காதல் செய்வீர்

01
“இந்த காதல் எந்த காலத்தில் தோன்றியது?” என்ற கேள்வியில் இருந்து துவங்குவது இதன் ஆழம் தேட வாய்ப்பாக அமையும். மதக் கோட்பாடுகளின் படி பார்த்தால் இந்த காதலை ஆதாம்-ஏவாளுக்கு சாத்தான் கற்பித்ததாகவே தோன்றுகின்றது. அப்படி என்றால் காதல் கடவுளுக்கு பிடிக்காதா? பழத்தினை தின்ன விடாமல் தடுத்த கடவுளின் அடக்குமுறைக்கு எதிராக எழுந்த புரட்சி தானா இந்த காதல்? இந்த கேள்விகள் நம் சிந்தனையை தூண்ட அப்படியே இங்கு இருக்கட்டும்.

கடவுளை விட்டு சற்று தள்ளி அறிவியல் பக்கம் இருந்து சிந்திக்கலாவோம். ஒரு செல் உயிரினம் என்று இரு செல் உயிரினமாக பரிணமித்ததோ அன்றே முதல் காதல் அறிமுகமானதாக எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறென்றால் இந்த காதலுக்கு எத்தனை கோடி வயதோ!!! இளைஞர்களுக்கு பிடித்த ஒரே பழம் காதலாகத்தான் இருக்கும்.

அப்படி இந்த காதல் என்னதான் செய்துவிட்டது இந்த இளைஞர்களுக்கு? வாழ்க்கையில் யார் ஒருவர் இளமைப்பருவத்தினை கடந்து வருகின்றாரோ அவர் காதல் வசப்படாமல் அப்பருவத்தினை கடந்து வந்திருக்க முடியாது. இப்படியாக காதல் எல்லா மனிதனுக்குள்ளும் உண்டு. வெடித்து சிதறும் கோபக்காரருக்கும் கூட காதல் வரும். சிடு சிடுவென முகத்தை சுறுக்கிக்கொள்வோரும் காதலில் ஒரு கை பார்த்ததுண்டு.

இயந்திர மயமான இந்த காலத்தில் அறிவைத் தேடி பள்ளி கல்லூரிக்கும் – பணத்தினைத் தேடி பணிச்சுமையை தூக்கிக்கொண்டு அலுவலகங்களுக்கும் ஓடும் யாவரின் மனத்திற்கும் இதம் தருவது இந்த காதலாகத்தான் இருக்கும். காதல் ஒரு நிம்மதி. அது ஆலமரத்தின் நிழல். வெயிலில் அலைந்து திரிந்து வரும் பாதசாரிக்கு மட்டுமே அந்த ஆலமர நிழலின் சுகம் தெரியும். காதல் ஒரு அழகியல் அது அழகான ஓவியம். ரசனைத்திறன் உள்ளவர்களால் மட்டுமே உணரப்படும்.

காதல் செய்கையில் வெளிப்படும் முட்டாள்தனம் மட்டுமே அந்த காதலை மேலும் வலுவேற்றும். தனியே சிரிப்பதும்; தன் துணையை அருகில் உருவகப்படுத்திக்கொண்டு பேசிக் கொள்வதும்; தட்டில் வைத்த சோற்றை பிசைந்தபடி துணையின் நினைப்பில் விழுங்கிய சோறு தொண்டையில் அடைக்க தண்ணீர் மண்டுவதும். எவ்வளவு சுகமானது. காதலை சொன்ன பிறகு அவரின் பதிலுக்காக காத்திருக்கையில் ஏற்படும் வலி என்னவொரு சுகம். இதை எல்லாம் அனுபவிக்காமல் வாழ்வது வாழ்க்கையே அல்ல. “இந்த முட்டாள்தனமெல்லாம் தேவையா?” என கேள்வி கேட்போர் அதிகம். வெரும் அறிவாளிகளாக மட்டுமே வாழ்ந்து எந்த சுகத்தினை பெற்றுவிட்டோம்? காதல் வந்தவனை வெட்டித்தனமானவனாக மட்டுமே இந்த சமூகம் பார்க்கின்றது. காதல் என்ற இளைப்பாறுதல் இல்லாமல் வெட்டியாக ஓடிக்கொண்டே இருந்து என்னதான் பயன்?

காதல் வயப்பட்டவரை காதலன் என்று மட்டும் விழித்தல் முறையாகாது அவர் மாபெரும் கவிஞனும் கூட. பள்ளிப் பருவத்தில் இருந்து தமிழ் படிக்காத இளைஞன் கூட காதல் என வந்துவிட்டால் தமிழில் அருமையாக உருகி உருகி கவிதை படிக்கையில்தான் தமிழுக்கு மரணமில்லை என்ற உண்மை விளங்குகின்றது. காதல் ஒவ்வொரு பருவத்திலும் கவிதை தருகின்றது. குறிப்பாக ஆண்களே சிறு கவிதைகளில் உச்சம் தொடுகின்றனர்.

தன் காதலை காதலியிடம் சொல்ல ஆயத்தமாகும் போது ஒருவன் எழுதிய கவிதை இது:
“பல கோடிச் சொற்கள் தமிழ் மொழியில் உண்டு;
அதில் எச்சொல் உனக்கு புரியவைக்கும்?”

காதலியின் பதிலுக்காக காத்திருக்கும் வேளையில் என் நண்பன் எழுதிய கவிதை இது:
காதல் விதை ஒன்று விதைத்தேன்
அவள் மனத்தில்
கொஞ்சமேனும் ஈரம் இருந்திருந்தாலும்
இந்நேரம் விருட்சமாகியிருக்கும்.
நான் இட்டது பாறையிலோ?

காதலியின் முகத்தை வானில் தேடும் ஒரு காதலன் எழுதியது:
வானம் கண்ணாடியாக இருந்திருந்தால்;
அவளின் பிம்பத்தினையாவது தேடி
ரசித்திருப்பேன்.

இப்படியாக ஆண்களும்; தனக்குள்ளே பூட்டி வைத்து புலம்பிக்கொண்டு அழகான கவிதையாகவே வாழ்ந்து வருகின்றனர்.

யாரை காதலிப்பது என்ற குழப்பம் பல பேருக்கு. நட்போடு பழகும் போது நடுவில் காதல் வரக்கூடாது என்கின்றது ஒரு வாதம். வந்தால் என்ன என்பது எதிர் வாதம். நட்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான புரிதலை வலுப்படுத்துகின்றது. ஒரு ஆண் தன் தோழியையும் ஒரு பெண் தன் தோழனையும் முழுவதுமாக புரிந்து கொண்ட பிறகும் அவர்களுக்குள் இணையாவிட்டால் அந்த புரிதலால் என்ன பயன்? நட்பாக பழகியவரோடு காதல் வராமல் யாரென்றே புரியாத புது நபரோடு காதல் வந்தால் அது வலிமையாகவா இருக்கும்? யாரன்றே தெரியாமல் எடுத்ததும் வந்தால் அது வெறும் இன கவர்ச்சியே.

பெற்றோர்கள் காதலை வெறுப்பாகவே பார்க்கிறார்கள். ஆனால் அந்த பெற்றோரும் இளவயதில் காதல்வயப்பட்டதுண்டு. இந்த பெரிய அண்ட பிரபஞ்சத்தில் சிறு புள்ளிதான் நமது வாழ்நாள். அதிலும் 25 வயது வரை தனிமைப்பட்டே கடத்துகின்றோம். மீதமிருக்கும் வாழ்நாளை மனதுக்கு பிடித்தவரோடு மனதுக்கு நெருக்கமானவரோடு நம்மாள் புரிந்துகொள்ளப்பட்டும்; நம்மை புரிந்து கொண்டு இருப்பவரோடும் இணைந்து வாழ்வது எவ்வளவு அற்புதமானது. யாரென்றே தெரியாத ஒரு மனிதரோடு இணைந்து வாழ வைக்க பெற்றோர்கள் ஆவல் கொள்கின்றனர். தன் குழந்தைகளின் மனதினை புரிந்து பழகி காதலித்தவரோடு இணைந்து வாழ வைத்தால் எதிர்கால மனரீதியான பிரச்சனைகளாவது குறையும். தன் பிள்ளைகளுக்கு வரன் தேடும் போது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் சொந்த பந்தங்களிடமும் கௌரவ குறைச்சல் ஆகிவிடக்கூடாதே என சிந்திப்பதில் கவனம் செலுத்துகின்றனர். அந்த கவனத்தினை கொஞ்சமேனும் தன் பிள்ளையின் மனதிற்கு ஏற்றவரா என சிந்தித்து தேடுவது அரிதினும் அரிது. பின் எப்படி அது சிறந்த வாழ்க்கையாக இருக்கும்.

காதலுக்கு யார் யாரெல்லாம் விளக்கம் கொடுத்தாலும் பெரியார் அவர்களின் வார்த்தைகளைத்தான் மனம் தேடுகின்றது.
“காதல் ஒரு சத்தற்ற தன்மை” என முடித்தவரிடம் இன்னும் எதை தேட முடியும் என்ற விரக்த்தி. இருந்தாலும் அவரது பொதுக்கருத்தான “எதையும் நான் சொல்கிறேன் என்பதற்காக ஏற்க கூடாது. உங்களுக்கான அறிவால் அதனை பகுத்தறிந்து ஏற்பதே உண்மையான அறிவு” என்றவரின் வார்த்தை சில சிந்தனைகளை உண்டாக்கிவிட்டது. இருபது ஆண்டுகளாக காதல் இந்த சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றத்தினை யாரும் பார்க்காமல் இல்லை. பல இளவரசன்களை பிணமாக பார்த்திருந்தாலும்- அதே சமகாலத்தில் பல இளவரசன்களும் திவ்யாக்களும் பல எதிர்ப்புகளையும் மீறி மகிழ்ச்சியாக வாழ்வதை காண்கையில் சமூதாய மாற்றத்திற்கு இந்த காதல் எவ்வளவு முக்கிய பங்காற்றுகின்றது என்பதை உணர முடிகின்றது.

இன்று காதலை முட்டாள்தனமானது என சொல்பவர்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் சாதிய அறிவாளிகளாகவே உள்ளனர். காதல் சமூகத்தை மாற்றும் சத்துள்ள தன்மை என்பதற்கு இந்த ஒன்றே உதாரணம்.
– ரகுநாத்

Advertisements

2 thoughts on “காதல் செய்வீர்

 1. இந்த மாத “சஞ்சிகை மாத இதழில் ” காதல் செய்வீர் ” என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய
  நமது பசுமை நடை தோழர் ரகுநாத் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
  இது போன்ற கட்டுரை இப்போது இந்த சமுகத்துக்கு தேவையான ஒன்று காதலால் மட்டுமே சாதி , மதம் என்ற இந்த இரண்டு அசுரர்களை
  நாம் இந்த பிற்போக்கு தனமான சமுகத்தில் இருந்து அழித்து ஒழிக்க முடியும் ! எனவே
  காதல் செய்வீர் !
  இந்த சமுகத்துக்கு உங்களால் முடிந்த கடைமையும் செய்வீர் !

  • நிச்சயம் காதல் இந்த சமுதாயத்தினை முழுவதும் மாற்றும் நண்பரே.. தங்களின் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி.. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s