ஊமத்தம்பூ

“பொன்னருவியை ஆஸ்பித்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்களாமே…”

“என்னாச்சாம் சேதி”

“ஒரு வாரமா கொஞ்சம் மினுமினுப்பாத்தான் இருந்தா. அப்போ, இப்போன்னு வயிறும் தெரிஞ்சது. திடுதிப்புன்னு பொழுது சாய வலி வந்திருக்கும் போல. அதான் ஆஸ்பித்திரிக்கு கொண்டு போயிருக்காங்க”

“இன்னைக்கே புள்ள பொறந்துருமாக்கும்…”

“பொறந்துரும்னுதான் டாக்டருவ சொன்னாங்களாம். ஆனா ஆயுதம் போட்டு தான் எடுப்பாங்களாம், தலபிரசவமுல, சுகபிரசவத்துக்கு சத்து இல்லையாம்”

“அவ புருஷன் வராம எப்டி ஆயுதம் வெப்ப..”

“புருஷன் வர வரைக்கும் புள்ள தாங்குமாக்கா…அப்பனாத்தா இருக்காங்கல, போதாதா!”

பொன்னருவியின் அண்டைவீட்டுக்காரிகளான விடுவச்சியும் வசந்தாவும் பேசிக்கிறாப்ல தான் ஊரு முழுக்க பேசிகிச்சு.

பொன்னருவிக்கு 19 வயசு இருக்கும். அவ அப்பன் குமரப்பன் பகல் குடிகாரன். ஆத்தா ராசாத்தி. பொன்ராசுன்னு ஒரு தம்பி. அப்பனுக்கு பொறுப்பில்ல, தம்பிக்கு வயசில்ல, ஆத்தா சம்பாத்யத்துல இருந்துதான் குடும்பம் நடந்துச்சு.

பொன்னருவிக்கும் சரி, அவ தம்பி பொன்ராசுக்கும் சரி. படிப்புன்றது எட்டிக்காயா கசந்து, சுட்டுப்போட்டாலும் வராத ஒன்னாயிடுச்சு. ஆம்புள புள்ள படிக்கலனாலும் பரவால. எப்படியாவது பொலச்சுக்கும். பொம்பளபுள்ள பத்தாவது வரைக்கும் படிச்சுபுட்டாலும், கல்யாணத்துக்கு கொடுக்குற அரசாங்க பணமாவது கிடைக்குமுனு பொன்னருவிய படிக்க சொல்லி மூக்கால தண்ணி குடிச்சா அவ ஆத்தா ராசாத்தி. ஆனா, புளியங்கொட்டையளவுகூட ஆத்தா புத்தி உரைக்கல பொன்னருவி மண்டைக்கு.

இருள் பூசி ஆடிய இரவு கூத்து முடிஞ்சி, வெளிச்சத்த உடுத்தி, சிரிச்சாப்ல பொன்னருவியும் பூத்து நின்னா, புதுசா மாராப்பு போட்டு…

பெரியவளா ஆனபிறகு அந்த ஊரு இளசுங்கலாம் பொன்னருவியை பின்னாடியே சுத்துறதா ஆத்தா ராசத்திக்கு ஒரு எண்ணம். படிப்ப நிறுத்தி டவுனுல ஒரு துணிக்கடைல வேலைக்கு சேர்ந்தா ராசாத்தி.

ராசாத்தி பயப்புடுற அளவுக்கு பொன்னருவி அவ்வளவு அழகு கிடையாது. மைக்கருப்பு, ஒசரமான அதுக்கேத்த உடம்பான தேகம், பெரிய நெத்தி, சப்பையான மூக்கு, கண்களை மறைச்சிக் காட்டும் கன்னம், ஓரடியில செம்பட்டையான முடி, எந்தப்பக்கம் பாத்தாலும் நெளிவு சுளிவு தெரியாத புள்ளதான், கட்டக்குரலு, துடுக்குத்தனமான பேச்சு, நாகரிகமுள்ள யாரும் ரசிக்க முடியாத ஒரு குணாதிசயம்.

இவ வீரத்த சொல்லணுமே, இவளுக்கு ஆத்தான்னா உசுரு, அப்பங்காரன் குடிச்சிப்புட்டு வந்து ஆத்தாள அடிக்க கை ஓங்குனாலே போதும், அறை அப்பனுக்குதான் விழும் பொன்னருவி கையால.

ஆனாலும், நல்ல மனசு. சுகதுக்கம்னு எதையுமே மனசுல வச்சுக்க மாட்டா, அதிகமா கலங்கமாட்டா, பெரியவங்க மதத்தில இருந்தா பெரியவ, கொழந்தைங்க கூட இருந்தா இவளும் ஒரு கொழந்த.

எப்படி இருந்தாலும் இவ ஆத்தாக்கு இவ தான் உலகம், கட்டுன புருஷனும் தெறமில்ல, சொந்தபந்தமும் சொல்லிக்கிற அளவு ஆதரவு இல்ல. ஆம்புள புள்ளைய எப்படி வேணும்னாலும் வளத்துடலாம், ஊருக்குள்ள யாரும், எதுவும், சொல்றதுக்குள்ள பொம்பளபுள்ளைக்கு நல்ல வாழ்க்கையா அமைச்சி தரனுமேன்ற பயம் தான் ராசாத்திக்கு.

பூத்தேடும் வண்டு கணக்கா மாப்ள கூட்டம் வந்துகிட்டே இருந்த அந்த ஊர்ல, தூரத்து சொந்தம் மூலமா, பொன்னருவிக்கும் ஒரு வரன் தேடி வந்தது.

கட்டிக் கொடுத்துபுட்டா கடம முடியுதேன்னு சம்மதமும் சொல்லிபுட்டா ராசாத்தி.

சேதி போன மூணாவது நாளே பொன்னருவிய பொன்னுபாக்க வந்தான் ராசேந்திரன், அப்பா இல்லாததால, தன் ஆத்தா பூவாத்தால கூட்டிக்கிட்டு.

பொன்னருவிக்கு ஏத்த மாப்ளதான்னு சொல்லிட முடியாது. ஒசரத்துல அவனவிட குறைவு, ஒல்லியான தேகம், கொஞ்சம் வெளுத்த கருப்பு நெறம், செங்கறையான முன்பல்லு. ஆனாலும் மனமொத்து போயிடுச்சு ரெண்டு பேருக்குமே.

ஊரே கூடி வந்து உக்காந்துச்சு, உதிரியா சோறும், உருண்ட போண்டாவோடு பல பதார்த்தங்களும் செஞ்சாச்சு.

இதோ வரோம் இதோ வரோம்ன்னு மாப்ள வீட்ல இருந்து இழுத்துக்கிட்டே போனாங்க பொழுத.

கட்டிக்க நல்ல சேல இல்லாம எட்டுவீடு தள்ளியிருக்கும் எசக்கி பொஞ்சாதியோட சேலையக் கட்டி, கருப்பாத்தாவோட தங்க ஆரமும், கல்யாணியோட அலங்காரமுமா கொஞ்ச அசத்தலாதான் நின்னா பொன்னருவி.

அந்தா, இந்தானு எட்டு மணிக்கு வந்து சேந்தாங்க மாப்ள வீட்டுக்காரங்க, வண்டி கட்டிக்கிட்டு, புள்ளையும் குட்டியுமா

மாப்ளகூட வந்த பசங்கல்லாம் அடுத்த கல்யாணம் நமக்கு தான்றது போல பாக்குறவங்க கிட்டலாம் பல்ல காட்டி நிக்க, மாப்ள ஏண்டி வெக்கப்படுறாரு, பேச உள்ள வருவாரான்னு பெண்தோழிங்க சிரிக்க, வெத்தல தட்டு, வெளக்கு எல்லாம் கொண்டு வாங்குமான்னு பெருசுங்க சபைல உக்கார, அஞ்சு வயசு பையனுக்கும், மூணு வயசு பொன்னுக்கும் எப்ப நிச்சயம் பண்ணலாம்னு பேசிக்கிற மதனி பெண்டுகளும், மாப்ள பையன் யவண்டின்னு கன்னத்துல கைவச்சு தேடும் கெழவிகூட்டமுமா பரபரப்பா தெரிஞ்சது நிச்சய வீடு, கொஞ்ச நேரம் மட்டும், பிறகு…

பூவாத்தா ஊர் வழக்கப்படி சேல இல்லாம நிச்சயமே பண்ண மாட்டங்களாம்.

சேல இல்லாம பொண்ணு இல்லன்றான் குமாரப்பன். பொன்னே தரலன்னாலும் எங்க வழக்கத்த மீறி செய்யமாட்டோம்ன்னு வாதாடுறா பூவாத்தா.

நிச்சயதார்த்தம் நிக்கத்தான் போகுதோன்னு பொண்டுவளெல்லாம் வாய தெறந்து பாத்துகெடக்க ஊர் பெருசுங்களெல்லாம் ஒண்ணா சேந்து ரெண்டு பேரையும் சமாதானம் செஞ்சு பாக்கு வெத்தல மாத்திக்க வச்சி ஒருவழியா மூணு மாசம் பெறவு கல்யாணம்னு தேதியும் குறிச்சு நிச்சயத்த முடிச்சி வச்சாங்க.

நாளும் ஓடிப்போச்சு. ராசாத்தி அந்தா இந்தான்னு நாலு பவுனு சேத்திருந்தா. வீட்டுக்கு தேவையான அண்டா, குண்டானு அத்தன பொருளும் வாங்கியிருந்தா. பொன்னருவிக்குன்னு புதுசு புதுசா பத்து சேல வாங்கி இருந்தா. கல்யாண நாளும் வந்துடுச்சு. அத்தன சீதனத்தையும் வண்டியில ஏத்தி, அம்பது அறுபது சனங்களையும் கூட்டிக்கிட்டு போய் கல்யாணத்தை முடிச்சி, பொன்னருவி வாழுறத பாத்தபிறகே பெரும் பெரு மூச்சு விட்டா ராசாத்தி.

கல்யாணத்துக்கு அப்புறம், ஆடிப்பெருக்கு, தீபாவளியன்று வந்துபோனது போக, அடுத்த ஏழாம் மாசமே சீமந்தத்துக்கும் செலவு தேட வச்சா பொன்னருவி. கல்யாண கடனே கட்டி முடிக்காத நெலைமையை நினைச்சி, ரெண்டுமாசம் தள்ளி கடன் வாங்கி கட்டு சோறாக்கி, நாளும் கெழமையுமா நாலுபேர கூட்டிக்கிட்டு போனா ராசாத்தி வளைகாப்பு போட…

வந்தவங்கள வான்னு சொல்லாம, வாயாற தண்ணிகூட தராத மாமியார நொந்துக்கிட்டே வளைகாப்பு போட வந்த சனத்தோட பொறந்தவீடு வந்து சேந்தா பொன்னருவி. வளைகாப்பு போட்ட முப்பதாம் நாளே வலி வந்து சேலம் ஆஸ்பித்திரிக்கு கொண்டுபோயிருக்காங்க.
—-
“மாமா, நா பொன்ராசு பேசுறேன்”
“சொல்லுப்பா…அக்கா எப்டி இருக்கு?”
“பொம்பளபுள்ள பொறந்துருக்கு மாமா, அக்காவுக்கு”
“பொன்னருவி நல்லாருக்காளா, பொன்ராசு?”
“ஆபரேஷன் பண்ணிருக்காங்க மாமா, தையல் அதிகமா போட்டுருக்காங்களாம், பத்து நாளைக்கு அசையக்கூடாதுன்னு டாக்டரு சொல்லியிருக்கிறாரு… நீங்க எப்போ வரீங்க?”
“நா வண்டில வந்துகிட்டே இருக்கேன்டா. அரைமணி நேரத்துல வந்துடுவேன்…பாத்துகோங்க”
“சரி, மாமா வச்சிடுறேன்.”

… …

“அம்மா, நா ராசேந்திரன் பேசுறேன்.”
“சொல்லுப்பா”
“ஆஸ்பித்திரிக்கு போயிட்டியா?”
“இல்லம்மா, உனக்கு பேத்தி பொறந்துருக்கும்மா!”
“நெசமாதான் சொல்றியா…”
“ஆமாம்மா”
“வெள்ளிக்கிழமையதுமா, நம்ம கொலசாமி செல்லியம்மாவே வந்து பொறந்துருக்காடா… நீ வேணா பாரு யோககாரியா வருவா எம்பேத்தி”
“சரிமா, நான் போய் பாத்துட்டு பேசுறேன்.”
“சரிடா”

… … …

“ஹலோ, யாரு பேசறது?”
“நா பொன்ராசு பேசுறேன்…நீங்க யாரு”
“நா சேலத்துல இருந்து பேசுறேங்க. கவர்ன்மென்ட்டு ஆஸ்பித்திரிக்கு வெளியே ஒரு ஆக்ஸிடென்டுங்க. அடிபட்டவருக்கு பக்கத்துல இந்த போன் கிடந்துச்சு, அடிப்பட்டவர ஆஸ்பித்திரிகுள்ள கொண்டு போயிட்டாங்க… வீட்டுக்கு தகவல் கொடுக்கலாம்னு ஃபோன பாத்தேங்க. கடைசியா, அம்மாகிட்ட பேசுனமாதிரி தெரியுது, வயசானவங்களால தாங்க முடியாதுல. அதான் உங்களுக்கு போன் பண்ணேன். சேலம் ஆஸ்பித்திரிக்கு வந்தா அவர பாக்கலாம். சீக்கிரம் வாங்க.”
அவசரத்துலையும், அழுகையிலும் ஓடிவந்த பொன்ராசுவ பின் தொடர்ந்து குமரப்பனும் ஓடி வர…மயக்கமான நிலையில் பொன்னருவி கிடத்தப்பட்டிருந்த கட்டிடத்திற்கு மூன்று கட்டிடம் தள்ளி வெளியே கிடத்தப்பட்டிருந்தான் இராசேந்திரன்.
இரத்தமெல்லாம் வெளியேறியதாலும், தலையில் பழுத்த அடிபட்டிருந்ததாலும் காப்பாற்ற முடியாது என டாக்டர்கள் கைவிரித்த நிலையில், “என்ன காப்பாத்துங்க, எம்புள்ளைய பாக்கணும், என் பொண்டாட்டிய பாக்கணும்னு புலம்பல் வந்ததைக் கேட்டு பொன்ராசு அவன் கைத்தொட, அடுத்த கணமே பிரிந்தது உயிர்.

உயிர் போனது தெரிஞ்சதும், நம்பாத பொன்ராசு, மாமா, உன் புள்ள உள்ளதான் மாமா இருக்கா. வா, மாமா. இவ்ளோ தூரம் வந்தும் ஏன் மாமா உள்ள வர மாட்றன்னு கதற…

எம்புள்ள பாவம்டா. அவளைவிட்டு போய்டாத டா… வந்து பாருடா எம்மவள. காலைல எழுந்தவுடனே உன்ன கேப்பாளேடா, என்னடா சொல்லுவேன், எழுந்திரி டான்னு குமரப்பன் கதற…

பாக்க பொறுக்காமலும், இருக்க புடிக்காமலும் இருள் ஓடிடுச்சு.

பொழுது விடிஞ்சிதோ இல்லையோ ஊரு சனமே ஆஸ்பித்திரியில நிக்க, ஒருத்தர் கூட, பொன்னருவிய பாக்க போகல, பாக்குற தைரியமும் இல்ல.

சொந்தக்கார பொன்னுருத்தியை, பொன்னருவி துணைக்கி விட்டு ராசாத்தி, குமரப்பன், பொன்ராசு எல்லாமும் ராசேந்திரனோட இறுதிசடங்குக்கு போனாங்க. மயக்கம் தெளிஞ்சதும் பொன்னருவி கேட்ட முதல் கேள்வி எம்புருஷன் வந்தச்சான்னு தான்

“உன் புருஷன் வேலை பாக்குற குடோன்ல லீவு தரலையாம், போன் பண்ணாப்ல, உன்ன பாத்துக்க சொன்னாப்ல, ஒரு வாரத்துக்கப்பறம், வாராப்லயாம்…”

“எங்க, அப்பா, அம்மா யாரையும் காணோம்…”

“உங்க அப்பா, அம்மாலாம் ரெண்டு நாளா சரியா சாப்பிடல, சரியா தூங்கல, அதான் வீடுக்கு போய் குளிச்சிட்டு, செத்த தூங்கிட்டு, சாப்பாடு செஞ்சு கொண்டு வாங்கன்னு நான் தான் அனுப்பி வைச்சேனு. ரொம்ப சாமர்த்தியமா சமாளிச்சா அந்த பொண்ணு.

“சரி… எம்புள்ளயா தூக்கிக் குடுக்கா, என்கிட்டன்னு கேட்ட பொன்னருவிகிட்ட புள்ளைய தூக்கிக் கொடுத்தா அந்த பொண்ணு.

தன் கையில் கண்சிமிட்டும் செலயா கெடந்த தளிர பாத்து
நீ
வார சேதிக்காக
வான் முகிலா
திரிஞ்சாரே…
நீ
வந்த சேதிக்கேட்டு
நம்
வாசல் பூரா
வாசப்பூ
நட்டிருப்பாரே…
சிரிச்சே பழகடி
சீக்கிரம் வந்துடுவார்
உங்கப்பா
கள்சுரக்கும்
உன் வாய் முத்தம்
குடித்திருக்க…

என்று பொன்னருவி பாடயிலே வந்த கண்ணீர மட்டும் சமாளிக்கவே முடியல அந்த பொன்னால. அப்போ தான் உள்ள நுழைஞ்ச பொன்னருவிய பெத்தவங்க உள்ள நுழைஞ்சாங்க. வெள்ளிக்கிழம அதுமா பொறந்து அப்பனையே முழுங்கிடுச்சு பாரு எமன்னு ஊரார் பேசுனதுல, வெந்து போன மனசு இன்னொருமுறை கருகியது ராசாத்திக்கு.

பொன்னருவி பக்கம் போயி புள்ளைய கையில் வாங்கி,
“அல்லிப்பூ நீயின்னு
அணைச்சு வளத்திருந்தேன்
மல்லிப்பூ நீயின்னு
மைப்பூசி
திருஷ்டி எடுத்தேன்
அன்னமே
உன்னழக பாத்து
அரளி தந்த சாபமோ
கள்ளி தந்த சங்கடமோ
இப்படி
ஊமத்தம் பூவாகி
உதிரிப்போகும் நிலையாச்சே”
ன்னு தனக்குள்ளேயே ராசாத்தி பாடி புலம்பி நொந்தா, தன் உசிரான மகள எண்ணி…

– முகிழ்,
thiru.mugizh@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s