பாதசாரி

எட்டிமடை
அங்கிருக்கும் வரை கோபாலுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவனின் வாழ்க்கை வண்டியும் ஓடிற்று அவனுடைய ஆட்டோ வண்டியும் ஓடிற்று. அவன் எட்டிமடையில் அட்டோ ஓட்டுபவன். அங்கு ஆட்டோ ஒட்டுபவர்கள் ஆட்டோக்காரர்களில்லேயே அதிர்ஷ்டச்சாலிகள் என்பது தன்வந்த்ரியின் எண்ணம். அங்கிருக்கும் ஆட்டோக்களை அடிக்கடி உபயோகிப்பவன் தன்வந்த்ரி.

எட்டிமடையில் இருந்து நேரு கல்லூரிக்கு குறைந்தபட்சம் இரண்டறை அல்லது மூன்று கி.மீ ஆவது இருக்கும். வழியில் எந்தக் கட்டிடங்களும் இல்லை. குண்டும் குழியுமான சாலைகள் மட்டுமே. இடையில் இருந்த வயல்களை தன்வந்த்ரி வந்த இரண்டாண்டுகளில் காணவில்லை. அவனுக்கு அது ஆச்சர்யத்திற்கு உரியது. அவனுடைய கவலையெல்லாம் இப்போதே இங்கிருக்கும் வயல்களைக் காணவில்லையே அவன் கல்லூரி முடிந்து வேலைக்குச் சென்று ஒரு நாள் ஆசிரியர்களைப் பர்க்கலாம் என்று வந்தால் மொத்தமாக மழிக்கப்பட்டிருக்கும் என்பதே. தன்வந்த்ரி முக்கால் வாசி நேரங்களில் அந்தப் பிரதான சாலையிலிருந்து நடந்தே சென்று விடுவான். மூன்று கி.மீ அவனுக்கு இந்திய இசை துணை கொடுக்கும்.

அந்த ஆட்டோக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஏனெனில் அவர்களுக்கு இரட்டை சவாரிகள் கிடைக்கும். முன்பு நேரு கல்லூரி விடுதியில் இருப்பவர்களும் கல்லூரியின் பிரதான சாலையினையே உபயோகப்படுத்தி வெளி சென்று கொண்டிருந்தனர். ஆனால் அங்கிருக்கும் முதல்வரின் ஆணையோ அல்லது திட்டமோ தெரியவில்லை விடுதிக்கும் கல்லூரிக்கும் சம்மந்தமில்லை என்பது போல விடுதிக்குத் தனி வாயிலை வைத்துவிட்டார். அதன்படி அவர்கள் அது வழியே செல்ல வேண்டும். கோபால் இந்தக் கல்லூரி வாசல் பிரதானமாக இருக்கும் போது ஒருவருக்கு முப்பது ரூபாய் வசூலித்தான். அதே மூவரைத் தாண்டி எத்தனைப் பேர் ஏறினாலும் ஆளுக்குப் பத்து ரூபாய். இப்போது இந்த இரண்டாம் திட்டம் மட்டுமே அவனிடம் நிலையாய் இருந்தது. வாயிலை விடுதிக்குத் தனியாய் மாற்றியதும் ஒருவர் மட்டும் வருவதானால் நாற்பது என கேட்க ஆரம்பித்தான். முதலில் சிலர் சண்டை பிடித்தனர். நாட்கள் செல்ல செல்ல வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டனர்.
இது மட்டுமின்றி எட்டிமடையிலிருந்து அமிர்தா கல்லூரிக்குச் செல்பவர்கள். அது கொல்லை தூரம். அங்கு போக தலைக்கு ஐம்பது வாங்குவான் அல்லது அறுபது வாங்குவான். மேலும் அது பல்கலைக் கழகம். அங்கு ஒரு குட்டி இரயில்நிலையமும் உள்ளது. இரயில்களும் ஒரு நாளைக்கு பத்து முறைக்கு குறையாது வந்து போய்க் கொண்டிருக்கும்.

மாணவர்கள் நேரு கல்லூரியிலிருந்து அந்த இரயில் நிலையத்தினை உபயோகிப்பவர்களின் மூலம் இவனின் வாழ்க்கைச் சக்கரம் தேயாமல் ஓடிக் கொண்டிருந்தது. தன்வந்த்ரி எண்பது சதவிகிதம் ஆட்டோவினை உபயோகிக்க மாட்டான். இந்த இருபது சதவிகிதத்தினையும் கோபாலுக்குத் தான் கொடுப்பான். வேறு ஆட்டோக்காரர்கள் மட்டும் தான் உள்ளார்களெனில் அவன் நடந்தே சென்று விடுவான்.
இந்த இரக்கத்திற்கு காரணம் ஒரு முறை தன்வந்த்ரி நடு இரவு சேலத்திலிருந்து கோவை கிளம்பியிருக்கிறான். அவனுடைய விடுதிக்கு காந்திபுரத்திலிருந்து செல்ல ஒரு மணி நேரமாவது பிடிக்கும். அவனும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டான். அருகில் தனக்கு நன்கு பரிச்சயமான முதலாமாண்டு மாணவன். விஷயம் என்ன எனில் அவனுடைய நிறுத்தம் வந்தும் தூக்கத்தில் இறங்காமல் பேருந்தில் வழியிலேயே சென்றுவிட்டான். முதலாமாண்டு மாணவனும் சொல்லவில்லை.

நவக்கரை அருகே இறக்கிவிட்டார்கள். அதே பேருந்து வாளையார் சென்று திரும்பும் போது அவனை ஏற்றிக் கொண்டு வந்தது. அப்போது கோபால் தான் பலரை ஏற்றிக் கொண்டு கிளம்பத் தயாராக இருந்தான். அந்த கூட்டத்தில் தன்வந்த்ரியும் இருந்தான். அவனுடன் சேர்ந்து ஆட்டோவில் நான்கு பேர். விடுதியின் முன் இறங்கியவுடன் தன்வந்த்ரிக்கு வேறொரு முதலாமாண்டு மாணவன், ஆட்டோவில் வந்தவன் பணம் கொடுக்கிறேன் எனக் கொடுத்துவிட்டான். நால்வருக்கு நாற்பது என கொடுத்தனர். கோபால் ஐம்பது ரூபாய்க் கேட்டான். விடிகாலையில் வருகிறோமே கொடுப்பது என்ன தவறு என்பது கோபாலின் வாதம். பணம் கொடுத்த முதலாமாண்டு மாணவன் அவன் கணக்கினை அவனுக்கே சொல்லிக் கொண்டிருந்தான்.

அருகே இன்னுமொரு ஆட்டோக்காரர் நின்று அவர் பயணிகளிடம் பணம் வசூலித்துக் கொண்டிருந்தார். இந்தப் பஞ்சாயத்து முடிந்தவுடன் நாங்கள் கேட்டின் பக்கம் திரும்பினோம். அருகிலிருந்த ஆட்டோக்காரர் கோபாலைப் பார்த்துக் கேட்டார் – அண்ணனுக்குக் கால்ல அடி பட்டிருக்குன்னு ஹாஸ்பிடல்ல போட்ரிக்கியே சரியாச்சா ?
சின்ன வயசுல சாயபட்டறை போணாவுல இப்ப கால் நோய்பட்டுபோச்சு. என்ன நோய்னு எல்லாம் தெரில. டாக்டரு கேக்குறாரு பணத்த. அடிக்கவா முடியும். சரி வா அங்கயே போவோம் இங்கத்த சவாரி ஒண்ணும் வராது.

கேட்டினை வாட்ச் மேன் தாழ் போடும் சத்தம் தன்வந்த்ரியின் காதில் விழுந்தது.

தலைவாசல்
தன்வந்த்ரிக்கு செல்வத்தின் ஞாபகமே அதிகமாக வந்தது. செல்வம் ஆத்தூர் அருகே தலைவாசலில் பிறந்து வளர்ந்து பிழைப்புத் தேடி சேலம் வந்தவன். அவனுக்கு இப்போது சொந்த ஊரே சேலம் என்பது போல் ஆகிவிட்டது. சேலம் வந்த போது அவன் என்ன வேலை செய்வது எனத் தெரியாமல் அங்கங்கே அலைந்திருக்கிறான். அப்போது அவனுடைய மாமா சேலத்தில் இருக்கும் செய்தி அவனுக்குத் தெரிந்திருக்கிறது. மாமாவிடம் சென்று வேலை கேட்டிருக்கிறான்.

மயூரா ஹோட்டலில் வேலை வாங்கிக் கொடுத்தார். வேலை என்றவுடன் கொஞ்சம் கற்பனையில் தவழ்ந்து கொண்டிருந்தான். அவனுக்கோ டேபிளை துடைக்கும் வேலையே கொடுத்தனர். நாள் முழுக்க டேபிள்களை துடைப்பான். அவனுடைய பார்வையெல்லாம் இந்த சர்வர்களின் கைகளில் தான் இருக்கும். ஒவ்வொருவருக்காக அவர்கள் ஒவ்வொன்றாக கொண்டு வைப்பர். கடைசியில் சோம்பினைத் தட்டில் போட்டுப் பில்லினைத் தள்ளும் போது அதில் சாப்பிடுபவர்கள் நூறு அல்லது ஐநூறு ரூபாய் நோட்டுகளை வைப்பார்கள். இந்த சர்வர் அந்த ரூபாயினை கவுண்டரில் கொடுத்து மீதத்தினைக் கொண்டு வந்து தருவான். சில்லறை இருப்பின் அதே டிப்ஸாகிவிடும். சில்லறை இல்லையெனில் சில நேரங்களில் பத்து ரூபாய் கிடைக்கும் சில நேரங்களில் ஒன்றுமே கிடைக்காது.

அந்த ஹோட்டலின் சாப்பாட்டினை செல்வம் சாப்பிட்டிருக்கிறான். அதிலிருக்கும் காரம் ஆரம்பத்தில் அவனுக்கு தெரியவில்லை. தொடர்ந்து அவன் சாப்பிட்டதில் வாயில் புண் வந்தது. பிறகு கொஞ்ச நாள் பேதியானது. டாக்டரிடம் சென்ற போது தான் தெரிந்தது அவனுக்கு அல்சர் வந்து கொண்டிருக்கிறது என. அந்த ஹோட்டலில் சாப்பிடுவதைத் தவிர்க்க ஆரம்பித்தான். மாமாவுடன் தங்கியிருப்பதால் அவருடைய பாத்திரங்களை உபயோகித்துச் சமைக்க ஆரம்பித்தான். மாமாவிற்கும் சேர்த்து.

தினம் வேலை முடிந்தவுடன் அங்கிருந்து மூன்று கி.மீ நடந்தே சென்று மனத்தக்காளி கீரையினை வாங்கிக் கொள்வான். வீட்டிலே மோர் இருக்கும். அந்த மோரில் இந்த மனத்தக்காளியினை அரைத்து கலந்துவிடுவான். தினம் வெறும் வயிற்றில் காலையில் குடித்தான். சிறிதுகாலம் டீ காபி கூட குடிக்காமல் இருந்தான். மீண்டும் பழையபடி ஆன போது தனக்கு வேறு வேலை கிடைக்குமா என மாமாவிடம் கேட்டான்.

மாமா அவனுக்கு சீலநாயக்கன்பட்டியில் பேப்பர் போடும் வேலையினை வாங்கிக் கொடுத்தார். அங்கு சாமியப்பா நகர் அழகு நகர் கோவிந்தம்மாள் நகர் என்று மூன்று நகர்கள். மொத்தம் முப்பது தெருவாவது இருக்கும். அனைத்திற்கும் பேப்பர் போட வேண்டும். ஆரம்பத்தில் கையில் ஒரு பேப்பர் வைத்து எந்த எந்த வீட்டிற்கு எந்த செய்தித்தாள் என்று எழுதி வைத்துக் கொண்டான். அதன்படி அனைத்து வீடுகளுக்கும் அவர்களுக்கேற்ப தினமலர், தினமணி, தினத்தந்தி, ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா என போட்டு வந்தான். உடன் விகடன் குங்குமம் போன்று பத்திரிக்கையும். மீதம் வருவதை மாமாவிடமே கொடுத்துவிடுவான்.

அப்படி மீதம் வருவதை வாசிக்க ஆரம்பித்தான். ஆத்தூரில் அவனுடைய அம்மா அப்பா அவனுக்குக் கல்யாணம் செய்ய வேண்டும் என நினைத்தனர். ஆனால் இவனுக்குள் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. தன் சம்பாத்தியம் தனக்கே சரியாக இருக்கிறது இதில் எப்படி பெண்டாட்டிக்கும் குழந்தைப் பிறந்தால் அதற்கும் பொருந்தும் என. மீண்டும் மாமாவிடம் வழி கேட்டான். அவர் அவனை ஒரு லைசன்ஸ் எடுக்கச் சொன்னார். அவனும் எடுத்தான். வாடகைக்கு ஒரு ஆட்டோவினை எடுத்துக் கொடுத்தார். அதனை தினம் ஓட்டுவான். மாலையில் ஓனருக்கு கொடுக்க வேண்டிய நூற்றி அறுபத்தைந்து ரூபாயினைக் கொடுத்துவிடுவான்.
அப்படியும் அவனின் மனதில் ஏதோ ஆசை இருந்து வந்தது. அவனை அடிக்கடி சவாரி ஆட்டோவிற்கு அழைப்பவர் தன்வந்த்ரியின் அப்பா. அவர் போஸ்ட் ஆபீசில் வேலை பார்ப்பவர். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஈஸ்வரன் கோயிலுக்கு செல்லும் வழக்கம் உடையவர். தன்வசம் இருக்கும் சேடக் ஸ்கூட்டரினை வைத்து முவர் செல்ல முடியாது என செல்வத்தினை அழைப்பார். அவருக்கு நிறைய இடங்களில் செல்வாக்கு உண்டு.

அவருக்கு செல்வம் மிகவும் பிடித்த ஒரு உழைப்பாளி. உடனே அவர் அவனை அழைத்துச் சென்று தனக்குத் தெரிந்த ஒரு பேங்க் மானேஜரிடம் பேசி அவனுக்கு ஒரு லோன் வாங்கிக் கொடுத்தார். அதனை வைத்து அவன் ஒரு ஆட்டோ வாங்கினான்.

மாமா தன் வேலையினை விட்டுவிடலாம், ஊருக்கே திரும்பலாம் என்னும் எண்ணத்தினை கொண்டிருந்தார். அந்த வேலை செல்வத்திற்கு வந்தது. மூன்று நகரும் எங்கு வெளியில் செல்ல வேண்டுமென்றாலும் செல்வத்தினை அழைக்க ஆரம்பித்தனர். செல்வத்தின் ஆட்டோ சவாரியின்றி இருந்தால் அவன் செல்வான் இல்லையெனில் அவனுக்குத் தெரிந்து நால்வரை வைத்திருக்கிறான். வேலையில் இல்லை நட்பில். அவர்களை அனுப்பி வைப்பான்.

காலையில் மூன்று மணிக்கு எழுந்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று விநியோகிக்கப்பட வேண்டிய அனைத்து செய்தித் தாள்களையும் வாங்கிக் கொண்டு நகர் திரும்புவான். விநியோகம் செய்ய ஒரு பையனை நியமனம் செய்தான். வசூல் செய்ய மட்டும் அவனே செல்வான். ஆட்டோவில் நிறைய பேருக்கு வேலையும் கொடுத்தான்.

மணம் செய்து கொண்டான். இரண்டு குழந்தைகள். இருவரையும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்தான். முதல் லோனினை அடைத்தான். அடுத்த லோன் எடுத்து புதிய ஆட்டோவினை வாங்கினான்.

சீலநாயக்கன்பட்டி
செல்வத்தின் நான்கு நண்பர்களில் ஒருவன் தான் மணி. அவன் பொள்ளாச்சியை சேர்ந்தவன். இஷ்டமின்றியே விதியின் வசத்தால் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறான். அவன் அக்கா வீட்டுக்காரரின் ஆட்டோ அது. சொந்தமாக ஒரு வீடு இல்லை என்பதே அவனுடைய தலையாயக் கவலை.

எங்கு சென்றாலும் ஆட்டோ ஓட்டுபவன் என்பதால் வீடு கொடுப்பதில்லை என்று கவலை கொண்டிருந்தான். அப்போது சவாரி சமயத்தில் சேலம் ஜங்ஷனில் அருகருகில் செல்வமும் மணியும் நின்று கொண்டிருந்தனர். செல்வம் அப்போது இருந்தது தாதகாபட்டியில். செல்வத்திடம் வீடு கிடைக்குமா எனக் கேட்டபோது நான் சவாரி தருகிறேன் அந்த ஏரியாவிக்கருகில் வர இயலுமா என்றே கேட்டான். இவனும் சரி எனச் சொல்ல அன்றிலிருந்து அந்த ஏரியா வந்தான்.

தன்வந்த்ரி இருந்த அந்தத் தெருவிலேயே ஒரு குட்டி வீடு இருந்தது. அந்த வீட்டின் ஓனரைக் கண்டுபிடித்து அந்த வீட்டிற்கே மணி குடும்பத்துடன் குடி வந்தான். அங்கு வந்த பிறகு சவாரி தினம் கிடைக்க ஆரம்பித்தது. தன்வந்த்ரியுடன் அதிகமாகப் பேசுவான். அப்போதும் அவனுக்குள் இருக்கும் சொந்தமாக பொருட்களினை ஈட்டும் ஆசை வெளிப்படையாக இருக்கும். இருவரும் அதிகம் சினிமாவினைப் பற்றிப் பேசுவர்.

மணிக்கு மூன்று குழந்தைகள். சம்பாதிப்பது கைவசம் நிக்காமல் செலவாவதை நினைத்து வருத்தம் கொண்டிருந்தான். அப்போதும் அவனுடைய நினைப்பு இந்த வீட்டு வாடகைக் கொடுப்பதால் தான் தம் கைக்காசுகள் போகிறது. கைவசம் மட்டும் ஒரு வீடிருந்தால் எவ்வளவு காசு தங்கும் என. அதே போல் அவனுக்குத் தெரிந்தவர் வாடகையே வேண்டாம் மூன்று வருடம் என் வீட்டில் தங்கிக் கொள் என அம்மாபேட்டையில் ஒரு மாடி வீட்டினைக் கொடுத்தார். மூன்று வருடமெனில் சும்மாவா ? மணியும் குடும்பத்துடன் சென்றான்.

தினம் அங்கிருந்து சீலநாயக்கன்பட்டி வர வேண்டும். பத்து கி.மீ மேலேயே வரும். பெட்ரோல் விற்கும் விலையில் ஏன் சும்மா வர வேண்டும் ? அங்கிருந்து இங்கு வரும் வரை ஷேர் ஆட்டோவினைப் போல ஓட்டுங்கள் என தன்வந்த்ரி சொன்னான். ஏனெனில் ஷேர் ஆட்டோ கணக்கில் அம்மாபேட்டையிலிருந்து பழைய பேருந்து வரை ஒரு கணக்கு வரும், கொஞ்சம் காசும் வரும். பழைய பேருந்திலிருந்து சீலநாயக்கன்பட்டி வரை ஒரு காசு வரும். அதுவும் காலையில் முதல் படி நிறையவே வரும். பள்ளிக் கல்லூரி மாணவர்கள் ஏறுவார்கள்.
மணியோ அவசரத்தில் மறந்து வந்துவிடுவான். கொஞ்ச நாள் அங்கேயே இருக்க அவனுக்கு ஸ்கூல் ட்ரிப்பிற்கான சவாரிகளை செல்வம் சிபாரிசு செய்தான். அவனை நம்பி ஒரு இருபது குழந்தைகள் அந்த ஏரியாவிலிருந்து வந்தார்கள். இரண்டு ட்ரிப்பு ஓட்டினான். பின் செல்வம் வாங்கிய இரண்டாவது ஆட்டோவினை வேறு ஒருவன் ஓட்டிக் கொண்டிருக்க அவனுக்கு ஒரு ட்ரிப்பினை பகிர்ந்து கொண்டான்.

இந்நிலையில் மூன்று வருடம் கழிந்துவிட்டது. அந்த ஓனர் வர வேண்டிய நேரம். வீடு பார்க்கவில்லை. செல்வத்தையே நாடினான். தொடர்ந்து அந்த சீலநாயக்கன்பட்டி ஏரியாவிலேயே தேடினான். சவாரி எதுவும் செல்லவில்லை. சம்பாத்தியமின்றி நாட்கள் கடந்து கொண்டிருந்தது. மணி சம்பாதிக்கவில்லையே, வண்டி ஓட்டுவதில்லையே என தன்வந்த்ரியின் அப்பாவிடம் செல்வம் புலம்பிக் கொண்டிருந்தான். வீடு கிடைத்தது. என்ன தான் ஆனாலும் நம் வாழ்க்கை ஆட்டோவில் தான் என ஆட்டோவில் அம்மாப்பேட்டையை விட்டு சாமான்களை ஏற்றிக் கொண்டிருந்தான் மணி.

எழுத்து

தன்வந்த்ரி ஒரு எழுத்தாளன். அன்று கோபாலை பார்க்கும் போது இத்தனை நினைவுகள் அவனுள் எழுந்தது. எத்தனையோ முறை மணியிடம் சவாரியில் இருக்கிறீர்களா இதை வாங்கி வாருங்கள் அதை வாங்கி வாருங்கள் ரீசார்ஜ் செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறான். இப்போது அவனுள் தோன்றுகிறது. காரணம் அறியாமல் உணர்வுகள் இல்லாமல். அதை எழுத ஆரம்பித்தான். ஆட்டோக்காரர்களை மையபடுத்தி ஒரு கதை நாம் எழுதுவோம் என எழுதினான். அதை அப்பாவிற்கு மின்னஞ்சல் அனுப்பினான். ப்ரிண்ட் அவுட் எடுத்து வைக்கச் சொன்னான்.

கதை
தன்னுடைய அலுவலகத்திலேயே ப்ரிண்ட் எடுக்கலாம் என நினைத்திருந்தார். அவருடைய நேரம் ப்ரிண்டரில் இங்க் தீர்ந்தது. மாற்றுவதற்கு ஆள் வர வேண்டும் என சொல்லிவிட்டார்கள். அவருக்கு உத்தமமான ஆட்டோக்காரர்கள் என்றாலே செல்வமும் மணியும் தான். இந்த ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்களை அவருக்கு அறவே பிடிக்காது.

அவர்களின் சட்டப்படி வாட்டிக்கையாளர்கள் எங்கு கேட்கிறார்களோ அங்கு நிறுத்த வேண்டும். இந்த வசதிக்காகத் தான் அநேகம் பேர் ஷேர் ஆட்டோவும் உபயோகம் செய்கின்றனர். இவர் எங்காவது ஷேர் ஆட்டோவின் பின் போய்க் கொண்டிருப்பார். திடிரென அவன் நிறுத்துவதால் இவருக்கு கை கால்கள் உதற ஆரம்பித்துவிடும். ஏன் இப்படி நடு ரோட்டில் செய்கிறான் என சுய புலம்பல் வேறு. அவனுக்கு கொஞ்சம் திட்டும் உடன் வரும்.
ஒரு வேளை அவர் ஆட்டோ ஓட்டினால் அந்த ரூபாயின் அருமைத் தெரியலாம். ஆனால் செல்வமோ மணியோ அப்படிக் கிடையாது. இந்த சிந்தனையில் தான் ஒரு ஆட்டோக்காரரைத் திட்டிக் கொண்டே ஜெராக்ஸ் கடையினை தேடிக் கொண்டிருந்தார். தாதகாபட்டி பிரபாத் ஜவுளிக்கடை வள்ளுவர் சிலை என்று சென்றுவிட்டார். எங்கும் கடைகள் இல்லை. எங்கு செல்வது எனத் தெரியவில்லை.

சரி இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் அப்படியே நான்கு ரோடு வரை போய்ப் பார்க்கலாம் எனவும் சென்றார். அங்கிருந்து பூ மார்கெட் செல்லும் வழியினில் சென்றார். பாதை நீண்டு கொண்டே போனது. லீபஜாரினுள் நுழைந்தார். சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது தான் அவருக்கு பிரக்ஞையே வந்தது அன்று ஞாயிற்றுக் கிழமை என. காலையில் ஸ்பெஷலாக ஒரு வேலைக்கே அவர் ஆபீஸ் சென்றிருந்தார்.
இன்னமும் கொஞ்ச தூரம் சென்றபின் ஒரு மருந்துக் கடையில் ஜெராக்ஸ் இருந்தது. அவர் லீபஜார் அதிகம் வந்ததில்லை. அந்த இடமே புதிதாக இருந்தது. பக்கத்திற்கு ஒரு ரூபாய் ஐம்பது பைசா என்றான் கடைக்காரன். வழியில்லை கொடுப்போம் என எடுக்கச் சொன்னார். இங்கிருந்து எப்படிப் போவது என அவருக்குத் தெரியவில்லை. கடைக்காரரிடமே கேட்டார்.

அவர் பல வளைவுகளைச் சொன்னார். இவரால் அதை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. ஜெராக்ஸினை வைத்துக் கொண்டு சாலையின் இருமங்கிலும் பார்த்தார். நீளமான சாலை. கொஞ்ச தூரம் வண்டியில் சென்றார். மருந்துக் கடைக்காரனின் பார்வையிலிருந்து விலகிய பின் அலைபேசியை எடுத்து செல்வத்திற்கு அழைப்பு விடுத்தார். எடுக்கவில்லை. பலமுறை அழைத்தும் அவனுடைய எண் எடுக்கபடாமல் இருந்தது. மணிக்கு அழைத்தார். வீட்டுச் சாமான்களை எடுத்து வைத்த வண்ணம் மனதளவில் புலம்பிக் கொண்டே அழைப்பினை எடுத்தான். முழு இடத்தினையும் சொன்னார். அவன் சொன்ன பதில் “நீங்க நிக்குற இடத்துலருந்து நேராப் போங்க புது பஸ் ஸ்டேண்டு வரும். அப்பறம் உங்களுக்கே தெரியும் சார்.” மணியின் இதழில் லேசான சிரிப்பு. தப்பித்தது போன்றதொரு எண்ணம் அப்பாவின் மனதில் துளிர் விட்டது.

அலைபேசியினை அணைக்கும் போது ஜெராக்ஸ் கைலிருந்து கீழே விழுந்தது. லேசாக சாலையோர மண் காகிதத்தில் ஒட்டிக் கொண்டு இருந்தது. மண் இருந்த இடத்தினைத் தட்டிவிட்டார். மண் அகன்ற போது அங்கிருந்த வார்த்தைகள்
“மனிதன் உருவாக்கிய நான்காவது பரிமாணமான காலம் மனிதனுக்குள்ளேயே ஸ்தம்பித்துவிட்டது. அவன் யாத்ரீகன் தேசாந்திரிகன் என நினைத்துக் கொண்டிருக்கிறான். உண்மையில் அவனோ ஸ்தூலமாகிச் சுற்றிக் கொண்டிருக்கும் உலகத்தினை வேடிக்கைப் பார்க்கும் அற்ப பாதசாரி. எல்லாம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.”

– கிருஷ்ணமூர்த்தி.
krishik10@gmail.com

‘சஞ்சிகை’ ஜனவரி இதழில் வெளிவந்த சிறுகதை.

Advertisements

One thought on “பாதசாரி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s