சூதாட்டம்

“ஏய் மச்சான் நீங்களும் இப்பதான் வரீகளா??? எங்கன ஏறுனீக!!” மஞ்சம்பட்டி எல்லையை பேருந்து நெருங்கும் போதுதான் ராமசாமியை பார்த்து கத்தினான் மாயன்.

“வாப்பா மாயி.. நான் வீரூர் வெலக்குல ஏறுனேன். பயங்கர கூட்டமா இருந்தது ஏறும்போது கவனிக்கல.. எங்க! வீட்டுல வரலையா!!!”

“இல்ல மச்சான் அவளுக்கு அவ தம்பி சம்பந்தாரர் வீட்டுல விசேசம். அங்க போய்ட்டா… நீங்க எப்பிடி மச்சான் இருக்கீக” என பரஸ்பரம் நலம் விசாரிக்கும் போது மஞ்சம்பட்டி உள்ளே பேருந்து நுழைந்தது.

கரி குழம்பு வாசனை ஊருக்குள் நுழைந்ததுமே காற்றில் மிதந்து வந்து மூக்கினில் ஒட்டிக்கொண்டது.
“மஞ்சம்பட்டி டிக்கெட்லாம் எறங்குங்க” பேருந்து நடத்துனரின் பொறுப்பான வழிகாட்டலோடு இருவரும் இறங்கினர். மந்தையை நோக்கி நான்கு கால்களும் பயணிக்க துவங்கின. மந்தையில் இருக்கும் காங்கேயன் சத்திரத்தில்தான் மாயனுடைய பெரியம்மா மகள் வான்மதியின் பையனுக்கு காதுகுத்து. வான்மதிக்கு உடன் பிறந்த அண்ணன் கதிரவனாக இருந்தாலும் மாயனைத்தான் அண்ணே அண்ணே என அன்போடு அழைத்து பேசுவாள். தனது மகன்களிடமும் மாயன் மாமாதான்டா உங்களுக்கு தாய் மாமா என அதிக உரிமையோடே பழக்கப்படுத்தியிருந்தாள்.

தூரத்தில் மாயனை கண்டதும் அண்ணே வாண்ணே… என பந்தல்கால் தாண்டி ஓடி வந்து வரவேற்றாள்..
“மச்சான் ஒருத்தேன் கூட வர்ரேன்மா” என நக்கலாக சிரித்தார் ராமசாமி.

“அட வாங்க மச்சான்.. நான் ரெண்டு பேரையும்தான் கூப்பிட்டேன்” என சமாளித்தவாறே மாயனின் கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தாள்.

“கூட பொறந்த அண்ணே இம்புட்டு சீர் செனத்தியோட வந்து காத்துக்கெடக்கீக- பாத்தீகளா உங்க தொங்கச்சி பண்ற வேலைய…” முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கதிரவனின் மனைவி.

ஊர் சனம் முன்னாடி பகையை காட்டிக்காமல் “வா மாயி.. சௌக்கியமா!!” என்றான் கதிரவன்.

“ஆமண்ணே நல்லாயிருக்கேண்ணே.. மதனி எப்பிடி இருக்கீக” என்றான்

“ம்ம்… நட்டமாத்தேன் இருக்கேன்” என சலித்துக்கொண்டே நகர்ந்துவிட்டாள் கதிரவன் மனைவி.

தான் வாங்கியது பல்பாக இருந்ததால் பிரகாசமாக சிரித்தான் மாயன்.

சொந்தமும் பந்தமுமாக நிறைந்திருந்த சத்திரத்தில் முகத்தை சிரித்தவாரே வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தனர் ஒவ்வொருவரும். மாயனும் பார்ப்பவர்களை எல்லாம் பார்த்து சிரித்து நலம் விசாரிக்க துவங்கினான். மாயனின் மனைவி வராததை ஏன் என கேட்பவர்களுக்கெல்லாம் ஒரே பதிலை வேறு வேறு தோணிகளில் சொல்லிக்கொண்டிருந்தான்.

“மாமோய்” என அரங்கை கிழித்து கொண்டு வந்த சப்தத்தின் திசை நோக்கி திரும்பினான்.
“ஏலேய் தமிழ்மணி, என்னலே! இம்புட்டு ஒசரம் வளந்துட்ட… பாத்து எம்புட்டு நாளாச்சி.. எங்கக்கா உனக்கு பொன்னு கின்னு பாக்குதா இல்ல கன்னி கழியாம கூடவே வச்சிக்கலாம்னு நினைக்குதா” என தமிழ்மணியின் காதை திருகியவாரே கேட்டான் மாயன்.

“ஆ….. மாமா… மாமா… வலிக்குது மாமா விடு விடு… இன்னும் நீ மாறல மாமா”

“சொல்லு மாமா சாப்ட்டியா”

அவன் கேட்ட கேள்வி கரி குழம்பின் வாசனையை அதிகப்படுத்தியது.

“இல்லடா தமிழு வா சாப்டுவோம்”

“நீ சாப்ட்டா கிளம்பிடுவியே மாமா… கொஞ்சம் நேரம் கழிச்சே சாப்டுவோம் அவசரமே இல்ல” என சிரித்தான் தமிழ்மணி

ரொம்ப நாள் கழிச்சி எல்லாரையும் பாக்குறேன் அவ்வளவு வேமா கிளம்பிடுவேனாடா..!!! இருப்பேன்டா…” என பிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டு உட்கார்ந்தான் மாயன்..

விட்ட குறை தொட்ட குறை கதைகளெல்லாம் கதைக்க துவங்கினர்..

“அப்பறம் மாமு எம்புட்டு செய்யப் போறீக??” பெரிய மனுசனாட்டம் கேட்டான் தமிழ்மணி.

“உங்கய்த்தை செயின அடகுல வச்சிதான்டா பத்தாயிரம் கொண்டாந்திருக்கேன்.. அந்த கோவத்துலதான் அவ வரல” தமிழ்மணியிடம் ஏனோ உண்மையை சொல்லிவிட்டான்.

“அய்யோ அப்போ வீட்டுல பயங்கர சண்டையா!!!” அதிர்ச்சியுடன் கேட்டான். சத்திரத்தில் சப்தமாக இருந்ததால் அவனது பேச்சு அவ்வளவோ யாரையும் சென்றடையவில்லை.

“ஏய் கத்தாதடா தமிழு” யாரும் கவனிக்கிறார்களா என சுத்திப்பார்த்துக் கொண்டே தமிழ்மணியின் கையை அழுத்தினான்.

“மாமா ஒன்னு பண்ணுவோமா!!!” கண்களை விரித்து வைத்து கேட்டான்

“என்னடா”

“ஒரு ஆட்டம் போடுவோமா!! நீ தான் அதுல கில்லில மாமா… பத்தாயிரமும் வேணாம்.. ஒரு அஞ்சாயிரத்த மட்டும் உள்ள போட்டு ஆடுவோம்” ஒரே ஆட்டையில அள்ளிடலாம் மாமா… மூனு ஆட்டை வச்சிக்கிவோம். அய்த்தை செயினயும் திருப்பிடலாம். இங்க இன்னும் கூடுதலா செய்முறையும் செஞ்சிடலாம்.. உனக்கும் செலவுக்கு ஆய்க்கும்” அடுக்கிக்கொண்டே இருந்தான் தமிழ்மணி.

“டேய்.. டேய்..” நிறுத்த முயற்சித்தான்..

“இரு மாமா.. எனக்கும் ஏதாவது செலவுக்கு தருவேல மாமா…” என காரியத்தில் கண்ணாய் வந்து நிறுத்தினான்.

“ம்ம்… நீ சொல்றது சரிதான்டா இப்ப யார கூப்பிட முடியும்! யார் கிட்ட பணம் இருக்கும்னு தெரியனுமே…”
தமிழ்மணியின் பேச்சில் மயங்கியவனாய் அடுத்த கட்டம் பற்றி சிந்திக்கலானான் மாயன்.

“அத என்கிட்ட விடு மாமா.. நான் பாத்துக்கிறேன். எப்பிடியும் கதிரவென் மாமா பல்க்கா வச்சிருப்பாரு அவரையும் கூப்பிடுவோம்.. ராமசாமி சித்தப்பு எப்பயும் கைல அம்பதாயிரத்தோடதான் திரிவாரு” என திட்டம் தீட்டியவாரே
“இரு மாமா பேசீட்டு வந்துடுறேன்” என எழுந்து சென்றான்.

சில நிமிடங்களில் முக மலர்ச்சியோடு ஓடிவந்த தமிழ்மணியின் கண்கள் சாதகமான பதிலை சுமந்து வந்தது..

“மாமா வா மாமா.. போலாம்”

“எங்கடா??” ஒன்றுமே தெரியாதவனைப்போல கேட்டான் மாயன்.

“அய்யோ மாமா மூனு பேர சேத்துட்டேன்.. வயக்காட்டு பக்கம் போய்டலாம்னு ராமசாமி சித்தப்பு சொல்றாப்புல வா மாமா…” அவசரமாய் இழுத்தான்.

கண்களில் ஒளியோடும் புன்முறுவலோடும் இப்போதே ஜெயித்து பணத்தோடு திரும்புவது போல எண்ணிக்கொண்டான் மாயன்.

குழம்பு தீர்ந்து போய்விட்டதால் இன்னோரு ஆட்டை வெட்டி சமைக்க கயிரை கட்டி சமையலாள் இழுத்து சென்று கொண்டிருந்தான்.

“மாமா இன்னும் அரை மணி நேத்தில இந்த ஆட வெற்றியோட வந்து ஒரு வெட்டு வெட்றோம்” என சிலாகித்து போய் இந்த பக்கமாய் கையை பிடித்து இழுத்துச் சென்றான்.

வேட்டி கழண்டு போய் ரெண்டு பெருசுகள் தீர்த்த பாட்டிலோடு வரப்போரம் சரிந்து கிடந்தனர்..

“மாமா பாத்து வா.. நம்ம தாத்தைங்கெதேன்.. மிதிச்சிடாத..” பக்குவமாய் அழைத்துச்சென்றான்.

வயல்வெளி எங்கும் பச்சை பசேலென காட்சி தந்தது. பம்பு செட் அருகில் இருந்த வேப்ப மர நிழலில் இவர்களுக்கு முன்னமே ராமசாமியும் கதிரவனும் இன்னோரு உப்புக்குச்சப்பானியும் வந்து காத்திருந்தனர். ஆடு புலி ஆட்டத்திற்காக போட்ட அச்சிகள் வெகு காலமாக பயன்படுத்தப்படாமல் இருப்பது போல இருந்தது.

“இந்த ஊர்க்கார பயலுக நல்ல உழைப்பாளிகப்பா.. பாரு வயல் பசுமையாவும் ஆடு புலி கோடு மண்டிப்போயும் கிடக்கு” என அறிவார்ந்த சிந்தனைகளை உதிர்க்க துவங்கினார் ராமசாமி..

“யோவ் மச்சான் செத்த நிப்பாட்டுறீரா…” அவரின் பேச்சை நிறுத்திவிட்டு “ஏய் சுருக்கா வாங்கப்பா… அன்ன நடை நடந்துகிட்டு இருக்கீக” என தமிழ்மணியையும் மாயனையும் லேசாக கடிந்து கொண்டான் கதிரவன்

“தோக்கப்போறதுக்கு எம்புட்டு அவசரம் பாத்தீகளா மாமா” பல்லை கடித்தவாறே மாயனை உசுப்பேத்தினான் தமிழ்மணி.

ட்டமாய் அமர்ந்த பின் சீட்டுகட்டை உப்புக்குச்சப்பானி கலைக்க துவங்கினான். அவனது கை சீட்டுக்கட்டை கலைக்கும் கலையில் மாயன் கொஞ்சம் பயப்பட துவங்கினான்.

“டேய் இவன் யாருடா” என பயந்து போய் தமிழ்மணியின் காதை கடித்தான்..

“லூசுல விடு மாமா.. இது இந்த ஊர்க்கார பக்கி.. நல்லா விசாரிச்சிட்டேன் சரியான உப்புக்குச்சப்பாணியாம்” தைரியமூட்டினான் தமிழ்மணி.

இதே போல ஒரு விசேச தினத்தில் மாயனிடம் அசிங்கமாக தோற்றது கதிரவனுக்கு ஞாபகம் வந்தது. அதுதான் மாயன் மேல் கதிரவனுக்கு இருக்கும் பகைக்கு காரணம். இது மாதிரியான நாளுக்காகத்தான்
காத்திருந்தவனைப்போல தமிழ்மணி அழைத்ததும் உடனே வருவதாக ஒப்புக்கொண்டான்.

ராமசாமி பொழுதுபோக்குக்காக வந்து சீட்டாட உட்கார்ந்து இருந்தார். அவருக்கு பணம் அவ்வளவு பெரிய விசயம் அல்ல. இருந்தும் சாதாரணமானவர். சீட்டாட்டத்தில் ஜெய்த்துவிட்டாலும் வந்த மொத்த பணத்தையும் அங்கேயே அவரோடு விளையாடியவர்களுக்கு செலவு செய்து தீர்த்துவிடுவார்.

ஒவ்வொருவரின் முன்பும் அவர்களுக்கான சீட்டு வந்து விழுந்தது..

“ரெண்டாயிரத்து அய்ந்நூறுபா இந்த ஆட்டைக்கு” என மாயன் துணிச்சலாக வீசினான்.

“மாயி, இது அதிகம் மாயி கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிப்போம்” என கதிரவன் சொல்வதை மாயன் சட்டை செய்ததாக தெரியவில்லை.

எல்லோரும் கையில் சீட்டை அடுக்கி அலங்கரிக்க துவங்கினர். தமிழ்மணி வெரிக்க வெரிக்க ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான். சீட்டுகள் ஒருவர் கை மாற்றி மற்றொருவரின் கைக்கும் தரையை தடவிக்கொண்டும் பல நிலைகளில் ஓடிக்கொண்டிருந்தது. சுற்றுகள் நீண்டு கொண்டே இருப்பது தமிழ்மணிக்கு வெறுப்பாக இருந்தது..

“மாமா.. வேகமா முடிச்சிவிடு மாமா….” மாயனை அவசரப்படுத்தினான்..

“டேய் வயசுக்கேத்த மாதிரி இருடா… ஆடிட்டு இருக்கேன்ல.. எனக்கு தெரியும்” சீட்டுகட்டின் மேல் இருந்த கோபத்தை தமிழ்மணி மேல் காண்பித்தான்.

“என்ன மாமா அப்போ ஜெய்க்க மாட்டோமா” பயந்தவனாய் கேட்டான்.

“வாய கழுவுடா.. போடா அங்கிட்டு” இது வரை வராத கோவம் மாயனுக்கு வந்தது.

மேலும் சில சுற்றுகளில் மாயனின் முகம் கொஞ்சம் மலர்வதை தமிழ்மணி கவனித்தான்…

“கருப்பசாமி.. கருப்பசாமி…” என வாய்க்குள் மென்றுகொண்டே இருந்தான்.

கொஞ்ச நேரத்திலேயே மாயன் தனது கைகளில் இருந்த சீட்டுகளை “சொத்” என தூக்கிப்போட்டு தனது வெற்றியை காட்டினான்.

“ஏய் மாமா” என துள்ளினான் தமிழ்மணி “கருப்பசாமிதான் மாமா உனக்கு சீட்டு எடுத்து குடுத்திருக்காரு” என மாயனை கட்டிப்பிடித்தான்

“கருப்பசாமிக்கு சீட்டுலாம் விளையாடத் தெரியுமாடா” நக்கலாக சிரித்தான் மாயன்.

“அடுத்த ஆட்டம் நாலாயிரம்” தோற்றுப்போன வெறியில் கதிரவன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டான்.

“கதிரு, என்னப்பா… ரெம்ப சாஸ்தியா தெரியிது… நமக்குள்ள எதுக்கு இவ்வளவு பெருசா வச்சிக்கனும்!! ஜாலியா விளையாண்டுட்டு பேவோம்..”

“மச்சான் உம்ம அறிவுரைய செத்த நிறுத்தும்..” கடுப்பானான் கதிரவன்
உப்புக்கு சப்பானியின் கையில் இருந்து சீட்டுகட்டினை கதிரவன் கலைத்து வீசத்துவங்கினான். மாயனுக்கு விளும் சீட்டுகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் விழுவது போலவே தோன்றியது.

ஆட்டம் மீண்டும் களைக்கட்ட துவங்கியது.

சுற்றுகள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. தூரத்தில் மஞ்சள் பை கையோடும் வெள்ளை வேட்டி சட்டையோடும் இவர்களை நோக்கி வருவதை தமிழ்மணி கவனித்தான். “எவன்டா இவென் எங்கயோ பாத்த மாதிரி இருக்கு… சரி சொந்தகாரப்பயலாத்தேன் இருக்கும்” அவனுக்குள்ளேயே பேசிக்கொண்டான் தமிழ்மணி.

வந்தவன் தமிழ்மணியின் அருகில் உட்கார்ந்து சீட்டாட்டத்தை கொட்ட கொட்ட பார்த்துக்கொண்டிருந்தான். ஒருவர் மாற்றி ஒருவர் அவனை சீட்டாட்டத்தின் நடுவில் ஒரு பார்வை மட்டும் பார்த்தனர். அவனை யார் என கேட்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இல்லை. உப்புக்குச்சப்பானி பீடி ஒன்றை பற்றவைத்து இழுக்கத்துவங்கினான். பீடி புகை சேராதவனாய் “லொக்.. லொக்” என இரும துவங்கினான்.

“அய்ய… சேராதுனா தள்ளி போய் உக்காருப்பா…” என கண்டித்தான் உப்புக்குச்சப்பாணி.

“இல்ல இதுதான் சேந்துக்கும் எனக்கு” என மஞ்சள் பையில் இருந்து வில்ஸ்ஃபில்டரை எடுத்து நீட்டினான்.

“ஏய் செம ஆளா இருக்கயேப்பா” என பீடி கங்கினால் சிகரெட்டை பற்றவைத்துவிட்டு பீடியை அணைத்து துண்டுக்கடியில் பத்திரப்படுத்தினான்.

மற்றவர்கள் அவர்களுக்கும் ஏதாவது கிடைக்காதா என அவனை ஒரு பார்வை பார்த்தனர்.

“உங்களுக்கும் வேணுமா” என மஞ்சள் பைக்குள் கையை விட்டான்

“ஏய் இங்க யாருக்கும் இந்த கெட்ட பழக்கம்லாம் இல்லப்பா… பாட்டில் எதும் வச்சிருந்தா குடு” என கதிரவன் அர்வப்பட்டான்.

“ண்ணே என்னணே அதுக்கு நான் எங்கணே போறது!! இந்தா கடலை மிட்டாய் இருக்கு இத வேணா சாப்பிடுங்க” என கையில் அள்ளினான்.

ஆள் தோரணைக்கும் கடலை மிட்டாய்க்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது..

“என்னய்யா இவ்வளவு பெரிய ஆளா இருந்துகிட்டு இன்னும் சின்ன பயலுவ மாதிரி கடலை மிட்டாய் சாப்பிடுற”
என சிரித்தாலும் கடலை மிட்டாயை எடுக்க கை நீட்டினான் கதிரவன்.

“கடலை மிட்டாயா………………..” என அதிக ஆர்வத்துடன் முதல் ஆளாய் பறித்துக்கொண்டான் தமிழ்மணி.

“டேய் அலையாதடா..” என கதிரவனும் எடுத்துக்கொண்டான்.. சாப்பிடாததால் வயிறு அல்லையை கிள்ளியது..

இதையாவது சாப்பிடலாமே என எல்லோரும் ஆளுக்கு ரெண்டு மூன்றாக எடுத்து கடிக்க துவங்கினர்.

சிறிய இடைவேளை விட்டதில் ஆட்டம் சற்று குழப்பியது போல இருந்தது.

ஒரு தெளிவுக்கு வருவதற்குள் மாயனின் கண்கள் கொஞ்சம் மங்களடிக்க துவங்கியது.

“ஏய் என்னண்ணே பசி மயக்கம் இப்படி கண்ண கட்டிகிட்டு வருது. இந்த ஆட்டம் முடிச்சதும் முதல்ல சாப்பிட்டு வந்திடனும்” என கதிரவனை பார்த்தான்

கதிரவனும் சீட்டுகளை வேட்டிக்குள் வைத்து விட்டு கண்களை கசக்கிக்கொண்டிருந்தான். ராமசாமியால் உட்கார முடியாமல் ஒர்சாய்த்து படுக்க துவங்கினார். உப்புக்குச்சப்பாணி சிகெரெட்டை விரலில் பிடிக்க முடியாத சப்பாணியாய் தடுமாறிக்கொண்டிருந்தான்..

“டேய் தமிழு” என தேடும் போது ஏதோ உருவம் கீழெ கிடப்பது போல தெரிந்தது.. அது தமிழ்மணியேதான்..
“என்னாச்சி அவனுக்கு.. நமக்கு என்னாச்சி” என எண்ணியவாரே சரிந்தான். கை கால்களில்… இல்லை.. இல்லை… உடம்பு முழுக்கவே உணர்ச்சியற்று போனவனாய் உணர்ந்தான். தன் சட்டை பையிலும் அண்ராயர் பையிலும் யாரோ கைவிடுவது போல தோன்றியது.. ஆனால் அந்த கையை தட்டிவிடவோ பிடிக்கவோ சுத்தமாக இயலாதவனாய் கத்த முயன்றான். கத்துவதற்கும் சீவனில்லாதவனாய் கிடந்தான். ஏதோ மஞ்சள் நிறம் மட்டும் அவ்வப்போது கண்களில் தென்பட்டது. தூக்கத்தில் அமுக்குபேய் அமுக்குவது போல எண்ணியவன்
“இது கனவாக இருக்குமோ” எனவும் எண்ண துவங்கினான்.

முக்கால் மணி நேரம் கழித்து ஒவ்வொருவராக எழுந்தனர்.

மாயன் ஏதோ நினைத்தவனாய் அவசரம் அவசரமாக தனது அண்ராயர் பையில் கையை விட்டு துலாவிக் கொண்டே அவசரமாய் எழுந்தான்.

“என் பணம்… என் பணம்… அய்யோ என் பணம்” கத்த துவங்கினான் மாயன்

“என்ன மாயி சொல்ர…..” கதிரவன் சுதாரித்தவனாய் தனது சட்டையின் உள்பையில் துளாவினான்..
“டேய் என் பணமும் காணம்டா…”

“நான் வச்சிருந்த கைப்பைய காணோம்டா மாப்பிள்ளைகளா… அதுலா நாட்பதாயிரத்துக்கு மேல வச்சிருந்தேன்டா… அலரினார் ராமசாமி

“அய்யோ என் கைல போட்டிருந்த மோதிரத்த காணோமேணே.. என் பீடிக்கட்டயும் சேத்து நவட்டீட்டு போய்ட்டானேணே” இது உப்புக்குச்சப்பாணி

“நான் அப்பவே அவன எங்கயோ பாத்த மாதிரி இருக்குனு டவுட் ஆனேன் மாம்ஸ்… அப்போ எனக்கு தெரியல ஆனா அவன் கடலை மிட்டாய் குடுக்கும் போது கணிச்சிட்டேன் அவனேதான்னு.. எங்க அப்பா வழி சொந்தக்காரங்க வீட்டிலயும் இதே ஆளு கடலை உருண்டை குடுத்து ஆட்டைய போட்டான்..” என மயங்கி எழுந்தாலும் தெளிவாக பேசினான் தமிழ்மணி…

“அட நாதாரி அத அவன் குடுக்கும் போதே சொல்லிருக்கலாம்லடா மூதேவி.. மொத ஆளா பிடுங்கி தின்னியே அறிவே இல்லையா உனக்கு” அருகில் கிடந்த கூழாங்கல்லை எடுத்து எரிந்தான் கதிரவன்.

கல்லை முகத்தில் படாமல் கையால் தடுத்தவாரே “கடலை உருண்டைய டேஸ்ட் பாத்தாச்சி கடலை, மிட்டாய் டேஸ்ட் பாக்க வேணாமா மாமா… போ மாமா…” என குழந்தை போல சிணுங்கிக்கொண்டே தலையை வெட்டினான்.

– சு.ரகுநாத்,
மதுரை.
thamizhmani2012@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s