உறவுகள்

டுப்படி.
“எபினேசர் அக்காவுக்கு தனி டிஃபான் பாக்ஸ்ல வை, மா!” என்று சொல்லியபடி சர்க்கரைப் பொங்கலை அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்தாள் காவ்யா. 9:10 மணிக்கு வரும் எலெக்ட்ரிக் டிரெயினைப் பிடிக்க இன்னும் 20 நிமிஷம் தான் இருந்ததால் கிளம்ப தயாரானாள்.
காவ்யா, அவள் அம்மா, அவள் தம்பி சூர்யா என மூவர் மட்டுமே வசிக்கும் அவர்களின் சிறிய வாடகை வீடு சென்னை குரோம்பேட்டையில் உள்ளது. காவ்யாவுக்கு சென்ற வாரம் தான் திருமணம் நிச்சயமாகியிருந்தது. தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஒரு வளையல் கடையில் வேலை செய்கிறாள் காவ்யா. காலை 10 மணிக்கு திறக்கும் கடை இரவு 9:30 மணிக்கு தான் மூடுவார்கள். கடைக்கு, வாரத்தில் ஏதேனும் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சனி, ஞாயிறு விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி இல்லை. வார இறுதி நாட்களில் அவள் மதிய உணவு உண்பதற்கே மாலை ஆகி விடும். கடைக்கு செல்லும் வழியில் பூ விற்றுக்கொண்டிருக்கும் எபினேசர் தான் காவ்யாவுக்கு நெருங்கிய தோழி.
டிரெயினை சரியான நேரத்தில் பிடித்து, தி.நகர் வந்தடைந்தாள். எபினேசரிடம் சென்று சர்க்கரைப் பொங்கலை காவ்யா கொடுத்தாள்.
“தம்பி +2வுல 1200க்கு 1050 மார்க்கு எடுத்திருக்கான். நேத்து ரிசல்ட் வந்துச்சு. அதுக்கு தான் இந்த இனிப்பு. சாப்பிடுங்கக்கா!”
“நிச்சயதார்த்ததுக்கு நீ இப்டி எதுவும் கொடுக்கலயே” என்றபடி டிஃபன் பாக்ஸை வாங்கிக்கொண்டாள்.
“அம்மா, என்னையும் அவனையும் நல்லா படிக்க வைக்க நினைச்சாங்க. வீட்டு வேலை, பார்ட் டைம் வேல, அப்டி இப்டின்னு என்னால படிக்க முடில. ஆனா, அவன் நல்லா படிச்சி நல்ல மார்க் வாங்கியிருக்றான்கா. என் நிச்சயதார்த்தத்த விட எனக்கு ரொம்ப சந்தோஷம் தம்பி ரிசல்ட்லதான்கா.”
“உன் முகத்துல தெரியுதே! வேலைக்கு போறவுங்க பூ வாங்கிட்டு போற நேரம். கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடுறேன். நாளைக்கு டிஃபன் பாக்ஸை வாங்கிக்க.”
“சரிக்கா.. நீங்க வீட்டுக்கு வந்தப்போ தம்பி உங்ககிட்ட சரியா பேசலன்னு அவன் மேல வருத்தப்படாதீங்க.’
“என்னமா, இப்டி சொல்லிட்டே. அக்காவும் தம்பியும் ஒரே முக சாயல இருக்கீங்கன்னு கன்னத்த லேசா தொட்டேன். கூச்சப்பட்டுட்டு விலகிட்டான். அதுக்கு நான் வருத்தப்படல… மணியாக போகுது, நீ கிளம்புமா” என்று காவ்யாவை அனுப்பி வைத்து பூ தொடுக்க ஆரம்பித்தாள் எபினேசர். அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அவளும் அவள் அப்பாவும் கண்ணம்மா பேட்டையில் வசிக்கிறார்கள். போஸ்டர் ஓட்டுவது தான் அவள் அப்பாவின் வேலை.

12G பேருந்து.
தி.நகர் துரைசாமி சுரங்கப்பாலத்துக்கு அருகே உள்ள ஷூக்கடையில் வேலை பார்ப்பவன் சூசிந்தரன். கடைக்கு அருகிலேயே பஸ்டாப் என்பதால் கே.கே. நகரிலிருந்து மாநகரப் பேருந்தில் தினமும் தி.நகர் வருபவன் சூசிந்தரன். திருநெல்வேலி பக்கம் அவன் சொந்த ஊர். பிழைப்பதற்காக சென்னை வந்து நண்பர்களுடன் அறையெடுத்து தங்கி உள்ளான். நண்பனுடன் பேசிக்கொண்டே பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு வருவான். இன்றும் அப்படித்தான்.
“சானிடோரியம் பக்கத்துல வீடு பாக்கலாம்னு நேத்து, சீக்கிரமா போயிட்டேன். காவ்யா தம்பி 1050 மார்க்கு எடுத்திருக்கான் +2ல. வீடு பாக்க போனப்போ அவனப்பாத்தேன்.”
சூசிந்திரன் நண்பன், “நல்ல மார்க்ல. காவ்யா உன்ட்ட அதபத்தி சொன்னாளா?”
“SMS தான் அனுப்னா. கல்யாணத்துக்கு முன்னாடி பேச தயங்குறா, போல. சூர்யா நல்லா பேசுனான். மீனம்பாக்கத்துல காலேஜ் சேரப் போறதா சொன்னான். சானிடோரியத்துல ஃபிரண்டஸ பாக்க வந்ததா சொன்னான்.”
“ஓ… அவன் ஃபிரண்டஸ் கிட்ட வீடு எங்க வாடகைக்கு கிடைக்கும்னு கேட்டியா?”
“சின்ன பசங்களுக்கு எப்டி தெரியும்ன்னு விட்டுட்டேன். ஏன் மாமா, இந்த ஏரியாவுல பாக்குறீங்கன்னு சூர்யா கேட்டான்.”
“அதுக்கு நீ என்ன சொன்ன?”
“ ‘தாம்பரம் ப்ராஞ்சுக்கு மாறலாம்னு யோசிக்கிறேன். அதுக்கு இந்த எரியான்னா எனக்கும் போயிட்டு வர வசதியா இருக்கும். உங்க அக்காவுக்கும் போயிட்டு வர வசதியா இருக்கும். உங்களையும் அடிக்கடி வந்து பாத்துப்பா.’ன்னு சொன்னேன்”
“சரி. நாளைக்கு பேசலாம். என் ஸ்டாப்பிங் வந்துடுச்சு.” என்று சொல்லிவிட்டு சுசீந்திரனின் நண்பன் இறங்கிவிட்டான்.
“திட்டு வாங்காம, ஒழுங்கா வேல செய்யு” என்று சூசிந்திரன் சிரித்தபடி அனுப்பி வைத்தான்.
ரிசப்ஷன்.
சூசிந்திரன் – காவ்யா திருமணம் சூசிந்திரனின் ஊரில் நடைப்பெற்றது. மணமக்களின் நண்பர்கள் அதிகமாக வர இயலாததால், மிக எளிமையாக கே.கே. நகரில் உள்ள சிறிய திருமண மண்டபத்தில் ரிசப்ஷன் ஏற்பாடு செய்திருந்தான், சூசிந்திரன்.
உறவினர்கள், தோழிகளுக்கு மண்டபம் இருக்கும் இடத்தை சொல்வதற்காக காவ்யாவின் செல்ஃபோனை சூர்யா தான் வைத்து இருந்தான். மணமேடையில் மணமக்கள் நின்றுகொண்டும், அவ்வபோது அமர்ந்துக்கொண்டும் வந்திருந்தவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.
காவ்யா கொஞ்சம் பதட்டத்துடன் காணப்பட்டாள். திருமண வாழ்வு எப்படி இருக்கும் என்றும், அம்மா, தம்பியை எப்படி பிரிந்து இருப்பது என்றும், தம்பிக்கும், கணவனுக்கும் புரிதல் எப்படி இருக்கும் என்றும் யோசித்துக்கொண்டே ஃபோட்டோக்களுக்கு சூசிந்தரனுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
சூசிந்திரனின் செல்போனை நண்பன் வந்து கொடுத்தான். மணமக்களுக்காக போடப்பட்டிருந்த சோபாவை விட்டு தள்ளி சென்று போனை காதில் வைத்து சிறிது நேரம் பேசி விட்டு வந்து, நண்பனிடம் ஏதோ சொல்லி அனுப்பி வைத்தான். இதை சரியாக கவனிக்காமல் நின்ற காவ்யாவிடம் சென்று பேச்சுக் கொடுத்தான் சூசிந்திரன்.
“என்ன, யோசனையில இருக்கிற?”
“ஒ…ஒன்னுமில்லைங்க”
“சொல்லு”
“புதுவாழ்க்கை எப்டி இருக்கும்னு யோசனைல இருந்தேன். தம்பி, உங்ககிட்ட எப்டி பழகுவான்னு தெரில. இப்ப கூட, காணும் பாருங்க.” நிஜமான பதட்டத்துடன் சொன்னாள் சூர்யா.
“கர்ச்சீப்ப எடுத்து முகத்த தொடைச்சிக்கிட்டு லேசா சிரி. உங்க சொந்தகாரங்க பாத்து பயப்படப்போறாங்க”
அவளும் லேசாக சிரிக்க முயற்சி செய்துக்கொண்டே, முகத்தை தொடைத்தாள்.
“நகைலாம் டிசைனா இருக்கு. உன் கடைல இருந்து வாடைக்கு எடுத்துட்டு வந்தியா?” அவளை சிரிக்க வைக்க முயற்சி செய்தான் சூசிந்திரன்.

டைனிங் ஹால்.
மணமக்கள் சாப்பிடும்வரை, சூர்யா வரவில்லை. வாசலையே பார்த்துக்கொண்டிருந்த காவ்யாவிடம், “எல்லாரும் வந்துட்டு போயிட்டாங்க. இனி, யாரும் வர மாட்டாங்கன்னு நினைக்கிறேன். வா, ஃபிரெண்ட் ஆட்டோவுல பக்கத்துல போயிட்டு வரலாம். முக்கியமனவங்கள பாத்து ஆசீர்வாதம் வாங்கணும்” என்றான் சூசிந்திரன்.
காவ்யாவும் கிளம்பினாள். ஆட்டோ ஒரு மருத்துவமனை வாசலில் போய் நின்றது. உள்ளே மணமக்கள் சென்றனர். காவ்யா முகத்தில் ஒரு பீதி தெரிந்தது. தம்பிக்கு எதாச்சும் ஆகியிருக்குமோ? என்று.
“என்னாச்சு. யாரு ஆஸ்பித்திரில இருக்கறா?” படப்படப்புடன் கேட்டாள் காவ்யா.
சூசிந்திரன் சொல்லத்தொடங்கும் முன், சூர்யாவும், சூசிந்திரனின் நண்பனும் எதிரில் நின்றனர்.
சூர்யா காவ்யாவின் அருகில் வந்து, “பயப்படாதக்கா… எனக்கு ஒன்னும் இல்ல. எபினேசர் அக்கா போன் பண்ணாங்க. மண்டபத்துக்கு வழி சொன்னேன். பத்து நிமிஷத்துல மறுபடியும் போன். யாரோ ஒரு ஆள் பேசுனாரு. Last Dialled Numberல உங்க நம்பர் இருந்துச்சு சார். ரோடு கிராஸ் பண்ணும்போது, பைக்காரன் ஒருத்தன் இந்த அம்மாவ இடிச்சிட்டான். இந்த ஆஸ்பிடலுக்கு கொண்டுபோறோம். வாங்கன்னு சொன்னான்.”
காவ்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது.
“அழாத, க்கா. நான் மாமாவுக்கு போன் பண்ணி சொல்லிட்டு இங்க வந்துட்டேன். அவரு ஃபிரெண்டையும் அனுப்பி வைச்சாரு. வா,க்கா. எபினேசர் அக்காவை போய் பாக்கலாம்”னு கூப்பிட்டுபோனான். காவ்யா திரும்பி சூசிந்திரனைப் பார்த்தாள்.
அவன் அவளைப்பார்த்தப்படியே நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தான்.
“ஆசிர்வாதம் வாங்க உள்ளே போலாமா? இவங்க தான் நான் சொன்ன முக்கியமானவங்க” என்று சூசிந்திரன் அருகில் வந்தான்.

பினேசர் அறைக்கு வெளியே – மருத்துவமனை வளாகம்.
காவ்யா இயல்பாகி விட்டாள். அவள் மனம் தெளிவடைந்து விட்டது. எபினேசர் அக்கா தையல் போட்டிருந்தார்கள்; குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. சூர்யாவுக்கும், கணவனுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. கணவன் கனிவான இதயத்துடனும், பொறுப்புடனும் இருக்கிறான்.

அன்புடன் கணவனையும், தம்பியையும் பார்த்தாள். திடிரென்று, தம்பியிடம் கேட்டாள். “டேய், மாமா உன் கைல போட்ட மோதிரம் எங்கடா?”
சூசிந்திரனின் நண்பன் சொன்னான், “மோதிரம் தாங்க, ஆஸ்பிடல் செலவுக்கு உதவி செஞ்சுச்சு.”
காவ்யாவைத்தவிர மற்ற அனைவரும் சிரித்தனர்.
*****
கோ. முருகராஜ்,
murugaraj.g@outlook.com

(2014 கதிர் பொங்கல் மலரில் வெளியான குறுங்கதை)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s