கடந்து வந்த பள்ளி நாட்கள்

காலை எட்டு மணிக்குத் தெருவின் அனைத்து வீடுகளிலும் எப்பவும் இல்லாத அளவு ஒரு வேகம். ஒருமாத விடுமுறைக்கு பின் பள்ளி என்றால் அப்படித்தானே இருக்கும். சில குழந்தைகள் தயாரவதில் தாமதமும், அவர்களின் பெற்றோர் அதட்டல்களும் என ஏக களேபரமாகவே இருந்தது. பள்ளிக்கு செல்ல குழந்தைகளிடம் உள்ள அவசரத்தை விட அவர்களை அனுப்புவதில் பெற்றோர்களின் அவசரமே அதிகமாக தெரிந்தது.

மணி 8:30 ஆனதும் குழந்தைகள் தயாராகினர் புறப்பட. சில குழந்தைகள் கூட்டாக நடந்து சென்றனர். சிலர் மிதிவண்டியிலும், உந்துஊர்திகளிலும் தங்கள் பெற்றோருடன் சென்றனர். சிலர் தங்களின் பெற்றோர்களோடு தெருமுனை ஓரங்களில் குழுக்குழுக்களாக நின்றிருந்தனர் எதையோ எதிர்பார்த்து. சிறிது நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த தானிகளும், சிற்றுந்துகளும் அவர்களின் குழந்தைகளை அள்ளிச் சென்றன. வெளியில் இருந்து கைகளை அசைத்துக் காட்டிவிட்டு வீடு திரும்பினர் பெற்றோர்கள். சில நிமிடங்கள் நடந்த இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என்னுள்ளும் அந்த பள்ளிநாட்கள் தொத்திக்கொள்ள நானும் தயார் ஆனேன் பள்ளிக்கு…

school5

மிதிவண்டியை எடுத்துக்கொண்டு நான் படித்த என்னுடைய பள்ளிக்குச் சென்றேன். நேரம் 9 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. பள்ளியை நெருங்கியதும் ஒரு வித சில்லென்ற காற்று… வேறு எங்கும் இன்று கிடைப்பதில்லை. ஏன் என்றால் மரங்கள் எனப்படுபவைகள் எல்லாம் பள்ளிகளில் மட்டுமே உள்ளதால். பள்ளிச் சுற்றுச்சுவரின் பக்கத்தில் நின்று கொண்டு உள்ளே என்ன நடக்கிறது என்று கவனித்தேன். மரங்களுக்கிடையே மாணவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர் காலை வழிபாட்டிற்காக. வழிபாடு முடிந்ததும் வரிசையாக அவரவர் வகுப்புகளை நோக்கி சென்றனர். சில நிமிடங்களில் வகுப்புகளும் துவங்கிவிட்டன. பள்ளியை சுற்றி உள்ள இடங்களின் வளர்ச்சியையும், சிறு சிறு கடைகளையும் பார்த்துவிட்டு, மெல்ல அந்த இடத்தைவிட்டு நகர்ந்து வீடு வந்து சேர்ந்தேன் சிறு மன கனத்தோடு ”.

கடந்து வந்த பள்ளி நாட்கள் என்பது யாராலும் மறக்க முடியாத ஒன்றல்லவா(?) ஒவ்வொருவரின் பள்ளி நாட்களும், அவற்றின் நினைவுகளும் அவரவர் மனதில் ஆழமாய் பதிந்துவிட்ட பதிவுகளே. முதலில் சென்ற பாலர்பள்ளி முதல் இறுதியாக சென்ற கல்லூரி நாட்கள் வரை எல்லாமே கடந்து வந்த பள்ளி நாட்களே. புத்தகப்பையின் சுமைகள் அதிகமாக இருந்தாலும் தூக்கிக் கொண்டு சென்ற காலம். பின் நாட்களில், புத்தகப்பையின் சுமைகள் படிப்படியாக குறைந்ததும், பெரிய வகுப்புகளிலும், கல்லூரி காலங்களிளும் ஒரு புத்தகம், குறிப்பெடுக்க குறிப்பேடு ஒன்று, என குறைந்தது எல்லாம் ஒரு காலம். இன்று சுமந்து செல்லும் பையின் சுமை குறைவாக இருந்தாலும், மனதில் மிக பெரிய சுமையுடனேயே ”  வாழ்க்கைப் பயணப்படுகிறது.

school4

சூன் மாதம் காற்றுக் காலம். காற்றோடு பயணப்படும் பள்ளிக்காலம். புது சீருடையின் வாசம், புத்தகப்பையின் வாசனை, கற்பலகை எனப்படும் சிலெட், எழுதும் குச்சிகள், பென்சில், பேனா, ரப்பர்களின் வாசனைகள், இவைகளை வைக்கும் பெட்டிகள், புது புத்தகங்களின், குறிப்பேடுகளின் காகித வாசனை என இந்த அனைத்து வாசனைகளும் ஒன்று சேர்ந்து, இன்று என்னையும் தாக்கிவிட்டு கடந்து சென்றன.

விடுமுறைக்குப் பின் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்பு செல்லும் ஆனந்தத்துடன் பள்ளி செல்லும் மாணவர்கள், பள்ளியில் எந்த வகுப்பு எனத்தெரிந்து அங்கு செல்ல, புது மாணவர்கள் பலருடன், பழைய வகுப்பு நண்பர் எவரேனும் உள்ளனரா என்று பார்ப்பதும்(!) அப்படி இருந்து விட்டால் ஒரே கலகலப்பும் என இனிதாய் துவங்கும் வகுப்புறைகளும், விளையாட்டு நேரங்களில் விளையாட்டுகளும், மதிய உணவு இடைவெளிகளில் நண்பர்களுடன் சேர்ந்து உணவு உண்பதும் என சொல்லிக் கொண்டே போகலாம் பல நினைவுகளை… நினைவலைகளில் நேரம் போனதே தெரியவில்லை.

school3

நேரம் மாலை 4:30’ஐ தாண்டிவிட்டது, குழந்தைகளும் பள்ளியை தாண்டிவிட்டனர் போலும். தெருக்களில் உந்து ஊர்திகளின், தானிகளின், சிற்றுந்துகளின் ஒலிப்பான் ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. வெளியில் குழந்தைகள் பள்ளிவிட்டு வந்து கொண்டிருந்தனர். இப்போது, ஒன்றைக் கவனித்தேன் குழந்தைகளிடம் பள்ளி செல்லும் போது இருந்த வேகத்தைவிட சற்று அதிகமாகவே உற்சாகத்துடன் காணப்பட்டனர். பள்ளிப் பைகளை வைத்துவிட்டு தயாராகினர் பாரதி கூறிய மாலை முழுவதும் விளையாட்டிற்க்கு. தெருவே ஒரே விளையாட்டு கோலம் பூண்டிருந்தது.

school1இன்று நாம் பயணப்படும் நவீன காலகட்டத்திலும் மாறாமல் இயங்கி வருவது இந்த பள்ளிப்பருவமே. இந்த பள்ளி நாட்களை மீண்டும் ஒருமுறை குழந்தைப் பருவத்தோடு சென்று அனுபவித்துவர ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்குமென்றால்(!), வேண்டாம் என சொல்ல ஒருவரும் இல்லை. அந்த அளவிற்கு கடந்து வந்த பள்ளிநாட்கள் இனிதானவை. உண்மையில் அவைகள் கடந்து வந்த பள்ளி நாட்கள் அல்ல; இன்று நாம் வாழும் வெற்றி வாழ்வின்  வெள்ளிநாட்கள் ”.

                                                                                                                 – மே. இளஞ்செழியன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s