துப்பாக்கிகள், கிருமிகள், எஃகுகள்

பெர்னாட்ஷாவிடம் அவர் காதலி, ஒருமுறை “கேள்வி எதனால் வருகிறது?” என்று கேட்டார். அதற்கு பெர்னாட்ஷா “பதிலிருப்பதால் வருகிறது” என்றார்.

thuppaakkiஅதுபோல நியுகினியாவை சார்ந்த யாளி என்ற இளைஞனின் கேள்விக்கு பதிலைக் கூற முயற்சிக்கும் புத்தகம், “துப்பாக்கிகள், கிருமிகள், எஃகுகள்”. இப்புத்தகத்தின் ஆசிரியர் ஜாரெட் டைமண்ட் பறவையியல் தொடர்பான ஆராய்ச்சி பொருட்டு, நியுகினியாவில் பயணித்தபோது யாளி என்ற அந்த தீவை சார்ந்த சந்திப்பில், அவ்விளைஞன் இவரிடம் கேட்ட கேள்வி, “வெள்ளையர்களாகிய நீங்கள் இவ்வளவு சரக்கை (கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், புதிய பொருட்கள்) தயாரித்து அதை நியுகினியாவுக்கு கொண்டு வந்தீர்கள். ஆனால், நாங்கள் ஓரளவு சரக்கையே சொந்தமாக வைத்திருக்கிறோம். ஏன்?”

இவ்வினாவை இன்னும் தெளிவுப்படுத்த வேண்டுமானால், “ஏன் செல்வமும், அதிகாரமும் யூரேசிய (ஆசியா, ஐரோப்பா, ரஷ்யா – இவற்றின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பு) மக்களிடம் குறிப்பாக, ஐரோப்பிய மக்களிடம் அதிகமாக பங்கிடப்பட்டுள்ளது? ஏன், பூர்விக ஆப்பிரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இல்லை”

இக்கேள்விக்கு சர்வபொதுவாக அளிக்கக்கூடிய பதில் “காலனியாதிக்க விரிவாக்கமும், தொழில்நுட்ப வளர்ச்சிகளும்” என்று. இந்த இடத்தில் இந்த புத்தகம் சற்று வித்தியாசப்பட்டு ஏன் இந்த காலனியாதிக்கமும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் யுறேசியாவால் – அமெரிக்காவின் மீதோ, ஆப்பிரிக்காவின் மீதோ செய்ய முடிந்தது? ஏன் மாற்றாக, ஆப்பிரிக்காவோ, அமெரிக்காவோ ஐரோபாவின் மீது செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு சாதகமான, புவியியல் காரணிகளை அலசுகிறது. பிரமாண்ட கேன்வாஸில் தீட்டப்பட்ட வான்கா ஓவியம் போல், கிட்டத்தட்ட 600 பக்கங்களில் கி.மு. 13000 தொடங்கி மனிதகுல வரலாற்றை சுருக்கமாக கூறுகிறது.

ஏன், பெரிய சாதகமான துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு ஆகிய அனைத்தும், யுரேசியாவிலேயே தோன்றின? ஏன் அவை ஆப்பிரிக்காவிலோ, ஆஸ் திரேலியாவிலோ தோன்றவில்லை என கி.மு.13000 ஆண்டிலிருந்து ஆராய்கிறது. கி.மு.13000 என்பது தொல்பொருள் ஆய்வின்படி ஏறக்குறைய அக்காலத்தில் அனைத்து கண்டங்களில் வாழ்ந்த மக்களும் வேட்டை உணவு வாழ்க்கை முறை கொண்டவர்களாகவே இருந்ததாக கருதப்படுவதால், அதிலிருந்து புத்தகம் விளக்கத்தை தொடர்கிறது.

குரங்கிலிருந்து மனிதப்பரிமானத்தில் தொடங்கி, எவ்வாறு மனிதப் பரவல் உலகம் முழுவதும் சென்றது, உணவு வேட்டை சமூகத்திலிருந்து உற்பத்தியின் தோற்றம், மந்தை வளர்ப்பு, பழக்குவதற்கு கிடைத்த காட்டுத் தாவரங்கள், விலங்குகள், மைய அரசாங்கத் தோற்றம், எழுத்து முறை கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆஸ்திரிய நியூகினிய வரலாறு இவற்றை ஆராய்ந்து யாளியின் வினாவிற்கு பதிலளிக்க முயற்ச்சிக்கிறது. வரலாற்றுப் பூர்வமான நூலென்றாலும், படிப்பதற்கு சுவாரசியமான வகையில் மிக அதிக புள்ளிவிவரங்கள் அல்லாமல், உதாரணமான சம்பவங்கள் வழி விளக்க முற்படுகிறது.

உதாரணமாக, பழக்கிய விலங்குகளும், எழுத்து முறையும் எவ்வாறு பெரிய சாதகமாய் இருந்த புறக்காரணி என்பதை விளக்கும் அத்தியாயம் 3ல் (கானுமர்காவில் நிகழ்ந்த மோதல்) 1532ல் நடந்த இன்கா-ஸ்பெயின் மோதலில் 168 ஸ்பானிய வீரர்களைக் கொண்ட “பிஸாரோ”, 80,000 மக்களைக் கொண்ட இன்கா பேரரசின் தலைவரான ‘அடவாப’வை தோற்கடித்தார். இதற்கு முக்கிய சாதகமாக கூறப்படுவது குதிரைகள் மற்றும் எஃகு. ஏனெனில் அந்தப் போரில் தான் இன்கா குடிமக்கள் முதல்முறையாக ஒரு மனிதன் ஒரு விலங்கின் மீது அமர்ந்து சவாரி செய்வதை பார்க்கின்றனர். அது ஏற்படுத்திய உளவியல் தாக்கம், மற்றும் உயரமாக குதிரையில் அமர்ந்து பாதுகாப்பாக போராடக்கூடிய சாதகம், வெறும் தரையில் நின்று போராடும் இன்கா மக்கள் மீது தாக்க பெரிதும் உதவியது.

ஸ்பானிய வீரர்கள் பெரும்பாலும் கவசம் அணிந்து போரிடுகையில், இன்கா மக்கள் வெறும் பஞ்சாலான கவசத்தையே அணிந்து போரிட்டனர். ஸ்பானிய வீரர்கள் எஃகாலான கூர்மையான வாளைக் கொண்டு போரிடுகையில், இன்கா மக்கள் வெறும் குறுந்தடிகளைக் கொண்டு போரிட்டனர். இவ்வாறு இந்தப்போரில் குதிரைகளும், எஃகும் மிகப்பெரிய சாதகத்தை ஸ்பானிய படைக்கு அளித்தனர். இதில் ஆச்சர்யமான விஷயமாக கூறப்படுவது, இதில் ஒரு ஸ்பானிய வீரர் கூட இறக்கவில்லை.

இவ்வாறு துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு எவ்வாறு ஐரோப்பிய காலனியாக்கத்திற்கு உதவியது என்று விளக்கியப் பின், சற்று பின்னோக்கி சென்று, ஏன் இவை யூரேசிய கண்டத்தில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது, மற்ற கண்டங்களில் ஏன் நிகழவில்லை என்பதற்கான காரணிகளை விளக்குகிறது.

அதுபோன்று விலங்குகளின் பங்களிப்பை பற்றிய அத்தியாயம் மிக சுவாரசியமானது. இதில் ஆசிரியர் கூறுவது – பழக்குவதற்கு தகுந்த விலங்குகளான குதிரை, மாடு போன்றவை இயற்கை தேர்விலேயே யூரேசிய கண்டத்திலேயே தோன்றின. மாறாக, ஆஸ்திரேலியாவிலேயே அவர்களுக்கு அப்படி இருக்கும் விலங்குகள் எல்லாம் கங்காரு போன்ற சவாரி செய்ய இயலாத விலங்குகளே. இந்த யுரேசியாவின் சாதகத்தன்மை இந்த ஏற்றத்தாழ்விற்கு மிகப்பெரிய பங்களிக்கிறது.

வரலாற்று நோக்கில் செல்லும் நூல் என்றாலும் நாவல் போள எழுத்து முறைக்கும் கவனம் கொண்ட நூலாகவே உள்ளது. உதாரணமாக, அன்னா கரீனாவில் முதல் வரியான, “சந்தோஷமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால், சோகமான குடும்பங்கள் யாவும் அதனதன் வழியில் தனித்துவமானவை” என்ற வரியை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த மக்கள் விலங்குகளை பழக்குதலில் உள்ள இடர்களை சுட்டிக் காட்டுகிறார்.

யாளியின் ஒரு கேள்விக்கு பதிலளிக்க முற்படும் நூல் என்றாலும், ஒவ்வொரு அத்தியாயமும் அதனளவில் முழுமையானதாகவே உள்ளது இதன் சிறப்பு. சமகாலத்தில் நாம் பதில் தேடும் சில கேள்விகள் கூட, ஊடுபாவாய் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் தெளிவை தருகின்றன. உதாரணமாக – பொதுவுடைமை சமூகம் பற்றி கூறுகையில் அவரது நண்பருடனான சந்திப்பு மூலமும் எழுத்து முறை கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இன்கா-ஸ்பானிய போர்களின் மூலம் வரலாற்று ரீதியாக தெளிவடைய வைக்கும் தகவல்களும் சிதறி பரவியுள்ளன.

யூரேசியாவிற்கு அடுத்து மிக முக்கிய சாதகமாக ஜாரெட் கருதுவது நில அமைப்பை, அதாவது யூரேசிய கண்டம் மட்டும் நெடுக்குவாட்டில் (HORIZONTAL) உள்ளது, மற்ற அமெரிக்காவோ ஆப்பிரிக்காவோ குறுக்கு வாட்டில் (VERTICAL) அமைந்துள்ளதை அட்சகோடுகளின் அமைப்பின் படியும், யூரேசிய கண்டங்கள் இந்த முனையிலிருந்து மறுமுனை வரை கிட்டத்தட்ட ஒரே தட்ப வெப்பநிலை நிலவியதால் அது பயிர்கள், தொழில்நுட்பம் பரவ ஏதுவாயிற்று.

மனித பரிமாணத்தில் தொடங்கி, விலங்கு, பயிர்கள், கிருமிகள் இவற்றின் பரிணாம சுழற்சியையும் ஆராய்வதன் வழி இந்நூலைப் படிக்கும் நமக்கு ஒரு முழுமையான பூமியின் வரலாற்றை சுருக்கி சொல்வது இதன் மற்றொரு சிறப்பு.

இவ்வளவு சிறப்புகளுக்கிடையேயும், இது யூரேசிய கண்டங்களின் சாதகங்களை தெளிவாக விளக்குவது போல, ஏன் ஐரோப்பா மட்டும் அதில் அதிக சாதகம் கொண்டுள்ளது என்பதை அவ்வளவு தெளிவாக கூறவில்லை.
சுயமுன்னேற்ற நூல்களில் பெரும்பாலும் கூறப்படும் ஒரு வாசகம், “உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய நூல்” என்று. அது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், இந்த நூல் படிப்பவரின் சிந்தனை முறையில் நிச்சயம் ஒரு மாற்றத்தை அல்லது குறைந்தபட்சம் சிறிய தாக்கத்தையாவது ஏற்படுத்தும் என்பது சந்தேகமில்லை.

– அருண் மகாலிங்கம்
mrarunca@yahoo.co.in

Advertisements

2 thoughts on “துப்பாக்கிகள், கிருமிகள், எஃகுகள்

  1. ஆனால் தமிழில் படிப்பதற்கு மிகவும் சிரம்மப்பட வேண்டியதாய் உள்ளது.. மொழிபெயர்ப்பு வேறு யாராவது செய்திருக்கலாம் என தோன்றியது

    • திரு ரமேஷ்.. படிக்கும் பொழுது.. மொழிபெயர்ப்பில் என்ன மாதிரியான புரிதல் சிக்கல்களை எதிர்கொண்டீர்கள் என்று சற்று விளக்க முடியுமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s