இந்தியாவில் ஆற்றுநீர் பிரச்சனை

“நீதி ,மதம் ,அரசியல் ,சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லாடல்களுக்கும் ,பிரகடனங்களுக்கும், வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதொவொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து கொண்டு இருப்பதை மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்பவர்களாகவும் இருந்தனர் ,எப்பொதும் இருப்பார்கள்.”
–அரசும் புரட்சியும் நூலில் ,தோழர் லெனின்

“இந்தியாவில் ஆற்றுநீர் பிரச்சினை” என்ற இச்சிறு நூலானது மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்தியாவின் முக்கிய அரசியல் பொருளாதார ஆய்வுக்குழுவினரான “Research Unit of Political Economy” (சுருக்கமாக RUPE) அமைப்பின் வெளியீடாய் வரும் “ Aspect of India’s Economy” ஆய்விதழில் வெளிவந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும் .

“What keeps Disputes on River Waters Alive “ எனும் தலைப்பில் 2007 ,ஜூலை மாதம் இதழ் 43இல் வந்த இக்கட்டுரை அப்பொழுது வெளிவந்த காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை விமர்சித்து எழுதப்பட்டதாகும் . அளவில் சிறிதாக இருந்தாலும் ஆற்றுநீர் பகிர்வு சிக்கல் குறித்த கருத்தாளம் மிக்க திறனாய்வாலும் ஆற்றுநீர் பகிர்வு சிக்கலக்களுக்கு தோற்றுவாயென கருதப்பட்ட (கருதவைக்கப்பட்ட ) காரணிகளை கடுமையாக விமர்சிப்பதன் மூலம் இந்நூலானது தனிக்கவனம் பெற வேண்டிய வெளீயீடாக தோன்றுகிறது

தோழர் க. காமராசன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு முகம் வெளியீடாய் சென்ற ஆண்டு இறுதியில் வந்த இந்நூல் ஆற்று நீர் சிக்கலானது, ஆறுகளின் உரிமை மீது கட்டி எழுப்பப்பட்ட தேசிய இனங்களுக்கிடையே ஆன பிரச்சனையாக அடையாளப்படுத்துவதை தாண்டி மேற்கொண்டு அது செல்லவில்லை என்பதை தெளிவாக விவரிக்கிறது. ஆற்று நீர் பகிர்வு சிக்கலனாது இனங்களுக்கிடையே ஆன தேசிய பிரச்சனை மட்டும் அல்ல மாறாக அது மாநிலங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளப்படும் நீர்பகிர்வில் சமத்துவமின்மை , நீர் பாசன பிடிப்பின் அடிப்படை பரமாரிப்பில் புறக்கணிப்பு போன்ற வகையில் பார்க்கும்போது இச்சிக்கல் வர்க்கங்களுக்கு இடையேயான பிரச்சினையாகவும் , வர்க்க சார் அரசுகளின் எதிர்ப்பற்ற ஆளுமை அரசியலாகவும் பார்கப்படவேண்டுமென்றும் இந்நூல் ஆசிரியார் உரைக்கிறார்.

நூற்றாண்டு பழமையான காவிரி நீர்பங்கீட்டின் பிரச்சனைக்கு கடந்த 2007 பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றத்தால் இறுதித்தீர்ப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது . அதைத்தொடர்ந்து எழுதப்பட்ட இக்கட்டுரையில் காவிரி நடுவர் மன்றம் போன்ற அரசு இயந்திரத்தால் இதுபோன்ற நீர் உரிமைக்கான பிரச்சனைகளுக்கு நீண்டகால தீர்வினை முன்வைக்க முடியாத இயலாமயையை தோலுரித்துக் காட்டுகிறது.

வடகிழக்கு பருவமழையும் , தென்மேற்கு பருவமழையும் பொய்க்கும்போது காவிரி பிரச்சனை தேசிய இனவாதிகளாலும், குறுங்குழுவாத அமைப்புகளாலும் , பாராளுமன்றவாதிகளாலும் பூதகரகமாக்கப்படுவதை சுட்டிக்காட்டும் அதே வேலையில் எவ்வாறு கடந்த காலங்களில் இதன் விளைவுகள் இருந்தது என்பதை தெரிவிக்கிறது. நடுவர்மன்றத் தீர்ப்பில் தெரிவக்கப்பட்டிருக்கும் 740 TMC நீர் கிடைக்காதபட்சத்தில் நீரை எவ்வாறு பங்கிட்டுக்கொள்ள வேண்டுமென்றோ , தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு வழிமுறைகளை (தற்பொழுது இவ்விடயத்தை (நீர் பங்கீட்டை நடைமுறை படுத்துவதற்கான குழு ) உச்ச நீதிமன்றத்திடம் எடுத்துச்சென்ற தமிழக அரசின் மனுவிற்கு இன்று தீர்ப்பு வெளிவந்திருகிறது) அது தெளிவாக்க தவறியதை அடிக்கோடிட்டு அதிகாரப்பூர்வ அலுவல் இயந்திரங்களின் தெளிவற்ற போக்கை வெளிச்சமிட்டு காட்டுகிறார் நூலாசிரியர்
மாநிலங்களுக்கு இடையே ஆன ஆற்றுநீர் பகிர்வு தகராறுகளுக்கு தீர்வினை நாம் நமது கடந்த கால வரலாற்று சூழலை உணர்ந்தவர்களாக அணுகவேண்டும் .வரலாறு நெடுகிலும் தேசிய இனங்களுக்கு இடையில் விதைக்கப்பட்ட “தவறான புரிதல்” மற்றும் “பகைமை உணர்வினை” களைய மேற்கொள்ளவேண்டிய அவசியத்தை இங்கு அழுத்தமாக பதிவு செய்கிறார்.

மைய அரசின் முதலாளிய வர்க்கசார் தாராளவாத கொள்கை அரசியல்:
இந்நூலின் அடுத்த கட்டமானது ஆற்றுநீர் பகிர்வு தகராறு மட்டும்தான் உழவர்களின் கையறு நிலைக்கு காரணியா? என்ற கேள்வியை எழுப்பி உழவர்களின் அடிப்படை பிரச்சனைக்கான வேர்களை நோக்கி பயணிக்கிறது
வேளாண்மையில் பொதுத்துறை முதலீட்டின் சரிவு , வேளாண் பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம் , அது விளை பொருட்களின் விலையில் ஏற்படுத்தும் வீழ்ச்சி ,அதிகரித்த நீர்பாசன செலவு போன்றவற்றால் உழவர்களின் வாழ்க்கை நிலைமை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகிறது. மத்திய அரசின் தவறான தாராளவாத கொள்கையே இதற்கெல்லாம் மூல காரணி என்ற உண்மையை உழவர்கள் புரிந்துகொள்ளமுடியாத அளவில் நமது பாராளுமன்ற ஜனநாயகவாதிகள் உழவர்களை தந்திரமாக பிரித்து அவர்களை போராடவிடாமல் பார்த்துக்கொல்லுகின்றனர் என்ற விடயத்தை விரிவாக இங்கு அலசுகிறது.

நீர்மேலாண்மை புறக்கணிப்பு :
அடுத்து நமது குறுங்குகுழுவாத அமைப்புகள் ,மாநில தேசிய கட்சிகளின் முன்வைக்கும் விடயமான அண்டை மாநிலங்களில் இருந்து நீரை பெறமுடியாததால் தான் நமது வேளாண்மை பாதிப்படைகிறது என்ற தவறான பிரச்சாரத்தை கடுமையாக மறுக்கிறது .மாறாக ஆற்று மணல் கொள்ளை ,ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வைகளின் பராமரிப்பற்ற நிலைகளால் 60 நீர் வீணாவதை இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

அதோடு முறையாக குளங்களை பராமரிக்காத காரணத்தால் ,தென்மாநிலங்களில் கடந்த 1965-2000 ஆண்டுகளில் 37 சதவீத குளத்துநீர் பாசன நிலங்கள் அழிந்துபோயின என்ற புள்ளிவிவரம் அரசு இயந்திரத்தின் நீர் மேலாண்மை புறக்கணிப்பை நமக்கு அடிக்கோடிட்டு காட்டுகிறது.

நீர்ப்பாசன முற்றுரிமை :
அடுத்து மாநிலங்களுக்கிடையே ஆன நீர்பங்கிட்டில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் பாராளுமன்ற ஜனநாயகவாதிகள் ஏன் மாநிலத்திற்குள் நிலவும் நீர்பங்கீட்டில் கடைபிடிக்கபடும் சமத்துவமற்ற வர்க்க சார் நீர் பங்கீட்டினை வேடிக்கை பார்த்துக்கொண்டு மௌனம் சாதிக்கின்றன என்ற முக்கியமான வாதத்தை முன்வைக்கிறது .உதாரணமாக மகாரஷ்டிரா மாநிலத்தின் உழுநிலத்தில் 4 % இருக்கும் கரும்பு பயிர் 60 % நீரை அபகரித்துகொல்வதை சுட்டிக்கட்டுகிறார் .இதேபோலே இந்தியா எங்கிலும் நீர் பங்கீடானது ஆதிக்க நலன் சார்ந்த சமூகத்திற்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தப்படுவதை அழுத்தமாக தெருவிக்கிறார்.
இறுதியாக நீர்பங்கீட்டின் சிக்கல்களுக்கு அறிவுக்கு பொருத்தமான நடைமுறை சாத்தியகூறுகள் கொண்ட தீர்வுகளை நூலாசிரியர் முன்வைக்கிறார்.அதில் சில

வெகுமக்களின் நுகர்வு தேவைக்காகவும் ,உழவர்களின் சூழலுக்கு ஏற்றபடியும் பயிரிடுதலை திட்டமிடவேண்டும்.

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தோடு இணைவாக்கம் பெற்றனவாய் மிகபெரும் அளவிலான மழை நீர் சேமிப்பு திட்டங்கள் மற்றும் கால்வாய் பராமரிப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்.

பாசன முறையை விரிவுப்படுத்துதல்

நீர்பாசன முற்றுரிமையை தடுக்க நடவடிக்கை எடுத்தல். போன்ற அணுகுமுறைகளை முன்னெடுக்க வலியுறுத்துகிறார்.

நூலின் இறுதியில் இவ்வெளியீட்டிக்கு தொடர்புடைய கட்டுரை ஒன்றை பின்னிணைப்பாக சேர்த்திருக்கிறார்கள் .பாவை வெளியீடாய் வந்த ஆ .சிவசுப்ரமணியம் அவர்களின் “அடித்தள மக்கள் வரலாறு” எனும் நூலிலுருந்து எடுக்கப்பட்ட அக்கட்டுரை மறைந்துவரும் தாவரம் என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
கருத்துச்செறிவு மிக்க அக்கட்டுரையில் புன்செய் பயிர்களின் தொன்மையையும் ,எப்பகுதிகளில் அப்பயிர்கள் விளைவிக்கப்பட்டன ,எவ்வாறு அப்பயிர்களைகொண்டு உணவு தயாரித்தனர் என்பதை நறுக்காக விளக்கிச்செல்கிறார் . வரலாற்றில் புன்செய் பயிர்கள் எப்படி ஏளனமாக பார்க்கப்பட்டன ,சுதந்திரத்திற்கு பின் பசுமை புரட்சியை வெற்றிபெறசெய்ய எவ்வாறு நமது பசுமை புரட்சி ஜனநாயகவாதி நாயகர்களால் புன் செய் பயிர்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டன என்பதை விளக்கி இன்று புன் செய் நிலங்களில் வேலிக்கருவை பயிராவதையும் கல் குவாரிகளாக மாற்றுப்படவதை வேதனை தழும்ப கட்டுரையாசிரியர் பதிவு செய்கிறார்.

அடுத்து 18 ஆம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த நன்செய் வித்துக்களை வரிசைப்படுத்தி அவை காலபோக்கில் நமது வேளாண் முறையிலிருந்து மறைந்ததை சுட்டிக்காட்டுகிறார்.உதாரணமாக நெல்லை ,தூத்துக்குடி மாவட்டங்களில் வழக்கிலிருந்த மதுக்கொடை திருவிழாவில் வழங்கப்படும் மதுவை தயாரிக்க “குறுவை களையான்” எனும் நெல் பயிரிடும் முறையை விளகிக்கிகூறுகிறார்.அதேபோலே சங்க காலத்தில் “இல்லடுகள்” எனும் கள் தயாரிப்பில் “தோப்பி” எனும் அரிசியை பயன்படுத்தியதையும் விளக்குகிறார்.இவ்வாறு மரபாக நாம் பயன்படுத்தி வந்த அனைத்து விதைகளும் பசுமைப்புரட்சிக்குபின் சில முதலாளிகளின் நலன்களுக்காக ஒழித்டுக்கட்டபட்டதை சுட்டிக்காட்டுகிறார்.

இறுதியாக “மான்சட்டோ “எனும் பன்னாட்டு நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட விதைகளால் ஏற்படப்போகும் அழிவுகளையும் சுட்டிக்காட்டி நமது பாரம்பரிய வித்துக்களை பாதுகாக்க நாம் ஒன்றுபட்டு அணிதிரண்டு போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.

மொத்தத்தில் நடைமுறையில் இருக்கும் அரசியல் பொருளாதார அமைப்புகளை மாற்றியமைப்பதன் மூலமே நமது ஆறுகளையும் நீர்பகிர்மானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கும் நீண்டகால தீர்வுகளையும்,வேளாண்மையையும் காக்க முடியும் என்ற எதார்த்த உண்மையை ஆணித்தனமாக மீண்டும் மீண்டும் வலிந்து தெரிவிக்கிறார் நூலாசிரியர். கடுகு சிருத்தாலும் காரம் குறையாது என்ற முதுமொழிக்கேற்ப கருத்துச்செறிவு மிக்க பகுப்பாய்வால் நம்மை புது கோணத்தில் சிந்திக்க தூண்டிய விடயத்தில் இந்நூல் தன் இலக்கை அடைந்ததாகவே கருதமுடிகிறது

நூல் : இந்தியாவில் ஆற்றுநீர் பிரச்சினை
வெளியீடு :முகம்
ஆசிரியர்: க. காமராசன்
விலை :20
மின் அஞ்சல் :mugambooks@gmail.com
தொலைபேசி :0422 2593938

– அருண் நெடுஞ்செழியன்,
arunpyr@gmail.com.

(இக்கட்டுரை சஞ்சிகை – 2014 செப்டம்பரில் இதழில் வெளியானது.)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s