நடந்தாய் வாழி, காவேரி

பயணங்கள் வாழ்வின் அத்தியாவசியங்கள். பயணங்கள் சுவாரஸ்யமாக அமைய நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்பது கிடையாது. அருகில் உள்ள, அதுவரை காணாத புதிய இடங்களுக்கு பயனித்தாலே போதும். நாடோடியாக, வாழ்க்கையை துவங்கிய பின்பே மனிதன், தான் யார் என்பதை உணர்ந்திகொண்டான். உணவுக்காகவும், உறைவிடத்துக்காகவும், தட்பவெப்பத்திற்காகவும் பறவைகளைப் போல இடம்பெயர்ந்தவன் இன்று பணம் சேர்க்கவும், பொருள் சேர்க்கவுமாக பிரயாணப்பட மாறியிருக்கிறான். ஆனால், பறவைகள் தங்களது பயணத்தின் நோக்கத்தினை இன்று வரை மாற்றியதாக தெரியவில்லை.

தினமும் பயணங்களில் லயித்தும், பயணமற்ற தினங்களில் பித்து பிடித்தது போல தோன்றும் எனக்கு ஒரு நதியின் பயணத்தை பற்றிய புத்தகம் கிடைத்தது. ஒரு நதி உருவாகி மலையில் இருந்து துள்ளிக் குதித்து, ருதுவாகி பயணிக்கும் இடமெல்லாம் வளம் கொழித்து, சாதுவாகி கடலில் போய்ச் சேரும் வரைக்குமான பயணம் அவ்வளவு இனிமையாக படைக்கப்பட்டுள்ளது.

_வாழி__76785_zoomஅந்த நதி, காவேரி. அந்த புத்தகம் ‘நடந்தாய் வாழி, காவேரி!’. இந்நூலின் ஆசிரியர்கள் தி.ஜானகிராமன் (1921-1983) மற்றும் பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) (1910-2006) இவ்விருவருவரும் இன்று இல்லை. ஆனால், இந்த நூலின் ஒவ்வொரு எழுத்திலும் வாழ்கின்றனர். இன்றும், இந்நூலைப் படிக்கும் யாவரையும் தங்களோடு காரில் ஏற்றி காவிரியின் உச்சி முதல் பாதம் வரை அழைத்துச் செல்கின்றனர். நானும் அவர்களோடு அவர்களது காரில் ஏறிக் கொண்டு காவிரியின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்து வந்தேன் இந்நூல் வாயிலாக.

“பூவர் சோலை மயிலாட, புரிந்து குயில்கள் இசைபாட,
காமர் மாலை அருகசைய நடந்தாய்; வாழி, காவேரி!”

என்கிற இளங்கோவடிகளுடைய வரிகளின் நிதர்சனம் நூலின் ஒவ்வொரு பக்கங்களை புரட்டும் போதும் உணரப்படுகிறது.

காவிரியின் உயரமான பார்சுக்கு அருவி (230அடி) மற்றும் கனக சுக்கு அருவி (300அடி) போன்றவை அமைந்துள்ள சிவசமுத்திரத்தில் துவங்குகிறது பயணம். கிருஷ்ணராக சாகரம், பாகமண்டலம், தலைக்காவேரி, லட்சுமண தீர்த்தம், ஹேமாவதி, மைசூர், ஸ்ரீரங்கப்பட்டினம் எனக் கடந்துக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் அமைந்துள்ள கோயில்களும், வரலாற்று சுவடுகளும் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயம் பற்றிய அவர்களின் அறிமுகம் அவர்களின் காலத்தையும் தாண்டி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு அழைத்து செல்கிறது. 1117ல் ராமானுஜர் சோழ நாட்டை விட்டு வெளியேறி மைசூர் ராஜ்ஜியத்திற்கு வந்த நிகழ்வையும் அதன் பின்னர் கட்டப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டை வாயிலையும் கண் முன்னே நகர்த்தினர்.

மலை இடுக்குகளில் வழுக்கையான கார் சக்கரம் ஏற முடியாமல் தவித்ததையும், அதனால் அவர்கள் பரிதவித்ததையும் அவர்களில் ஒருவனாக நானும் அனுபவித்தேன்.

குடகு நாட்டில் கார் சக்கரம் மூங்கில்களால் பதம்பார்க்காப்பட்டு நிறுத்தப்பட்டது. அதனையும் ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டே நெல் வயல்களும் வாழைக் கொல்லைகளும் சூழ்ந்த கிராமத்து வீடுகளை அவர்களோடு சுற்றிக் கழிக்க துவங்கியது அலாதியானது.

ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு இடங்களின் மடிகளில் தலை சாய்க்க வைக்கிறார்கள்.

கடந்து செல்லும் இடங்களிலெல்லாம் இறங்கி அந்தப்பகுதி மனிதர்களுடன் கதைத்து அவர்களின் வாழ்வியலையும் விளக்கிச் செல்கின்றனர். குறிப்பாக, பெத்திரியை கடந்து ராஜப்பாட்டைக்குள் நுழைகையில் எதிர்பட்ட திருமண விழாவிற்கு அவர்களோடு கலந்து கொண்டது மன நிறைவானது. அந்த திருமண நிகழ்வுகளை ஒவ்வொன்றாக காண்பித்து அப்பகுதி மக்களாலேயே அதனை விளக்க வைத்தனர். மணமகள், மணமகன் உடை அமைப்புகள் முதல் கொண்டு அந்த காவேரிக் கரை மக்களின் வாழ்வியலையும் கண்களில் பதித்தனர். குடகில் பிறந்து மைசூர் ராஜ்ஜியத்தில் விரைந்து ஓடிவரும் காவேரி தமிழ்நாட்டை நெருங்கும் வரை பல தடைகளை மீறி வருகிறாள் காடு மலைகளின் ஊடாகவும் சரி; கட்டுப்பாடுகள் முளைத்ததின் மூலமாகவும் சரி.

தமிழ்நாட்டுக்குள் வருகை தரும் காவேரியை வரவேற்கும் கிளை நதிகளில் ஒன்று சேர்வராயன் மலைகளில் உற்பத்தியாகும் மஞ்சவாடிக் கணவாயில் உற்பத்தியாகும் திருமணி முத்தாறு என தகவல்களையும் ஆங்காங்கே கடந்து செல்கையில் அவர்கள் சொல்லாமல் இல்லை. இப்படியாக நொய்யல், அமராவதி என காவிரியோடு சேரும் நதிகளையும் பங்கமில்லாமல் பார்வையிட செய்துவிட்டார்கள். திருச்சி, தஞ்சை, குடந்தை, காவிரிபூம்பட்டினம் சேரும் வரைக்குமான பயணத்தை நூலின் இறுதிவரை கொண்டு சேர்க்கிறார்கள்.

நூற்றுத் தொண்ணுறு ரூபாய் மட்டுமே பயணச்சீட்டு (இந்நூலின் விலை) குடகு முதல் கடல் வரை அவர்களோடு இணைந்து பயணித்து கண்டு களிக்கும் வாய்ப்புதான் இந்த புத்தகம். அவர்களோடு இந்நூலில் பயணிக்கையில் காவிரியின் தோற்றம்,வாழ்வு, பயணம், சங்கமம் மட்டுமல்லாது அக்காவேரி கரையில் வாழும் மனிதர்களின் வாழ்வியலையும் உணர்வுகளையும் அறிய முடிகிறது. ஒரு நீண்ட பயணம் செய்த திருப்தி ஏற்படுகிறது.

இனி பயணமற்ற தினங்களில் பித்துபிடிக்க வாய்ப்பில்லை. நினைத்த மாத்திரத்தில் சிட்டி – தி.ஜானகிராமன் அவர்களுடன் காவேரிப்பயணம் செய்திடுவேன்.

நூலின் பெயர்: நடந்தாய்; வாழி, காவேரி!
எழுத்தாளர்: சிட்டி – தி. ஜானகிராமன்.
பதிப்பகம்: காலச்சுவடு.
விலை – ரூ.190.

– பாடுவாசி ரகுநாத்.
thamizhmani2012@gmail.com

Advertisements

One thought on “நடந்தாய் வாழி, காவேரி

  1. நடந்தாய் வாழி, காவேரி = பாடுவாசி ரகுநாத்.
    thamizhmani2012@gmail.com = அருமையான புத்தக மதிப்பீடு. நான் நிறைய நாட்கள் இப்படி புத்தகம் தான் தேடிக் கொண்டிருந்தேன். காவிரி – ஆரம்பம் முதல் கடலில் கலக்கும் வரை – எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நண்பர் Kathiresan Sekar கவனத்திற்கு. இந்த புத்தகம் வாங்கி அனுப்ப வேண்டுகிறேன்.
    நன்றி நண்பர்களே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s