நிழல்கள்

புள்ளைங்க கூட்டம் சிட்டா பறந்து திரிஞ்சி போட்ட கூச்சலையும் மீறி பீறிட்டது கருப்பனோட தண்டோரா சத்தம்.

டும்….டும்….டும்….

இதனால் மக்களுக்கு சொல்லிக்கிறது என்னன்னா இன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு நம்ம ஊரு மாரியம்மன் கோவிலுல பஞ்சாயத்து கூட இருக்குதுங்க சின்னவங்கல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லோரும் வந்து கூடனும்ங்க…இது ஊர் பெரியவங்க உத்தரவுங்கோ….என்று செவிட்டு கிழவிக்கும் செய்தி பரவுற விதத்துல கருப்பன் கத்துனான்.

“யாருக்குக்கா பஞ்சாயத்து?”

“வேறயாருக்கு, நம்ம முருகேசன் மகனுக்குத்தான்”

“அவனா!…அவன் சரியான கிறுக்குபயலாச்சே… அவனுக்கு என்ன பஞ்சாயத்து?”

“பொண்டாட்டி வேணாம்னுதான். வேற எதுக்கு?”

“ஏன்க்கா, நல்ல புள்ளதான அது!”

“புள்ள நல்லா புள்ளதான். கல்யாணம் ஆகி ஒரு வருஷம்தான் ஆகுது. திடுதிப்புன்னு வந்து இப்போ வேணாம்னு சொல்றான். அவ என்ன பண்ணாளோ, இவன் என்ன பிராது சொல்லப் போறானோ! நீ சட்டுபுட்டுன்னு சோறுதண்ணி குடி, போயிதான் பாப்போம்… என்ன நடக்குதுன்னு.”

சிறுசுல இருந்து பெருசுங்க வரைக்கும் எல்லாரும் கூடியாச்சு பஞ்சாயத்துல.
ஊருக்கே தெரியிறாப்ல பெருசுங்களும் ஒய்யாரமான இடத்துல ஒக்காந்துச்சுங்க.

“என்னப்பா, பிரச்சனை?” மொதமொதலா தொடங்கி வச்சது ஒரு பொக்க வாயி…

“ஏதுமில்லைங்க… எனக்கும் அன்னத்துக்கும் கணக்கு தீக்கனுமுங்க.” பவ்யமா பேசுனான் சாந்தன்.

“சரி, தீத்துக்கலாம்…ஏன்னு சொல்லு” அடுத்தக்கேள்விய தொடருச்சு ஒரு நரைச்ச தல.

“எனக்கு அன்னத்த புடிக்கல”

“ஏன் புடிக்கல?” – ஒரு தலப்பா கட்டு.

“ஏன், புடிக்கலனா… எனக்கு புடிக்கல. வேறெதுவும் கேக்காதீங்க” தெனாவட்டா சாந்தன் பதில் சொன்னான்.
எல்லாரும் பொழப்பத்துப்போயி உக்காந்திருக்கமாக்கும். வெளயாடுறவன் ஊட்டுலயே வச்சு வெளையாட வேண்டியது தான. அதென்னடா பஞ்சாயத்துல வெளையாட்டு. ஏன் புடிக்கலன்னு காரணம் சொல்லு. இல்லாட்டி ஊடு போயி சேருன்னு கொஞ்சம் அதிகமாவே கொதிச்சது ஊர்தலைமை.

“யாருடா இவன பஞ்சாயத்து கூட்ட சொன்னது வெவரங்கெட்டத்தனமா இங்கவந்து வெளையாடிட்டுருக்கான்…” – ஒரு வயசான அம்மா.

ஆளாளுக்கு ஒன்னு பேச, பொறுக்காம ஆரம்பிச்சான் சாந்தன்…. “எனக்கு ஆரம்பத்துலயே அன்னத்த புடிக்கல. எங்க வீட்டாளுங்ககிட்ட ஒத்துப் போக மாட்றா, சண்ட வந்துக்கிட்டே தான் இருக்கு…பிரிச்சு விட்டுடுங்க அவ்ளோதான்.

“ஆரம்பத்துலயே புடிக்கலன்றவன் எதுக்குடா பொன்னுக்கேக்க வந்த” – அன்னத்தோட அப்பன்.

“எம்புள்ளைய கல்யாணம் முடிக்காம எங்களோடவே வச்சிருந்தாலும் நிம்மதியா இருந்திருப்பா… இவங்கூட அனுப்புனதும் போதும் அவ படுற இம்சையும் போதும். பிரிச்சுவுட்டு அனுப்புங்க எம்புள்ள எங்களோடவே இருந்துடட்டும்..னு பொலம்ப ஆரம்பிச்சா அன்னத்தோட அம்மா.

“சொல்லு விட்டு போனாலும், சொந்தம் விட்டுப்போகக்கூடாதுன்னு ஊட்டுக்கொரு பொண்ணு இருக்க,
ஊமைத்தங்காயா கெடந்த இவள கொண்டாந்த நேரம் எம்புள்ள நிம்மதியே போச்சு. பிரிச்சு விட்டுடுங்க சாமி. உங்களுக்கு புண்ணியமா போகும்னு தம் பங்குக்கு கத்தி தீத்தா பூங்கொடி.

“புள்ள நிம்மதி என்னடி… நம்ம குடும்ப நிம்மதியே போயிடுச்சு, இவள கொண்டாந்து ஊட்ல சேத்ததுக்கு இப்பவே பஞ்சாயத்துல நின்னுட்டோம். இன்னும் என்னவெல்லாம் பட்டு தெளியனுமோ, தெரில” பூங்கொடிக்கு ஒத்து ஊதினான் முருகேசன்.

“அட.. அடங்குங்கப்பா… உங்க வாழ்க்கைலாம் முடிஞ்சிபோயிடுச்சு. அதுங்க சின்னஞ்சிறுசுங்க சண்டகிண்ட போட்டா சமாதானம் சொல்லி அனுப்பி வைப்பீங்களா, நீங்களும் கூட சேந்துகிட்டு ஆடுறீங்களே” – ஒரு பொக்க வாயி கிழவி இடைமறிச்சது.

“இரு பெருசு……இங்கபாரு சாந்தா! இப்ப நீ என்னத்தான் சொல்ற” சாதுவா கேட்டது ஊர் தலைமை.

“நான் என்னங்க புதுசா சொல்லப்போறேன் எனக்கு அவ வேணா… பிரிச்சுவுடுங்க.”

“சரி, பிரிக்கலாம்பா… அவ என்ன தப்பு பண்ணான்னு சொல்லு.”

“அதலாம் எனக்கு தெரியாதுங்க… அவ எனக்கு வேணானா வேணா… பிரிச்சு விடுங்க.”

“ஏன்டா.. வாழ்க்கைனா உனக்கு அவ்ளோ இளக்காரமா போச்சாக்கும்… வேணும்னா கட்டிக்கிறதுக்கும், வேணாம்னா அவுக்குறதுக்கும் கல்யாணம் என்ன சீல, வேட்டின்னு நெனைச்சியாக்கும். சல்லிப்பையங்கணக்கா இருக்கேடா உன் பேச்சு…” – சலித்துக்கொண்டது ஒரு பெருசு.

“ஏத்தா, நீ என்ன சொல்லுற”

“மாமாக்கூட வாழுறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லங்க. கல்யாணத்துக்கு பின்னாடி புருஷன பிரிஞ்சி வாழுறதுல ஒரு பொண்ணுக்கு என்னங்க பெரும இருக்குன்னு தலைநிமிறாத அன்னத்தோட பேச்சு பெருசுங்களோட எண்ணத்த ஒத்திருந்துச்சு.

“இப்படியொரு பொண்ண ஏண்டா பிரியனும்னு நினைக்குற. மரியாதையா கூட்டிட்டு போய் வாழுற வழிய பாருடா. கொஞ்ச நாளைல எல்லாம் சரியா போயிடும்” ன்னு சொன்ன நரைச்ச தலையையும் மீறி “யோவ், பெருசு. அத நீ சொல்லாத… பிரிச்சு வைங்கய்யான்னா வெட்டிக்கதை பேசுறிங்களேன்னு கத்துனா சாந்தன்.
விடுவாங்களா!

ஊருல இருக்க மொத்த பேரும் சேந்து அன்னத்த கூட்டியாந்து வீட்டுலயே விட்டுட்டு போனாங்க…
அவ வேண்டான்னு அடம்புடிச்சு சாந்தன் இன்னைக்கு ராத்திரி இவ வீட்ல இருந்தா காலைல எம்பொணத்த தான் பாப்பீங்கன்னு சொன்னவனையும் யாரும் கவனிச்சதா தெரில…

ஊருக்காரங்க போலவே உடனே ஓடிப்போனது அந்த இரவும்.

விடியறதுக்கு முன்னாடியே வீட்டைவிட்டு கெளம்புனான் சாந்தன். பொழுது உச்சிக்கு போக, போக விரக்தியும், வேதனையுமா பூசியபடி வெளிறிபோய் நடந்தது சாந்தனோட நிழலும்.

தன்னையேயறியாத நிலைமையில ஒரொரு அடியா நடந்தே ஊர கடந்துப்புட்டாலும் எங்க, எதுக்கு போறோம்ன்ற தெளிவு கொஞ்சமும் அவனுக்கில்ல…

சட்டுன்னு எதிர்பட்ட மரத்தடியில படுத்தான், கண்மூடினான் உறக்கமில்லை. சுப்பு முகம்தான் தெரிஞ்சது.
அம்மா இல்லாத புள்ளையா. சாந்தன் இருக்கும்போதே அவன காரணம் காட்டி கல்யாணம் கட்டிக்கிட்டான் அவன் அப்பன். சித்தி வந்த நாளிலிருந்து சாந்தன் தான் அந்த வீட்டு வேலைக்காரன். பாசம்போல படிப்பும் அவனுக்கு ஒட்டாத ஒன்னா ஆகிப்போனது.

இந்த உலகத்துல இவனுக்கு இருக்க ஒரே சந்தோஷம் சுப்பு மட்டும் தான்.

சுப்பு சாந்தனோட காதலி. சின்ன வயசுல ரெண்டுபேருமே ஒண்ணாதான் வளந்தாங்க. சுப்பு பத்தாம் வகுப்பு வரை படிச்ச பொண்ணு. எதிர்வீட்டுல இருக்கும் அவள பாத்து ரசிக்குறதையே தன்னோட வாழ்நாள் நிம்மதியா நெனச்சிருந்தான் சாந்தன். அரசல்புரசலா சுப்புவோட அப்பனுக்கு தெரிஞ்சது.

பொத்தி பொத்தி வளத்தபுள்ள தடம்மாறி போயிடுச்சேன்ற ஆதங்கத்துல பொசுக்குன்னு கல்யாணத்த முடிச்சுப்புட்டான் தன் மச்சானுக்கும், சுப்புவுக்கும்… சுப்புவோட அப்பன் ராமசாமி.

அம்மாவோட இழப்புக்கு அப்புறம் அன்னைக்குத்தான் நொறுங்கிப்போனான் சாந்தன். சுப்பு பிரசவத்துக்காக பொறந்தவீடு வந்தத பாத்ததும் இன்னும் அதிகமானது சாந்தனோட வலிகள்.

தானும் வாழ்ந்துக்காட்டனும்ன்ற எண்ணத்துலதான் அன்னத்த பொண்ணுக்கேட்டான் சாந்தன்.

அன்னம் சாந்தனோட தாய்மாமன் பொண்ணு. சொந்தத்தத் தவிர சொல்லிக்கிற அளவுக்கு எந்த பொருத்தமும் இல்ல ரெண்டு பேருக்குமே.

பருவம் வந்த தேதியிலிருந்து பாக்குவெத்தல தட்டுத்தூக்கி அன்னத்தைப் பாக்க ஊருக்கொரு மாப்பிளையா வண்டிக்கட்டி வந்தாலும் தங்கச்சிதான் வாழுல. தன் புள்ளையாவது போயி பொழப்ப பாக்குட்டுமேன்னு எண்ணம்வச்சி சாந்தனுக்கே அன்னத்த கட்டிவச்சான் அன்னத்தோட அப்பன்.

அந்தா… இந்தான்னு ஒரு வருஷம் ஓடிப்போனது… சாந்தனால சுப்பு இருந்ததா நினைச்ச இடத்துல அன்னத்த வச்சி பாக்கக்கூட முடில.

வெள்ளன்னா எழுந்து, சோறு கொண்டுகிட்டு வயக்காட்டுப்பக்கம் போறதும், வெளக்குவைக்க வந்து படுக்குறதுமா சாந்தனுக்கும் போனது பொழுது…

வீட்டுக்காரின்ற போர்வைக்குள்ள வேலைக்காரியா போனது அன்னத்தோட பொழப்பு.
இதையெல்லாம் எண்ணிக்கொண்டிருந்த சாந்தன் எதையோ நினைத்தவனாய் சிந்தனையையும் சுமந்துக்கொண்டே மறுபடியும் நடக்கத் தொடங்கினான்.

அப்பாவோட அடிக்கு பயந்துதான் அந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன்; தாலிக்கட்டிகிட்ட நாளிலிருந்து
இன்னிக்கு வரைக்கும் எம்மனசுல நீதான் இருக்கனும், இப்போ இருக்க தைரியம் முன்னாடி இருந்திருந்தா உங்கூடவே வந்திருப்பேன்னும் சுப்பு சொன்ன வார்த்தைகளிலிருந்து சாந்தனின் பைத்தியத்தால் வந்த விளைவுதான் இவ்வளவும்…

அவளிடம் பேசியதிலிருந்து தன் கனவுகளெல்லாம் நிறைவேற காத்திருப்பதாய் ஒரு உணர்வு சாந்தனுக்கு… அன்னம் மட்டுமே இடையூறா நின்றிருந்தாள்.

பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்தான்.

இறுதிக்கட்டமாக ஒரே முடிவு…

கையிலிருக்கும் மருந்தை கடித்தான்… வாசல்வரை வந்து அவ வீட்ல இருந்தா நா இருக்கமாட்டேன்னு சொல்லி மயங்கி விழுந்தான்.

ஆத்தி… சொன்னபடியே செஞ்சிப்புட்டானேன்னு பூங்கொடி கதற… அந்தப்பக்கம் இருந்தவங்களெல்லாம் அவசரமா வண்டிவச்சு ஆஸ்பித்திரிக்கு கொண்டு போனாங்க…

“என்னக்கா சத்தம்?” கரண்டிய கையிலப் புடிச்சவளா வெளியவந்த அன்னம் கேக்க உம்புருஷன் தாண்டி மருந்து குடிச்சிட்டானாம். ஆஸ்பித்திரிக்கு தூக்கிட்டு ஓடுறாங்கன்னு சொல்லி நகர்ந்தா சந்திரா.

ஆத்தி நான் என்ன செய்வேன்னு, அதிர்ச்சியும், ஆத்திரமுமா சைக்கிள மிதிச்சா அன்னம்.
வழிமறிக்கும் விழிநீரையும் தொடைக்காம சாந்தன தூக்கிவர வண்டிக்கு முன்னாடி ஆஸ்பித்திரில நின்னா அன்னம். மயங்கிக் கெடந்த சாந்தன பாத்து பதறியழுத அன்னத்த கூட வந்தவங்க தேத்துனாங்க.

ஒரு வழியா விஷத்த நீக்கியாச்சு மூணு நாளைக்கு ஆஸ்பித்திரிலேயே பெட்ரெஸ்ட்டா இருக்கட்டும்ன்னு டாக்டர் சொல்லும்போதுதான் உசிரு வந்தது அன்னத்துக்கு.

ஆஸ்பித்திரில இருந்த மூணுநாளும் அன்னம் பச்சதண்ணி குடிக்ககூட நகருல சாந்தனவிட்டு. கண்ண இமைச்சாக்கூட காத்துவந்து அடிச்சிடுமோன்னு பார்வையைக்கூட அவன்மேல பதிச்சிருந்தா.

பெத்தவகூட நடபழகுற வரைக்கும் தான் தாங்குவா, எல்லாம் தெரிஞ்சபுள்ளைய தாயாகாமலேயே தாங்கி நின்னா அன்னம். ஊட்டுறதுல இருந்து உடம்பு தொடைக்குற வரைக்கும் அத்தனையையும் பாத்து பாத்து செஞ்சா…

அம்மாதான் ஆகாசத்த பொழந்து வந்துட்டாளான்னு சாந்தனுக்கு தோனுச்சு…

மூணுநாள் முடிஞ்சு வீடு வந்து சேந்தான் சாந்தான். அவனுக்கு முன்னாடியே அன்னத்தோட பெட்டிப்படுக்க காத்திருந்தது.

“எங்கூட இருக்க புடிக்காம நீங்க இன்னொருமுறை விஷம் குடிச்சா என்னால தாங்க முடியாது மாமா… நான் அம்மா வீட்டுக்கே போயிடுறேன். உங்க நெழல் பட்ட இடத்துல வாழ நினைச்சேன் மாமா முடியல… உங்க மூச்சு காத்துப் பரவிய உலகத்துல தான் வாழப்போறேன். அந்த சுகம் போதும் மாமா” அன்னம் இப்டி சொல்லிட்டு ஒரு நொடி சாந்தனப் பாத்துட்டு, பொட்டிய தூக்கிட்டு நகர்ந்தாள்.

வரும்வழியில் பார்த்தும் பார்க்காமல் போன சுப்புவின் பார்வையை விட அன்னத்தின் அந்தப் பார்வை அதிகமாவே சுட்டதை சாந்தன் உணர்ந்தான்.

– முகிழ்
Thiru.mugizh@gmail.com

Advertisements

One thought on “நிழல்கள்

  1. அருமையான கதை…
    என்னுடைய வாழ்வில் நடந்த ஒருசிலவற்றை இந்த கதை நினைவுப்படுத்துகிறது. சுப்புவை போல எனக்கும் ஒருத்தி இருந்தாள், அவளுக்கு திருமணம் ஆக இருக்கிறது. ஒரு வேளை அன்னத்தைப் போல ஒருத்தி எனக்கும் வாக்கப்பட்டால் இந்த சாந்தனைப் போல தான் இருப்பேனோ என்று தடுமாற்றம்…

    மொழி நடையும், கதையும் கதா பாத்திரங்களும் மிக சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் முகில்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s