“விழித்தெழு மதுரை” – செல்லூர் கண்மாய்

வைகை நதியின் வடகரையில் அமைந்திருக்கும் பகுதி “செல்லூர்”. ஒரு காலத்தில் குட்டி ஜப்பான் என்றழைக்கப்பட்ட ஊர்! காரணம் கைத்தறி துண்டுகள் உற்பத்திக்கு அவ்வளவு பெயர் பெற்ற ஊர் இந்த செல்லூர் ஆகும். திரும்பிய பக்கமெல்லாம் கைத்தறி சத்தம் ஒலித்து கொண்டே இருக்கும்.

“சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வர” என்று கைத்தறியின் பெருமையை பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் தமது பாடலில் வெளிப்படுத்தி இருப்பார்!

இப்படி பெருமை பெற்ற ஊரின் மேற்கே செல்லூர் கண்மாய் அமைந்துள்ளது. செல்லூரின் தெற்கு புறம் அனைத்தும் வயல்வெளிகளால் நிறைந்து பச்சைபசேலென காட்சியளிக்கும். அந்தக்காலத்தில் பெரியவர்களும் சிறியவர்களும் இந்தக் கண்மாயில் நீந்தி குளித்து உற்சாகமாய் திரும்புவர். மீன் பிடித்தொழிலும் நடைபெற்றது. கண்மாய் மீன்களுக்கு நல்ல கிராக்கி இருக்கும்.

அந்தோ…. ! அந்த கண்மாய் இன்று பரிதாப நிலையில். காரணம் முறையான பராமரிப்பு இல்லாமல். ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகளும் கொட்டப்படுவதாலும் இன்றைய மக்களே அதை கழிப்பறையாக பயன்படுத்துவதாலும் நீரும் வற்றியதாலும்..

1993 ஆண்டு வரை இந்த கண்மாய் எப்போதும் நீர் நிறைந்தே இருக்கும். 1993 நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் கண்மாய் உடைந்து, கண்மாய் கால்வாய் பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதால் நீர் போவதற்கு வேறு வழி இன்றி செல்லூர் முழுவதும் வெள்ளம் பெருகி நிறைய உயிர் சேதங்கள்; கோடிக்கணக்கில் பொருட் சேதங்கள். மாடுகளும் பிற உயிரினங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சி இன்றும் கண் முன்னே நிற்கிறது. உயிர் பிழைக்க மக்கள் வீட்டுக்கூரைகளிலும் மாடிவீடுகளிலும் மூன்று நாட்கள் பட்டினியாய் இருந்த நிலை. அதில் செல்லூர் மக்களின் வாழ்வாதாரமாய் இருந்த கைத்தறி தொழில் ஏறக்குறைய அழிந்தே விட்டது. இந்தப் பகுதி மக்கள் பிழைப்பிற்கு மாற்று தொழில் வேண்டி சென்று விட்டனர். மேலும் அதே போல 2005 ஆண்டும் இன்னொரு பெருவெள்ளம் வந்தது. ஆனால் செல்லூர் கண்மாய் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிக உயிர் சேதமின்றி பொருட் சேதங்களுடன் மிச்சம் மீதி இருந்த கைத்தறித் தொழிலை முற்றிலுமாக அழித்து சென்றது.

ஆக, 2005 ஆண்டு வரை இந்த கண்மாயில் நீர் வரத்து ஓரளவு பராமரிக்கப்பட்டு வந்ததால் நீர் நிறைந்தே காணப்பட்டு நீர் ஆதாரத்திற்கு எந்த பங்கமும் இன்றி கண்மாய் பயன்பட்டு வந்தது.

ஆனால் அதன் பிறகு கண்மாய் வரும் நீர் வரத்து கால்வாய்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கபளீகரம் செய்யப்பட்டதாலும், மழை பொய்த்ததாலும், விளைநிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மனைகளாக மாறிவிட்டன. இருந்தாலும் இந்த கண்மாய் தான் இந்த பகுதியின் 40000 குடும்பங்களுக்கு நீர் ஆதாரமாய் இன்றும் விளங்கி வருகிறது.

இது இப்படி இருக்க… இதையும் ஆக்கிரமிப்பாளர்கள் சிறுக சிறுக கண்மாய் கரைகளிலும் பிற பகுதிகளிலும் ஆக்கிரமிப்பை தொடர்வது வேதனை அளிக்கிறது.

இதை தடுக்கும் நோக்கத்தில் தான் தற்போது “விழித்தெழு மதுரை” என்ற குழு முனைந்துள்ளது. இந்தக் குழுவில் தற்போது இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் அந்த பகுதியில் உள்ள கண்மாய் பாதுகாப்பு இயக்கங்களும் மற்றும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டர்களும் தானாக முன்வந்து இணைந்து கைகோர்த்துள்ளனர்.

சமீபத்தில் 17-11-13 அன்று “விழித்தெழு மதுரை” சார்பாக இந்தக் கண்மாயில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி “நீர் நடை” நிகழ்வு நடைபெற்றது. மதுரை மாவட்டக் காவல்துறை ஆய்வாளர் உயர்திரு. சஞ்சய் மாத்தூர் அவர்கள் “விழித்தெழு மதுரை’யின் துணி பதாகையை திறந்து வைத்தார். மேலும் காவல்துறை கண்காணிப்பாளர் உயர்திரு. பாலகிருஷ்ணன் அவர்கள், அந்தக் கண்மாய் பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து சிறப்பித்தார்.

மேலும் பறவை ஆர்வலர்கள், கல்லூரி பேராசியர்கள், எழுத்தாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்தப் பகுதி பெருவாரியான மக்களும் கலந்து கொண்டது அந்தக் கண்மாயை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.

ஏறக்குறைய 210 ஏக்கரில் இருந்த கண்மாயின் பரப்பளவு… இன்று சுருங்கி வெறும் 94 ஏக்கர் என்ற பரிதாப நிலையிலே…! இந்த 94 ஏக்கர் கண்மாயையாவது காப்பாற்றத்தான் இந்த “விழித்தெழு மதுரை” குழு முழுமூச்சுடன் முனைத்துள்ளது. நீரின் தேவையை உணர்ந்த பிறகு மக்களின் ஆதரவும் பெருகி உள்ளது.

அந்த நிகழ்வுக்கு பிறகு, அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் கண்மாய் ஆர்வலர்களை இணைத்து ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. கண்மாய்களில் இனிமேல் கழிவுகள் கொட்டப்படாமல் பாதுக்காக்க அவர்கள் முன்வந்துள்ளனர். மேலும் கண்மாயை தூர் வார பொதுப்பணித்துறையிடம் முறையாக முறையிட்டுள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது.

“விழித்தெழு மதுரை” தொடர்ந்து அனைத்து விதங்களிலும் செல்லூர் கண்மாய் பாதுகாப்பு குழுவுக்கு ஆதரவும் அவர்கள் செயல்பாடுகளை கண்காணிப்பதிலும் கவனமாக உடனிருந்து வருகிறது.

மேலும் “விழித்தெழு மதுரை”யின் நோக்கம் மதுரையிலும் மதுரையை சுற்றி அமைந்துள்ள ஒவ்வொரு கண்மாயையும் மீட்டெடுக்கும் வேண்டும் என்பதே! அதற்காக மாதந்தோறும் ஒவ்வொரு கண்மாயை தேர்ந்தெடுத்து அந்தக்கண்மாயில் “நீர் நடை” நிகழ்வு நிகழ்த்தி மக்களுக்கும் அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து கண்மாய்களையும் பாதுகாத்து மதுரையின் நீர் பற்றாகுறையை போக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். மக்களின் ஆதரவோடும் அரசு அதிகாரிகளின் ஆதரவோடும் வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கையுடன் செயலாற்றிவரும் “விழித்தெழு மதுரை”

– செல்வம் ராமசாமி,
dhanaselvaa@gmail.com

‘சஞ்சிகை’ ஜனவரி இதழில் வெளிவந்த கட்டுரை.

Advertisements

One thought on ““விழித்தெழு மதுரை” – செல்லூர் கண்மாய்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s