சூழலியலாளர்கள் மார்க்சும் எங்கல்சும்

இயற்கையை வெல்லும்படியான மனித ஆற்றல் மீது மார்க்சும் எங்கல்சும் அளவுகடந்த நம்பிக்கைவைத்தனர்; வளம் குன்றா வளர்ச்சி மற்றும் சூழலியல் குறித்த எந்த ஆர்வமும் அவர்களிடம் இல்லை போன்ற கற்பிதங்கள் இன்றைய சூழலியலாளர்கள் மற்றும் மார்க்சியர்கள் மத்தியில் கூட பரவலாக நிலவுகிறது. முன்முடிவுகள் அடிப்படையில் அவர்கள் முன்வைக்கும் இவ்வகையான விமர்சனங்களுக்கு மார்க்ஸ் மற்றும் எங்கல்சின் எழுத்துக்களிலிருந்தே அவர்களுக்கான மறுப்புகளை வழங்கமுடியும் என்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் எழுத்துக்களை இவர்கள் முற்றாக வாசிக்காமல் யூகத்தை அடியொற்றி மேலோட்டமான கருதுகோள்களுடன் மார்க்சையும் எங்கல்சையும் விமர்சிப்பது ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு ஒருபோதும் வழிவகை செய்யாது, சூழலியல் நெருக்கடிகளுக்கு காரணியான முதலாளியத்தை நாம் முற்றாக புரிந்துகொள்வதற்கும் உதவாது. (தெய்வீக அருளின்படி இயற்கை விதிகள் அமைகிறது, இயற்கையே தெய்வமெனும் இயக்க மறுப்பியல்வாதிகளான “இறையியல்” சூழல்வாதிகள், சுற்றுச்சூழலின் எதிரியே சூழலை காக்க வந்த மீட்பராக வேறுவடிவில் கிளம்புகின்ற “கார்பரைட்” சூழல்வாதிகள் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியினை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பவராக , தொழில்நுட்பத்தால் சூழலியல் சிக்கல்களுக்கு தீர்வழிக்க முற்படும் “விஞ்ஞான” சூழல்வாதிகளை இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.)

marx_and_engels

மார்க்ஸ் மற்றும் எங்கல்சின் சூழல் குறித்த திறனாய்வானது 19 ஆம் நூற்றாண்டு சூழலில் நிலவிய முதலாளித்துவ அமைப்பை மைய நீரோட்டமாக கொண்டவை. அப்போது நிலவி வந்த போட்டிமிகுந்த முதலாளிய அமைப்பினால் ஏற்படும் சூழலியல் சிக்கல்களை தனது எழுத்துக்களில் தவறாமல் விமர்சித்து வந்தார்கள் . குறிப்பாக மால்த்தூசிய கோட்பாடு மற்றும் டார்வீனிய கோட்பாடு குறித்த அவர்களின் விமர்சனங்கள் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டியது மட்டுமல்லாமல் பரந்துபட்ட அளவில் விவாதிக்க வேண்டியது அவசியத்தேவையாகும்.

இயற்கையுடனான மனித உறவு குறித்து:
மனிதன் இயற்கையினால் வாழ்கிறான் – அதாவது இயற்கைதான் அவனது உடல் – மேலும் அவன் சாகாமல் இருக்கவேண்டுமென்றால் அவற்றுடன் தொடர்ச்சியாக உரையாடலை மேற்கொண்டு வரவேண்டும். மனிதனின் பௌதிக / புற மற்றும் அக வாழ்வானது இயற்கையுடன் இணைந்தது என்பதை எளிதாக சொல்வதென்றால், இயற்கை அதனுடையே இணைக்கப்பட்டிருக்கிறது, மனிதன் இயற்கையின் ஒரு பகுதி
——- மார்க்ஸ் ,1844 ஆம் ஆண்டின் பொருளாதார-தத்துவஞான கையேடுகள்

barkbrief-fig01_011

காடழிப்பு குறித்து:
நாகரிக வளர்ச்சியும் பொதுவாகத் தொழில் வளர்ச்சியும் எப்பொதுமே காடுகளை அழிப்பதில்தான் மும்முரமாய் இருந்துள்ளன.காடுகளை அழியாமல் காக்கவும்,அழிந்தவற்றைத் திரும்பவும் வளர்க்கவும் அவை செய்திருப்பவை எல்லாம் கடுகளவே என்னும் படியாக இருக்கிறது.
—— மார்க்ஸ்,மூலதனம் -பாகம் -2;பகுதி -II ;அத்தியாயம்-XIII;பிரிவு -II- உற்பத்திக்காலம் ; பக்கம்-324

friedrich-engels

நிலத்தை சரக்காக்குதல் குறித்து:
நமக்கு எல்லாமுமாம் இருக்கின்ற புவியை,அனைவரின் இருப்பிற்கும் முதல் நிபந்தனையாக இருக்கும் நிலத்தை ஒரு விற்பனைப் பொருளாக மாற்றுவது என்பது ஒருவர் தன்னையே விற்பனைப் பொருளாக மாற்றுவதை நோக்கிய இறுதி அடியாகும். சுய-அந்நியமாதல் என்ற ஒழுக்ககேடான செயலுக்கு அடுத்த படியான ஒழுக்ககேடு இதுவாகத்தான் இருந்தது; இன்று வரை இருந்தும் வருகிறது, மற்றும் தொடக்க கால கைப்பற்றல்-பூமியை ஒருசிலர் ஏகபோகமாக்கிக் கொண்டு மற்றவர்களை, அவர்களுடைய வாழ்க்கைக்கு நிபந்தனையாக இருக்கும் நிலத்திலிருந்து வெளியெற்றுவது – அதைத் தொடர்ந்து பூமியை விற்பனைப் பொருளாக மாற்றும் ஒழுக்கக்கேட்டைத் தவிர வேறு எதையும் வழங்குவதில்லை.
—- எங்கெல்ஸ்,அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை

நகரயமாக்கல் மற்றும் மண் வளம் குறித்து:
பெரும் கேந்திரங்களில் மக்களை ஒன்று திரட்டுவது மூலமும், நகர மக்கள் பெரும்பான்மையாய் இருக்கும் நிலையை மேலும் மேலும் அதிமாக்குவதன் மூலமும் முதலாளித்துவ பொருளுற்பத்தி ஒரு புறம் சமுதாயத்தின் வரலாற்று இயக்கு விசையை ஒன்று குவியச்செய்கிறது; மறுபுறம் மண்ணுக்கும் மனிதனுக்குமிடையில் நடைபெறும் பொருளின் சுற்றோட்டத்தை குலைக்கிறது; அதாவது உணவு உடையின் வடிவில் மனிதனால் நுகரப்பட்ட மண்ணின் கூறுகள் மண்ணுக்குத் திரும்பிச் செல்வதை தடுக்கிறது; ஆகவே மண்வளம் நிலைத்து நீடிப்பதற்கு அவசியமான நிலைமைகளை கெடுக்கிறது.
—— மார்க்ஸ்,மூலதனம் -பாகம் -1;புத்தகம் -1;பகுதி -IV ;அத்தியாயம்-XV;பிரிவு -10- இயந்திர சாதனமும் நவீனத் தொழிற்துறையும்; பக்கம்-682

marx environmentalist

மண்ணை அழித்தல் குறித்து:
முதலாளித்துவ விவசாயத்தின் முன்னேற்றம் எல்லாமே உழைப்பாளியை கொள்ளையிடுவது மட்டுமன்றி மண்ணையும் கொள்ளையிடுகிற கலையின் முன்னேற்றம்தான்; குறிப்பிட்ட காலத்திக்கு மண்ணின் வளத்தை அதிகமாக்குவதிலான முன்னேற்றம் எல்லாமே அந்த வளத்துக்குரிய நிலையான ஆதாரங்களை கெட்டழியச் செய்யும் வழியிலான முன்னேற்றம்தான். ஒரு நாடு எவ்வளவுக்கெவ்வளவு நவீன தொழிற்துறையை அடிப்படையாகக்கொண்டு – உதாரணமாக அமெரிக்க ஐக்கிய நாட்டை போல் – தன் வளர்ச்சியை தொடங்குகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிவேகமாய் இந்த அழிவு நிகழ்கிறது. ஆகவே முதலாளித்துவ பொருளுற்பத்தியானது செல்வங்களுக்கெல்லாம் மூல ஆதாரமாகிய மண்ணையும் உழைப்பையும் கசக்கிப் பிழிந்துதான் தொழில்நுட்பத்தை வளர்த்திடுகிறது.
—— மார்க்ஸ்,மூலதனம் -பாகம் -1;புத்தகம் -1;பகுதி -IV ;அத்தியாயம்-XV;பிரிவு -10- இயந்திர சாதனமும் நவீனத் தொழிற்துறையும்; பக்கம்-683

இயற்கை மீதான மனிதனின் ஆதிக்கம் குறித்து:
“ இயற்கையின் மீது மனித வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது.ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது ,மூன்றாவது நிலைகளாக நாம் எதிர்பார்க்காத,முற்றிலும் வேறுப்பட பலன்களையும் அளிக்கிறது; இவை பல தடவைகளிலும் முதலில் சொன்னதை ரத்து செய்துவிடுகின்றன…….
மெசபட்டோமியா, கிரீஸ், ஆசியா மைனர், இன்னும் இதர இடங்களிலும் சாகுபடி நிலங்களை பெறுவதற்காக காடுகளை அழித்த மக்கள் காடுகளை அழித்ததுடன் கூடவே நீர்த்தேக்கங்களையும் தண்ணீர் ஒருங்கு சேரும் இடங்களையும் ஒழித்ததனால் அவர்கள் அந்த நாடுகளின் தற்போதைய திக்கற்ற நிலைக்கு அடிகோலியதாகக் கனவும் கூடக் காணவில்லை.

ஆல்ப்ஸ் மலைகளில் குடியேறிய இத்தாலியர்கள் வடபுறச்சரிவுகளில் அவ்வளவு பரிவுடன் பேணிக் காக்கப்பட்ட பைன் மரக்காடுகளைத் தென்புறச்சரிவுகளில் பூரணமாக வெட்டி பயன்படுத்தி விட்டபொழுது, அவ்விதம் செய்ததின் மூலம் அப்பிரதேசத்துப் பால்பண்ணை தொழிலின் அடி வேர்களையே வெட்டி விட்டதன் சூசகத்தையும் கூடக் காணவில்லை; அதன் மூலம் வருடத்தின் பெரும் பகுதியில் மலைசுனைகளுக்குத் தண்ணீர் இல்லாமல் செய்து விட்டதைப்பற்றியும் மழைக் காலங்களில் கூடுதலான வெள்ளப்பெருக்குடன் அவை சமவெளிகளில் பாய்வதற்கு வகை செய்யப்பட்டது என்பதை பற்றியுமோ, அந்த அளவு சூசகம் கூடக் காணவில்லை.

அயல்நாட்டு மக்கள் மீது வெற்றிவாகை சூடியவனை போல, இயற்கைக்குப் புறத்தே நிற்கும் ஒருவனைப் போல இயற்கை மீது எவ்விதத்திலும் நாம் ஆளுகை புரியவில்லை என்பதும் அதற்கு பதிலாக நமது சதை , ரத்தம் , மூளை இவற்றுடன் இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம் அதன் நடுவில் வாழ்கிறோம் என்பதும் இயற்கையின் நியதிகளைக் கற்றுக்கொண்டு அவற்றைப் பொருந்தியவாறு கடைபிடிப்பதிலும் இதர எல்லாப் பிராணிகளைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்பதிலேயே அதன் மீது நமது ஆளுகை அடங்கியுள்ளது என்பதும் ஒவ்வொரு படியிலும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.

கியூபாவில் மலைச்சரிவுகளில் இருந்த காடுகளைத் தீயிட்டுக் கொளுத்தி மிகவும் உயர்ந்த லாபகரமான காபிச் செடிகளின் ஒரு தலைமுறைக்குப் போதுமான உரத்தை அந்த சாம்பலிலிருந்து பெற ஸ்பானிய காப்பித்தோட்ட முதலாளிகள் என்ன கவலைப்பட்டார்கள் – வெப்ப பிரதேச கன மழைக்கு பின்னால் பாதுகாப்பற்ற மேல்படிவ மண் முழுவதையும் அடித்துக் கொண்டு போய் பாறைகளை மட்டும் மொட்டையாக விட்டுச்சென்றது என்பதைப் பற்றித்தான் அவர்கள் என்ன கவலைப்பட்டார்கள்! சமூகத்தைபோலவே இயற்கை சம்பந்தமாகவும் கூட இக்காலத்தைய உற்பத்தி முறை உடனடியான,மிக உருப்படியான விளைவுகளைப் பற்றி மட்டுமே பிரதானமாக அக்கறை கொண்டுள்ளது”
—-“மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்” நூலில் எங்கெல்ஸ்

– அருண் நெடுஞ்செழியன்,
சென்னை.
arunpyr@gmail.com

Advertisements

One thought on “சூழலியலாளர்கள் மார்க்சும் எங்கல்சும்

  1. காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் அவர்கள் இந்த உலகம் முதலாளித்துவத்தின் பிடியில் சிக்கி சிரழிந்து கொண்டு இருந்தது, இருந்துகொண்டு இருக்கிறது ,இனியும் இருக்கபோகிறது என்றும் அதன் முதல் இலக்கு இந்த இயற்கை வளங்கள் தான் அந்த வளங்களை கொண்டு மனித உழைப்பை சுரண்டி உற்பத்தி செய்யும் பொருள்களை பொது மக்காளுக்கான தேவையாக மாற்றி அதை சந்தைபடுத்தி அந்த நுகர்வு கலாச்சாரத்துக்கு மக்களை அடிமைபடுத்தி வைத்துகொண்டு இருக்கும் இந்த முதலாளித்துவ முதலைகளுக்கு மிக பெரிய எதிரியாக மாறியதற்கு காரணம் இந்த முதலாளித்துவ முதலைகள் எல்லாத்துக்கும் பொதுவான இந்த இயற்கை வளங்களை நகரமயமாதல் ,மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்று கூறி கொண்டு மக்களை ஏமாற்றி எவ்வாறு இந்த இயற்கை வளங்களை கொள்ளை அடித்து கொண்டும் , எந்த எந்த வழிகளில் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டி கொண்டு இருந்தார்கள் என்பதை மிக தெளிவாக இந்த உலகுக்கு அம்பலபடுதிய பெருமைகுரியவர்களின் சூழியல் குறித்த அக்கறையை நீங்கள் மிகுந்த அக்கறையுடன் எங்களுக்கு தெரிய படுத்தியதற்கு தோழர் அருண் நெடுஞ்செழியன் அவர்களுக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துகள் !

    இப்படிக்கு

    ஒ.கனகராஜ்
    8754503186

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s