகின் வெற்றிகளை குறிவைப்பதில்லை. தூய குழந்தைத்தன்மை இறையியல் அறிவைவிடவும் மேன்மையானது என்பது பியாவின் பாத்திரப்படைப்பின் வழியே சொல்லப்படுகிறது. பியா தூயக்குழந்தைமையின் வடிவாக வருகிறாள். அவள் குழந்தையாகவே உறைந்துவிட்டாள். பாவத்தின் நிழலைக்கூட அறியாதவள். ‘சாத்தானுக்கு மாவ ஒரு ஏஞ்சல் பாத்துக்க, சிரிப்பா இல்லடே?’. இந்த முரணும் ஒரு அற்புதமான கிறித்துவ முரணே. ‘தொலைஞ்சு போன ஆடு மாதிரி திரும்ப வந்திருக்கல்ல தாமஸ்’ போன்ற மிக எளிமையாகத் தோன்றும் பைபிள் சார்ந்த வசனங்களும் ஆழமான அர்த்தங்களை பார்வையாளன் உருவாகிக்கொள்ளாமல் கடலை எப்படி ரசிக்க முடியும்?

பெர்க்மான்ஸ் சாத்தானின்  குறியீடான எக்களிப்பும், எள்ளலும் கொண்ட ஒரு பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. சாம் சாந்தமும் அமைதியும் சந்தோஷப் புன்சிரிப்பும் விளையாட்டுத்தனமும் கொண்டதொரு பாத்திரம். அர்ஜூனும் அர்விந்த்சாமியும் மிக அற்புதமாக இந்தப் பாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளனர். கவுதமும் துளசியும் கூட நன்றாக நடித்திருந்தாலும் துளசியின் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும் விதம பார்வையாளர்கள் பலரை அன்னியப்படுத்திவிட்டதாக உணர்கிறேன். எப்போதும் குழந்தைத்தனமும் புன்சிரிப்பும் கொண்ட பாத்திரமாக அவள் வந்தாலும் ஒரு மெல்லிய சோகம் அவளைச் சூழ்ந்த்துள்ளதை நம்மால் உணர முடிகிறது.

இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய திரைமொழியில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளார். தற்போதைய படங்களில் கையாளப்படும் தீவீரத்தன்மையும் இயல்பான வாழ்க்கைமுறையும் பின்னி உருவாக்கப்படும் திரைமொழியை அவரும் மிக லாவகமாக கையாண்டுள்ளார். படத்தை ரசித்த பலருக்கும் பாடல்கள் பெரிய ஸ்பீட் பிரேக்கர்கள். ஒன்றிரண்டு பாடல்களே போதுமானதாக இருந்திருக்கும். மற்றவை கொஞ்சமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

நான் சிறுவயது முதலே கடலை கவனித்து வருகிறேன். கடல் ஒவ்வொருமுறையும் எனக்கு ஒவ்வொரு அனுபவத்தை தருகிறது. ஆனால், நாம் விழித்திருக்க வேண்டும். அதன் அலைமொழியை கவனித்திருக்க வேண்டும். அதன் இரைச்சல் கேட்டிருக்க வேண்டும். கணம்தோறும் மாறும் கடலை கண்டுகொண்டேயிருக்கவேண்டும்.அந்த உழைப்பைத் தராமல் வெறுமனே காலைக் கழுவி விட்டு பஜ்ஜி வாங்கித் தின்றுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டால் போதுமென்று நினைப்பவர்களுக்கு கடல் வெறும் கடல்தான். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்’.

–    சிறில் அலெக்ஸ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s