“வரலாற்றினைத் தெரிந்து கொள்வது வெட்டி வேலையா?” – ரகுநாத்

ஆகஸ்ட் 8ம்தேதி 1906ம் வருடம் எனது பாட்டனார் மூன்று இடங்களில் சொத்து வாங்கி வைத்திருக்கிறார். எனது தந்தையின் காலகட்டத்தில் அதில் ஒரு இடம் பிரச்சனைகளுக்கு உள்ளாகி, நீதிமன்றம் வரை சென்றது. பல்வேறு குழப்பங்களாலும் பெயர் வித்தியாசங்களாலும் எனது தந்தையின் இறப்பு வரை அதற்கு தீர்வின்றியே போனது. எனது கைகளுக்கு அந்த பிரச்சனை மாற்றப்பட்ட போது எனக்கு அதனைப்பற்றிய புரிதல் இல்லை. 100 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்மொழியின் அழகு பத்திர காகிதங்களில் ரசிக்க வைத்ததே தவிர புரிய வைக்கவில்லை. வயதான தந்தை வழி உறவினர் ஒருவரிடம் அமர்ந்து ஒரு நாள் முழுக்க குறைந்தது நூறு முறைகளேனும் அந்த பாத்திரத்தினை அவரின் உதவி கொண்டு படித்திருப்பேன். சொத்தினை வாங்கிய எனது பாட்டனாரின் பெயரும் சொத்தினை எழுதி கொடுத்தவர்களில் ஒருவரது பெயரும் ஒன்றாக இருந்நது. இறுதியில் அவரவர்களின் முதல் பெயர் (Initial) இவ்விருவருவருக்குமான பெயர் குழப்பத்திற்கு தீர்வாக அமைந்தது.

100 ஆண்டுகளுக்கும் முன் ஒரு நல்ல பழக்கம் இருந்திருக்கிறது. தன் பெயருக்கு முன்னால் தமிழில் தந்தையின் முதல் எழுத்தினை மட்டும் இடாமல் அதற்கு முந்தைய (குறைந்தது) மூன்று தலைமுறையினரின் முதல் எழுத்துகளையும் இட்டு பயன்படுத்தும் பழக்கம் தான் அது. இதனால் எந்த வம்சா வழி யார் யாரென்று அறிய முடிந்தது. அந்த பிரச்சனை அதன் பிறகு மூன்று ஆண்டுகளில் நீதிமன்றத்தில் எங்களுக்கு சரியான தீர்ப்பினை பெற்றுத்தந்தது. இந்த 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட எங்களின் குடும்ப வரலாற்றினை நாங்கள் தெரிந்திருக்கவில்லை என்றால் இன்று எங்கள் சொத்து எங்கள் வசம் இல்லை. இப்படி இருக்கையில் வரலாற்றினை தெரிந்து கொள்வதை எப்படி வெட்டி வேலை என சொல்ல முடியும். ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்கென வரலாறே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கையில் நமது சமூகத்தின் வரலாறு இன்னும் எவ்வளவு அவசியமானதாக இருக்கும்.

கல்லூரியில் ‘வரலாறு’ படிக்க செல்லும் யாவரும் இந்த சமூகத்தில் அவ்வளவாக மதிக்கப்படுவதே இல்லை. கடை நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளே பெரும்பாலும் ‘வரலாறு’ பாடத்திட்டத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். நமது மானுட சமூகத்தின் சொத்துக்கள் என்னவென்று வரலாற்றினை கற்றே பெற்றுகொள்ள முடியும். நாம் பெற்ற வரலாறுகளை விட இழந்த வரலாறுகளே அதிகம். சற்று பின்னோக்கி செல்வோம். இந்தியாவிற்காக போராடி சுதந்திரம் பெற்று தந்தது காந்தி என சாதாரணமாக சொல்லிவிடுவோம். நம் குழந்தைகளுக்கும் அதைத்தான் கற்றுக்கொடுக்கிறோம். ஆனால் தனிப்பட்ட காந்தி என்ற ஒரு மனிதனுக்கு மட்டுமே பயந்து வெள்ளையர் சுதந்திரம் கொடுத்துவிடவில்லை.

வெள்ளையர்களை பாதித்த விஷயம் எதுவாக இருந்திருக்கும்? இருநூறு ஆண்டுகளாக நம் நாட்டை ஆண்டவர்கள் ஏன் திடிரென சுதந்திரத்தை அளித்தனர்? அதைத் தேடி தெரிந்து கொள்வது நம் கடமை. சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 100க்கும் மேற்பட்ட தலைவர்களை பற்றி மட்டுமே வரலாற்று ஆவணங்கள் அதிகமாக கிடைக்கின்றன. எத்தனை சாதாரண மக்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியிருப்பர்? எத்தனை பெண்கள் துரைமார்களின் பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாகியிருப்பர்? எத்தனை சிறு முதலாளிகள் தங்கள் செல்வங்களை இழந்திருப்பர்? ஏன் அவைகளெல்லாம் அதிகமாக பதிவாக இல்லை?

இங்கிலாந்துக்காரர்கள் செய்த கொடுமைகள் கூட வரலாற்றில் ஆங்காங்கு ஆதாரங்கள் உண்டு. பிரெஞ்சுக்காரர்கள் நம் நாட்டில் ஆட்சி செய்த போது செய்த கொடுமைகளை, நிர்வாக அமைப்புகளை வரலாற்றில் பதிய வைக்க மேற்கொள்ளப்பட்ட தேடல் மிக வியப்பானது. பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் இருக்கையில் அனந்தரங்கர் என்ற ஒருவர் அரசாங்க குமாஸ்தாவாக பணியாற்றி பின் பல பதவி உயர்வுகளை பெற்றவர். நாட்குறிப்பு (டைரி) எழுதும் பழக்கம் கொண்ட இந்த மனிதருக்கு அப்போது தெரிந்திருக்காது தனது நாட்குறிப்பு பின்னாளில் பிரெஞ்சுகாரர்களின் ஆட்சியமைப்பை விளக்கபோகிறது என்று. தனது மனைவியுடனான வாழ்க்கையோடு தனது அரசாங்க பணிக்காலத்தில் நடந்த சம்பவங்களையும் சாதாரணமாக எழுதிவைத்த இவரின் எழுத்துக்கள் இன்று ஒரு வரலாற்று ஆவணம். ‘அனந்தரங்கர் நாட்குறிப்புகள்’ என்று புத்தகமாக வெளிவந்துள்ளது. அனந்தரங்கரின் குறிப்புகளை மையமாக கொண்டு எழுத்தாளர் பிரபஞ்சன் ‘வானம் வசப்படும்’ என்ற நாவலை எழுதி உள்ளார். சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல் அது.

இது நமக்கான வரலாறு. இதேபோல நம் காலத்திய வரலாறு நம் சந்ததிகளுக்கு கிடைக்க வேண்டும். நமது குறிப்புகளை மெக்காலே கல்வி முறை போன்று வரலாற்றினை திரித்து கூறாமல் நேர்மையாக எடுத்துரைப்பது அவசியம். வரலாற்று தேடல் உண்மையில் பல சுவாரஸ்யங்களை கொண்டுள்ளது. இன்று எத்தனையோ தமிழ் அறிஞர்கள் புதிது புதிதாக வரலாற்று ஆராய்ச்சிகளை செய்த வண்ணம் உள்ளனர்.

வரலாற்றினை அறிந்து கொள்வதையும் தேடி செல்வதையும் வெட்டி வேலை என்பவர்களுக்கு தெரியுமா?

# உலகின் முதல் மொழி தமிழ் என்பதும்;
# தமிழ் பிறந்த இடம் குமரிக்கண்டம் என்பதும், அது மூன்று கடல்கோள்களால் (சுனாமி) அழிந்தது என்பதும்;
# ஐரோப்பா கண்டங்களில் மனிதன் தோன்றி மொழி இல்லாமல் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் தமிழர்களின் முப்பாட்டன் இங்கு சங்கம் வைத்து கவி படித்தான் என்பதும்ம்;
# தமிழ் மொழியில் இருந்து பிரிந்து சென்ற மொழிகள் இன்று தென்னிந்தியாவில் பல மாநிலங்களில் பேசப்படுகின்றன என்பதும்;
# கன்னியாக்குமரி தமிழச்சி ஒருவரின் மரபணு 1,25,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என யுனெஸ்கோ ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளது என்பதும்;
# 12 கட்டங்கள் குறித்து கணிதத்தின் படி வானவியல் கண்டுபிடித்தது தமிழர்கள் என்பதும்;
# செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்கள் அனுப்பி இப்போது தான் மேலைநாட்டினர் அங்கு நிலம் செந்நிறமாக இருக்கிறதென கூறுகின்றனர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே அதனை அறிந்து அந்த கிரகத்திற்கு ‘செவ்வாய்’ என பெயரிட்டவர்கள் தமிழர்கள் என்பதும்;
# யோக ஆசனம் என வடமொழியில் நாம் உச்சரிக்கக் கூடிய “ஒசனம்” (தூய தமிழ்ச்சொல்) பற்றி திருமூலரால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்யுள் கவியாக எழுதப்பட்டது என்பதும்.

இதுவும் இன்னமும் இதற்கு மேலும் வியந்து கண்விரிய வைக்கும் வகையில் எத்தனையோ வரலாற்று கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என இந்த வரலாற்று வெறுப்பாளர்களுக்கு தெரியுமா?

வரலாற்றைத் தேடி செல்வதோ அறிந்து கொள்ள ஆர்வம் செலுத்துவதோ பழமையான விஷயமாகவே இவர்கள் எண்ணுகிறார்கள். ‘வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே’ என திரைப்பட வசனத்தால் கிண்டல் செய்பவர்களும் உண்டு. ஆனால் வரலாறு தினமும் புது புது சுவாரஸ்யங்களையும் வியப்புகளையும் கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றது. இதை எல்லாம் அனுபவிக்காமல், பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என சராசரி வாழ்க்கை வாழ்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? வரலாற்றினை தேடிச்செல்லும் போது கிடைக்கும் வியப்பும் மகிழ்ச்சியும் பணத்தினை தேடிச்செல்கையில் நிச்சயம் கிடைப்பதில்லை.

-ரகுநாத், மதுரை.
thamizhmani2012@gmail.com

Advertisements

One thought on ““வரலாற்றினைத் தெரிந்து கொள்வது வெட்டி வேலையா?” – ரகுநாத்

  1. வரலாறு மிகவும் முக்கியம் தான் அமைச்சரே…

    ஆனால் இந்தக் கட்டுரையில் முப்பாட்டனின் முன்னெழுத்தையும் குறிப்பிடுவதின் அவசியத்தை வலியுறுத்திய தாங்களே எந்தவொரு இடத்திலும் தங்களின் பெயருக்கு முன் தந்தையின் பெயரையோ, முன்னெழுத்தையோ குறிப்பிடவில்லையே, என்ன காரணம்? யார் செய்த தவறு?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s