பகிர்ந்து உண்போம் – ஒரு கலந்துரையாடல்

பசுமை சந்திப்பு

பகிர்ந்து உண்போம் – ஒரு கலந்துரையாடல்

Invitation copy

தடாகம்.காம் – பனுவல்.காம், பூவுலகின் நண்பர்கள், பல்லுயிரிய பாதுகாப்பு நிறுவனம், சிற்றிலை ஆகிய இயக்கங்கள் இணைந்து சமீபத்தில் ஒருங்கிணைத்த நிகழ்வு – ‘பசுமை சந்திப்பு: மாதக்கூட்டம்”. இந்நிகழ்வு சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலை அருகே உள்ள சோலையப்பன் தெருவில் அமைந்துள்ள நவபாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஜூன் 29ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கியது.

‘பட்டினி வயிறும் டப்பா உணவும்’ நூலை முன்வைத்து மருத்துவர் கு.சிவராமன் “உணவும் சுற்றுச்சூழல் அரசியலும்” என்ற தலைப்பில் பேசினார்.

‘தமிழர் உணவு’ நூலை முன்வைத்து ஆராய்ச்சி மாணவர் அ.பகத்சிங் “தமிழரும் உணவும்” என்ற தலைப்பில் பேசினார்.

உணவு விற்பனை குறித்த நடைமுறை அனுபவங்களை முன்வைத்து பத்திரிக்கையாளர் சமஸ் “சோறு…உணவு மட்டும் அல்ல” என்ற தலைப்பில் பேசினார்.

சமஸ் பேசியதன் தொகுப்பு பின்வருமாறு…

Samas copy

ஐ.நா ஜூன் 5ம் தேதியினை உலக சுற்றுசூழல் நாளாக கொண்டாடுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள்: “உணவை வீணாக்காமல், உணவு இல்லாதவர்களுக்குப் பகிர்ந்துகொள்ளுதல்.” இந்த வாசகம் இப்போதைய சூழலிற்கு மிகவும் பொருந்தக்கூடியது.

ஒரு பக்கம் ‘நடுஇரவில் போன் பண்ணினால் பீஸா, மெகஸிகன் உணவு என எல்லா வகை உணவுகளையும் வரவழைத்து சாப்பிடக்கூடிய சூழல் உள்ளது. மறுபக்கம் 30 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் வெறும் வயிற்றுடன் தூங்க செல்கிறார்கள். உண்பது குற்றமில்லை. ஆனால், உற்பத்தியாகும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது. உணவு வீனாக்குதல் என்பது குற்றம் தான்; இந்த குற்ற உணர்விற்கு நாம் பொறுப்பேற்க வேண்டும்.

நம் புராணங்கள், மரபுகள் எல்லாவற்றிலும் உணவை வீணாக்குதல் என்பது பாவம் என சொல்லப்பட்டிருக்கிறது. சிறுவயதில் நான் உணவு உண்ணும்போது உணவை இரைத்து சாப்பிடுவேன். அதைபார்த்த என் பெரியம்மா சொல்லிய வார்த்தைகள் இன்றுவரைக்கும்  என் நினைவில் அழியாமல் உள்ளது. ‘நீ சிந்தும் ஒவ்வொரு பருக்கைக்கும் மேலே ஒருவன் கணக்கு வைத்துக்கொண்டிருப்பான். இறந்து மேலே போனதும் நீ சிந்திய ஒவ்வொரு பருக்கைக்கும் ஒரு சவுக்கடி கொடுப்பான் என்று கூறினார். அதிலிருந்து நான் மீள பல நாட்கள் ஆகின. இது போல நம் அனைவருக்கும் சிறுவயதில் பல நீதிகள் சொல்லப்பட்டிருக்கும்.

உணவை வீணாக்குதல் என்பது இந்தியாவில் பொதுவாக இல்லாதது. ஆனால் அமெரிக்காவில் உண்டு. அவர்கள் கலாச்சாரத்தில் நுகர்வு அதிகமாகவே இருக்கும். வடிவத்துக்காகவும், நிறத்துக்காகவும், காட்சிப்பொருளாக காட்டவும் கிட்டத்தட்ட 30 சதவீதம் வரை அங்கே உணவு வீணடிக்கப்படுகிறது. வீணாக்குதல் என்பது வேண்டாம் என ஒதுக்குவது. இதை யுக்தியாகவும், வரையறையாகவும் இன்னும் சொல்லப்போனால் பெருமையாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். வீணாக்குவது வியாபார யுக்தியாகவும் மாறிவிட்டது. சரியாக வேகவில்லை என்றால் பீஸாவை தூக்கிப்போட்டு விடுகிறார்கள். குறைந்தது 100 பீஸாக்களை அப்படி தூக்கி வீசினால்தான் அந்த உணவகத்தில் தரம் சரியாக பராமரிக்கப்படுவதாக நினைக்கிறார்கள். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்; 20% சதவீதம் அதிகம்; சலுகை கூப்பன்கள் இப்படி நுகர்வை அதிகமாக்கவும் முயல்கிறார்கள்.

இதை நாமும் கொஞ்ச கொஞ்சமாக உள்வாங்க ஆரம்பித்துள்ளோம். அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒரு ஆள் வீணடிக்கும் உணவின் மதிப்பு ரூ.96000 பிரிட்டனில் ரூ.44000 இந்தியாவில் அவ்வளவு இல்லை என்று நினைக்கிறோம். ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 100 கிலோ உணவையாவது வீணடிக்கிறோம். இந்தியாவில் முறையான கணக்கெடுப்பு இன்னும் சாத்தியம் இல்லை. அப்பொழுதுதான்  முழுமதிப்பு தெரியும். விரயம் என்பது வீடுகளில் நடக்கிறது; ஓட்டல்களில் நடக்கிறது; திருமண வைபவங்களில், விழாக்களில்  நடக்கிறது. ஒரிசா இந்தியாவின் வளர்ச்சி அடையாத மாநிலம். அம்மாநிலத்தில் உள்ள புவனேஷ்வரர் நகரில் ஒரு நாளில் 70 டன் உணவு அங்கிருக்கும் ஹோட்டல்களில் வீணடிக்கப்படுகிறது. அப்படியென்றால் சென்னையில் வீணடிக்கப்படும் உணவு எவ்வளவு இருக்கும்? மும்பையில்? டெல்லியில்?

உணவு உண்பதில் நாகரீகம் பார்க்க ஆரம்பித்துள்ளோம் நாம். ஹோட்டல்களில் யாரும் இப்போது உணவை நக்கி சாபிடுவது இல்லை. விரலை விட்டு சாப்பிடுவது இல்லை. உலகத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை ஒன்றில் கம்பர் உணவு உண்பதில் 21 வகைகளை சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்தனர். உண்பதையே நாம் இன்னமும் சரியாக கற்றுக்கொள்ளவில்லை. சோறை சோறாகவே சாப்பிடுவதில்லை. அரை அரிசியாக தான் சாப்பிடுகிறோம். உண்ணும் போது உணவு உமிழ்நீரில் கலப்பது முக்கியம். அவசரமாக உண்ணும்போது இப்படி செய்ய முடியாது.

அவசர அவசரமாக சாப்பிடுவதில் இன்னொரு பிரச்சனை – குழந்தைகளுக்கு சொல்லித்தருவதில்லை. இயற்கையோடு இயைந்து வாழும் வழக்கம் அற்றுவிட்டது. குழந்தைகளுக்கு தண்ணீர் எங்கே இருந்து வருகிறது என தெரிவதில்லை. பைப்பில் இருந்து என்கிறார்கள். பைப்புக்கு கொடுக்கும் மரியாதையைத்தான் பைப்பில் இருந்து வரும் தண்ணீருக்கும் கொடுப்பார்கள்.

‘குட்டி இளவரசன்’ நாவலில் வரும் ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது. ‘ஒரு ரோஜாவுக்கு நீ செலவழிக்கிற நேரம் தான் அந்த ரோஜாவை உனக்கு அத்தனை முக்கியமாக்குகிறது.’ ஒரு நெல் உற்பத்தியாக எவ்வளவு தண்ணீர் தேவை என்றும் அந்த தண்ணீர் வயலுக்கு எப்படி வருகிறது என்றும் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.

பழையது என்பது மகத்தான உணவு. பழையதை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்ற சமூகம் நம்முடையது. சாதம் மிஞ்சுனா பழையது. பழையது மிஞ்சுனா வடகம். மூன்று நாள் பழையதை சேர்த்து வைப்பார்கள். அந்த சாதத்தை போட்டு புதுநீரில் அலசி எடுத்து நொதியாக்கி பின்னர் மாவாக்கி வடகம் பண்ணுவார்கள்.

கருவாடும், கறியில் உப்புக்கண்டம் பண்ணுவதும் உணவு வகைகளில் குறிப்பிடத்தக்கவை. ஊறுகாயைத் தொட்டுத்தான் சாப்பிட வேண்டும். அதை நாக்கில் வைக்கும் போது வாயில் ஊறும் உமிழ்நீர் ஊறுகாயில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கும். கருவாடும் அப்படித்தான். 5 பேர் உள்ள குடும்பத்துக்கு 25 கிராம் சமைத்தால் போதும். புளிகொழம்பில் சிறிய துண்டு கருவாட்டைப் போட்டால் வழக்கமாக புளிக்கொழம்பில் போடக்கூடிய அரைக்கிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு தேவையே இல்லை.

ஃபிரிட்ஜ் என்பது மிச்சப்படும் உணவுப்பொருட்களை கெட்டுப்போகாமல் இருக்கத்தான் பயன்படுகிறது. ஆனால், அவற்றில் வைக்கும் பொருட்களையும் கொட்டுவது தான் அதிகமாக உள்ளது. சிறுநகரங்களிலும், பெருநகரங்களிலும் ஃபிரிட்ஜ் தேவையே இல்லை. ஏனெனில் ஒவ்வொரு தெருமுனையிலும் உள்ள கடைகளில் எல்லா காய்கறிகளும், உணவுப்பொருட்களும் காலை 6 மணி முதல் 10 வரை கிடைக்கின்றன. பிறகெதற்கு ஃபிரிட்ஜ்? வாங்கும் எல்லாவற்றையும் ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்கிறோம். அவற்றையும் வீணாக்குகிறோம்.

ஒரு சிறிய புள்ளிவிவரம் – கோதுமை ஒரு வருடத்திற்கு 21 பில்லியன் டன் வீணடிக்கப்படுகிறது. தானியக்கிடங்குகளின் தரத்தைப் பற்றியோ பராமரிப்பு பற்றியோ நம்மில் யாரும் பேசுவதோ, எழுதுவதோ, கோரிக்கை விடுப்பதோ இல்லை.

பஃபே உணவு வழங்கப்படும் இடங்களில் தட்டில் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு குறைவாக உட்கொள்கிறோம். அதை பின்னர் கொட்டி விடுகிறோம். குழந்தைகளுக்கும் இதையே கற்றுக்கொடுக்கிறோம். எப்போது கடவுள் இல்லையென்றும் சாத்தான் இல்லையென்றும் குழந்தைகளுக்கு அப்போதே பாவ புண்ணியம் இல்லை என்றும் அறநெறிகள் இல்லை என்றும் சொல்லித்தருகிறோம். வரலாற்றையும் சூழலியலையும் இணைத்துப்பார்க்க வேண்டும். அவற்றை குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டும். ஒரு பிடி சோற்றில் எவ்வளவு உழைப்பு உள்ளது என்றும் எத்தனைப்பேரை தாண்டி வருகிறது என்பதையும் சொல்லித்தர வேண்டும். உணவை வீணாக்குவது என்பது எத்தனையோ பேரின் உழைப்பை உதாசீனப்படுத்துவது என்ற நிதர்சனத்தை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளையும் அறியும்படி செய்ய வேண்டும்.

பின்னர், அருண் நெடுஞ்செழியன் நன்றியுரை வழங்கினார். ஒரு நல்ல மழைநாளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குறைவான மக்களே கலந்துகொண்டமையால் இப்பதிவு பலருக்கும் போய் சேரும் என நினைக்கிறேன்.

–    முருகராஜ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s