திலாய்

சமூகத்தில் தனிமனிதனுக்கு ஏற்படும் அவமதிப்புகளும் அதனால் அவன் கொள்ளும் அவமான உணர்வுகளும் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட, நிலவும் அறவியல் மதிப்பீடுகளின் மீறலின் விளைவுகளாகத்தான் பெரும்பாலும் இருக்கின்றன. இத்தகைய மதிப்பீடுகள் என்றைக்கும் மீறப்படாததாக இருந்து விடுவதில்லை. சமூகத்தின் வளர்ச்சிக் கட்டங்களின் தேவைகள் மாற்றங்கள் மூலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு நெகிழ்வடைகின்றன அல்லது மீறப்படுகின்றன.

அறவியல் மதிப்பீடுகளின் மாற்றங்கள் மிகவும் சிக்கலானதாகவே இருக்கின்றன. சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்கட்டங்களில் ஒப்பீட்டளவில் முற்போக்கான மதிப்பீடுகளாக இருந்தவை பிந்தைய கட்டங்களில் பிற்போக்கானதாக மாறிவிடுகின்றன. பிற்போக்கான அறவியல் மதிப்பீடுகளைக் கட்டுடைத்தல் மட்டுமே இத்தகைய மதிப்பீடுகள் ஏற்படுத்தும் அவமான உணர்வுகளை அர்த்தமற்றதாக்கும். வளர்ச்சிக் கட்டங்களின் உயர்நிலையிலிருந்தாலும் தேக்கநிலையிலிருந்தாலும் சமூகங்கள் அவற்றிற்கேயுரிய அறவியல் மதிப்பீடுகளை கொண்டிருக்கவே செய்கின்றன.

மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பாலைவனக் கிராமத்தின் காதலில் மரபுமீறலையும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும், அந்த வறண்ட பிரதேசத்தின் குச்சுவீடுகள், குத்துச்செடிகள், ஒற்றைமரங்கள், மெல்லியகாற்று எழுப்பும் புழுதி இவற்றினூடே அழகாக பதிவு செய்திருக்கிற ஆப்பிரிக்க படம் ‘திலாய்’ (Tilai-1990).

Tilai4

சாகா, இரண்டு ஆண்டுகளாக ஊரைவிட்டு வெளியேறிப் போயிருந்தவன், ஊருக்குத் திரும்பி வருகிறான். தான் இல்லாத நேரத்தில் தனது காதலி நொங்மாவை தனது தந்தை மணந்து கொண்டதை அறிந்து கோபம் கொள்கிறான். சாகாவின் தம்பி கூரி அவளைத் தாயாக ஏற்றுக்கொண்டு மனதை மாற்றிக்கொள்ள தனது அண்ணனிடம் வேண்டுகிறான். சாகா மறுத்துவிட்டு ஊரைவிட்டு வெளியேறுகிறான். ஊருக்கு வெளியே தனது குடிசையைக் கட்டிக்கொள்கிறான்.

நொங்மாவின் தங்கை குலுகா தனது அக்காவை முதியவனுக்கு மணமுடித்து வைத்ததால் தனது தாய் தந்தையரிடம் வெறுப்பு கொள்கிறாள். ஒருநாள் குலுகா தன் தாயிடம் வாழ்க்கை என்றால் என்னவென்றும் நொங்மாவின் வாழ்க்கை பற்றியும் கேட்கிறாள். அவளது தாய் நான் எப்படி உன் தந்தையை நேசிக்கிறேனோ அவ்வாறே நொங்மாவும் அவளது கணவனை நேசிக்கவேண்டும் என்று சொல்கிறாள். குலுகா இந்த பதிலால் வருத்தமடைகிறாள்.
tilai-1990-03-g
நொங்மாவை சந்திக்கும் சாகா தன்னை ஏமாற்றி விட்டதாக அவளிடம் சொல்கிறான். தனது பெற்றோரை மீறமுடியாத நிலையிலேயே இதற்கு அவள் சம்மதித்ததாகப்ப் வருந்துகிறாள். பின்னர் குலுகாவின் உதவியுடன் நொங்மா ஊருக்கு வெளியே சாகாவின் குடிசைக்கு அடிக்கடி போய்வருகிறாள்.

இருவருக்குமிடையிலான தொடர்பு ஊராருக்குத் தெரியவருகிறது. நொங்மாவை ஊர்மத்தியில் கட்டிவைக்கின்றனர். இதுபோன்ற தவறுகளுக்கான தண்டணை நிறைவேற்றுதல் தொடங்குகிறது. சாகாவைக் கொல்வதற்கான ஆளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு பெட்டியில் மணலை நிரப்பி அதன் நடுவே ஒரு கத்தியையும், அதனைச் சுற்றி ஐந்தாறு குச்சிகளையும் குத்திவைக்கின்றனர். இளைஞர்களை அழைத்து அந்த குச்சிகளை எடுக்கச் சொல்கின்றனர். யார் கையில் நீளம் குறைந்த குச்சி வருகிறதோ அவன் தேர்வு செய்யப்படுவான். கூரி தேர்வாகிறான். இதைச் செய்வதற்கு முதலில் மறுக்கிறான். பிறகு ஊரார் பேச்சை மீற முடியாதவனாய் சாகாவின் குடிசையை நோக்கி போகிறான்.

வழியில் நொங்மாவின் தந்தை தெங்கா மரத்தில் தூக்குக் கயிறைக் கட்டிக் கொண்டிருக்கிறான். கூரி அதனைத் தடுக்க எத்தனிக்கிறான். அவனுடன் வரும் மற்றவர்கள் சாவிலாவது தனது தன்மானத்தை அவன் மீட்டுக் கொள்ளட்டும் என்று சொல்லி கூரியைத் தடுத்து விடுகின்றனர். இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தெங்கா தூக்கில் தொங்கி சாகிறான்.

உடன் வந்தவர்களை தள்ளி நிற்கச்சொல்லிவிட்டு கூரி சாகாவின் குடிசைக்குள் நுழைகிறான். குடிசையின் பின்புறமாக சாகாவை தப்பச்செய்கிறான். எக்காரணம் கொண்டும் திரும்ப ஊருக்கு வந்துவிட வேண்டாமென்று சொல்லிவிட்டு, கத்தியால் தன்னை காயப்படுத்திக் கொண்டு வெளியே வருகிறான். சாகாவைக் கொன்றுவிட்டதாகச் சொல்லிவிட்டு குடிசையயும் தீயிடுகிறான். தப்பிய சாகா தனது அத்தையின் கிராமத்திற்கு வந்து சேர்கிறான்.

தனது கணவனின் மரணத்திற்கு மகள்தான் காரணம் என்று நொங்மாவின் தாய் அவளைப் பழிக்கிறாள். ஒன்றுமில்லாத விடயத்திற்காக தன் தந்தை இறந்து போனதாக தெங்காவின் சவக்குழி அருகே அழுது புலம்புகிறாள் நொங்மா. மரபை மீறி சாகாவைக் கொல்லாமல் விட்டதற்காக தனது தாயிடம் புலம்புகிறான் கூரி. தன் தந்தை நொங்மாவை திருமணம் செய்த மூடத்தனத்தையும் சொல்லி வருந்துகிறான். பின் சாகா உயிரோடிருப்பதை நொங்மாவிடம் சொல்லிவிடுகிறான்.

சாகாவின் தாய் நொங்மாவை ஊரைவிட்டு தப்பச்செய்கிறாள். சாகாவைத் தேடிச் செல்லும் நொங்மா ஒருவழியாக சாகா இருக்குமிடத்திற்கு வந்து சேர்கிறாள். தனது அத்தையிடம் நொங்மாவை தனது மனைவி என அறிமுகம் செய்கிறான் சாகா. தங்களுக்கான வீட்டைக் கட்டி சாகாவும் நொங்மாவும் அங்கேயே வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்.

சாகாவின் தாய் மரணப்படுக்கையில் இருக்கும் செய்தி அவனுக்கு வந்து சேர்கிறது. யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தனது தாயைக் காண விரைந்து செல்கிறான். நொங்மாவும் சாகாவின் அத்தையும் அவனைத் தடுத்து நிறுத்துவதற்காக அவனைப் பின்தொடர்ந்து செல்கின்றனர். சாகா ஊர்போய் சேருமுன் அவனது தாய் இறந்து போகிறாள்.

சாகா தனது தாயின் பிணத்தோடு வரும் ஊராரை எதிர்கொள்கிறான். தாயின் முகத்தைப் பார்க்க முன்னே செல்லும் சாகாவை எல்லோரும் எதிர்க்கின்றனர் ஆனால் அவன் எல்லோரையும் மீறி அருகே சென்று தன் தாயைப் பார்க்கிறான். சாகாவின் தந்தையும் ஊர் மக்களும் அவனைக் கொல்லாமல் விட்டதற்காக கூரியைப் பழிக்கின்றனர். சாகாவின் தந்தை கூரியை தங்கள் இனக்குழுவிலிருந்து விலக்குவதாகச் சொல்கிறார். பெருத்த அவமதிப்புக்குள்ளாகும் கூரி துப்பாக்கியால் தன் அண்ணனைச் சுட்டுச் சுட்டுவிடுகிறான். சாகா தன் தாயின் பிணத்தின் மீது விழுந்து உயிர்விடுகிறான். கூரி ஊரைவிட்டு வெளியேறுகிறான். அவனும் தன் சாவை நோக்கிப் போவதாக படம் முடிகிறது.

‘திலாய்’ 1990ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் குழுவின் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. இயக்குனர் இத்ரிஸா உட்ராகோ மிகவும் பின்தங்கிய மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் பிறந்தவர். சோவியத் ஒன்றியத்திலும் பிரன்ஸிலும் படித்தவர். 1997ம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் நடுவர் குழுவிலிருந்தவர்.

– வெங்கடேஷ் லிங்கராஜா,
lingarajavenkatesh@gmail.com

நன்றி: inioru இணையத்தளம்

(2014 மார்ச் சஞ்சிகையில் வெளியான கட்டுரை)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s