தமிழர் பண்பாட்டில் தண்ணீர்

அறிமுகம்
உலக தொல்குடி சமூகங்களில் ஒன்றான தமிழ்ச் சமூகம் இயற்கையோடு ஒத்திசைந்த வாழ்வை வாழ்ந்திருந்தது. இயற்கையின் பருப்பொருட்கள் பாதிக்கப்பட்டால், தங்களுடைய வாழ்வியல் பாதிக்கும் என்ற பேருண்மையை புரிந்திருந்தனர். இவ்வுலகம் உருவாவதற்கும், உலகத்திலுள்ள உயிரினங்களின் தோற்றத்திற்கும், வாழ்விற்கும் அடிப்படையாகவும், உலக உயிரினங்களுக்கு அச்சாணியாகவும் விளங்கும் தண்ணீரை, தமிழர்கள் தங்கள் உயிரினும் மேலாக பேணிக் காத்தனர். தங்களது பண்பாடுகளிலும் தண்ணீரின் பங்களிப்பை இன்றளவும் வெளிப்படுத்தி வருகின்றனர். உலக நாகரிகத்திற்கும், பண்பாட்டிற்கும் முன்னோடியாக விளங்கும் தமிழர்கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து அசைவுகளிலும் தண்ணீரின் பங்களிப்பை சங்க பாடல்கள் வழியே அறியமுடிகிறது. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த பதிவுகளை இச்சிறு கட்டுரையில் காண்போம்

சங்க இலக்கிய பாடல்களில் தண்ணீர்
தாவரங்கள், உயிரினங்கள் உள்ளிட்ட சூழலின் பருப்பொருட்கள் அனைத்தும் ஐந்து வகையான இயற்கையில் அடங்கியுள்ளன. நிலம், நெருப்பு, தண்ணீர், வளி (காற்று), விசும்பு (ஆகாயம்) என்ற இவையனைத்தும் காக்கப்பட வேண்டும் என்ற பேருண்மையை தமிழர்கள் உணர்ந்து, இயற்கைக்கும் மட்டுமல்ல, உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத எளிய வாழ்க்கையை மேற்கொண்டனர்.

‘நிலம் தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்…’ (தொல்; பொ.மரபு; 644)

இந்த உலகம் இயற்கையால் இயக்கப்படுகிறது என்பதை தொல்காப்பிய வரிகள் எடுத்துரைக்கிறது. திருமந்திரத்திலும், அப்பர் தேவாரத்திலும், மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் ஐவகை பருப் பொருட்கள் குறித்து நுட்பமாக பாடியுள்ளனர்.

நிலம், நெருப்பு, வளி (காற்று), விசும்பு (ஆகாயம்) என நான்கையும் சங்கப் பாடல்கள் பலவற்றில் அதன் தேவையையும், அவற்றின் இயல்புகளையும் தெளிவாக சுட்டும் பல பாடல்கள் இருக்கின்றன. உலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்விற்கும் அச்சாணியாக உள்ள தண்ணீரை பற்றி அறிவியல் அடிப்படையில் அமைந்த சங்கப் பாடல்கள் பல உள்ளன.

உலகின் முக்கிய தேவையான தண்ணீரை, ‘நீரின்றி அமையாது உலகு’ என்றும், நீர் ‘மிகுனும் குறையினும் நோய் செய்யும்’ என்றும் வள்ளவர் தெளிவாக குறிப்பிடுகிறார். நீர் இல்லாவிடில் இந்த உலகம், மனிதர்கள் வாழத் தகுதியற்றதாகி விடும் என்பதையும், மனித உடலில் தண்ணீரின் அளவு குறைந்தாலும், கூடினாலும் நோய் ஏற்படும் என்ற இன்றைய அறிவியலுக்கு சற்றும் குறைவில்லாமல் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது பாட்டன் வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழர்கள் நீர்நிலைகளுக்கு பல்வேறு பெயர்களை சூட்டியுள்ளனர். தானே நீர் கசிந்த பகுதிகளுக்கு சுனை, கயம், பொய்களை, ஊற்று என்ற பெயர்களில் அழைத்துள்ளனர். மழை நீரின் சிறிய நீர்த்தேக்கத்தை ‘குட்டை’ என்றழைத்தனர். (இன்று, கழிவு நீர் தேங்கிய இடத்தை ‘குட்டை’ என பொருள் புரியாமல் அழைக்கின்றனர்.) குளி(ர்)ப்பதற்கு பயன்படும் நீர்நிலைகளை ‘குளம்’ என்றும், உண்பதற்கு பயன்படும் நீர்நிலைகளை ‘ஊருணி’ என்றும், ஏர்த் தொழிலுக்கு பயன்படும் நீர்நிலைகளை ‘ஏரி’ என்றும், மழை நீரை மட்டுமே ஏந்தி நிற்கும் நீர்நிலைகளுக்கு ‘ஏந்தல்’ என்றும், கண்ணாறுகளை உடையது ‘கண்மாய்’ என்றும் பண்டைய தமிழர்கள் நீரின் பயன்பாடு, அதன் தன்மை அறிந்து அழைத்துள்ளனர்.

நிலத்தால் திரிந்து போன நீரின் சுவையை மேம்படுத்த நெல்லியினை ஒரு மருந்தாகப் பயன்படுத்தியுள்ளனர். ஊருணிக் கரைகளில் நெல்லி மரங்களை நட்டு வைத்து அதற்கு ‘நெல்லிக்காய் ஊருணி’ என்று பெயரிட்டு அழைத்தனர்.

ஒரு நாட்டிற்கு பாதுகாப்பு அரணாக, நல்ல தண்ணீரும், செழுமையான இயற்கை வளமும், வெண் பனி மேகங்களோடு போட்டி போடும் தாவரங்களையுடைய காடுகளும், மலைகளும், நீரோடைகளும், வளமான மணலும் தான் தேவை என்பதையும், வானில் இருந்து தண்ணீர் வருவதால் ‘அமிழ்தம்’ என்றும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீரின் பெருமையை உணர்ந்து வள்ளுவர் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.

தண்ணீர் குறித்த ஏராளமான அறிவிலடிப்படையில் அமைந்த பாடல்கள் சங்க இலக்கியத்தில் விரவிக் காணப்படுகின்றன. நாட்டார் இலக்கியத்திலும், எளிய மக்களின் வாய்மொழி இலக்கியத்திலும் தொன்மங்கள் நிறைந்த கதைப் பாடல்கள் வரலாறு நெடுக காணப்படுகின்றன.

தமிழர் பண்பாட்டில் தண்ணீர்
இனிமை, எளிதில் புழங்கும் தன்மை என இரண்டு பண்புகள் நீருக்கு உண்டு. குளிர்ச்சியினை உடையதால், ‘தண்ணீர்’ என்று தமிழர்கள் அழைத்து மகிழ்ந்தனர்.

மத்திய நிலநடுக்கோட்டை ஒட்டிய வெப்ப மண்டல பகுதியாக அமைந்துள்ள தமிழக தமிழர்களுக்கு நீர் குறித்த நம்பிக்கைகளும், வெளிப்பாடுகளும் அதிகமாகவே உள்ளது.

நிலத்திற்கு முன்பே தோன்றியது கடல் நீர் என்பதை குறிக்க ‘முந்நீர்’ என்றும், ஆற்று நீரை ‘நன்னீர்’ என்றும், குடிநீரை ‘இன்னீர்’ என்றும் தமிழிலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன. சங்க கால அரசர்கள், மன்னர்கள் ஏரி, குளங்கள், கண்மாய், நீர்நிலைகள் மாசுபடாமல் இருப்பதற்காக, ‘முந்நீர் விழவு’ என்ற விழாவை எடுத்து நீர்நிலைகளை பாதுகாத்துள்ளனர்.

இந்த உலகில் நீரைப் பாதுகாத்தவர் பெயர் நிலைத்து நிற்கும் என்றும், பாதுகாக்க மறப்பவர்கள் பெயர்கள் நிற்காது என்றும் சங்க இலக்கிய பாடல்கள் வழி அறியமுடிகிறது.

பண்டைய தமிழகத்தில் சத்திரங்களில் மோர், பானகம், இளநீரை வழங்குவதை தங்கள் கடமையாக தமிழர்கள் கருதியுள்ளனர். அதுபோலவே, சத்திரங்களில் இரவில் தங்குபவர்களுக்கு சோறு அளிக்கும் வழக்கமும் இருந்துள்ளது. தங்கள் ஊரில் சோறு உண்ணாமல் யாரும் இருந்தால், தங்களுக்கு இழிவு என்ற எண்ணத்தில் உணவளிக்கும் பழக்கம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

நெடுஞ்சாலைகளில், வழிப்பாதைகளில் கோடை காலத்தில் நீர்ப் பந்தல் அமைப்பது முக்கிய கடமையாக கருதி தமிழர்கள் இன்றளவும் செய்து வருகின்றனர். சோழர் கால கல்வெட்டொன்று தண்ணீர்ப் பந்தலுக்கு தேவையான தண்ணீர் இறைத்துத் தருபவருக்கும், அதற்கு கலமிடுபவருக்கும், வந்து செல்பவர்களுக்கு தண்ணீர் ஊற்றித் தருபவருக்கும் மானியமளித்த செய்தியினை சொல்கிறது.

இதன் அடிப்படையிலேயே, ‘சோறும், நீரும் விற்பனைக்கல்ல’ என்ற முதுமொழி உருவானது குறிப்பிடத்தக்கது. (விசய நகரப் பேர்ரசு காலத்தில், சத்திரங்களில் சோறு விற்றதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. அப்போதும் தண்ணீர் விற்கப்படவில்லை.)

தாய் வழிச் சமூகமான தமிழ்ச் சமூகம், இன்றளவும் 80 விழுக்காடு தாய் தெய்வ வழிபாட்டில் தான் உள்ளது. தாயை முதன்மைபடுத்துபவர்கள் தமிழர்கள். அப்படிபட்ட தமிழ்ச் சமூகம் தான், ‘தாயை பழித்தாலும் நீரை பழிக்காதே’ என்ற முதுமொழியை இன்றளவும் கடைபிடித்து வருகிறது. தாயை விட மேன்மையானதாக, பாதுகாக்கப்பட வேண்டியதாக தண்ணீரை கருதுவதாலேயே, இந்த முதுமொழி இன்றளவும் தமிழர்களால் காக்கப்பட்டு வருகிறது.

வெப்ப மண்டல பகுதியில் கடுமையான உடல் உழைப்பை கோரும் வேலையை முடித்து விட்டு, மாலை உடலை நீரினால் குளிர்ச்சி செய்வதையே ‘குளி(ர்)த்தல்’ என்று அழைத்தனர். ‘குளி(ர்)த்தல்’ என்ற சொல்லுக்கு உடலை தூய்மை செய்வது (அ) அழுக்கு நீக்குவது என்பதல்ல பொருள். சூரிய வெப்பத்தாலும், உடல் உழைப்பால் வெப்பமடைந்த உடலை ‘குளிரவைத்தல்’ என்பதே சரியான பொருள் என தமிழகத்தின் மூத்த பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் கூறுவது கூர்ந்து நோக்கத்தக்கது.

நீராடுவதே ஒரு சடங்காகவும் தமிழர்களால் கருதப்பட்டதை, பரிபாடல், திருப்பாவை போன்ற இலக்கியப் பாடல்கள் வழியே அறியலாம். ‘குள்ளக் குளிரக் குடைந்து நீராடி’ என்ற ஆண்டாள் வரிகளும் குளிர்ப்பதை குறிப்பிடுகிறது. உணவு என்பது, உடல் உயிரோடு இருப்பதற்காகவும், நீர் உடல் வளர்ச்சிக்குத் துணையாகவும் இருப்பதை பண்டைய தமிழர்கள் அறிந்து அதற்கேற்ற வகையிலேயே தங்கள் உணவு முறையை வகுத்துக் கொண்டனர். ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற முதுமொழியையும் உருவாக்கி வைத்தனர்.

மலைக்காடுகளில் உள்ள சுனைகளில் ‘சூர்மகள்’, ‘அரமகள்’ என்றும் அணங்குகள் (மோகினிகள்) வாழ்கின்றன என்பது பண்டைய காலத்து தமிழர்களின் நம்பிக்கையாக இருந்தது. அதுபோலவே, தெய்வங்களின் இடப்பெயர்ச்சிக்கும், நீர் ஒரு ஊடகமாக விளங்கியது என்பது நம்பிக்கையாக இருந்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் விழாக்களில் சாமியாடுபவரின் தலையில் ஏற்றப்படும் நீர்ச்சரகத்துக்குள் சாமியின் அருளாற்றல் இறங்கியிருப்பதாக மக்கள் இன்றளவும் நம்புகின்றனர்.

தெய்வ வழிபாட்டுச் சடங்குகளைப் போல, தமிழர்களின் வீட்டு சடங்குகளிலும், நீர் முக்கியத்துவத்தை பெறுகிறது. இன்றளவும் தமிழர்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்வில் குவளை நீரில் பூக்களை நிரப்பி வைத்திருப்பதை காணலாம்.

மணமகளை அலரிப்பூவும், நெல்லும் இட்ட நீரால் மகப்பேறுடைய நான்கு பெண்கள் நீராட்டும் வழக்கத்தினை அகநானூறு (86) குறிப்பிடுகிறது. பெண்ணின் பூப்பு நீராட்டு, மன்னர்களின் வெற்றி நீராட்டு (விஜயாபிஷேகம்), இறந்தார்க்கு ஊரறிய ‘நீர்மாலை’ எடுத்து வந்து நீராட்டுதல் என்பன பண்டைய தமிழர்களின் நீர் சார்ந்த பண்பாட்டு அசைவுகளாக இருந்துள்ளது.

தென் மாவட்டங்களில் புது மணமக்கள் மலையாடுதல் (அ) கடலாடுதல் என்பது ஒரு சடங்காகப் பின்பற்றப்பட்டு வருகிறது. பழந்தமிழர் மரபில் ‘மஞ்சள் நீராட்டு’ என்பது பெண்களுக்கான சடங்கு மட்டுமன்று. போர்க்களம் செல்லும் வீரர்கள் மஞ்சள் நீராட்டு செய்து அல்லது மஞ்சள் உடை உடுத்திச் செல்வார்கள். இறப்பினை எதிர்கொள்ளும் வீரவுணர்வினையும், தியாகத்தையும் குறிக்கும் குறியீடாக அமைந்தது. இந்த வழக்கத்தின் தொல்லெச்சமாகவே அரக்கனை அழிக்கச் செல்லும் தாய் தெய்வத்தின் ‘சாமியாடி’ (பிரதிநிதி) மஞ்சள் நீராடி மஞ்சள் உடை உடுத்திச் செல்கிறார்.

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் பரவியிருந்த சமண மத வீழ்ச்சிக்கு முதன்மை காரணமாக அமைந்தது அவர்களின் கடுமையான துறவுக் கொள்கையாகும். துறவு மேற்கொண்ட சமணத் துறவிகள் குளி(ர்)க்காமல் இருப்பதை தமிழர்கள் விரும்பவில்லை. வெப்ப மண்டல உயிரினங்களுக்கு நீராடுவதில் பெருவிருப்பம் என்ற அறிவியலோடு ஒப்பிட்டால் உண்மை புரியும்.

விபத்தில் அல்லது நெருப்பில் சிக்கி இறப்பவர்களுக்கு நீர் வேட்கையோடு இறப்பது இயல்பானதாகும். எனவே அவ்வாறு இறந்தவர்களின் நினைவாக நீர்ப் பந்தல் அமைத்து, அனைவருக்கும் தண்ணீர் தருவது தமிழர்களின் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

தமிழர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து பண்பாட்டு நிகழ்வுகளில் தண்ணீர் முதன்மையானதாக உள்ளது. தண்ணீர் குறித்த முதுமொழிகளும் தமிழில் பல உள்ளன. நீரடித்து ‘நீர் விலகாது’, ‘நீர் மேல் எழுத்து’, ‘தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன்’ என்ற முதுமொழிகள் தண்ணீரை பற்றிய நம் முன்னோர்களின் அறிவை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

தாயை விட மேலாக தண்ணீரை பாதுகாத்தவர்கள், தங்களது அனைத்து நிகழ்வுகளிலும் தண்ணீருக்கு முதன்மையளித்தவர்கள், இயற்கையின் பருப் பொருட்களை பாதுகாத்து, அதனுடன் இணைந்த வாழ்வை மேற்கொண்டவர்கள், ஐந்திணை நிலங்களை உருவாக்கி எளிய வாழ்வை வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இத்தகைய சிறப்புகளை நம் முன்னோர்கள் நமக்கு பாடமாக வைத்துள்ளார்கள். நமது பண்பாடுகளிலிருந்து நாம் பாடம் கற்போம்.


(பி.கு. – தமிழர்களின் பண்பாடுகளிலும், சங்க இலக்கியங்களில் தண்ணீரின் முக்கியத்துவத்தையும் விளக்கும் பாடல்கள் குறித்து பேரா.தொ.பரமசிவன் மற்றும் பேரா.கு.வி.கிருஷ்ணமூர்த்தி தங்களது நூல்களில் வரலாற்று விவரங்களுடன் பதிவு செய்துள்ளனர். இக்கட்டுரை உருவாக்கத்திற்கு பேரா.தொ.பரமசிவன், பேரா.கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய கட்டுரைகளே பெருமளவிற்கு உதவின என்பதை நன்றியுடன் குறிப்பிடுகிறேன்.)

தரவு நூல்கள்
01. தொ.பரமசிவன் – பண்பாட்டு அசைவுகள் – காலச்சுவடு பதிப்பகம் – மார்ச் 2010.
02. முனைவர். கு.வி.கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், பாரதிதாசன் பல்கலைக் கழக வெளியீடு, 2011.

– ஏ.சண்முகானந்தம்
shanmugam.wildlife@gmail.com

(இக்கட்டுரை சஞ்சிகை – 2014 செப்டம்பரில் இதழில் வெளியானது.)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s