முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையும், சூழல் சிதைவும்

சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்பட்டு, பொருளாதாரமும் நலிவடைந்திருந்தால் ,இவ்விரண்டிற்கும் காரணமான நோய்க்கிருமியை உற்பத்தி அமைப்பினில் கண்டுபிடிக்கலாம்.— பேரி காமன்னர்

பகுதி-1

மனித இனம் இதற்குமுன் பல சூழலியல் சிக்கல்களை சந்தித்திருந்தாலும் இன்று நாம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சிக்கலனாது முன்னைக்காட்டிலும்,பல பரிமாணங்களைக் கொண்டதுமாய், மிகப்பிரம்மாண்டமாய் எழுச்சி பெற்று ஒட்டுமொத்த புவிக்கோளின் இருப்பை அச்சுறுத்துகிறது. இதற்கெல்லாம் காரணம் இயற்கை மீதான மனிதனின் ஆதிக்கம். அதுவும் ஒரு குறிப்பிட சிறுபான்மை சமூகமான முதலாளித்துவ சமூகத்தின் ஆதிக்கத்தால் ஒட்டுமொத்த பூவுலகே சிதைந்து கொண்டிருக்கிறது. இச்சிறுபான்மை சமூகத்தின் லாப நோக்க ஆதாயத்திற்காக புதுப்புது தொழில்நுட்பத்தை புகுத்தியும், உற்பத்தியை தொடர்ச்சியாக பெருக்கியும் தனது உற்பத்தி நிகழ்முறையால் 21 ஆம் நூற்றாண்டை மீண்டுவர முடியாத சூழலியல் சிக்கல்களில் தள்ளியுள்ளது.

தற்போதைய சூழல் அவசரகால நிலையை இப்பூவுலகு எதிர்கொள்வதற்கும், வேகமாக அழிந்துவரும் புவிக்கோளின் பல்லுயிரியத்திற்கும் காரணமான முதலாளியத்தின் நவீன பொருளாதார உற்பத்தி முறையானது இயற்கையை மட்டும் சிதைக்கவில்லை, பாட்டாளிகள்/விவசாயிகள் வர்க்கத்தின் உழைப்பையும் நவீன முறைகளின்கீழ் சுரண்டுகிறது. வேலைப்பிரிவினைகளின் அதிகரிக்கச்செய்து அவர்களை பலவீனமடைய செய்திருக்கிறது. தனது பெரும் செல்வத் திரட்டலின் மூலம் அரசு அதிகாரத்தை முழுவதுமாக கையிலெடுத்து சமுதாய அமைப்பில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி ஆட்சி செலுத்துகிறது. உற்பத்தி நிகழ்முறையில் வெளியேற்றப்படும் எண்ணற்ற நச்சு வேதியல் பொருட்களின் கழிவுகள் ,சாயப்பட்டறையில் வெளியேற்றப்படும் கழிவுகள், ஆலைக்கழிவுகள், ஆகாயத்தில் டன்கணக்கில் வெளியேற்றப்படும் கார்பன்-டை- ஆக்சைட் கழிவுகள் என எண்ணற்ற கழிவுகளால் இயற்கை கட்டமைப்பை சிதைகிறது. மறுபுறம் தனது லாப நோக்க உற்பத்தி தேவைக்காக வரைமுறையற்ற இயற்கை வளங்களை சுரண்டவது, மரபணு மாற்றப்பட்ட பயிர் விளைவிப்பு என“முதலாளியத்தின் பொருளாதாய உற்பத்தி முறையானது” பூவுலகில் நாசாகார விளைவுகளை ஏற்படுத்துகிறது. வளர்ந்த மற்றும் வளரும் முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாடுகளின் தொழிற்சாலைகளிருந்து வளிமண்டலத்தில் இதுவரை வெளித்தள்ளப்பட்ட பசுமைக்குடில் வாயுக்களால் வெப்பமயமான இப்புவிக்கோளானது, பனிமலைகளை உருக்கி பசிபிக் கடலில் உள்ள சிறு தீவுகளை மூழ்கடிக்கத்தொடங்கிவிட்டது, ஆப்பிரிக்க நாடுகளை முதலாளித்துவ நாடுகள் பிய்த்துக் குதறுவதால் அங்கு பாலை நிலங்கள் உருவாகி கடும் வறட்சியை தோற்றுவிக்கிறது. பல்லுயிரியம் பல நாடுகளில் வேகமாக அழிந்து வருகின்றன.

மேலும்
• 1950 முதல் 2000 வரையிலான 50 ஆண்டுகளில் மட்டும் 10,000 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன்-டை-ஆக்சைடு (கரிப்புகை) வளிமண்டலத்தில் உமிழப்பட்டுள்ளது. தற்பொழுது, 40,000 மில்லியன் மெட்ரிக் டன்னை தொட்டுவிட்டது !

• அடுத்த 25 வருடங்களில் உலகில் 25% பல்லுயிரியம் அழிந்துவிடும் என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

• நகரங்களில் உள்ள காற்றுகள் முன்னைக்காட்டிலும்1000 மடங்கு நச்சுத்தன்மை அடைந்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் தூசுப்படல அதிகரிப்பால் பிரான்சில் மட்டும் 10000 மக்கள் மாண்டுள்ளனர்.

• வருடத்திற்கு 18,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள அமேசான் காடுகள் அழிக்கப்படுகின்றன. அம்மழைக்காடுகளில் வாழ்ந்த காட்டுயிர்கள் செத்துமடிந்தன . அவற்றின் வாழ்விடங்கள் சிதைக்கப்பட்டன.

• அணு உலைகளின் மூலம் மின்சாரம் தயாரிக்கதொடங்கி 40 வருடங்கள் கழிந்தபின்னும், கதிர்வீச்சுடைய அணுவுலைக் கழிவுகளை என்ன செய்வது என்ற சிக்கலக்கு தீர்வு எட்டப்படவில்லை. செர்நோபில் பயங்கரங்கள் இன்னும் புகுசிமா வரை தொடர்கின்றன.

• கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்கள் இப்புவியின் நீர் பற்றாக்குறை பிராந்தியங்களில் வாழ்கின்றனர். நமது வழிமுறைகளை நாம் மாற்றிக் கொள்ளாவிட்டால் 2025 ஆண்டில் உலகமக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நீர் பற்றாக்குறையினை சந்திப்பார்கள் என தனது நீல ஒப்பந்தம் என்ற நூலில் பார்லோவ் எச்சரிக்கிறார்.

• ஒரு கைப்பிடி கடல் மண் அல்லது ஒரு கோப்பை கடல் நீரினை உலகில் ஏதோவொரு கடல் பரப்பிலிருந்து எடுத்து பார்த்தாலும் அதில் ஏக அளவில் கண்ணுக்கு புலப்படாத நுண் நெகிழிகள் கலந்திருக்கும். இந்நுண் நெகிழிகள் ஆழ்கடலில் வாழும் சிற்றியிர்களின் உணவுசங்கலிக்கு ஆபத்து விளைவிப்பதோடு கடல் நீரினில் நச்சு வேதியல் பண்புகளை அதிகரிக்கச்செய்து ஆபத்து உண்டாக்குகின்றன.

• அமெரிக்காவின் வேளாண்துறையானது பாதி அளவிலான உறைந்த ப்ளூ பெரியிலும், பாதி அளவிலான ஸ்ட்ரா பெரியிலும் காலன் கொல்லிகளை கண்டறியும் ஆய்வினை மேற்கொண்டது. அதில் பாதிக்கும் மேற்பட்ட ஸ்ட்ரா பெரியில் குறிப்பிட அளவிலான காலன் கொல்லிகள் கலந்திருப்பது தெரியவந்தது. 50% திராட்சை சாற்றில் கார்பரில் பூச்சிகொல்லி இருப்பதாக ஆய்வுமுடிவு தெருவிக்கிறது. மேலும் 75% உருளைக்கிழங்கில் க்லோரோப்ரோபாம் என்ற களைக்கொல்லி கலந்திருப்பதும் , பாதி வெங்காயத்தில் DCPA களைக்கொல்லி கலந்திருப்பதும் , 40%பூசணிக்காயில் எண்டோ சல்பான் கலந்திருப்பதும் ஆய்வு முடிவுகள் தெளிவாக தெரிவிக்கின்றன. சிலவேளைகளில் ஒரே உணவுப்பொருளில் பல வேதியல் சேர்மம் கலந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 20% முதல் 100% ஸ்ட்ரா பெரியில் 16 வகையான பூச்சிகொல்லி வேதியல் சேர்மங்கள் கலந்துள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவருகிறது.

மேற்கூறிய சில தகவல்களிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையால் ஏற்படுத்தப்பட்ட இன்றைய சூழல் சிக்கல்களை குறிப்பிட்ட ஒரு சிக்கல் எனச்சுருக்க முடியாது. குறிப்பாக, காலநிலை மாற்றம் என்பதோடு மட்டும் இது முடிவதல்ல. மாறாக, அது பல சிக்கல்களை கொண்டவை. சமீபத்தில் புவி அமைப்பு விஞ்ஞானத்தின் வளர்ச்சியால், மூத்த விஞ்ஞானிகள் சிலர் இச்சிக்கல்களையெல்லாம் உள்ளடக்கி “புவிக்கோள் எல்லைகள் ” எனும் முக்கிய கருத்தியலை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் அவர்கள் புவி அமைப்பின் 9 முக்கிய எல்லைகளை வரையறை செய்கின்றனர் (அல்லது அவதானிக்கிறார்கள் ).

அவையாவன:
1. பருவ நிலை மாற்றம்
2. கடல் அமிலத்தன்மை அதிகரிப்பு
3. ஒசோன் மெலிவு
4. உயிர் -புவி வேதிப்பொருள் ஒழுக்கு எல்லை
5. உலக நன்னீர் பயன்பாடு
6. நிலப் பயன்பாட்டு மாற்றம்
7. பல்லுயிரிய இழப்பு
8. வளிமண்டல தூசுப்படல அதிகரிப்பு
9. வேதியியல் மாசு

இவ்வெல்லைகளுக்கு உட்பட்டு நாமிருப்பது மிகவும் அவசியமானது. அதோடு காலநிலை மற்றும் சுற்றுச்சூழலோடு நமது உறவை கடந்த 12000 வருடங்களாக இவ்வாறுதான் பேணிவந்தோம். இதில் நீடித்த எல்லைகளின் மூன்று அமைப்பான பருவநிலை மாற்றம், பல்லுயிரியம் மற்றும் நைட்ரஜன் சங்கிலியுடனான மனிதனின் இடையீடு முன்னதாகவே தனது எல்லைகளை கடந்துவிட்டது.

இவ்வளவு அழிவிற்கும் காரணியான முதலாளியத்தையும், முதலாளியத்தின் உற்பத்தி முறைகளையும் , முதாலாளிய வர்க்கத்திற்கும் அரசுக்குமான உறவையும், அதன் மூலதன திரட்டல் மாற்றும் லாப நோக்க திட்டங்களையும் சரியான நோக்கில் புரிந்துகொள்ளாமையும் ,திறனாயத்தவறிதும் அதன் வளர்ச்சிக்கு நம்மையும் சாட்சியாக்கி எதிர்ப்பற்ற செயல்பாடுகளை கச்சிதமாக முதலாளியமானது ஒருங்கிணைக்கிறது.

சுற்றுச்சூழல் சிதைவை சூழல் மீது கண்மூடித்தனமான திணிக்கும் முதலாளியத்தின் பொருளுற்பத்தி முறை குறித்தும் அதன் இயக்கவியல் குறித்தும் நமது புரிதலை செழுமைப்படுத்த நம் முன் உள்ள ஒரே வாய்ப்பு மார்க்ஸிய திறனாய்வு என்னும் திசைவழி மட்டுமே. முதலாளியத்தின் மிகை உற்பத்தியால் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலைக்கு, முதலாளிய பொருளாதார அறிஞர்கள் முன்வைக்கும் மாற்று யோசனையில் குறிப்பிடத்தக்கது-உற்பத்தி பெருக்கம். முன்னவே, தனது பொருளுற்பத்தி நிகழ்முறையில் உற்பத்திக்காக வரைதுரையற்ற இயற்கை வளங்களையும், தொழிலாளிகளின் உழைப்பையும் சுரண்டி மூலதனங்களை குவித்த முதலாளிய சமூகத்தின் பேராசையில் நிகழ்த்தப்பட்ட மிகை உற்பத்தியால் நெருக்கடி நிலை உருவானது. சரக்குகள் மற்றும் பணத்தின் சுற்றோட்டத்தில் தாக்கத்தை உண்டுபண்ணியது.அதிலிருந்து மீண்டுவர அவர்கள் முன்வைக்கும் முன்நிபந்தனை மீண்டும் உற்பத்தியை முடுக்கிவிடுவது. இது முரணின் உச்சம் எனலாம். முதலாளியத்தின் இயக்க விதிகளை நாம் குறைவாகவே புரிந்துள்ளோம்.இதன் காரணமாய் சமூகம் மற்றும் சுற்றுச்சூழலின் பகைமுகாமே மனித நாகரிகத்தை ,உயிர்ச்சூழலை காக்க வந்த மீட்பராக பல்வேறு வடிவங்களில் முதலாளிய அமைப்பானது எழுச்சிபெற பெரு வாய்ப்பாக உள்ளது.

முதலாளித்துவம்:
முதலாளித்துவ அமைப்பின் சட்டகத்தின் கீழ், முதலாளித்துவமானது லாபத்தை தொடர்ச்சியாக விரிவு செய்யாவிட்டால் அதன் அமைப்பு முற்றாக சிதைந்துவிடும். வரலாறுதோறும் இவ்விரிவாக்கப்போக்கு வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு உறவுகளின் கீழ் மக்களையும் இயற்கையையும் சுரண்டுகிறது. முதலாளித்துவ பொருளுற்பத்தி நிகழ்முறையில் சூழல் என்றால் இலவசமாக கிடைக்கும் மூலவளங்களை சுரண்டலாம், உற்பத்தி கழிவுகளை அதன் மீது திணிக்கலாம். தொழிலாளி என்றால் தனது உற்பத்தி நிகழ்முறைக்கும், உற்பத்தி செய்தவற்றை நுகர்வதற்குமான “ஒரு பொருளாயத சக்தி”.

முதலாளித்துவ வளர்ச்சிபோக்கில் தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்பானது அதன் உற்பத்தி ஆற்றலை விரிவு படுத்துவதோடு சூழல் சிக்கல்களையும் அதிகரிக்கசெய்தது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் நிகழ்ந்த இயந்திர சாதனங்களின் கண்டுபிடிப்புகள் மந்தகதியில் இயங்கிவந்த தொழிற்துறையை மட்டும் புரட்டிபோடவில்லை. மாறாக, சமூக மற்றும் இயற்கை வரலாற்றின் போக்கையே திசைமாற்றம் செய்தது. தொழிலாளிகள் மற்றும் இயற்கையின் அழிவுகள் இங்கிருந்துதான் தொடங்குகிறது எனலாம். இவ்வியந்திர கண்டுபிடிப்புகள் எல்லாம் தொழிலாளியின் வேலையை குறைப்பதற்கோ, குறைவான வழியில் சரக்குகளை(பொருள்களை) மக்களிடம் சந்தைப்படுத்தும் நோக்கத்திற்காக அன்று… மாறாக முதலாளித்துவ உற்பத்தி முறையின் வழியில் இயந்திர சாதனத்தின் கண்டுபிடிப்பானது லாபங்களை குவிக்கும் நோக்கத்திற்கான சாதனமாகத்தான் கையாளப்பட்டது; கையாளப்படுகின்றது.

தனது மூலதனத்தில்(பாகம்-1), இயந்திர சாதனத்தின் வளர்ச்சி பிரிவில்(பக்கம் 503), மார்க்ஸ் கூறுவதாவது..
“இயந்திர சாதனத்தை முதலாளித்துவ வழியில் பிரயோகிப்பதன் நோக்கம் மனித உழைப்பை இலகுவாக்குவதன்று. உழைப்பின் உற்பத்தித் திறனிலான மற்ற ஒவ்வொரு அதிகரிப்பையும் போலவே, இயந்திர சாதனங்களும், சரக்குகளை மலிவாக்கும் நோக்கத்திற்காகவும், தொழிலாளி தனக்கான வேலை-நாட்பகுதியை குறுக்கி, அவர் ஒரு சமதையில்லாமலே முதலாளிக்கு விட்டுக்கொடுக்கிற எஞ்சிய பகுதியை நீளச்செய்யும் நோக்கதிற்காகவுமே பயன்படுத்தப்படுகின்றன. சுருங்கச்சொல்லின், அவை உபரி-மதிப்பை உற்பத்தி செய்வதற்கான சாதனமாகும்”

மேலும் லாபநோக்க உற்பத்தி முறையால் துரிதமான கதியில் சரக்குகள் உற்பத்தி செய்யும் போக்கு முதலாளிகளிடம் நிலவிய போட்டியால் அதிகரித்தது. அது தேவையின் பொருட்டில் சரக்குகளை திட்டமிட்டு உற்பத்தி செய்யாமல் லாபத்திற்காக சொற்ப காலத்தில் அதிக சரக்குகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதன் விளைவால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை ஆகாமல் தொழிற்சாலையில் தேங்கி பொருளாதார தேக்கத்திற்கு இட்டுச்சென்றது, தொழிலாளிகளை உணவிற்கு வழியற்ற நிலைக்கு இது தள்ளியது. (தற்போது நிலவுகிற பொருளாதார மந்த நிலையை இங்கு ஒப்புநோக்குக)


“நீராவி இயந்திரத்தையும் மற்ற இயந்திரங்களையும் கொண்டு, குறைந்த செலவிலும், குறுகிய நேரத்திலும், தொழில் உற்பத்தி தங்கு தடையற்று வளர்வதற்கான தொழிலுற்பத்தி சாதனங்களைப் பெருந்தொழில் உருவாக்கியது. உற்பத்திக்கான வாய்ப்பு இவ்வாறு எளிதாக்கப்பட்ட பெருந்தொழிலோடு இணைந்த இந்த சுதந்திர போட்டியானது மிகுந்த உச்சக்கட்ட வடிவங்களை எடுத்தது; முதலாளிகள் திரளாக தொழில் துறையில் ஈடுபட்டனர்; இதனால் உபயோகிக்க முடிந்தவற்றை விடவும் அதிகமான பொருட்கள்,மிகவும் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. இதன் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைசெய்ய முடியாமல் வியாபார மந்தம் என்று கூறப்படும் நிலை உருவாகிற்று. தொழிற்சாலை மூடப்பட்ட வேண்டியாதாயிற்று. அவற்றின் உரிமையாளர்கள் ஒட்டாண்டிகளாயினர். தொழிலாளர்கள் உண்ண உணவின்றி வாடினர். ஆழமான துன்பமே எல்லா இடங்களிலும் ஆட்சி செய்யலாயிற்று’

என்று தொழில்புரட்சியின் விளைவுகள் குறித்து தனது “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” நூலில் எங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

உலகமெங்கிலும், குறிப்பாக இங்கிலாந்திலிருந்து துவங்கிய இத்தொழில்புரட்சி யுகத்தில் சந்தைக்காகவும் மூலதனத்திற்காகவும் முதலாளிய நாடுகளானது மூன்றாம் உலக நாடுகளை தனது ஏகாதிபத்திய குடையின் கீழ் கொண்டுவந்து சுரண்டலையும், சந்தையையும் விரிவுப்படுத்தியது . நவீன தொழில்துறையில் நிகழ்ந்த தீவிரமான இவ்வுற்பத்தி மாற்றமானது இத்துடன் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல சமூக மற்றும் இயற்கை வளங்களின் நிலைமைளில் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக புனலால் இயங்கும் கப்பல் , ரயில் மற்றும் இயந்திரங்கள் போன்ற போக்குவரத்து சாதனங்களின் வளர்ச்சி கட்டயாத்தேவையின் பொருட்டே முன்னெடுக்கப்பட்டது. தொழிற்சாலைக்கு தேவையான மூலங்களை விரைவாக தொலைதூரத்திலிருந்து அனுப்பவும், பெற்றுகொள்ளவும் உலகமெங்கிலும் தனது உற்பத்திக்கான சந்தையை பெருக்க முதலாளித்துவத்திற்கு இவ்வளர்ச்சி அவசியத்தேவையாயின.விளைவு-இயந்திரங்களைக்கொண்டு இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிகழ்முறைகள் உருவாயின…

தனது மூலதனத்தில்(பாகம்-1, இயந்திர சாதனத்தின் வளர்ச்சி பிரிவில்(பக்கம் 520), மார்க்ஸ் கூறுவதாவது..
“குறிப்பாக, தொழில்துறை, வேளாண்மைத்துறை ஆகியவற்றின் உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட புரட்சி சமூக பொருளுற்பத்தி நிகழ்முறையின் பொது நிலைமைகளில், அதாவது தொடர்பு மற்றும் போக்குவரத்துச் சாதனங்களில் ஒரு புரட்சியை அவசியமாக்கியது. துணை வீட்டுத்தொழில்கள், நகரக் கைத்தொழில்கள் ஆகியவற்றுடன் சிறுவீதப் பயிர்த்தொழிலை அச்சாணியாக கொண்ட ஒரு சமுதாயத்தில், விரிவடைந்த உழைப்பு பிரிவினை, உழைப்புக் கருவிகள் மற்றும் உழைப்பாளிகளின் குவிப்பு, குடியேற்றச் சந்தைகள் ஆகியவற்றுடனான பட்டறைத் தொழிற் காலத்தின் உற்பத்தித் தேவைகளுக்கு சற்றும் போதாதவையாக தொடர்பு மற்றும் போக்குவரத்துச் சாதனங்கள் இருந்தமையால், அவற்றை மெய்யாகவே புரட்சிகரமாக மாற்றி அமைக்க வேண்டியதாயிற்று. இதே வீதத்தில், பட்டறைத் தொழிற்காலம் விட்டுச்சென்ற போக்குவரத்துச் சாதனங்களும்-உற்பத்தியின் ஜுர வேக அவசரம், பிரம்மாண்டமான விரிவு, மூலதனத்தையும், உழைப்பையும் உற்பத்தியின் ஒரு மண்டலத்திலிருந்து இன்னொரு மண்டலத்திற்கு இடைவிடாது பந்தாடுதல், உலக முழுமையின் சந்தைகளுடன் புதிதாக ஏற்படுத்தப்பட்ட தொடர்புகள் ஆகியவற்றுடனான-நவீன தொழில் துறைக்கு சகிக்கவொண்ணாத தலைகளாய் விரைவில் மாறின”

நவீன தொழில்துறையானது விவசாயத்திலும் தன் பலாத்காரத்தை செலுத்தியது. அது விவசாய உற்பத்தியாளர்களின் சமூக நிலைமைகளை மாற்றியமைத்தது.தொழில்துறையில் தொழிலாளிகள் எதிர்கொண்ட வேலை உத்திரவாதமின்மை, உழைப்பு பிரிவினை, சொற்ப கூலி போன்றவற்றை ஒப்புநோக்கையில் விவசாயத்திலும் முதலாளித்துவ பொருளுற்பத்தியானது உற்பத்தியாளரை பலியிடுகிறது. நகரத்தில் வர்க்க பகைமைகளை வளர்த்தது போலவே கிராமத்திலும் வர்க்க பகைமைகளை வளர்க்கிறது. அதோடு மண்ணின் வளத்தையும் சிதைக்கிறது. (முதலாளிய விவசாயத்தின் வளர்ந்த போக்கான பூச்சிக்கொல்லி மருந்து உபயோகம், மரபணு மாற்றப்பட்ட பயிர் சாகுபடி, உணவுப்பயிரைவிட பணப்பயுர்களை அதிகம் விளைவித்தல் போன்ற நடப்பு முதலாளித்துவ விவசாய முறைகளை இங்கு ஒப்புநோக்கையில், மார்க்சின் அன்றைய காலகட்டத்தைய முதலாளித்துவ விவசாயத்தின் பகுப்பாய்வு நமக்கு முதலாளித்துவ விவசாயத்தின் லாப நோக்க உற்பத்தி முறையின் வரலாற்றுபோக்கை படம்பிடித்து காட்டுகிறது)

“நகரத் தொழில்களில் போலவே நவீன விவசாயத்திலும், இயங்க வைக்கப்படும் உழைப்பின் உற்பத்தித் திறனும் அளவும் அதிகரிக்கின்றன என்றால், உழைப்பு சக்தியை விரயமாக்கியும், நோய்க்கு இரையாக்கியும் தான் இந்த அதிகரிப்பு ஏற்படுகிறது. மேலும், முதலாளித்துவ விவசாயத்தின் முன்னேற்றம் எல்லாமே உழைப்பாளியை கொள்ளையிடுவது மட்டுமன்றி மண்ணையும் கொள்ளையிடுகிற கலையின் முன்னேற்றம்தான்; குறிப்பிட்ட காலத்திக்கு மண்ணின் வளத்தை அதிமாக்குவதிலான முன்னேற்றம் எல்லாமே அந்த வளத்துக்குரிய நிலையான ஆதாரங்களை கெட்டழியச் செய்யும் வழியிலான முன்னேற்றம்தான். ஒரு நாடு எவ்வளவுக்கெவ்வளவு நவீன தொழிற்துறையை அடிப்படையாகக்கொண்டு – உதரணமாக அமெரிக்க ஐக்கிய நாட்டை போல் – தன் வளர்ச்சியை தொடங்குகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிவேகமாய் இந்த அழிவு நிகழ்கிறது. ஆகவே , முதலாளித்துவ பொருளுற்பத்தியானது செல்வங்களுக்கெல்லாம் மூல ஆதாரமாகிய மண்ணையும் உழைப்பையும் கசக்கிப் பிழிந்துதான் தொழில்நுட்பத்தை வளர்த்திடுகிறது.”
தனது மூலதனத்தில்(பாகம்-1), இயந்திர சாதனமும் நவீனத் தொழிற்துறையும் பிரிவில் (பக்கம்-683) மார்க்ஸ் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறார்.

மேலும்,நவீன தொழில்துறை எழுச்சியானது தொழிலாளிகளை நகரத்திற்கு பெருமளவில் குவியச்செய்வதோடு மறுபக்கும் விவசாயிகளை நிலத்திலிருந்து விரட்டியடிக்கிறது. இதனால் நகரத்திற்கும் கிராமத்திற்குமான பெரும் முரணை முதலாளித்துவ உற்பத்தி அமைவு உருவாக்குகிறது. (இன்று இந்த முரண் உச்சத்தை அடைந்திருக்கிறது. நகரத்தில் பெருமளவில் குவிக்கப்பட்ட மூலதனங்களால் பெருகும் நகர்மயமாக்கல் மற்றும் அதோடு ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய பல விளைவுகள் சமூக நிலைமைகளில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது, நகரத்தின் சூழல் சமநிலை சிதைவதோடு, உழைக்கும் மக்களின் உடல் ஆரோக்கியமும் நகர நெருக்கடிகளின் பெருக்கத்தால் சிதைகிறது).தொழில்துறை, வேளாண்துறை இரண்டிலுமே இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவில் பெரும் பிளவு உண்டானது .அதாவது இயற்கையிடமிருந்து மனிதன் எடுத்துக்கொள்ளும் அனைத்தும் திரும்ப இயற்கைக்கு உகந்தவாறு மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு மண்ணுக்கே மீண்டும் அனுப்பாமல், உற்பத்தி செய்யப்படும் நிகழ்முறையில் வெளியேறும் தனது உற்பத்திக்கழிவுகளையே அது இயற்கையிடம் திருப்பித்தந்தது .

தனது மூலதனத்தில்(பாகம்-1),இயந்திர சாதனமும் நவீனத் தொழிற்துறையும் பிரிவில் மார்க்ஸ் கூறுவதாவது
“ பெரும் முனையங்களில் மக்களை ஒன்று திரட்டுவது மூலமும், நகர மக்கள் பெரும்பான்மையாய் இருக்கும் நிலையை மேலும் மேலும் அதிமாக்குவதன் மூலமும் முதலாளித்துவ பொருளுற்பத்தி ஒரு புறம் சமுதாயத்தின் வரலாற்று இயக்கு விசையை ஒன்று குவியச்செய்கிறது; மறுபுறம் மண்ணுக்கும் மனிதனுக்குமிடையில் நடைபெறும் பொருளின் சுற்றோட்டத்தை குலைக்கிறது; அதாவது உணவு உடையின் வடிவில் மனிதனால் நுகரப்பட்ட மண்ணின் கூறுகள் மண்ணுக்குத் திரும்பிச் செல்வதை தடுக்கிறது; ஆகவே மண்வளம் நிலைத்து நீடிப்பதற்கு அவசியமான நிலைமைகளை கெடுக்கிறது. இந்த செயலின் மூலம் அது நகரத்திலிருக்கும் உழைப்பாளியின் உடல் ஆரோக்கியத்தை அழித்து, அதேபோது கிராமத்திலிருக்கும் உழைப்பாளியின் அறிவுலக வாழ்க்கையையும் பாழ்படுத்துகிறது. தொழில் போலவே உழவிலும் மூலதன ஆதிக்கத்தில் பொருளுற்பத்தியை மாற்றியமைப்பது அதேபோது உற்பத்தியாளரைப் பலியிடுவதும் ஆகிறது. உழைப்புக்கருவி உழைப்பாளியை சுரண்டுவதற்கும் ஒட்டாண்டியாகுவதற்குமான கருவியாகிறது. உழைப்பு நிகழ்முறைகளின் சமூக ஒன்றிணைப்பும் ஒழுங்கமைப்பும் தொழிலாளியின் தனிப்பட்ட ஜீவ சக்தியயையும் சுதந்திரத்தையும்,சுயேச்சை வாழ்வையும் நசிப்பதற்கான ஒழுங்கமைந்த முறையாகிறது.”

நவீன தொழில்துறை மற்றும் வேளாண்மைத்துறையின் பொருளாதாரத்தில் 18 ஆம் நூற்றாண்டில் இறுதியில் ஏற்படுத்தப்பட்ட இக்கட்டமைப்பு மாற்றம் இன்று இக்கிரகத்தின் இருப்பையே அச்சுறுதுகின்றன. லாபநோக்க மிகை உற்பத்திக்காக இப்புவியிலிருந்து சுரண்டப்பட்ட இயற்கை வளங்கள், தொழிற்சாலைகளில் சரக்குகளாய்(பொருட்களாய்) மலை போல் குவித்து வீணாக்கின. இயற்கை வளங்களின் வரம்புகளைப்பற்றியோ, இருப்பை பற்றியோ அது அக்கறை கொள்ளவில்லை. முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையானது சூழல் அமைப்பை மட்டும் சிதைக்கவில்லை உழைக்கும் மக்களின் உழைப்பையும் சேர்த்து சுரண்டுகிறது. இம்மாற்றப் போக்கானது நேரடி உற்பத்தியாளராக இருந்த தொழிலாளியை கூலித் தொழிலாளியாய் மாற்றியது. தொழிலாளர்களின் உடைமையாய் இருந்த உற்பத்தி சாதனங்கள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. குடிசைத்தொழில்கள் ஒழிக்கப்பட்டு அதன் சந்தை முழுவதையும் முதலாளித்துவம் கைப்பற்றியது.

நவீன உற்பத்தி முறையால் ஏற்பட்ட விளைவை சுருங்கச்சொல்லின்-வேலை நேர நீட்டிப்பு, பரவலாக்கப்பட்ட உழைப்புபிரிவினைகள், தனியுடைமையாக்கப்பட்ட உற்பதிச்சாதனங்கள் போன்றவை ஒருபுறம் தொழிலாளி மற்றும் விவசாயிகளின் வாழ்நிலைமைகளை சிதைக்க மறுபுறம் இயற்கை நிலைமைகளையும் அழிக்கிறது. மனிதன் மற்றும் இயற்கை மீதான அறவியல் மீறல்கள் ஒரேநேரத்தில் ஒருசேர ஒத்தநிகழ்முறையில் நிகழ்கின்றன.

வர்க்க போராட்டமும் சூழலியல் சிக்கல்களும் தனித்தனி சிக்கல்கள் அல்ல. இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை. இரண்டிற்கான தீர்வு ஒன்றுதான். அதுநிலவுகிற முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை மாற்றி கட்டமைப்பது ! உற்பத்தியில் தனியுடைமையை ஒழிப்பது…!!!!!
—– இன்னும் வரும்

– அருண் நெடுஞ்செழியன்,
சென்னை
arunpyr@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s