‘நீர்’ விற்பனைப் பண்டமா?

பசி, பட்டினியால் இறந்த மக்களை நாம் வரலாற்றில் படித்து இருப்போம். ஆனால் இனி வரும் தலைமுறைகள் தாகத்தால், நீர் இல்லாமல் இறந்து போன சமூகத்தை படிப்பார்கள். அந்த வரலாற்றைப் படிப்வர்கள் தான் உலகில் இறுதி வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்த மனித சமூகமாக இருப்பார்கள்.

நீர் இல்லை என்றால் இந்த உலகம் மூன்று நாட்களில் அழித்துவிடும் என்று ஓர் அறிக்கை கூறுகிறது. நாகரீகத்திலும் அறிவிலும் மேம்பட்ட நமது முன்னோர்கள் இயற்கையின் நியதிகளை அறிந்தும் புரிந்தும் அதனுடன் இசைந்தே வாழ்ந்தார்கள் என்பதற்கு தொல்காப்பியர் வழங்கிய தினைக்கோட்பாடும், “நீரின்றி அமையாது உலகு’ என்றுரைத்த வள்ளுவரின்வாக்கும் சான்று பகறுகிறது. ஆனால், இன்றோ எல்லாம் கானல் நீராகிப்போனது. காரணம் தொழிற்புரட்சியின் வாயிலாக எழுச்சிபெற்ற சந்தைப்பொருளாதாரம் நம் மண்ணை அழித்ததோடு நமது பண்பாட்டு விழுமியங்களையும் சேர்ந்தே அழித்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் இறுதியில் தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாய்ச்சல் வேகத்தில் வளர்ச்சிபெற்ற தொழில்புரட்சியானது நமது இயற்கை வளங்களை சூறையாடியும் வேதியல் நச்சுகளை வேளாண்மையில் புகுத்தியும் நம் மண்ணையும் மக்களையும் மலடாக்கின.

தொழில்நுட்ப்பம் பெருகப் பெருக முட்டாள்கள் அதிகமாக உருவாவார்கள் என்று மார்க்ஸ், ஐன்ஸ்டீன் போன்ற மேதைகள் சொன்னது இப்பொது உண்மையாகிறது. தொழில்புரட்சியால் உருவாகப்படும் பொருட்களுக்கு மூலதனம் இயற்கைவளம்தான். இப்படி இந்த இயற்கை வளத்தை சுரண்டி உருவாக்கப்படும் பொருட்களை விற்று வரும் செலவை விட இயற்கை வளத்தில் இருந்து பெறப்படும் செலவு குறைவு. ஆரம்பத்தில் குறைந்த விலைக்கு விற்று நாட்கள் ஆக ஆக அதனின் பற்றாக்குறையை அதிகரித்து விலையை அதிகரிக்க செய்வது உலகறிந்த வியாபார நுணுக்கம். இப்படி இயற்கை வளங்களை விற்பதில் இந்தியாவில் முதல் இடத்தில் நிற்பது நீர் தான்.

சுதந்திரத்திற்கு முன்பான பிரிட்டிஷ் காலனியாதிக்க காலகட்டத்தில் ஆட்சியால் நேரடியாக சுரண்டப்பட்ட வளங்கள் இன்றைய நவ தாராளவாத நவீன காலனியாதிக்க சூழலில் மறைமுகமாக மக்களின் ஒப்புதலுடன் வளர்ச்சி முன்னேற்றம் என்ற பேரில் சுரண்டப்படுகிறது. இதன் காரணாமாக இதுகாறும் நமக்கு இலவசமாக கிடைத்த நீர் தற்போது காசு கொடுத்தால்தான் தான் கிடைகிறது. 20 ஆம் நூற்றாண்டில் எண்ணெய் பெற்ற இடத்தை 21ஆம் நூற்றாண்டில் நீர் பெற்றுள்ளது.

தற்போது, இந்தியாவின் பல மாநிலங்களில் நீர் மற்றும் பால் ஒரே விலையில் விற்கப்படுகின்றது. நிலவுகிற உலகமயமாக்கல் சூழலில் வித விதமான சுரண்டல்களை இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்திவருகிறது. அதற்குப் பாதுகாவலனாக நமது அரசாங்கம் இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் நீர்த் தேவைகள் அதிகரிக்கும் என அவதானித்த பல பன்னாட்டு நீர் நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதியத் தொடங்கிவிட்டன. பானை நீர், பாட்டில் நீர் ஆக மாறியது இது ஏன் நடந்தது??? ஒரு வியாபாரம் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு விளம்பரம் மிக அவசியம். இன்றைய நிலவரப்படி தரமான பொருளை தயாரிப்பதை விட தரமான விளம்பரத்தை மேற்கொண்டால்தான் வியாபாரம் பெருகும். இவ்வாறாக ஊடகத்தின் துணைக்கொண்டு உளவியல் ரீதியாக தங்களுக்கு சாதகமான கருத்தியலை பொதுமக்களிடம் பரப்பத் துவங்குகிறார்கள். இயற்கையாக கிடைக்கும் நீரை அசுத்தமானவை என்ற கருத்துருவை செயற்கையாக அவர்களின் மனதில் பதிய வைக்கிறார்கள். மக்கள் மனம் மாறுகிறது. பயணத்தின் போது வாங்கிய பாட்டில் நீர் இன்று அனைவரின் வீட்டில் வந்து அமர்ந்துகொண்டது. நீர் வியாபாரம் பெருக பல பன்னாட்டு நிறுவனங்கள் வியாபாரத்திற்காக படையெடுத்து வந்தன. வியாபாரம் பெருகுவதை அறிந்த அரசாங்கம் இலவச பந்தலை தகர்த்து சிறிய சிமெண்ட் கூடாரமாக மாற்றி விற்க ஆரம்பித்தது. இப்படி அரசாங்கம்-தனியார் நீர் நிறுவனங்கள்-அவர்களிடம் விலைபோன ஊடகங்கள் என இம்மூன்றின் உறவானது திட்டமிட்டு நீரை விற்பனைப் பண்டமாக மாற்றியது. நீர் விநியோகத்தை தனியார்மயமாக்கி மக்களை சுரண்டிய விளைவானது, நீர் புரட்சியாக வெடிப்பதை இன்று உலகெங்கிலும்காண முடிகிறது. இது அனைத்தும் நீர் யுத்தத்திற்கு ஒரு எச்சரிக்கை தான். எங்கு எல்லாம் சமூக நலத்திட்டங்கள் மீதான அரசின் உள்ளீடு நீக்கப்பட்டு தனியார்மயப்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் மக்கள் வளமும் இயற்க்கை வளமும் சுரண்டப்பட்டு அழியப்போகிறது என்று அர்த்தம். உதாரணமாக வேகமாக வளர்ந்துகொண்டே வரும் பெங்களுரு ,நாக்பூர் போன்ற பெருநகரங்களுக்க்கான நீர் விநியோக உரிமையைப் பெற்றுள்ள தனியார் நிறுவனங்கள், அந்தந்த மாநிலங்களின் உட்ப்புற பகுதிகளிலிருந்து இருந்து நீரைஉறிஞ்சி அப்பகுதி மக்களின் நீர்தேவையையும் நிலத்தடி நீர்மட்டத்தை உருக்குலைத்து வருவதை நாம் கண்கூடாய் கண்டு வருகிறோம்.

தமிழகத்தில் திருப்பூரில் நடந்த சம்பவம் அழிவிற்கான ஆரம்பம் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது இங்கு கவனிக்கவேண்டிய விடயமாகும். மக்களின் அடிப்படைத்தேவையான நீர்விநியோகத்தை பொதுவில் வைத்து மக்களுக்கு நலன் செய்ய வேண்டிய அரசே அதனை குத்தகைக்கு விடுவது என்பது மக்களுக்கு ஜனநாயகத்தின்மீதான நம்பிக்கையை குறைத்து விடுகிறது என்கிறது நீதி மன்றம். அப்படி என்ன நடந்தது திருப்பூரில்??? திருப்பூர் நகரத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ஒரு தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் அளித்தது. உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

அந்த நிறுவனங்களில் ஒன்றுதான் பெக்டெல்.இந்நிறுவனத்திற்கும் பொலிவியாவிற்கும் ஒரு தொடர்புடைய வரலாறு உள்ளது. பொலிவியாவில் நீர் வளத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யவும் பாசனவசதியை மேம்படுத்தவும், நீர் விநியோகம் செய்வதற்குமான நாற்பது ஆண்டு கால குத்தகை உரிமையை பெக்டல் நிறுவனத்திற்கு அளித்தது பொலிவிய அரசு. இதை இந்த நிறுவனம் அதிகார குத்தகையாக மாற்றி குடிநீர் கட்டணத்தை உயர்த்தி மக்களைச் சுரண்டியது. கொதித்து எழுந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். ஐந்து மாதங்களாக நடந்த இந்த யுத்தம் பொலிவிய நீர் யுத்தம் என்றே அழைக்கப்பட்டது இறுதியில், அந்நிறுவனம் பொலியாவை விட்டே விரட்டப்பட்டது. இவ்வரலாறு தெரிந்தும் இந்தியாவின் மத்திய மாநில அரசு குறிப்பாக தமிழக அரசு பெக்டல் நிறுவனத்திற்கு திருப்பூர் நகர நீர் விநியோக உரிமையை வழங்கியது.! இதேபோல் ஒரு நிகழ்வு தென் ஆப்பிரிகாவின் ஜோஹன்னஸ்பர்க்கிலும் அமெரிகாவில் டெட்ராய்ட் நகரிலும் நடந்துள்ளது. இந்த சான்றுகள் யாவும் வருங்கால நீர் யுத்தத்திற்கானஅறிகுறிகளே.மேலும் உலக நாடுகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது என்பதும் இங்கே தெளிவாகிறது.

நீர் விநியோகத்தை தனியார்மயமாக்கும் விடயமானது மக்களை கார்பரைட்டுகளுக்கு அடிமைப்படுத்தும் முறையாகும். முதலில், நீர் விநியோகத்திற்கு மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலித்து பின்பு அந்த கட்டணத்தை வருடத்திற்கு ஒருமுறை ஏற்றிக் கொண்டே செல்வார்கள். ஒரு கட்டத்தில் நாம் வாங்கும் நுகர்வு பொருட்களுக்கு செலவிடும் விலையைத் தாண்டி நீருக்குசெலவிடப்படும் வகையில் நீரின் விலை எகிறும். மக்கள் தனது வாழ்வில் பாதி உழைப்பை குடிநீருக்காக மட்டுமே செலவளிக்கும் நிலைமை வரும். நமது நாட்டில் ஏழைகளுக்கு இலவசமாக கிடைப்பது நீர் மட்டும் தான். ஆனால் நீருக்கும் தற்போது விலைவைத்து தாகத்தில் தள்ளி வதைப்பது பெருங்கொலைக் குற்றமாகும். இயற்கையாக கிடைப்பதை கடத்தி அடைத்துவைத்து விலைக்கு கொடுப்பது ஒரு அராஜக செயல். அந்த செயலை அரசே நடத்துவது தான் இன்னும் கொடுமை.

– ம.ரா.சதீஷ்,
mrsathesh1408@gmail.com

(இக்கட்டுரை சஞ்சிகை – 2014 செப்டம்பர் இதழில் வெளியானது)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s