சங்கீத யோகி அன்னமாச்சார்யா

நம்மில் பெரும்பான்மையோர் இசையை விரும்பிக்கேட்டு அதில் லயித்து போகிறோம். இசையைக்கேட்கும் நாமே சொக்கிப்போகும்போது, இசையுடன் கூடிய பாடல்களை உருவாக்குபவர்கள் எவ்வளவு சிலாகித்து பாடுவார்கள். அப்படி, கொண்டாட்டமான மனநிலையுடன் இறைவனை நினைத்து துதிப்பாடல்களை எழுதியவர் தெலுங்கு கவிஞர் அன்னமாச்சார்யா.

தென்னிந்தியாவில் இருக்கும் திருப்பதிக்கு அருகே உள்ள தாள்ளபாக்கத்தில் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பக்தியும், ஆச்சாரமும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தார் அன்னமய்யா. திருமாலின் ஆயுதங்களே பூமியில் முனிவர்களாக, ஆழ்வார்களாக பிறப்பார்கள் என்னும் ஐதீகம் வைணவத்தில் நிலவுகிறது. அன்னமையாவின் பெற்றோர்கள் பிள்ளைவரம் வேண்டி திருப்பதியை சுற்றிவரும் போது, திருமாலின் ஆயுதமான நந்தக கத்தி அவர்களின் கண்ணில் பட்டதாகவும், சில நாட்களில் அன்னமாச்சார்யாவின் தாயார் கருவுற்றதாகவும் கூறப்படுகிறது. திருமாலின் ஆயுதமான பாஞ்ச ஜன்யம் பொய்கையாழ்வாராக பிறந்ததாகவும், நந்தக கத்தி பேயாழ்வாராக பிறந்ததாகவும் நம் தமிழ் சூழலில் கூட வைணவ கதைகள் கூறுகின்றன.

அன்னமாச்சார்யா சிறுவயதிலே கல்வியில் சிறந்து விளங்கினார். இருந்தும், சில வேளைகளில் வெறுமையுடனே காணப்பட்டார். உலக விஷயங்களில் தொடர்ந்து அவரை ஈடுபடுத்தினால் சரியாகி விடும் என்று பெற்றோர்கள் நினைத்து வீட்டிற்கு தேவையான வேலைகளை செய்ய சொல்லிக் கொண்டிருந்தனர். அப்படி ஒருநாள் காட்டில் புல் வெட்ட சென்றபோது, அவ்வழியே திருப்பதியை நோக்கி யாத்ரீகர்கள் கூட்டம் பக்திப்பாடல்களை பாடிக்கொண்டே சென்றதைக் கண்டார். தான் வந்த வேலையை மறந்து விட்டு, அவர்களுடனே பின்தொடர்ந்து சென்றார். அவர்கள் ஆங்காங்கே நிறுத்தி, கையில் இருந்த உணவினை உண்டு, பயணத்தைத் தொடர்ந்தனர். அன்னமாச்சார்யா உணவினை எடுத்து செல்லாததால், விரைவில் சோர்வாகிவிட்டார். அந்த யாத்ரீகர்கள் திருப்பதி மலையில் ஏறத்தொடங்கினர். சிறிது தூரத்தில், அவர்களையும் காணவில்லை. அவர்கள் எந்த பாதையில் சென்றனர் என்றும் தெரியவில்லை. பசி மயக்கம் வேறு. லேசாக கண் அயர்ந்தார். அன்னமாச்சார்யாவின் கனவில் திருமாலின் மனைவி அலமேலு தோன்றி ஸ்ரீவெங்கடேசனை குறித்து பாடல்களை பாடச் சொன்னார். கனவில் இருந்து திடுக்கிட்டு எழுந்த அன்னமாச்சார்யா எதிரில் ஒரு பெண்மணி பிரசாதத்துடன் வருவதைப் பார்த்தார். அப்பெண்மணி, தன் கையில் இருந்த லட்டினை அன்னமாச்சார்யாவிடம் கொடுத்து உண்ணச்சொன்னார். பசி மயக்கம் நீங்கியது, தனக்கு கிடைத்த இறைசெய்தியை நினைத்துக் கொண்டே, மலையேறி ஆலயத்தை அடைந்து இறைவனை வணங்கினார். அங்கே அவர் பக்திப்பாடல்களை எழுதி, ‘ஸ்ரீ வெங்கடேஸ்வர சதகமு’ என்று தொகுத்துப் பாடினார். துதிப்பாடகள் எனப்படும் பக்திப்பாடல்களை அன்று முதல், தானே எழுதிப் பாடத் தொடங்கினார். இறைவனிடம் தஞ்சம் புகுதலே துதிப்பாடல்களின் பிரதான தன்மை.

annamacharyaa 3திருப்பதியிலே தங்கி பாடல்களைப் பாடிக்கொண்டு இருந்த அன்ன்மாச்சார்யாவைத் தேடி அவரின் குடும்பத்தினர் வந்து அவரை தங்கள் ஊருக்கு அழைத்துசென்றனர். அன்னமய்யா என்று அழைக்கப்பட்டு வந்தவர், வைணவத்தில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட பின், அன்னமாச்சார்யா என்று அழைக்கப்பட்டார்.
தாள்ளபாக்கத்தில் இருந்துக்கொண்டே துதிப்பாடல்களை எழுதி வந்தார். அவ்வபோது திருப்பதிக்கு சென்று இறைவனை வணங்கிவந்தார். சுற்றுப்பகுதியில் இருந்த அனைவரும் அன்னமாச்சார்யாவின் இசைத்திறனை அறிந்து அவரை சந்திக்க வந்தனர். அதில் ஒருவர், சாளுவ நரசிம்ஹராயா. இவர் டங்குடூகு என்ற ஊரின் தலைவராக இருந்தார். திருமலம்மா, அக்கலம்மா என்று இருவரை அன்னமாச்சார்யா திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் தங்கள் கணவனின் இசை சேவையில் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர். ‘ஸுபத்ரா கல்யாணம்’ என்ற வரலாற்றுக் கவிதை நூலை எழுதிய முதல் பெண் கவிஞர் திருமலம்மா.

பொதுமக்களும், சாளுவ நரசிம்ஹராயா போன்ற மக்களும் அன்னமாச்சார்யாவிற்கு பொருளுதவிகளை இறைவனின் அடியவர்க்கு வழங்கும் காணிக்கையாக வழங்கினர். தாள்ளபாக்கத்திலும், பக்கத்தில் உள்ள ஊர்களுக்கு சென்று பக்திப்பாடல்களை அன்னமாச்சார்யா பாடியும், அறநெறிகளை கூறியும், மக்களிடையே இறையுணர்வை வளர்த்து வந்தார்.

தனக்கு நன்கொடையாக கிடைத்தவற்றில் ஒரு பகுதியை, திருப்பதிக்கு எடுத்து சென்று, தன்னை இறைவி அலமேலுவின் தந்தையாக பாவித்துக்கொண்டு, திருமாலுக்கும், அலமேலுவிற்க்கும் திருமண உற்சவம் செய்து வைத்தார். இன்றும் கூட, திருமாலின் ஆலயங்களில் இறைவனுக்கு திருமண உற்சவங்கள் நடைபெறுகின்றன.
இறைவனை நினைத்து நாளொன்றிற்கு ஒரு பாடலை எழுதினார் அன்னமாச்சார்யா. அவ்வாறு அவர் எழுதியவை மொத்தம் 32,000. இவற்றை பனை ஓலைகளில் எழுதி வைத்தார். இப்பாடல்கள் தெலுங்கு மொழியின் பக்தி இலக்கியத்திற்கு பெரும் பங்களிப்பவை.

சாளுவ நரசிம்ஹராயா போன்ற அன்னமாச்சார்யாவின் நெருங்கிய, வசதியான நண்பர்கள் அன்னமாச்சார்யாவின் பாடல்களை அவரின் மகன் திருமலாச்சார்யாவின் துணையுடன் செப்பேடுகளில் பிரதி எடுத்தனர். அக்காலகட்டத்தில் செப்பெடுக்களில் பிரதி எடுப்பது எளிதான காரியம் இல்லை.
பம்மேர போதனா என்னும் தெலுங்கு கவிஞர் பாகவத புராணத்தை ‘மஹா பாகவதமு’ என்ற பெயரில் தெலுங்கில் எழுதியவை செப்பேடுகளில் பிரதி எடுக்க முடியாததால், அடுத்த சந்ததிகளுக்கு அவை கிடைக்கவில்லை.

தெலுங்கில் பல உன்னத இசைப்பாடல்களை இயற்றிய அன்னமாச்சார்யா, தனது 95ம் வயது வரை வாழ்ந்து 1503ம் ஆண்டு திருமாலுக்கு உகந்த ஒரு துவாதசி நாளில் மரணமடைந்தார்.

32,000 சங்கீர்த்தனைகளையும் செப்பேடுகளில் பிரதி எடுத்திருந்தாலும் சுமார் 400 ஆண்டுகள் அவை இருந்த இடம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அன்னமாச்சார்யாவின் பேரன் சின்ன திருவேங்களநாதா அன்னமாச்சார்யாவின் வரலாற்று காவியத்தை தெலுங்கில் ‘அன்னமாச்சார்யா சரித்ரமு’ என்ற பெயரில் எழுதியுள்ளார். அதில் உள்ள குறிப்புகளைக் கொண்டே அன்னமாச்சார்யாவின் 32,000 சங்கீர்த்தனைகளையும் பாடல்களை தேடினர். 1922ம் ஆண்டு 14,000 பாடல்களை மட்டுமே கொண்ட செப்பேடுகள் திருப்பதியில் கிடைத்தன.

அன்னமாச்சார்யாவினால் எழுதப்பட்ட பாடல்கள் எளிமையாக எழுதப்பட்டதால் அவருக்கு பின்னால் வந்த வைணவ ஆச்சார்யாக்களால் மறைக்கப்பட்டனவா என்று தெரியவில்லை. சில பாடல்கள் பாமரத்தன்மையுடன் இருந்ததாலும், பல பாடல்களில் பக்தியை விட காதல்ரசம் அதிகமாக இருந்ததாலும் ஆச்சார்யத்தை மட்டுமே பின்பற்றியவர்களால் மறைக்கப்பட்டனவா என்று தெரியவில்லை.

கிடைத்த பாடல்களை வைத்து அன்னமாச்சார்யாவின் கவித்திறமையையும், இசைத்திறமையையும் பக்தர்களும், இசை ஆர்வலர்களும் போற்றி சிலாகித்து வருகின்றனர்.

திருப்பதி தேவஸ்தானத்தில் அன்னமாச்சார்யாவின் பாடல்கள் குறுந்தகடுகளாகவும் (CDs), புத்தகங்களாகவும் விற்பனைக்கு கிடைக்கின்றன. அன்னமாச்சார்யாவின் பாடல்கள் வீடியோ இணையதளமான YOUTUBEல் இன்றைய பாடகர்களால் பாடப்பட்ட வீடியோக்கள் காணக்கிடைக்கின்றன.

1997ல் ‘அன்னமாச்சார்யா’ என்ற பெயரில் தெலுங்கு திரைப்படம் மிகையான காட்சி அமைப்புகளுடன் வெளியானது. நடிகர் நாகார்ஜுனா அன்னமாச்சார்யாவாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தும் வெளியிட்டனர்.

சாகித்ய அகடெமி தமிழில் அன்னமாச்சார்யாவைப் பற்றி புத்தகம் வெளியிட்டுள்ளது. இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் ‘அன்னமாச்சார்யா’ என்ற பெயரில் இப்புத்தகம் வெளியானது. அடபா ராமகிருஷ்ணராவ் எழுதியுள்ளார். தமிழில் இப்புத்தகத்தையும், தமிழ் டப்பிங்கில் வெளியான ‘அன்னமாச்சார்யா’ படத்தைத் தவிர அன்னமாச்சார்யாவைப் பற்றி குறிப்புகள் ஏதுமில்லை. படைப்பாளிகளைப்பற்றிய விவரங்கள் மறைந்தாலும், அவர்களின் படைப்புகள் மறைவதே இல்லை.

– கோ.முருகராஜ்
murugaraj.g@outlook.com
ஓவியம்: க.யோகேஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s