செல்வி என்கின்ற தாய்

பிறந்தது முதல் இறக்கின்ற வரை நாளுக்கு நாள் நம் வாழ்வில் உறவுகள் என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். கால சுழற்சியினால் சில உறவுகளில் பிரிவுகளோ அல்லது இழப்புகளோ ஏற்படும். அதில் சில, மிக மோசமான தாக்கத்தையும் சில சந்தோஷங்களையும் கொடுக்கும். இதில் நம்மை மிகவும் பாதித்த அல்லது விரும்புகின்ற உறவுகளை தான், நம் உயிரோட்டம் இருக்கும் வரை, இடர்கள் ஏற்பட்டாலும் விட்டு விடாமல் தொடர்வோம். அப்படி நான் பார்த்த ஒரு உயிரோட்டமான ஒரு உறவு பிடிப்பை பற்றிதான் பேசதொடர்கிறேன்.
சரியாக 18 வருடங்களுக்கு முன், நான் வகுப்பு 7ல் படித்துகொண்டிருக்கும் பொழுது தான் என் வீட்டில் மிதிவண்டி வாங்கினார்கள், என்னுடைய மிதிவண்டி பயிற்சி, வாங்கிய சில நாட்களில் இருந்து தொடங்கியது.

சிலவருடங்களுக்கு முன் தான் நாங்கள் அந்த கிராமத்தில் குடியமர்ந்தோம் அதனால், எங்களின் வீதியை தவிர்த்து, அந்த ஊருக்கு சொந்தமான மற்ற இரு வீதிகளில் நான் பெரும்பாலும் சென்றதில்லை. மிதிவண்டி பயிற்சி மேற்கொள்ள நான் மாறி மாறி மூன்று வீதிகளிலும் கீழே விழுந்தும் எழுந்தும் மிதிவண்டியை செலுத்தி சென்று கொண்டிருந்த பொழுது.

சரியாக முதல் வீதியின் துவக்கத்தில் இருந்த ஒரு கதவற்ற வீட்டினை கடக்கும் பொழுது, என்னை யாரோ டேய் என்று கூப்பிட்டதாக கேட்கவே, வண்டியை நிறுத்தாமல் திரும்பி பார்க்க முயற்சித்த பொழுது சற்றும் தாமதிக்காமல் என் மீது எச்சில் துப்பப்பட்டது. நான் சுதாரித்து பார்த்த பொழுது தான் தெரிந்தது அது இந்திராணி என்று.

இந்திராணி ஒரு நடுவயது பெண்மணி. கருப்பும் வெள்ளையுமாக, ஈரப்பசை பார்க்காத, அத்தனை திசைகளிலும் பறந்து கொண்டிருந்த ஒரு கேசம், நெற்றியில் கீழிருந்து மேலாக நெருப்பு கனல் போல் சிகப்பு நிறத்தில் ஒரு பொட்டு. நிமிடங்களில் கணக்கிட முடியாத அளவு உடலை சுற்றி வித வித மான பழைய கிழிந்த உடைகள். கழுத்தில் நிறைய மணிகளும், பாசிகளும் கிடந்தன . அனைத்தும் சேர்ந்து கிட்ட தட்ட “நான் கடவுள் ஆர்யா” போன்ற ஒரு உடலமைப்பு கொண்ட, பெண்மணி. முழுமையாக மன நிலை பாதிக்க பட்டவர் போன்று தெரியவில்லை.ஆனால் சற்றேனும் மனதளவில் பாதிக்கபட்டவராகதான் இருந்தார்.

இந்த பெண்மணியை பற்றி நிறைய வளர்ந்த ஆட்கள் பேசுவதை கேட்டிருக்கிறேன் ஆனால் இன்று தான் நேருக்கு நேர் நின்று பார்த்தேன். ஊரில் உள்ள அனைவரையும் ஒருமையில் தான் அழைப்பர். பீடி புகைப்பார். சாராயம் குடிப்பார். சில நேரங்களில் அந்த கிராமத்தின் பிரதான சாலையில், உடலில் உடுப்பில்லாமல் உலா வருவார். அது போன்ற நேரங்களில் யாரும் அவரை தடுத்ததாகவோ அல்லது விரட்டியதாகவோ நினைவில்லை. ஆனால் சிலர் மறைந்தும், சிலர் கூச்சம் அற்றும் வேடிக்கை பார்த்ததை நான் பார்த்திருக்கின்றேன்.

இந்திராணி இது போன்று செய்யும் பொழுதும் அல்லது குடித்து விட்டு விழுந்து கிடக்கும் போதெல்லாம் இந்த பெண்மணியை அவரின் அந்த கதவற்ற வீடிற்கு சிலரின் உதவியோடு அழைத்து செல்வது இவரின் மகள் செல்வி தான். அந்த பெண்ணுக்கு வயது 20 இருக்கும். எனக்கு தெரிந்த வரையில் எத்தனையோ சகிக்க முடியாத நிலைகளிலும் இந்திராணியை பாதுகாக்கவும். அவளால் முடிந்ததை செய்யவும் இவள் மட்டுமே இருந்தாள். இவர்களது உறவினர்கள் அருகில் தான் இருந்தனர் ஆனால் இந்திராணி நிலை கண்டு உதவி செய்யவோ அல்லது பரிதாபப்படவோ அவர்களால் முடியாமல் போனது. காரணம் தான் புரியவில்லை

எந்த ஒரு கலக்கமும் அல்லது ஒவ்வாவமையும் இல்லாமல் தன் வயதிற்கும் வலுவிற்கும் என்ன முடியுமோ அதை தவிர்க்காமல் செய்வாள் செல்வி. என்னுடைய அந்த சின்ன வயதிலேயே அந்த பெண்ணை பார்த்தால் மிகபெரிய ஒரு ஆச்சர்யம் இருந்தது. காரணம் அவர்கள் வீட்டில் விஷேசம் என்று எதுவும் நடந்ததாக தெரியவில்லை, பேச்சுக்காகவாவது அவர்கள் வீட்டில் சொந்தங்கள் என்று யாரும் இருந்ததில்லை, ஊர் திருவிழா நேரங்களில் எல்லோர் வீடுகளிலும் நின்று செல்லும் கரகமும் அவர்கள் வீட்டு வாசலில் நின்றதாக நினைவில்லை அப்படி இருந்தாலுமே அந்த பெண்ணுக்கு அந்த ஊர் மீதோ, அல்லது அங்கிருந்த மனிதர்கள் மீதோ, பெரிய கோபமோ அல்லது ஒரு வித அழற்சியோ வந்ததாக நான் பார்த்ததில்லை. எப்போதும் போல் அவள் வேலை, அவளின் அம்மா மீதான கவனிப்புகள் என்பதே அவளின் மிக பெரிய நடவடிக்கைகளாக இருந்தது.

இவ்வவளவு வருடங்கள் கழிந்த பின்னும் அவளின் தாய்க்கான அந்த சேவைகள் தொடர்ந்து கொண்டே தான் இருகின்றது. சில மாதங்களுக்கு முன் அவளை பார்க்கும் வாய்ப்பு இருந்தது ஆனால் இந்த முறை அவர்கள் இருவரல்ல மூவராக இருந்தார்கள், இடுப்பில் ஒரு குழந்தையோடு நின்று கொண்டிருந்தாள், இந்திராணி வயது முதிர்ந்துவிட்டது திண்ணையில் அதே புகை மூட்டத்தோடு அமர்ந்திருந்தார். அவளின் திருமண முறையோ அல்லது குடும்ப முறைகளையோ விசாரிக்க மனம் வரவில்லை… நிச்சயம் இன்னொரு செல்வியாக அந்த குழந்தை செல்விக்கு இருக்கும் என்ற எண்ணம் மட்டும் நிறைந்து இருந்தது.

வசதி வாய்ப்புகள் இருந்தும் சில காரணங்களுக்காக முதியவர்களையும் மனம் சற்று பாதிக்கப்பட்டவர்களையும் ஒதுக்கிவைக்கும் நமகெல்லாம் உறவுவளின் மேன்மை புரிவது அவ்வளவு எளிதல்ல.

-நிக்கோலஸ்,
சென்னை.
nicholosp@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s