கறுப்பு

ஏதெனும் ஒரு வண்ணம் பளீரென கண்ணில் தென்பட்டால் உடனே நம்மை அறியாமலேயே திரும்பிப் பார்த்துவிடுகின்றோம். நிறங்களுக்கு அவ்வளவு ஈர்ப்பு சக்தி உண்டு. ஒரு சிலருக்கு ஒரு சில நிறங்கள் மேல் அலாதி பிரியம் இருக்கும்.

இந்த நிறங்கள் எந்த கால கட்டத்தில் வந்திருக்க கூடும்!!! சூரி ஒளியிலேயே நிறங்கள் தென்பட்டுள்ளன. தாவரங்களுக்கு பச்சை சாயம் பூசியதிலிருந்து மழைகாலங்களில் பல வண்ணங்களில் வானவில்லினையும் உண்டாக்க சூரிய கதிரொளியால் மட்டுமே இயல்கிறது. அந்த சூரிய ஒளி இல்லாத காலங்கள் எப்படி இருந்திருக்கும்? ஒளி உண்டாவதற்கு முன் அண்ட வெளியில் சூரியனும் அதனை விட பல மடங்கு பெரிய பிரகாசமான நட்சத்திரங்களும் உண்டாவதற்கு முன் எப்படி இருந்திருக்கும்? சிந்தித்தால், எந்த ஒரு வண்ணமும் அற்று எங்கும் இருள் சூழ அல்லவா காட்சியளித்திருக்கும். அப்படியென்றால் கறுப்புதான் அனைத்து நிறங்களின் முன்னோடியாக உள்ளது.

இயற்பியலாளர்கள் கூட கறுப்பு என்பதனை நிறமாக ஏற்றுக் கொள்வதில்லை. அது நிறமற்றதாகவே சொல்கின்றனர் RGB என சொல்லக்கூடிய சிவப்பு, பச்சை, ஊதா நிறங்களின் கலவை வெள்ளை நிறமென்றும், இம்மூன்று நிறங்கள் இல்லை என்றாலே அது கறுப்பு என்றும் விவரிக்கின்றனர். இவர்கள் சொல்வது நிறங்கள் உருவாகுவதற்கு முன்பிருந்தே கறுப்பு இருந்ததை உறுதி செய்கின்றன.

கறுப்பு இன்றும் நிறைய இடங்களில் முக்கியமான ஒன்றாக ஆளப்படுகிறது. கார்த்திகை மார்கழி மாதங்களில் மாலையிட்டு வழிபாடு என்று செல்பவர்களில் கன்னிச்சாமிகள் கறுப்பு ஆடைகளை அணிந்தே செல்கின்றனர். புராண ரீதியான விளக்கங்கள் பல இருந்தாலும் உளவியல் பூர்வமான பதில்கள் சற்று சிந்திக்கவே வைக்கின்றன. முதன் முதலாக வன விலங்குகள் உலாவும் மலைக்கு வருபவர்களை எளிதில் இனம் காணவும், அவர்களை வழிநடத்தி பாதுகாக்கவும் அவர்கள் கறுப்பு ஆடைகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

கறுப்புக்கு மதம் தெரியாது. முகமதிய பெண்கள் கறுப்பு பர்தாக்களை அணிந்து கொண்டு வெளியில் வருவதை கண்டிருக்கிறோம். முகலாயர்களின் ஆட்சி காலத்திற்கு பிறகு அரபு நாட்டு கலாச்சாரங்களின் தொடர்பாக இங்கும் இந்நிலை பரவியுள்ளது. அரபு நாடுகளின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க வெயிலுக்கு பயந்து கறுப்பு பர்தாக்களை பெண்கள் அணிந்து வெளியில் வந்திருக்கிறார்கள். பின்னாட்களில் அது முகமதிய பெண்களின் அடையாளமாகவும் அவர்கள் மீதான அடக்கு முறையாகவும் மாற்றப்பட்டுள்ளது.

“கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள
நிறத்துரு உணர்வதற்கும் உரிய என்ப.”

என தொல்காப்பியம் கறுப்பும் சிவப்பும் சினத்தை குறிக்கும் சொற்களாக கையாண்டுள்ளது.

“கறுத்தின்னா செய்த அக்கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்”
என திருக்குறளும் கறுத்து என்ற சொல்லை சினத்து என்றே பொருள்படுத்தியுள்ளது.

ஒளவையாரின் புறப்பாடலில்
“செருநரை நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனவே”

என்று சிவப்பு வெகுளி என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது.

ஆனால் எந்த ஒரு சங்க இலக்கிய பாடல்களிலும், சிவப்புத் தோல், கருப்புத் தோல் எனவோ, நிறங்களில் உயர்வு தாழ்வையோ கூறவில்லை.
அதே போல அழகு குறித்த இடங்களிலும் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், உருவம் குறித்தே அழகு கையாளப்பட்டுள்ளது. உதாரணமாக “பெருத்த தோளையுடைய வீரன்” என்று அகலமான அல்லது வீரமான தோள் கொண்ட வீரன் என குறிக்கப்படுகிறது.

பக்தி இலக்கிய காலங்களிலேயே முதன்முறையாக நிறங்களை முதன்மைப்படுத்தியுள்ளனர்.
“மாயோன் மாலை போன்று நீல நிறத்தவன்” என்று திருமாலையும்,
“அருவி போல வெள்ளை நிறத்தில் இருக்கிறான்” என்று பலராமனுக்கும் நிறம் சொல்லப்படுகிறது. நஞ்சுண்ட காரணத்தால் சிவ பெருமானின் கழுத்து கருமையும் நீலமும் கலந்த வண்ணத்தில் இருப்பதாக மற்றொரு பாடல் கூறுகிறது. முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களுக்கு நிறம் குறிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி இருந்தாலும் பக்தி இலக்கிய காலத்திலும் கருமை நிற கண்ணன் என கடவுள்களுக்கு கறுப்பு நிறத்தினை இட்டு பெருமையாகவே பேசியுள்ளனர். பின்னாட்களில்தான் கறுப்பினை ஒதுக்கி புறந்தள்ளும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர்.

எந்த ஒரு சமுதாயம் ஒதுக்கப்படுகின்றதோ, அந்த சமுதாயத்தை முதன்மைப்படுத்தும் கடவுள் மறுப்பாளர்களும், அதே போல அநேகம் பேரால் ஒதுக்கப்பட்ட கறுப்பினையும் முதன்மைப்படுத்துகின்றனர்.
கறுப்பு கடவுள்களுக்கான நிறமாக வணங்கப்பட்ட காலத்திற்கும், இப்போதைய கால கட்டத்திற்குமான வேறுபாட்டை அறிய வரலாற்றினை புரட்ட வேண்டியுள்ளது.

தமிழ் அரசுகள் வீழ்ந்த கிபி 13-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே கறுப்பு வழக்கொழிந்த வரலாற்று பக்கங்கள் துவங்குகின்றன. கிபி1310 முதல் கிபி1323 வரை முகலாய படையெடுப்பும், கிபி1383-ல் விசயநகரப் பேரரசுகளின் படையெடுப்பும் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தினை துவக்கிவைத்தன. இவர்களின் ஆட்சி அதிகாரம் முடிவுறும் தறுவாயில் கிபி1700க்கு பிறகு உருது பேசும் வடநாட்டு முகமதியர்கள் ஒரு சில பகுதிகளில் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றினர். மிகச்சில பகுதிகளில் பிரஞ்சுக்காரரும், ஏனைய பகுதிகளில் பிரிட்டீஸ்க்காரர்களும் ஆட்சி அதிகாரம் பெற்றனர். கிபி 14-ஆம் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தினை கையில் வைத்திருந்த அனைத்து ஆட்சியாளர்களும் தமிழர்களின் சாரசரி நிறத்திலிருந்து வேறுபட்ட சிவந்த நிறமுடையவர்கள். முகமதிய ஞானிகள், ஐரேப்பிய பாதிரிமார்கள், பிராமணர்கள் என சிவந்த தோலுடையவர்கள். கிட்டதட்ட ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் நாட்டில் அரசியல் அதிகாரமும், அரசியல் சித்தாந்தங்களையும் நடைமுறைகளையும் உயர்த்திப்பிடிக்கின்ற ஆன்மீக அதிகாரமும் சிவந்த நிறமுடையவர்களின் கைகளிலேயே இருந்துள்ளது. இதன் மூலம் அதிகாரம் பெற்றவர்களின் நிறம் சிவப்பாகவும், அடிமையாக்கப்பட்ட பூர்வீக குடிகளின் கறுப்பு கீழாகவும் மாறியது.

அறிவியல், விஞ்ஞான வளர்ச்சி என பீற்றிக் கொள்ளும் இந்த சமகால கற்றுத் தேர்ந்த மேதாவிகளே கறுப்பின் மகத்துவம் தெரியாது கறுப்பு தோலுடையவர்களை ஒவ்வாத மனம் கொண்டே அனுகுகின்றனர். கல்வி அறிவினையும் தாண்டி இந்த சிவப்புத் தோல் நாகரீகம் மேலோங்கியே கிடக்கிறது. கறுப்பாக இருப்பவர்கள் கீழ்சாதிக்காரன், வறுமைப்பட்டவன், நாகரீகமற்றவன், அழகற்றவன் என்கிற பொருளிலேயே இன்றும் நோக்கப்படுகிறார்கள். திருமணச் சந்தையில் கூட பணம் என்ற விடயத்திற்கு குறைவில்லாமல் பெண்ணின் நிறமும் தீர்மானிக்கப்படுகிறது.

இயற்கையிலேயே கறுப்பு நிறத் தோலை பெற்றவர்கள் தோல் வியாதிகளால் பாதிக்கப்படுவதில்லை. மெலனின் எனும் நிறமி கறுப்பு நிறம் பெற்ற புண்ணியவான்களுக்கு மட்டுமே வாய்த்துள்ளது. நம் தாயின் கருப்பையில் நாம் பழக்கபட்ட கறுப்பு இன்று நம்மாளேயே கேலிகளுக்கு உள்ளாக்கப்படுகிறது.
கூவும் அழகில் மறந்தே போகும் குயிலின் நிறம்.

– பாடுவாசி & தினேஷ்குமார்.
thamizhmani2012@gmail.com.
yogamaya.music@gmail.com.

2014, பிப்ரவரி’சஞ்சிகை’ இதழில் வெளிவந்த கட்டுரை

Advertisements

One thought on “கறுப்பு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s