அதீதன் கவிதைகள்

மாயாவனம்

நிறங்களற்ற விடியலில்
துவங்கும்
சாம்பல் வழித்
தடங்களில்
ஒரு நெடும்பயணம்

யாக்கை
கசிந்துருகும்
அகவெளியில்
மீளும்
வெள்ளை உயிரென
நீந்துமோர்
மச்சப் பிரேதம்

பச்சை
வனமெரிக்கும்
தீயின்
செம்மை தரித்துச்
சுழலும்
காற்றின்
ரூபம் கொண்ட
மாயை

தடம் பதியா
பெருநிலத்தில்
நித்தம் பொழியும்
ஊழிப் பொழியும்
ஊழிப்
பெருமழையாய்ப்
பாயும்
இருள்நதி.

இருள் தேவதை

கனவுகளில்
சுற்றித் திரியும்
பெண்ணொருத்தி
தூக்கங்களைத் தின்று
உயிர் வாழ்கிறாள்
சொப்பனங்களை
ஒன்றிணைத்த
அவளது
கலைடாஸ்கோப்பில்
வண்ணங்களைக்
கலைத்துச் சேர்க்கிறாள்
நினைவுகளை
மாற்றி வைக்கும்
விளையாட்டில்
அவளே வென்றவளாகிறாள்
ஒவ்வொருவர்
கனவுகளுக்குள்ளும்
பிரவேசிக்கும் பாதையை
மொழியினைக் கொண்டு
உருவாக்குகிறாள்
இரவுகளில் சதுரங்கம்
ஆடுமவள்
ஒருநாளும் பகல்களுடன்
உறவாடுவதில்லை.

– அதீதன்சுரேன், மதுரை.
surenbalu@gmail.com

Leave a comment