நாஞ்சில்நாடனின் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’

‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ புத்தகத்தின் உள்அட்டையில் இதை வாசித்ததும் வாங்காமல் இருக்க முடியுமா? பள்ளியில் பத்து மதிப்பெண்ணுக்காக எனக்கு பிடித்த இட்லிகடைக்காரர், நான் மிளகாய் பஜ்ஜி கடை அதிபரானால் எனக் கட்டுரைக்கனிகள் படித்து கட்டுரைகளின்மீது வெறுப்பு கொண்டிருந்த நாளில் தொ.பரமசிவன், நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களின் கட்டுரை படித்துதான் கட்டுரைகள் மீதான ஈர்ப்பு வந்தது. இந்தப்புத்தகம் நாஞ்சில்நாடனின் கட்டுரைகள், முன்னுரைகள், மதிப்புரைகள் அடங்கிய தொகுப்பு. இதில் உள்ள எல்லா கட்டுரைகளும் முக்கியமானவை. நாஞ்சில் நிரந்தர பயணி, தன் பணிக்காரணமாக இந்தியாவெங்கும் சுற்றியவர். நாஞ்சில் சங்க இலக்கியம் முதல் இன்றைய நவீன இலக்கியம் வரை வாசிப்பவர். நாஞ்சில் ஒரு கட்டுரையை ஏனோதானோவென்றெல்லாம் எழுதுவதில்லை. அவரது ஒவ்வொரு கட்டுரையை வாசிக்கும்போதுதான் அதற்கான உழைப்பு எவ்வளவு இருக்கும் என்று நாம் உணர முடிகிறது.
இதில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது நாஞ்சில் நாடனின் ரௌத்திரம் நம்மையும் தொற்றி கொள்கிறது. எத்தனைவிதமாக நாம் ஏமாற்றப்படுகிறோம்; மேலும் நாம் செய்யும் சில காரியம் எல்லாம் எவ்வளவு தப்பு என்பதை ஒவ்வொரு கட்டுரை மூலமாக சாட்டையெடுத்துச் சுழற்றுகிறார். மகாகவி பாரதி சொன்ன ‘பேசாப் பொருளைப் பேசத்துணிந்தேன்’ என்னும் வரி நாஞ்சிலுக்கும் பொருந்தும்.

தமிழைக் கொலை செய்யும் திரையிசைப் பாடல்கள், பாலின் விலைக்கு நிகராக வந்த தண்ணீரின் விலை எனக் கண்முன் நடக்கும் அநியாயங்களை தன் எழுத்தின் மூலம் கேள்விக்குட்படுத்துகிறார். இந்நூலை வாசித்த பிறகு நான் தமிழ் சினிமா பார்ப்பதையே குறைத்து விட்டேன். இப்பொழுதெல்லாம் வருடத்திற்கு ஐந்து படம் பார்ப்பதே அதிகமாக தெரிகிறது. இதற்காகவே நாஞ்சிலுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

‘கொட்டிக் கிழங்கோ கிழங்கு’ என்ற கட்டுரையில் முறையான கழிப்பிட வசதியில்லாமல் பயணங்களில் பெண்களுக்கு ஏற்படும் சிரமங்களை விவரிக்கிறார். ஆண்களாவது பேருந்து நிற்கும் இடங்களில் எங்கனயாவது போய் இருந்துட்டு வந்துருவாங்க. பொதுவாக பேருந்து நிறுத்தும் அந்த அத்துவானக்காட்டில பெண்கள் பேருந்தை விட்டே இறங்க முடியாது, பிறகெங்கே கழிப்பிடங்களுக்கு செல்வது?. நாஞ்சில் சொல்வது போல நெடுநேரம் பயணிக்கும் பேருந்துகளிலாவது ஒரு கழிப்பறை அமைப்பது அவசியம். விலையில்லா அரிசி போடும் இக்காலத்தில் கழிப்பிடங்களுக்கு சென்றால் ஐந்துரூபாய் வரை வாங்கி விடுகிறார்கள். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?

‘மங்கலம், குழூஉக்குறி, இடக்கரடக்கல்’ கட்டுரையில் பெண்களின் மார்பகங்களை எப்படி வியாபார நோக்கத்தோடு திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள் காட்டுகின்றன என்பதை தெளிவாக எடுத்துரைத்து கண்டிக்கிறார்.
ஓரிடத்தில் போலி ஆசிரியர்களையும் கண்டிக்கிறார். இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் வேலைக்கு வந்தபின் படிப்பதேயில்லை என்பதுதானே உண்மை.

‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்ற கட்டுரை செல்போன்களை எப்படி நாம் முறைகேடாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என சுட்டிக்காட்டுகிறார். இப்பொழுது இன்னொரு கொடுமை என்னவென்றால் அவசரமாக அழைப்பு வருகிறதென்று எடுத்தால் ஒரு பெண் குரல் அழைத்து உங்க பிரச்சனைகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என கொஞ்சலான குரலில் அழைக்கிறது. அசந்தா ஆளையே காலி பண்ணிருவாங்க , கவனம் என்கிறார்.

கான்வென்ட்கள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், மதரஸாக்கள், குளிர் வாசத்தலங்களில் அமைந்த ரெசிடன்சியல் பள்ளிகள், கேந்த்ரீய வித்யாலயங்கள்… இவற்றின் ஊடே வக்கும் வகையும் அற்றவர்களின் மக்கள் பயிலும் மாநகராட்சிப் பள்ளிகள். என,‘நாடு இவர்களுக்கு என்ன செய்யப் போகிறது?’ என்னும் கட்டுரையில் மாநகராட்சி பள்ளி மாணவர்களை பற்றி கூறுகிறார். என்னுடைய மாநகராட்சி பள்ளி நாட்களை நினைவூட்டிய பதிவு. இங்கு சமச்சீர் கல்வி (பொது பாடத்திட்டம்) மட்டும் வந்தால் போதாது சமச்சீர் பள்ளிகளும் வேண்டும். என்ன செய்ய சீர் இல்லாத கல்விமுறைகளும் கூர் இல்லாத மக்களும் இருக்கும்போது?

‘அன்பெனும் பிடி’ கட்டுரையை வாசித்து வண்ணதாசன் நமக்கும் கடிதம் எழுதமாட்டாரா, வண்ணதாசனின் கோட்டோவியங்களை நாமும் காண முடியாதாயென ஏக்கமாயிருக்கிறது. மேலும் இந்நூலில் எம்.எஸ். மற்றும் சுந்தரராமசாமி பற்றிய இவரது கட்டுரையை வாசித்ததும் நமக்கும் அவர்கள்மேல் பிரியம் வருவது தவிர்க்க இயலாதது. இவர் தனக்கு எழுதும் முன்னுரைகள் மிக எளிமையானவை. மேலும் மற்றவர்களுக்கு எழுதும் முன்னுரைகள் அல்லது மதிப்புரைகளில் அவர்களது நிறைகளை சுட்டிக்காட்டுவதோடு குறைகளையும் மனங்கோணாமல் கூறி மேற்கொண்டு எழுத ஊக்குவிக்கிறார்.

‘வாசச்சமையலும் ஊசக்கறியும்’ என்ற கட்டுரையில் உணவைக் குறித்து பிரமாதமாக எழுதியிருக்கிறார்.

தமிழில் வந்த முக்கியமான கட்டுரைத்தொகுப்புகளில் இந்நூலும் ஒன்று. தமிழினி வெளியீடு. 150ரூபாய். பின்னட்டையில் உள்ள வரிகளையும் வாசியுங்கள்.

– சித்திரவீதிக்காரன், மதுரை.
maduraivaasagan@gmail.com

Advertisements

One thought on “நாஞ்சில்நாடனின் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s