தெரிந்ததில் தெளிந்தது – காந்தி

“இந்தியாவிற்கு சுதந்திரம் எப்போது கிடைத்தது?” என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் குழம்புவர்கள் கூட மூன்று உத்தமர்களின் பெயர்களை சொல்ல சொன்னால், பெரும்பாலும் சொல்லும் வரிசை ‘புத்தன், இயேசு, காந்தி’.
மேலோட்டமாக யோசிக்கையில் இது ஒரு விசித்திரமான வரிசையாக தோன்றும்., எவ்வாறு ஆன்மீகத்தின் முலம் மக்களை நெருங்கிய புத்தன் மற்றும் இயேசுவின் வரிசையில் காந்தி இடம் பிடித்தார் என்று? சிந்தித்து ஆராய்ந்தால் நமக்கு புரிவது – மூவரும் அன்பை பிரதானமாக வலியுறுத்தியவர்கள்; தொடர்ந்து விவாதித்து தங்கள் கருத்துகளைப் பரப்பியவர்கள்; அகிம்சையை போதித்தவர்கள்; தன்னை வெறுத்தவர்களையும் நேசித்தவர்கள்.
பொதுவாக, நாம் வரலாற்றை படிக்க கற்றுத்தரப்பட்டுள்ளோம். ஆனால், வரலாற்றை அணுக கற்றுத்தரப்படவில்லை. அதனால்தான் நம்மில் பெரும்பாலானோர் பட்டிமன்றங்களிலும், திராவிட இயக்கங்களின் வாயிலாகவும் நாம் கேட்ட காந்தி குறித்த ஆதரவு, எதிர்ப்பு பிரச்சாரங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு, மற்றவர்களிடம் ஒப்பிக்க தொடங்கிவிடுகிறோம்.

காந்தி பிறந்த இந்த அக்டோபர் மாதத்தில் காந்தியைப் பற்றிய பெரும்பான்மையோரின் கருத்துகளையும் அது குறித்த எனது பார்வைகளையும் (இறுதி கருத்து அல்ல) பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை.
காந்தி எழுதிய தன் சுயசரிதையான ‘சத்திய சோதனை’ நூலின் தலைப்பின் பொருளாக நாம் நினைப்பது ‘சத்தியத்தைக் கடைபிடிக்க காந்தி அடைந்த சோதனைகள்’ என்று. ஆனால், அதன் ஆங்கிலத் தலைப்பை அறிந்து கொண்டால் புரியும் (MY EXPERIMENTS WITH TRUTH)., அது காந்தி அடைந்த சோதனை (Test) அல்ல, சத்தியத்தின் மீது காந்தி மேற்கொண்ட சோதனை (EXPERIMENT) என்று.
01
காந்தி ரசனை உணர்வு அற்றவர், இலக்கியத்தின் மீது பரிச்சயம் இல்லாதவர் என்றும் பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் அவரது கடிதங்களை ஓரளவுக்கேனும் படித்தவர்களுக்கு புரியும் – காந்தி அவர் காலத்து இந்திய கவிஞர்களான தாகூர், காகா கர்லேகர் போன்றவர்களிடமும் ரஷ்ய இலக்கியவாதியான டால்ஸ்டாயுடனும் தொடர்பில் இருந்தவர் என்று.

images
காந்தியின் சீடர்களில் ஒருவரான காகா கல்லேகர் ‘ஜீவன் லீலா’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள நதிகளுக்கு அவர் சென்று வந்த பயணக்கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அதில் ஜோக் நீர்வீழ்ச்சி பற்றிய கட்டுரையொன்றில் காந்தியை கல்லேகர் ஜோக் நீர் வீழ்ச்சியில் நீராட வருமாறு அழைக்கிறார்; காந்தியோ சமூகத்தொண்டில் இருக்கும் தான் நினைக்கும் இடங்களுக்கு செல்ல முடியாது என்கிறார். கல்லேகரோ விடாப்படியாக இது உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி. 960 அடி உயரத்தில் இருந்து நீர் வருகிறது. நயாகரா நீர் வீழ்ச்சியை விட ஆறு மடங்கு பெரியது. எனவே இதில் குளிப்பது விசேஷமானது என்கிறார். காந்தி சட்டென்று ‘மழை எவ்வளவு உயரத்தில் இருந்து வருகிறது’ என்று கேட்க, கல்லேகர், தான் தோற்றுவிட்டேன் எனகூறி சென்று விடுகிறார். இவ்வாறு இயற்கையை குறித்த ஆழ்ந்த தரிசனத்தை உடையவர் காந்தி. ஆனால் தனது தேச குடிமகன்களின் சமூக முன்னேற்ற பணிகளுக்காக தன்னை கட்டுப்படுத்தி கொண்டவர் தேச தந்தை. இந்த ஜோக் நீர் வீழ்ச்சியில் ‘கும்கி’ படக்காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன என்பது துண்டு செய்தி.

காந்தியின் புகழ்பெற்ற ஒரு சொற்றொடர், “என் வாழ்க்கையே எனது செய்தி” (MY LIFE IS MY MESSAGE). காந்திக்கு பிறகு பலரும் இதை உபயோகித்தாலும் வரலாற்றில் காந்தி, அம்பேத்கார், பெரியார் போன்ற வெகு சிலரே வாழ்க்கையை செய்தி ஆக்கியவர்கள். காந்தியைப் பற்றிய சர்ச்சைகளில் முதன்மையாக கூறப்படுவது அவரது பாலியல் சோதனைகள். ஆசிரமத்தில் இருந்த பெண்ணுடன் நிர்வாணமாக படுத்துறங்கி தன் காமத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலை பரிசோதனை செய்தார் என்பது. அதற்கு பெரும்பான்மையான காந்தியவாதிகள் கூறுவது, அவரது சமய நம்பிக்கையின் பொருட்டு, அவர் காமத்தை வெறுத்தார். பொதுவாக, காந்தி தான் உண்மையென நம்புவதை பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறார். அது சுதந்திர போராட்டங்களில் தொடங்கி காமம் வரை. ஆனால் காந்தி இந்த அளவுக்கு காமத்தை வெறுத்தும், அதையே தனது சக சீடர்களிடமும் எதிர்பார்த்தது பேராசை தான் என்றும் அவரது அணுகுமுறையில் தவறு என்றும் எனக்கு தோன்றுகிறது. அவர் இராட்டையை அதிகமாக நம்பியது போலவே தன் உள்ளுணர்வு சொல்லிய காம வெறுப்பையும் நம்பினார் என்று தோன்றுகிறது. (இவ்விஷயத்தைப் பற்றிய ஆதரவு மற்றும் எதிர் கருத்துகள் மிக விரிவாக எழுதப்ப்படவேண்டியது. ஆதலால் இதை இத்துடன் முடிக்கிறேன்)

‘எனக்கு நேரமில்லை’ – என்று சொல்லும் நாம், தன் வாழ்நாளில் காந்தி செய்த பணிகளை பற்றி தெரிந்தால் ஆச்சர்யம் அடைவோம். ஒரு மனிதரால் எவ்வாறு தனது காலகட்டத்தின் அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார் என்று. பல்லாயிரக்கணக்கான கடிதங்களை எழுதியுள்ளார். இத்தனைக்கும் காந்தியின் பேச்சும் எழுத்தும் எளிமையானவை, நேருவை போல விரித்து எழுதும் பழக்கமோ, மேற்கோள்கள் காட்டி எழுதும் பழக்கமோ அவருக்கு இல்லை. காந்தியின் எழுத்துகள் குறித்து நேரு விமர்சித்த போது அவர் கூறியது, “எனது எழுத்து கலைநயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேவையற்றதென நீக்கும் ஒரு சொல் கிடையாது”.
அதுமட்டுமல்லாமல், இந்தியா முழுமையும் சுற்றுபயணம் மேற்கொண்டவர் காந்தி. சுற்றுப்பயணம் என்றால் பெருநகரங்களின் வழியே அல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், அதன் கிராமம், கிராமமாக சுற்றுப்பயணம் செய்துள்ளார். நவீன வசதிகள் உள்ள இந்த காலத்திலேயே இது சற்று கடினம் எனும் போது, அவர் காலத்தில் அது ஒரு சாதாரண செயல் அல்ல.

ஆசிரம நடவடிக்கைகள், காலை பிரார்த்தனைகள், பிரச்சாரம், உடலுழைப்பு என்று காலை 3 மணியிலிருந்து இரவு வரை ஓயாது இயங்கிக் கொண்டிருந்தார், ஒவ்வொரு நாளும்.

LaurieBakr_Sitenew_ready
லாரிபேக்கர் எனும் அயல்நாட்டு பொறியாளர் காந்தியை சந்திக்கும் போது ,காந்தி – ‘உலகிலேயே சிறந்த வீடு எது’ என கேட்டு சிறு அமைதிக்கு பின் பதிலாக “அந்தந்த இடங்களில் கிடைக்கும் பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடு’ என்கிறார். இந்த பதிலால் பெரிதும் உந்தப்பட்ட லாரிபேக்கர் அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து உருவாக்கிய “லாரிபேக்கர் பாணி வீடுகளை” இன்றும் கேரளாவில் காணலாம்.

உண்மையில் காந்தி செய்த பெரும்பான்மையான உண்ணாவிரதங்கள், காங்கிரசையும் இந்திய மக்களையும் நோக்கி தமது கருத்துகளை வலியுறுத்தவே. வெள்ளையர்களை நோக்கி அவர் மேற்கொண்டது அந்நிய துணி எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களே.

காந்தி லட்சியவாதமும், நடைமுறைவாதமும் கலந்த ஒரு அற்புத கலப்பு. தனது நியாயங்களுடன் எதிர் தரப்பு நியாயங்களையும் சிந்தித்து பார்க்க முற்பட்டவர். எவ்வளவு மூர்க்கத்தனமாக தனது லட்சியத்தை நம்பினாரோ, தனது கருத்து தவறென உணரும் தறுவாயில் அதைவிட அதிக மூர்க்கத்துடன் அதைத் திருத்திக் கொள்ள முனைந்தவர்.

காந்தியின் போராடங்களை அவதானிக்கும் ஒருவன் கிட்டத்தட்ட காந்தியத்தை புரிந்துகொள்ள இயலும். காந்திய போராட்டம் என்பது, ‘தனது எதிர்தரப்புடன் விவாதித்தும், போராடியும் தனது நியாயங்களை உணர்த்துவதன் வழியாக, அவர்களின் மனதை மாற்றி கிட்டத்தட்ட இரு தரப்பினர்க்கும் சமரசமான ஒரு இடத்தை அடைவதுதான்.” காந்தி அவரது கோரிக்கைகளில் கிட்டத்தட்ட 60-70% கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலே போதும் என சமரசத்திற்கு தயாராக இருந்தவர்.

உப்புசத்தியாகிரக போராட்டம்:
காந்தி செய்த போராட்டங்களில் மிகப்பெரிய போராட்டம் என்றால் அது உப்புசத்தியாகிரகம் தான். உப்பின் மீது விதிக்கப்படும் வரியை எதிர்த்து இந்தப் போராட்டத்தை தொடங்கும் போது நேரு போன்றவர்கள் இதை விட பெரிய பிரச்சனையான நிலவுடைமை வரியை எதிர்த்து போராடலாம் என்றனர். அனால், காந்தி தான் செய்த பயணங்களின் வழியாகவும்,எளிய மக்களிடம் கொண்ட தொடர்பின் வழியாகவும் நிலவரி மேலை சமூகத்தின் போராட்டம், உப்புவரி தான் சாமான்ய மக்களின் போராட்டம் என்று உள்ளுணர்வால் உணர்ந்திருந்தார். அது மிகப்பெரிய போராட்டமாக மாறியது. உப்பு சத்தியாகிரக போராட்டம் என்பது கழுகுப்பார்வையில் பார்த்தால், ஆங்கிலேயர் உப்பின் மீது விதித்த வரியை நீக்க கோரி செய்த போராட்டம். ஆனால் சமீபக்காலங்களில் அதைப்பற்றி வெளிவந்த பல நூல்கள் ஆச்சர்யத்தை அளிக்கின்றன. நாம் நினைப்பது போல அது சாதாரணமான விஷயம் அல்ல.
02
அக்காலத்தில் நாம் உப்புக்கு செய்த செலவு மற்ற காய்கறி உணவுக்கு இணையாக இருந்ததாக இந்தியாவில் இருந்த சுங்கவெளி ப்படும் பற்றி ஆராய்ச்சி செய்த ராய் மாக்ஷம் (ROY MOXHAM) எழுதிய “THE GREAT HEDGE OF INDIA” என்னும் நூலில்கூறியுள்ளார்.அதுமட்டுமல்ல, அக்காலத்தில் இந்தியாவிற்கு வரும் ஆங்கிலேய கப்பல்களின் எடை சமநிலைக்காக உப்புமூட்டைகளை கொண்டு வந்து அதை விற்க முயன்றனர். ஆனால், நம் நாட்டிலேயே உப்பு அதைவிட குறைந்த விலையில் விற்கப்பட்டதால், அதைக் கட்டுப்படுத்த உப்பின் விலையை உயர்த்தினர். உப்பிலும் இரண்டு வகைகள் இருந்தன. செயற்கையான முறையில் கடல்நீரை தேக்கி காய்ச்சி எடுக்கப்படும் உப்பு, மற்றொன்று இயற்கையாக நீர் வறண்டு தானாக கிடைக்கும் உப்பு. செயற்கையாக காய்ச்சி தயாரிக்கும் உப்பை பிராமணர்கள் உபயோகிக்கவில்லை. குஜராத் பகுதிகளில் இருந்து கிடைக்கும் இயற்கை உப்பையே பயன்படுத்தினர்.

இந்த தொழில் வாய்ப்பையும், அத்தியாவசியத்தையும் தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் லாபம் பெற உப்பின் மீது வரி விதித்தனர். மேலும் ஒரிசாவில் இருந்து காஷ்மீர் வரை இந்தியாவை இரண்டாக பிரித்து முள்வேலி அமைத்து உப்பு போக்குவரத்திற்கு சுங்கவரி வசூல் செய்தனர்.இதை ‘எங்கள் சூரியன், எங்கள் கடல்! நாங்கள் வறி கொடுக்க மாட்டோம்’ என்ற தார்மீக கோபத்தினாலும் முன்னெடுத்த போராட்டமே உப்புசத்தியாகிரகம். அதன் விளைவாக ஏற்படுத்தப்பட்டது தான் காந்தி-இரவின் ஒப்பந்தம். அதன் பிறகாவது உப்பின் மீது வரி விலக்கிக்கொள்ளப்பட்டதா என்றால் இல்லை. கடலோர மக்களின் சொந்த உபயோகித்திர்கான உப்புக்கு வரி கிடையாது என்று தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இது தோல்வியில் முடிவடைந்ததாக தோன்றலாம். அனால், உண்மையில் காந்திய போராட்டம் என்பது இவ்வாறு சமரசங்களின் வழி முன்னகர்ந்து செல்வது தான். இப்போராட்டத்தில் காந்தி தன் நிலையில் இருந்து இறங்கி வந்து விட்டதாக தோன்றினாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளை போராட்டத்தில் ஈடுபட வைத்து “ஆங்கிலேயர்களின் ஆட்சியை தாங்கள் அங்கீகரிக்கவில்லை” என உணர்த்தவே.,ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன் “வானம் பொழிகிறது , பூமி விளைகிறது எதற்கு வரி ?” என்று கேட்ட பொழுது தூக்கு கொட்டுத்த அதே ஆங்கிலேயர் முன்பு ,பல்லாயிரம் மக்களை ஒன்றுபடுத்தி “எங்கள் கடல்! எங்கள் சூரியன்” போராடியதன் வழி இறங்கி வர வேண்டிய கட்டாயத்தை காந்தி ஏற்படுத்தினார்.

இந்தியாவிற்கு சுதந்திரம் என்ற இலக்கை நோக்கி காந்தி உழைத்ததில்லை. அவரது முக்கிய இலக்காக அவர் கொண்டது சுய சார்புள்ள கிராமப் பொருளாதாரமும், சமூக சீர்த்திருத்தத்தையும் நோக்கியே. காந்தி மட்டும் இந்திய சுதந்திரத்தை வாங்கி தரவில்லை. இது சிப்பாய்கலகம் தொடங்கி நேதாஜி, அம்பேத்கார், பெரியார் வினோபாவே மற்றும் பலரது பங்களிப்பும் நிறைந்தது.

காந்தியை நாம் வாசிக்கும் போது நாம் சேர்ந்து வாசிக்க வேண்டிய, தவிர்க்க முடியாத ஒரு தலைவர் ‘சட்டமேதை அம்பேத்கார்’. தமிழகம் எப்படி பாரதியும், வ.உ.சியையும் பற்றி பெரிதாக அங்கீகரிக்காமல் இருக்கிறோமோ அது போல இன்னும் இந்தியர்கள் மத்தியில் அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறார் அம்பேத்கார். காந்தி வாழ்ந்த காலத்தில் அவருக்கு நிகரான சிந்தனையாளர், நேர்மையுடையவர் ஒருவர் உண்டென்றால் அது அம்பேத்கார் தான்.
காந்தியடிகளின் கருத்துகளில் முரன்பட்டவர்கள் பலர் இருந்தாலும், தனது சமூகத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமையை அறிவார்ந்த சூழலில் எடுத்துரைத்தவர் அம்பேத்கார்.
dr-br-ambedkar
கால எந்திரத்தில் பின்னோக்கி செல்லும் வாய்ப்பு கிடைக்கையில், நான் காண விரும்புவது காந்தியும், அம்பேத்காரும் நடத்திய அந்த விவாதங்களே. விவாதங்களின் வழி ஒருவரை ஒருவர் உணர்ந்து முன்னகர்ந்து கொண்டனர். ஆரம்பத்தில் காந்தி சாதி பாகுபாடுகளை ஆதரித்தார். ஏனென்றால் இந்த பாகுபாட்டை நாம் எடுத்துவிட்டால் அது மிக பயங்கரமான, பண ரீதியான பாகுபாடாக கூடும் என்றும் சாதிரீதியான பாகுபாடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அம்பேத்காரின் அறிவார்ந்த உரையாடல் வழியே அவர் அதில் ஒளிந்துள்ள தீண்டாமையை உணர்ந்து எதிர்க்கலானார் எனப்படுகிறது. அதேபோல அம்பேத்காரும் தனது சமூகத்திற்கு இரட்டை வாக்குரிமை வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தார். அதற்காக ஆங்கிலேயர்களுடன் சேர விரும்பினார். பின்னர் மதமாற்றம் என்னும் வரும்போது அவர் எந்த பிரச்சனைக்கும் வழிகொலாமல் புத்த மதத்தைத் தழுவினார்.

காந்தி பெரும்பாலும் வரலாறு நோக்கிய தரிசனமும், வன்முறையை அறவே தவிர்த்துமே வந்திருக்கிறார்.இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது அதை வன்முறையின்றி எவ்வாறு படிப்படியாக பிரிவினையை செயல்படுத்தலாம் என்பதை பற்றி இராஜாஜியும் அம்பேத்காரும் எழுதியுள்ளனர். எப்போதும் பிறருடன் விவாதிக்கவும், கேட்கவும் தயாராக இருந்த காந்தியின் காதுகள் அப்போது என் இவர்களின் ஆலோசனையை நாடவில்லை என்பது புரியவில்லை.

காந்தி தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் என்ற கருத்து உள்ளது. ஆனால், ஒரு வேலையை நுட்பமாக செய்ய உதவும் தொழில்நுட்பத்தை அவர் வரவேற்றார். உதாரணமாக அவரது மிகப்பெரிய குறீயீடான இராட்டை. ஆனால் வேலையிலிருந்து மனிதனை ஒதுக்கும் தொழில்நுட்பத்தை அவர் எதிர்த்தார். எதிர்த்தார் என்பதை விட வேலையில்லா மனிதர்கள் இருக்கும் தேசத்தில் மனிதர்களை புறக்கணித்து அவர்களது வேலைவாய்ப்பை குறிவைக்கும் பெருதொழில்நுட்பங்கள் தேவையில்லை என கருதினார்.

சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் ‘காந்தியுடன் பேசுவேன்’ என்ற கதை இவ்வாறு முடியும். ராக்கேல் எனும் பெண் – காந்தியின் சுயசரிதை வழி ஈர்க்கப்பட்டு காந்தியவதியாக முயலும் கணவனிடம் கூறும் வரி. “நீ காந்தியை வழிபட ஆரம்பித்துவிட்டாய். இனி, உனக்கு காந்தி புரியாது. காந்தியை வழிபட்டு அறிந்து கொள்ள முடியாது. அவரைப்போல வாழ்வதின் வழியே மட்டும் அறிய முடியும்.”

– அருண் மகாலிங்கம்
mrarunca@yahoo.co.in

(இக்கட்டுரையின் மீதான கருத்துகளும், விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.

Advertisements

One thought on “தெரிந்ததில் தெளிந்தது – காந்தி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s