‘புத்தக தாத்தா’ முருகேசன்

எளிய மனிதர்களின் வாழ்க்கை எளிமையானதாகவே இருக்கும், ஆனால் சிலரின் செயல்கள் எளிமையாக இருப்பதில்லை. பல மாணவ, மாணவிகளுக்கு ஆய்வு நூல்களை வழங்கி வரும் புத்தக தாத்தா முருகேசன் அய்யாவை ‘சஞ்சிகை’க்காக நேர்காணல் எடுக்க, புத்தகங்கள் சூழ்ந்த அவரது இல்லத்தில் சந்தித்தேன். அன்போடு வரவேற்றார். சிறிய அளவில் இரண்டு அறைகளை மட்டுமே கொண்டுள்ள அந்த வீட்டுக்குள் புத்தகங்கள், புத்தகங்கள் மற்றும் புத்தகங்கள். புத்தகங்கள் அடுக்கி வைத்தது போக மீதமுள்ள இடம் அவருக்கு போதும் போல படுத்து உறங்குவதற்கு.

puthaga thaathaa
அய்யா, உங்களை பற்றி சின்ன அறிமுகம் கொடுங்களேன்..
“மதுரை மாவட்டம் குமாரம் அருகே உள்ள தண்டலை என்கிற சிறு கிராமத்தில் நான் பொறந்தது 1941வது வருஷம் ஏப்ரல் 13 அன்னைக்கு. என்னோடு சேர்த்து வீட்ல மொத்தம் பத்து குழந்தைக. நாங்க வியாபாரக் குடும்பம். ஆனாலும் யாரும் பெருசா சம்பாதிக்கல. எங்களுக்கென எந்த ஊரிலும் வீடு கிடையாது, நிலம் கிடையாது.

வியாபாரக் குடும்பத்தில் பிறந்த உங்களுக்கு எப்படி புத்தகங்களை சேகரிக்கும் ஆர்வம் வந்தது?
ஆர்வம்ன்னு சொல்ல முடியல. எதேச்சையாக நடந்தது தான். பதினாலு வயசுல ஒரு பலசரக்கு கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அதன் பிறகு முப்பது வயதில் திருமங்கலத்தில் வசித்து வந்த அக்காவின் மகளை கல்யாணம் செஞ்சிகிட்டேன். சொந்த பந்தங்கள் யாரும் அந்த அளவிற்கு ஒட்டவில்லை. பழைய பேப்பர் வியாபாரம் ஆரம்பிச்சோம். கடைக்கு வரும் புத்தகங்கள்ல சிலத தனியா வச்சிருந்தேன். ஆசிரியர்கள் நிறைய பேர் பழைய பேப்பர் போட வருவாங்க அப்போ அவங்களுக்கு தேவைப்படுகிற புத்தகங்களை கேட்பார்கள். இப்படிதான் ஒவ்வொரு புத்தகங்களை பற்றியும் தெரிந்துகொண்டேன்.

ஆசிரியர்கள் உதவியும், வழிகாட்டலும் உங்களுக்கு நிறைய உதவி இருக்கும்போல?
ஆமா, ஆரோக்கியசாமின்னு ஒரு ஆசிரியர் நண்பரானார். புத்தக சேகரிப்பில் பல உதவிகளை செய்து எனக்கு வழிகாட்டியாக இருந்தார். 79-80களில் ஆசிரியர் ஞானப்பிரகாசம் அவர்களை முதன் முறையாக தமிழ் மாநாட்டில் சந்தித்தேன். அவரும் எனது புத்தக சேகரிப்பில் பேருதவி செய்தவர். ஆய்வாளர்கள், தமிழாசிரியர்கள், பேராசிரியர்கள் என அவர்களின் ஆராய்ச்சிகளுக்கு தேவையான புத்தகங்களை எல்லாம் கொடுத்து பயன்பட செய்தேன். அதன் பிறகு, நிறைய தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் என்னிடம் புத்தகங்கள் வாங்க துவங்கினர்.87-இல் முதன் முதலாக பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் அவர்கள் என்னை ஒரு நூலகத்திற்கு அழைத்து சென்று, நூலகங்களை எப்படி பயன்படுத்துவது, எப்படி நூல்கள் தேர்ந்தெடுப்பது என பயிற்சி அளித்தார்.

1987-இல் நூலகம் சென்ற நீங்கள் இன்று ஒரு நூலகமாகவே மாறிவிட்டீர்கள்.. இப்போது உங்களிடம் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றது?
கணக்கு ஏதும் இல்லை. வெளியில் செல்லும் புத்தகங்களை மட்டும் குறித்து வைத்துக் கொண்டு வாங்குவேன். அதனை ஒழுங்குபடுத்தி நிர்வகிக்க என் ஒருவனால் முடியாது. இதற்கு ஆள் வைத்து வேலை செய்யவும் பொருளாதாரம் இடம் தரவில்லை.

உங்கள் கல்விப் பற்றி…
ரெண்டாவது வகுப்பு வரை தான் படிச்சிருக்கேன்.

மாணவர்கள் உங்களை எப்படி அணுகிறார்கள்?
பேராசிரியர் கோதண்டபாணி என்னை யாதவர் கல்லூரி மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 2000ம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அறிமுகமாகினர். பேராசிரியர்கள் நடராசன், சேதுபாண்டியள், முத்தையா, மணிவேல் போன்றோர்களின் உதவி எனக்கு ஊக்கம் கொடுத்துச்சு. பேராசிரியர் கோபால் பொருளாதாரத்தில் உதவி வருகிறார். ராமசாமி வழிகாட்றார். பேராசிரியர் காஞ்சனா மற்றும் அவர்களது கணவர் டாக்டர் சோமசுந்தரம் அவர்களது உதவி எனது புத்தக சேகரிப்பிற்கு பெரும்பங்காற்றுகிறது. இதோ (என ஒரு பெரிய புத்தக முட்டையை கை காண்பிக்கிறார்) இது அவர்கள் வழங்கியதுதான். இப்படி, ஆசிரியர்களின் மூலம் மாணவர்கள் என்னை முதலில் புத்தகங்களின் அருமைதொடர்புகொள்ளுவாங்க. அப்புறம், அவங்க நண்பர்கள்ட்ட என்னைப் பத்தி சொல்லி, அவங்களையும் என்ட்ட புத்தகங்கள வாங்க வைப்பாங்க. விவரம் சரியா தெரியாத காலத்துல புத்தகங்கள பதிவு செய்யாமல் கொடுத்து விட்டேன். இப்போது முறையாக பதிவு செஞ்சிக்கிறேன்.

m116
புத்தகங்களை திரும்ப பெற என்ன செய்கிறீர்கள்?
25 பைசா தபால் அட்டையில் படிவமாக எழுதி வைத்துள்ளேன். தலைப்பு, படிப்பு, நெறியாளர், பல்கலைக்கழகம், கல்லூரி, துறை, பெயர், தொலைபேசி, முகவரி போன்றவை தபால் அட்டையின் முன் பகுதியிலும், முகவரி பகுதிக்கு அருகில் “புத்தகத்தை சரி பார்த்து வாங்கிச் செல்கிறேன், நல்ல விதமாக திருப்பித் தருவேன். கொடுக்கல் வாங்கல் உள்ள வரை தொடர்ந்து பயன்பாடு பற்றி கடிதம் எழுதுவேன் என்று உறுதியளிக்கிறேன்.” என எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்புவேன். அவர்கள் அதனை பூர்த்தி செய்து எனக்கு அனுப்பி வைப்பார்கள். நான் அவர்களுக்கு புத்தகம் கொடுக்கும் போது என்ன என்ன புத்தகங்கள், மொத்தம் எத்தனை புத்தகங்கள் என எனது குறிப்பேட்டில் குறித்துக்கொள்வேன். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் கடித போக்குவரத்து இன்றி புத்தகமும் திரும்பி வரவில்லை என்றால் அந்த முகவரிக்கு கடிதம் போடுவேன். “வயதான காலத்தில், வெயில் மழை பார்க்காமல், இரவு பகல் பார்க்காமல், உண்ணாமல் உறங்காமல் உங்களுக்காக புத்தகம் தேடித் தருகிறேன். இந்த தாத்தாவை ஏமாற்றாதீர்கள்” என கடிதம் எழுதி போடுவேன். நூலகங்களில் அதிகபட்சம் மூன்று புத்தகங்கள்தான் எடுக்க முடியும். ஆனால் நான் இருபத்து ஐந்து புத்தகங்கள் வரை கொடுக்கிறேன்.

உங்களுக்கு சமூக ஆர்வலர்களிடம் தொடர்பு, நட்பு உள்ளதா?
ரமேஷ் கருப்பையா நல்ல நண்பர். ஃபேஸ்புக்கில் என்னை பற்றி எழுதியிருக்கிறார். அதன் பிறகு நிறைய அழைப்புகள் வந்தன. பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், வானொலி என பேட்டிகள் அதிகரித்தன. அதே போல எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணனும் என்னை பிரபலப்படுத்திவிட்டார். காமராசர் பல்கலைக்கழகத்தில் என்னை சந்திக்கும் போதெல்லாம், “அய்யா உங்களை மறைத்து மறைத்து வைக்கிறார்கள், உங்களை வெளியே கொண்டு வரப்போகிறேன் என்று சொல்வார்” அதே போல செய்துவிட்டார்.

புத்தகங்களை இவ்வளவு சிரத்தியுடன் கவனித்து வரும் நீங்கள், உங்கள் உடல்நிலையிலும், உணவுப்பழக்கங்களிலும் கவனம் செலுத்துகிறீர்களா?
மனைவி இறந்த பிறகு எனது மகள்தான் எனக்கு பக்க பலமாக இருந்தார். அவரும் இறந்த பின் சாப்பாடு பற்றி பெரிதாக சிந்திப்பதில்லை. காலை உணவு என்பது எப்போதோ தான். மதியம் டீ, வடை ஏதாவது சாப்பிடுவேன். இரவு இட்லி வாங்கி சாப்பிடுவேன். என சொல்லியவாறே மதிய வேலை வந்ததை உணர்ந்தவராக, ‘வாங்க தம்பி டீ சாப்பிடுவோம்’ என சொல்லி கடைக்கு அழைத்து சென்றார்.

டீக்கடை வாசலில் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து “அய்யா, நேற்று நீங்கள் விருட்ஷம் சேவை விருது பெற்று, மேடையில் பேசியதை கேட்டேன். நாங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் பயிற்சி வகுப்பு நடத்திவருகிறோம். எங்களது பயிற்சி கூடத்தில் உள்ள நூலகத்திற்கு புத்தகங்கள் தேவை. சேகரித்து தர முடியுமா?” எனக்கேட்டார். டீ குடித்த தம்ளரை வைத்துவிட்டு, என்னை பார்த்து “தம்பி நான் அப்போ கிளம்புறேன். நீங்க பாத்து போய்ட்டு வாங்க” என சொல்லிவிட்டு அந்த மனிதருடன் தனது அடுத்த பயணத்தை துவங்கிவிட்டார்.

– ‘பாடுவாசி’ ரகுநாத்.
thamizhmani2012@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s