ரிதுபர்னோ கோஷின் “உடைந்த படகு”

கரையில் உட்கார்ந்து சாவகாசமாக நீர் நெளியும் ஆற்றை ரசித்துக் கொண்டிருக்கும் நம்மை, எதிர்பாராதவிதமாக திரளும் வெள்ளமொன்று இழுத்துச் சென்று வெகு தொலைவிற்கு அப்பால் வீசிவிட்டால் எப்படி இருக்கும்? நம்முடைய சுயம் முற்றிலும் உருக்குலைந்து, மீளாத் துயரத்தில் நம்மை ஆழ்த்திவிடும்தானே. அப்படியொரு வெள்ளம்தான் பாய்ந்துவிடுகிறது, எதார்த்தமான காதலர்களான ரமேஷ் – ஹேமாநளினி வாழ்வில். அதுவும் பெண் உருவில். ரித்விக் கட்டாக், சத்தியஜித்ரே போன்ற மேதைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட வங்க சினிமாவின் நிகழ்கால நம்பிக்கைகளில் ஒருவராக கருதப்பட்ட ரிதுபர்னோ கோஷின் 2011ல் வெளியான “நவுக்காதூபி” திரைப்படம் சட்டக் கல்லூரி மாணவரான ரமேஷுக்கும், அறை முழுவதும் இசையை நிரப்பிக் கொண்டு அதன் மையத்தில் வாழும் ஹேமாநளினிக்கும் இடையிலான மென்மையானக் காதலை வலி மிகுந்த துயரக் காவியமாக பேசுகிறது.

01

சுதந்திரத்துக்கு முந்தைய கொல்கத்தாவில் (1920) மனதை பிசையும் துயர இசை பின்னணியில் ஒழுக, ஹேமாநளினி தன் பிரமாண்டமான வீட்டின் கட்டிலில் சாய்ந்து ரமேஷை நினைத்து வெட்கத்தில் நாணுகிறாள். மறுபுறம் ஹேமாநளினியின் கையடக்கப் புகைப்படம் ஒன்றை வருடியபடி ரமேஷ் தன்னுடைய இரண்டே இரண்டு அறைகள் கொண்ட குடியிருப்பில் உலாவுகிறான். பெரும் வாழ்வொன்றை கற்பனை செய்தபடி இருவரும் அவரவர் இடங்களில் இருந்தபடியே இணக்கமாக இருக்கப் போகும் எதிர்காலத்தில் நீந்துகிறார்கள். மெல்லிய இசை கரைந்து மறைகிறது.

இந்நிலையில் ரமேஷிற்கு அவனது கிராமத்து தந்தையிடமிருந்து அவசர அழைப்பொன்று வருகிறது. ரமேஷ், ஹேமாநளினியிடம் சொல்லிக் கொள்ளாமலேயே தனது கிராமத்திற்கு சென்றுவிடுகிறான். அங்கு அவனது அப்பா, ரமேஷிற்கு வேறொரு பெண்ணைப் பார்த்து வைத்திருக்கிறார். இதனால் அதிர்வடையும் ரமேஷ், திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று மன்றாடியும், அவனது அப்பா யாருமற்று அனாதையாக நிற்கும் சுசிலாவின் பரிதாப நிலையை சுட்டிக்காட்டி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார். வழியற்று நிற்கும் ரமேஷ், ஒருமனதாக கனத்த மனதுடன் திருமணத்திற்கு சம்மதிக்கிறான். இருவருக்கும் எளிய முறையில் திருமணம் நடைபெற்று, கொல்கத்தா செல்வதற்காக படகு ஒன்றில் பயணமாகிறார்கள்.

அப்போதுதான் எதிர்பாராத அந்த துயர சம்பவம் நிகழ்கிறது. ஆற்றில் உருவான திடீர் வெள்ளத்தில் சிக்கி அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்துவிடுகிறது. நெடு நேரம் மயக்க நிலையில் ஆற்றின் கரையில் கிடக்கும் ரமேஷ், மெல்ல நினைவடைந்து தூரத்தில் செத்து மிதக்கும் பிணங்களை பார்க்கிறான். அவர்கள் எல்லோரும் சற்று முன்பு அவனுடன் பயணித்தவர்கள். அவர்களுக்கு மத்தியில் ரமேஷ் சுசிலாவைத் தேடுகிறான். திருமணத்தின்போது சுசிலா முகத்தை மறைத்திருந்ததால், அடையாளம் தெரியதவனாய் அந்த பிணக்குவியலுக்கு மத்தியில் “சுசிலா, சுசிலா” என்று குரல் எழுப்புகிறான். அங்கு கிடந்த, சிவப்பு சேலை உடுத்தியிருந்த பெண்ணொருத்தியை கண்டதும், அவள் அருகில் சென்று, அவளது கையை உயர்த்தி நாடித்துடிப்பை ஆராய்கிறேன். அவளுக்கு இன்னும் உயிர் இருப்பதற்கான சாட்சியாக பின்னால் வானத்தில் சூரியன் மெல்ல மங்குகிறது. அவளதுத் தோளைப் பற்றியபடியே தனது குடிலுக்கு அழைத்துச் செல்கிறான்.

மற்றொருபுறம், ரமேஷின் திருமணச் செய்தியை அறிந்திராத ஹேமாநளினி தன்னுடைய காதலோடும் இசையோடும் ரமேஷின் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறாள். மனமேயில்லாமல் சுசிலாவை திருமணம் செய்துக்கொண்ட ரமேஷ் ஹேமாநளினிக்கு இழைத்துவிட்ட துரோகத்தை எண்ணி உள்ளுக்குள் பொருமுகிறான். அது சுசீலாவுக்கும், ரமேஷிற்கும் இடையே பெருத்த இடைவெளியை உருவாக்குகிறது. அவர்களது நிழல்கள் மட்டுமே திரைமறைவாய் உரையாடிக்கொள்கின்றன. அப்போதுதான் சுசிலா என்று அறியப்பட்டவளின் பெயர் கமலா என்றும், தான் திருமணம் செய்துகொண்ட பெண் இவள் இல்லை என்றும் ரமேஷிற்கு தெரிய வருகிறது. இதனை கமலாவே ஒப்புக் கொள்கிறாள். தன்னுடைய கணவரின் பெயரை ஸ்லேட்டில் எழுதி, அவர் ஒரு மருத்துவர் என்றும் கூறுகிறாள். அவளுடைய பரிதாபகரமான நிலை ரமேஷை துயரத்தில் ஆழ்த்துகிறது. அவளுடைய கணவனைத் தேடி ஒப்படைக்கும் நோக்கில் செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்துவிட்டு, கமலாவை பெண்கள் பள்ளி ஒன்றில் சேர்த்துவிடுகிறான்.

ரமேஷுடன் கல்லூரியில் பயிலும் ஹேமாநளினியின் அண்ணன் அவளிடம் எல்லா உண்மைகளையும் சொல்லிவிடுகிறான். இதனால் மனச்சோர்வடையும் ஹேமாநளினி தனிமையில் அழுகிறாள். அவள் கற்பனை செய்திருந்த காதல் உலகம் நிறைவேறாமல் அவள் கண்முன்னாலேயே வீழ்வதை சகிய முடியாதவளாய் தன் தாத்தாவோடு கோவில் கோவிலாக அலைகிறாள். இறுதியில் கமலா தன் கணவனோடு சேர்ந்தாளா? ரமேஷ் – ஹேமாநளினியின் காதல் என்னவாகிறது என்பதை பல்வேறு திருப்பங்களுடன் இதமாக நகர்த்திச் சென்று அதன் இறுதி வடிவத்தோடு சேர்த்துவிடுகிறார் ரிதுபர்னோ கோஷ். ரபீந்திரநாத் தாகுரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ள இத் திரைப்படம் பல்வேறு உணர்வு நிலைகளை மிகுந்தக் கலாப்பூர்வமாக அழகாக சிருஷ்டித்திருக்கிறது.

03

குறிப்பாக, ஆதரவற்ற பெண்ணான கமலாவாக நடித்திருக்கும் ரியா சென், மிக நுட்பமான முக பாவனைகளை வெளிப்படுத்தி அந்த பாத்திரத்தை உணர்வுப்பூர்வமாக திரையில் வெளிப்படுத்தி இருக்கிறார். தாஜ்மஹால் படத்தில் தூணைப் பிடித்துக் கொண்டு சுற்றி சுற்றி வரும் ரியா சென்னை முழுமையாக ஒரு நடிகையாக இப் படத்தில் பார்க்க வியப்பாயிருந்தது.

02

அதேபோல ஹேமாநளினியாக நடித்திருக்கும் ரெய்மா சென்னும் போற்றுதலுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ரியா சென்னும், ரெய்மா சென்னும் நிஜ வாழ்க்கையில் அக்கா தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. ரிதுபர்னோ கோஷும் முதிய வயது பாட்டியாக சிலக் காட்சிகளில் வருகிறாள். அது ரிதுபர்னோ கோஷ்தான் என்று யூகிக்கவே முடியா வண்ணம் அசலான முதியவளைபோலவே அற்புதமாக நடித்திருக்கிறார்.

படத்தில் இசை குறிப்பிடத்தக்கவொன்று. பிரிவையும், துயரையும் நமக்கு இசைதான் நேரடியாகக் கடத்துகிறது. முழுமையான பாடல் என்று எதுவுமில்லை என்றாலும் ஆங்காங்கே சிறிது சிறிதாக வெளிப்படும் பாடல்கள் நிச்சயம் நம் மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. ஒளிப்பதிவு அன்றைய ராயல் கொல்கத்தாவை நிறைவாகப் பதிவு செய்திருக்கிறது. ஆற்றில் பயணிக்கும் படகை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ஒரு ஓவியத்தைப் போல நம் கண்களில் தேங்குகிறது.

நவுக்காதூபி என்றால் தமிழில் உடைந்த படகு என்று பொருள். உடைந்த படகினுள் மேலெழும் நீரினைப்போல நம்முள் இத்திரைப்படம் என்றென்றைக்குமாக தேங்கிவிடும். மூன்று வெவ்வேறு உணர்வு நிலைகளைக் கொண்டவர்களை ஒரே நேர்கோட்டில் இணைத்து அவர்களுக்கு மத்தியிலான காதலை மெல்லிய மலரை வருடம் ஸ்பரிசத்தை நமக்களித்து நிறைவு பெறுகிறது இத் திரைப்படம்.

-ராம் முரளி
raammurali@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s