கடற்பயணமும், டார்வினின் வாழ்க்கையும்… சார்லஸ் டார்வின் சுயசரிதை – நூல் அறிமுகம்

டார்வின் தனது வாழ்க்கையில் நடந்த செய்திகளை ஏற்ற, இறக்கமின்றி சுயசரிதையில் பதிவு செய்துள்ளார். மாணவப் பருவத்தில் நண்பனின் யோசனையால் கடையில் கேக் வாங்கி விட்டு, அதற்குரிய தொகையை கேட்கும் போது ஒட்டமெடுத்தது, மீன் பிடிப்பதில் நேரம் செல்வது தெரியாமல் ஏரிக்கரையில் அமர்ந்திருப்பது என தனது மனதை தொட்ட நிகழ்வுகளை கூறிச் செல்கிறார்.

மதப் போதகர், கணித ஆசிரியர் பயிற்சி என பல முயற்சிகளை தந்தை எடுக்க, இயற்கை அறிவியியலின் பக்கமே டார்வினின் கவனம் சென்றதுடன், அதில் சிகரம் தொட்டார். அவரது தந்தை ஒரு நாள் அவரிடம், ‘நீ துப்பாக்கி சுடுவதற்கும், நாய் வளர்ப்பதற்கும், எலி பிடிப்பதற்கும் தான் மிக்க முக்கியத்துவம் அளிக்கிறாய், கல்வியில் அக்கறை செலுத்துவதில்லை. இதன் மூலம் நீ உனக்கும், உன் குடும்பத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்துவாய்’ என்ற கடுமையான தடித்த வார்த்தைகள் அவரை சோர்வடையச் செய்யாமல், மேலும் தேடலில் ஈடுபட வைத்தது.

‘உலகின் அற்புதங்கள்’, ‘செல்போர்ன்’ (Selbourne) என்ற இரு புத்தகங்களே பீகிள் கடற்பயணத்திற்கும், பறவைகள் குறித்த ஆய்விற்கும் உந்து சக்தியாக இருந்ததை நினைவு கூர்வதுடன், ஆடுபான் (Audubon) என்ற பறவையியல் அறிஞரின் உரையை கேட்கச் சென்ற இடத்தில் கறுப்பினத்தவரின் நட்பால் பறவைகளை பதப்படுத்துவதையும் கற்றுக் கொண்டார்.

பேரா.ஹென்ஸ்லோவுடன் ஏற்பட்ட அறிமுகத்தையும், இனிய அனுபவங்களையும் வாசிக்கும் போது அன்றைய மேற்குலக நாடுகளில் அறிவியலும், ஆய்வுத் தேடல்களும் புதிய வெளிச்சங்களை நோக்கி நடை போட்டத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது. பல்துறை அறிஞர்கள், வல்லுனர்கள், பேராசிரியர்களுடனான உறவை ஏற்படுத்தி, தனக்கான அறிவுத் தேடலை டார்வின் விரிவுபடுத்திக் கொண்டார்.

ஹம்போல்ட் (Humboldt) எழுதிய சுயசரிதையையும், சர்.ஜே.ஹெர்ஷெர் (Sir.J. Herschel) எழுதிய ‘இயற்கை கோட்பாடு பற்றிய ஆய்வுக்கு ஒரு அறிமுகம்’ (Introduction to the Study of Natural Philosophy) என்ற இரு நூல்கள் தான் இயற்கை அறிவியலுக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை செலுத்த வேண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிடுகிறார்.

தேடலிலும், ஆர்வத்திலும் இருந்த டார்வினுக்கு, பீகிள் கடற்பயணத்தின் ஐந்து ஆண்டுகள் அவரது வாழ்வில் மிகப்பெரும் மாறுதலை ஏற்படுத்தியதுடன், தனது மனதைக் கட்டுப்படுத்தி ஒழுங்கமைக்கும் கல்வியையும், கூர்ந்தாய்வு திறனை கடற்பயணம் ஏற்படுத்தியிருந்தது. ஐந்தாண்டு கடற்பயணம் டார்வினுக்கு, அறிவியிலறிஞர்கள் மத்தியில் தனித்த இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

இளம் வயதில் டார்வினை கடும் சொற்களில் பேசிய தந்தை, பீகிள் பயணத்தின் இறுதியில், ‘டார்வின் அறிவியல் அறிஞர்களுள் மிக முக்கியமான இடத்தை பிடிப்பார்’ என நம்பிக்கை தெரிவித்தார். பீகிள் பயணம் முடிந்த இரண்டு ஆண்டுகளில் திருமணம் முடிந்தாலும், அவரது ஆய்வுகளுக்கு எந்த விதத்திலும் தடையாக இருந்ததில்லை.

பவளப் பாறைகள், தாவரங்கள், பனிப் பாறைகள் என பலவற்றை கூர்ந்தாய்வு செய்து குறிப்பாக எடுத்து நூல்களாக வெளியிட்டுக் கொண்டிருந்தார். தனது புத்தகங்களை வெளியிடுதல், அதற்கான குறிப்புகளை தயார் செய்தல் பற்றி மிகவும் விரிவாக ‘எனது வெளியீடுகள்’ என்ற தலைப்பில் நூலின் இறுதியில் பதிவு செய்துள்ளார்.

Darqwin
‘பூச்சிகளை உண்ணும் தாவரங்கள்’ (Insectivorous Plants) என்ற புத்தகத்திற்கு தேவையான குறிப்புகள் எடுத்து பதினாறு ஆண்டுகள் கழித்து, நூலை 1875-ம் ஆண்டு வெளியிட்டுள்ளார். நீண்ட காலதாமதத்ததிற்கு…

‘……….. ஒரு மனிதன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தான் எழுதிய புத்தகத்தை, மற்றொருவர் எழுதிய புத்தகத்தை எவ்வாறு விமரிசிப்போமோ, அதை போன்றே விமரிசிக்கலாம்’

என காலதாமதத்தினால் ஏற்படும் நன்மைகளை டார்வின் விவரிக்கும் போது நமக்கு வியப்பே மேலிடுகிறது.

அவருடைய ஆய்வு பணிகளுக்கு ஒரே சீரான சிந்தனை தான் காரணம் என்பதை விவரிக்கையில்…

‘எனது பழக்க வழக்கங்கள் சீராக ஒழுங்குபடுத்தப்பட்டவை. இது எனது வகைப்பணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் எனது வாழ்க்கைகான செலவுக்காக உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டிய அவசியம் இல்லாததால், எனக்கும் போதிய ஒய்வு கிடைத்தது’ என கூறும் போது, அந்த காலகட்டத்தில் அவருடைய குடும்பம் செல்வ செழிப்போடு இருந்ததையும் அறிய முடிகிறது.

பலப்பல ஆய்வுக் கட்டுரைகள், உலகை புரட்டிப் போட்ட புத்தகங்களை எழுதி முதன்மையான அறிவியலறிஞராக உயர்ந்த டார்வின், தான் சாதித்ததை பின்வரும் வரிகளில் கூறுகிறார்…

‘ஒரு அறிவியலாளராக நான் அடைந்த வெற்றி, எனக்குத் தெரிந்த வரை, சிக்கலான வேறுபட்ட மனநிலைகளாலும், சூழ்நிலைகளாலும் நிர்ணயிக்கப்பட்டது. இவற்றில் மிகவும் முக்கியமானது-அறிவியலின் மீதான ஆர்வம், எந்தப் பொருளைப் பற்றியும் நீண்ட நேரம் சிந்தனை செய்வதில் அளவிட இயலாத பொறுமை, விவரங்களைச் சேகரிப்பதிலும், கூர்ந்தாய்வு செய்வதிலும் கடின உழைப்பு, புதியதைக் கண்டுபிடிப்பதில் ஒரளவு சுமாரான பங்கு மற்றும் பொது அறிவு ஆகியவை ஆகும். எனக்கிருந்த சுமாரான திறமைகளைக் கருத்தில் கொள்ளும் போது, சில முக்கியக் கருத்துக்கள் தொடர்பாக அறிவியலாளர்களை ஒரளவு எனது செல்வாக்கை உணரும்படி செய்ததை நினைத்தால் எனக்கு உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது’.

டார்வினின் தன்னடக்கம் நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. இச்சிறு சுயசரிதை நூல் டார்வினின் வாழ்வை முழுமையாக அறிந்து கொள்ள உதவுகிறது.

பள்ளி, கல்லூரி நாட்களில் கவிதை, இசையில் மட்டுமின்றி, துப்பாக்கி சுடுவதிலும் அதிக ஆர்வம் காட்டியுள்ளார்.

‘பீகிள் கடற்பயண’த்தை மொழி பெயர்த்த முனைவர் அ. அப்துல் ரஹ்மானின் எளிய தமிழ்நடையில், அகல் பதிப்பகம் சிறப்புற வெளியிட்டுள்ளது. நூலில் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு இல்லாதது சிறு குறையாக அமைந்துள்ளது.

நூல் வேண்டுவோர்

நூலின் பெயர் ; சார்லஸ் டார்வின் சுயசரிதம்

தமிழில் ; முனைவர் அ. அப்துல் ரஹ்மான்

வெளியீடு ; அகல், 342, டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014.

தொலைபேசி ; 044-28115584.

மின்னஞ்சல் ; agalpathipagam@gmail.com

முதல் பதிப்பு ; டிசம்பர் 2009.

விலை ; ரூ. 50.00

– ஏ.சண்முகானந்தம், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்.

(2014 ஜூன் சஞ்சிகையில் வெளியான கட்டுரை)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s