கலைகளை இழக்கும் சமூகம்

தமிழ் இலக்கியம் சம கால இலக்கிய உலகிற்கு பல குழந்தைகளை பெற்றெடுத்த அற்புதத் தாய். இன்றைய காலக் கட்டத்தில் நல்ல புத்தகங்களின் வருகையும் , சிறந்த திரைப்படங்களின் வருகையும் நமது நாட்டிலும் , உலக அளவிலும் அதிகரித்து வருகிறது. ஆனால் இதனைக் குறித்து விழிப்புணர்வு என்பது சிறியளவில் கூட மக்களிடத்தில் இல்லை, என்பது வருந்ததக்கது. ஒரு புத்தகம் அல்லது திரைப்படம் என்பது ஒரு வாழ்வியல் சூழலின் அடையாளமாக வரலாற்றில் எழுந்து நிற்கிறது. ஒரு புத்தகமோ , திரைப்படமோ அதன் அவசியம் என்பது , வெறும் பொழுதுப்போக்கோடு நிற்பதில்லை. அது ஒரு காலத்தின் மௌன சாட்சி. இதன் தாக்கம் என்பது இன்றல்ல , நாளையல்ல , காலம் காலமாய் நிலைத்து நிற்பது. ஒரு வரலாறு என்பது அடுத்த தலைமுறைக்கு கட்டமைக்கப்படுவது , ஊடகங்களின் வாயிலாகத்தான். இதனால்தான் பழங்காலத்தில் அரசர்கள் தன் வரலாற்றை , இலக்கியங்களில் பதிவு செய்ய , புலவர்களை பயன்படுத்தினர். இதன் வாயிலாக தனது வரலாற்றையும் , தனது அரசின் சிறப்பையும் , அவர்களது வெற்றிகளையும் நாடெங்கிலும் பரப்பினர். கழைக்கூத்தாடிகளின் மூலமாக அரசர்களின் புகழ் , கூத்துகளாக இன்றும் மக்களிடம் நடத்தப்படுகிறது, சற்று யோசித்துப்பாருங்கள் , எத்தனைப் பெரிய அதிசயம் இது , பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த ஒரு மனிதனை பற்றிய வரலாற்றை நாம் கேட்கிறோம். நாம் வாழ்கின்ற இதே நகரத்தில் , அவன் தனது ஒவ்வொரு நொடிகளையும் அனுபவித்துள்ளான். அவனது வெற்றி , தோல்வி , அன்பு , ஆட்சி , கொடை , என் ஒவ்வொரு விஷயங்களும் ஒரு இலக்கியம் மூலமாகவோ , கழைகூத்தின் மூலமாகவோ நமது கண்முன் விரிகிறது. சப்தமின்றி நமக்குள் ஒரு மாற்றத்தை நொடிகளில் ஏற்படுத்திவிடுகிறது. அந்த காலத்தின் விநாடிகளை நமக்குள் கடத்தும் பெரும் பங்கினை , இந்த ஊடகங்கள் செய்கின்றன.

இந்த காலத்தில் நமது மரபுக் கவிதைகளும் பாடல்களும் இருந்த இடத்தில் இன்று ஹைக்கூ கவிதைகளும் , புதுக்கவிதைகளும் , சிறு கதைகளும் , குறுநாவல்களும் , நாவல்களும் இடம் வகிக்கின்றன. அன்றைய காலத்தில் நாடகங்கள் பிடித்த இடத்தை , இன்று சினிமா பிடித்திருக்கிறது. இது ஒரு காலமாற்றம். எப்பொழுதும் மாற்றம் ஒன்றே மாறாதது. புத்தகங்கள் என்னும் ஒரு வரலாற்றை நாம் ஆராயும்போது , அதன் அசுர வளர்ச்சி நம்மை மலைக்க வைக்கிறது. ஏனெனில் , இன்று எழுத்தாளர்களின் வளர்ச்சி என்பது உலக அளவில் அனைத்து அரசாங்கங்களையும் மிரள வைப்பதாக இருக்கிறது. வரலாற்றின் சுவர்களில் மிக நீளமாக கிறுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அரசுக்கு பின்பும் பல எழுத்தாளர்களின் சமாதிகளும் , பலரின் தலைமறைவு வாழ்க்கையும் அடங்கியுள்ளது. காரணம் , இந்த எழுத்தாளர்கள் அனைவரும் அரசின் , ஒவ்வொரு அசைவையும் தங்களது எழுத்தில் பதிய வைத்தார்கள். இதன் எதிரொலியாக அவர்கள் தங்களது , வாழ்வை நெருக்கடிக்குள் சிக்க வைத்துக் கொண்டார்கள். ஆனாலும் எந்த நொடியிலும் தங்கள் வாதங்களில் இருந்த அவர்கள் பின் வாங்கியதில்லை.

சிறைகளில் வாழ்வினை கழிக்கும் பல எழுத்தாளர்களின் பெயரை பட்டியல் இட்டால் பக்கங்கள் குறையாது. ஒரு பிரபல எழுத்தாளர் தனது , நாவலை சிறைச்சாலையின் கழிவறையில் வைக்கப்படும் , பேப்பர்களில் எழுதி ரகசியமாக , அதனை பதிப்பித்த வரலாறு உண்டு. பல எழுத்தாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்த காரணத்திற்காகவும் , அவர்களது எழுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதாலும் நசுக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களது புத்தகம் , தடை செய்யப்பட்டு இன்று மிக ரகசியமாக , உலக இலக்கிய வட்டாரங்களில் பரிமாறிக் கொள்ளப்படுகிறது. இவ்வாறான ஒரு பரந்து விரிந்த வரலாறு , உலகின் அனைத்து தேசங்களிலும் இருக்கிறது. போர்க்குற்ற வரலாறுகள் , பெண் அடிமைத்தனம் , குழந்தைகள் மீதான வன்முறை , இன அழிப்பு என உலக வரலாற்றின் கருப்பு பக்கங்களை , தனது எழுத்துகளில் பதிய வைத்து , பல எழுத்தாளர்கள் அந்த சம்பவங்களின் சாட்சியாக இன்றும் வரலாற்றில் நிலைப்பெற்றிருக்கிறார்கள். உலக அளவில் கொல்லப்பட்ட எழுத்தாளர்களின் வரலாறு என்பது ஒரு தனி இடம் வகிக்கிறது. எனவே புத்தகங்கள் என்பது காகித குவியல்கள் அல்ல. அவை காகிதங்களால் கட்டமைக்கப்பட்ட வரலாற்றின் நடுகல்கள். அவை சுமந்து நிற்பது பல இதயங்களின் அழுத்தமான உணர்வுகளை , வலிகளை , நசுக்கப்பட்ட பல இனங்களின் கதறல்களை , கண்ணீர் துளிகளை. இப்படிப்பட்ட காலத்தின் ஆவணங்களை நாம் எந்த அளவில் கவனிக்கிறோம் என ஆராய்ந்தால் , மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் ஒரு நோயாளியின் நிலைமைதான். இன்றைய இளைய தலைமுறை , தனது அதிவேகமான வாழ்க்கை நிலையில் புத்தகங்கள் என்பதை ஒரு பொருட்டாகவே மதிப்பதாக இல்லை. அவர்களை பொறுத்தவரை இவை தேவையற்ற ஒன்று. அதேபோல் புத்தக வாசிப்பிற்கான அடித்தளத்தை எந்த வீட்டிலும் ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. இந்த தலைமுறை , வெறும் பாடங்களை மட்டும் மனப்பாடம் மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒன்றாக இருப்பது , வாசிப்பின் வாசனை இல்லாதுதான். இதை சரி செய்ய , மீண்டும் தமிழில் இலக்கியம் வாசகர்களிடம் கிடைக்க ஓர் முயற்சி செய்ய வேண்டும் இதற்கான துவக்கத்தை நாம்தான் துவங்க வேண்டும்.

அருகில் இருக்கும் நூலகங்களை பயன்படுத்தி நாம் நமது அறிவை பெருக்கிக் கொள்ள முடியும். முடிந்தவர்கள் தங்களது வீடுகளில் , ஒரு நூலகம் அமைக்க முயல்வது அருமையான விஷயம். புத்தகங்கள் அறிவுக்களஞ்சியமாக திகழும். புத்தகங்களைப் போலவே எடிசனால் உருவாக்கப்பட்ட திரைத்துறையின் வரலாறு இந்த நூற்றாண்டின் ஒரு மின்னனு அதிசயம். இதன் தாக்கம் என்பது சாதரண ஒன்றல்ல , நமது மாநிலத்தைப் பொறுத்தவரை , 5 முதல்வர்களை தந்துள்ளது திரைத்துறை. இது ஒரு சான்று போதும் திரைப்படத்திற்கும் , நமது மக்களுக்குமான ஒரு உறவு. ஆனால் நமது திரையில் , நமது கலாச்சாரத்தை , மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை , திரைப்பட இலக்கணங்களை மீறாமல் திரைப்படங்கள் வருகின்றனவா , எனக்கேட்டால் அதுக் கேள்விக்குறிதான். இன்றைய திரைப்படங்கள் என்பவை நமது சமகால பிரச்சனைகளை பிரதிபலிப்பதோ , மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணமோ அமைவதில்லை. வெறும் பொழுதுப்போக்குகளோடு முடிந்துவிடுகிறது. அவை சமூகம் குறித்த எந்த நிலைப்பாட்டையும் கொள்ளாமல் ஒரு தட்டையான மனநிலையோடு அமைகிறது. இது எப்படி காலம் கடந்து நின்று நமது பண்பாட்டை நிலைநாட்டப் போகிறது. திரைப்படம் ஒரு ஆவணம் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் , கேளுங்கள் , ஒரு முறை புகழ்பெற்ற எழுத்தாளர் கி,ராஜநாரயணன் அவர்கள் சத்யஜித்ரேயின் புகழ்பெற்ற திரைப்படமான பதேர் பாஞ்சாலியை தனது நண்பர்களுடன் அமர்ந்து பார்த்துள்ளார். அப்போது திரையில் ஒரு காட்சி , ஒரு ஆற்றின் மீது பூச்சிகள் வந்து வரிசையாக அமர்வதை காண்பிக்கிறார்கள். அதனை மிக அருமையான காட்சி என கி.ராஜநாரயணன் வருணிக்கிறார். பக்கத்திலிருந்த நண்பருக்கு குழப்பம். மிக எளிய காட்சியை , இவர் ஏன் இப்படி சிலாகித்து பேசுகிறார். திரையிடல் முடிந்தவுடன் , நேரடியாக அவரிடமே கேட்கிறார். எதற்காக நீங்கள் அந்த காட்சியை பாராட்டினீர்கள்? அப்படி என்ன சிறப்பு இதில் உள்ளது? இதை கேட்டவுடன் சிறு புன்னகையை பரிசளித்த அவர் , உடனே கூறினார். கிராமத்தின் எளிய மனிதர்கள் , தங்களது கால பருவங்களை , கணிப்பது இயற்கையின் மூலமாகத்தான். அவ்வாறு , கிராமத்தில் மழை வரும் என்பதை , ஆறுகளின் மீது ஒரு வித பூச்சியினம் படர்ந்து அமர்வதை கொண்டுதான் முடிவு செய்வார்கள். அவ்வாறு பூச்சியினங்கள் அமர்ந்தால் , அடுத்த சில நாட்களில் மழை துவங்கும். இந்த கிராமத்து வழக்கத்தை தனது படத்தில் , இடம் பெறச் செய்ததன் மூலம் ஒரு ஆவணத்தை உருவாக்கியுள்ளார் சத்யஜித்ரே. இந்த வழக்கத்தின் மூலம் இனி வரும் அனைத்து தலைமுறைக்கும் , மழைக்காலத்தை அடையாளப்படுத்தும் ஒரு எளிய முறை விளங்கும். இதுதான் உண்மையான திரைப்படம் என கி.ராஜநாரயணன் அவர்கள் கூறினார்கள். பாருங்கள் தோழர்களே , எத்தனை அற்புதமான ஒரு திரை மொழியை இயக்குனர் தனது படத்தில் நிகழ்த்தியுள்ளார். இதுபோல் எண்ணற்ற திரை அனுபவங்களை நமது இயக்குனர்களும் , அயல்நாட்டு திரை இயக்குனர்களும் தந்திருக்கிறார்கள். இதனை பற்றிய ஒரு விவாதத்தை துவக்கினால் , நேரம் காலமின்றி நாம் பேசிக்கொண்டே இருக்கலாம்.

ஒவ்வொரு நாட்டிலும் , திரைப்படம் என்பது ஒரு ஆயுதமாகவே உள்ளது. உலக அளவில் ஈரானிய , கொரிய திரைப்படங்களே இன்று முன்ணனியில் உள்ளது. இவைகளின் படமாக்கும் முறையும் , கதை சொல்லல் முறையும் , நேர்த்தியான கலை அம்சத்தை கொண்டிருப்பவை. இவர்கள் தம் கலாச்சாரத்தை தங்களது திரைப்படங்களில் , தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டே இருக்கின்றனர். அவர்களது திரை மொழி என்பது காட்சிகளால் ஆனது. உலகங்கிலும் இன்று திரைப்படங்கள் ஒரு மிகப்பெரும் விவாதத்தை துவக்குவதாக உள்ளன. சற்று யோசித்துப் பாருங்கள். ஒரு திரைப்படத்தால் இதையெல்லாம் செய்ய முடியுமா? முடியும் , என்பது பல இயக்குனர்களின் படைப்பால் நிகழ்ந்துள்ளது. இதற்கு ஒரு பெரும் உதாரணம் , சார்லி சாப்ளின். ஹிட்லரின் சமகாலத்தில் வாழ்ந்த சாப்ளின் , ஹிட்லரின் சர்வாதிகார கொள்கையை எதிர்த்து , தி கிரேட் டிக்டேட்டர் என்னும் திரைப்படத்தை இயக்கினார். உலகம் என்பது , அன்பால் சூழப்பட்டது. அதை அதிகாரத்தால் நசுக்க நினைப்பது முட்டாள்தனம் என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தாற்ப்போல் விளக்கியது திரைப்படம். இதை கேள்விப்பட்ட ஹிட்லர் , அந்த படத்தின் பிரதியினை ரகசியமாக வரவழைத்து , தனது பிரத்யேகமான திரையரங்கில் பார்க்கிறார். ஒரு முறை , இரு முறையல்ல தொடர்ந்து நான்கு முறை பார்க்கிறார். வெளியில் வரும்போது மனிதரின் முகத்தில் ஈயாடவில்லை. அந்த சூழலில் ஹிட்லரை எதிர்த்து பேசவே யாரும் துணியாத போது தனது திரைப்படத்தில் ஹிட்லரை , சாப்ளின் காட்சிகளால் துவைத்திருந்தார். படம் வெளி வந்து பல ஆண்டுகளை கடந்த பின்பும் இன்றும் , அதன் காட்சியமைப்பும் , உருவாக்கமும் மெய் சிலிர்க்கவைக்கிறது. இப்படி திரை வரலாற்றில் நாம் பல திரைப்படங்களை காண்பிக்க முடியும். இவை அனைத்தும் காலத்தின் சாட்சிகளாய் பல தலைமுறைகளுக்கு நிலைத்து நின்று , தனது காலத்தின் தவறுகளையும் , மக்களின் வாழ்க்கை நிலையையும் பிரதிபலிக்கிறது. இவை அழியா சாட்சிகள். அரசாங்கத்தை கிண்டலடித்ததற்காக , பல திரைப்படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சார்லி சாப்ளின் அவர்களே , அவரது திரைப்படத்திற்காக , ஐந்தாண்டு காலம் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தார் ,

அரசுகள் தனது அதிகாரத்தின் மூலமாக , இரும்புக்கரம் கொண்டு , புத்தகங்களையும் , திரைப்படங்களையும் நசுக்க நினைக்கலாம் , ஆனால் இவை தனது வழி உண்மைகளை , பதிவு செய்துக் கொண்டே இருக்கின்றது, அது மனித நேயத்தையும் , மனிதர்களையும் மதிக்கும் மக்களிடம் சென்றுக் கொண்டேதான் இருக்கிறது. இதை யாரும் தடுக்க முடிவதில்லை. என் வழி முன்னோடி நமது ஔவை மூதாட்டி சொன்னாள் , கோயில் இல்லா ஊரில் இருக்க வேண்டாம் எனக்கூறினால். இதன் அர்த்தம் , அக்காலங்களில் , கல்வியும் , கலையும் , இலக்கியமும் ஓங்கி வளர்ந்த இடம் , கோயில்தான். அதனால்தான் கோயில் இல்லா ஊரில் இருக்க வேண்டாம் என ஓதினாள். எனவே , நமது காலத்தின் கண் முன் விரியும் , கலைகளை தேர்ந்தெடுத்து , அவற்றை கண்டு ரசித்து , நமது தலைமுறைக்கும் அறிமுகப்படுத்துவது நமது கடமை. வாருங்கள் நேயர்களே , நம் கடமையை தொடங்குவோம்.

-பாலா R கணேஷ்,
viscomganesh@gmail.com

(2014 பிப்ரவரி சஞ்சிகையில் வெளியான கட்டுரை)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s