நீர் அரசியல்

“நீரையும் சோறையும்” விற்பதை இழிவெனக் கருதுகிற செறிவான பண்பாட்டு அசைவுகளைக் கொண்ட தமிழ்ச்சமூகம் இன்றைய நவ தாராளவாத வர்த்தக சுழலில் தனது பண்பாட்டு விழுமியங்களை மெல்ல இழந்து வருகிறது. நீர்ப்பந்தல் அமைத்து வெக்கை தனித்த தமிழர் மனம் இன்று நீருக்கு விலை வைத்து புட்டியில் விற்கும் தமிழக அரசை விதந்தோம்பும் நிலைக்கு திசைமாற்றம் அடைந்ததுதான் நகைமுரண். லாப நலனுக்காக தனியார் நிறுவனங்கள் நீரை வர்த்தக பண்டமாக மாற்றியதில் வியப்பில்லை என்றாலும் குடிகளின் அடிப்படை உரிமையான நீரை அனைவருக்கும் பொதுவதில் வைத்து இலவசமாக விநியோகிப்பதே அரசின் கடமையேத் தவிர மலிவான விலைக்கு அரசே நீரை விற்கும் அவல சூழலானது நமக்கு முந்தைய தலைமுறையினரின் கற்பனைக்கு எட்டாதது. நீர் குறித்த எண்ணிலடங்கா நம்பிக்கைகளைக் கொண்ட தமிழ்ச்சமூகம் நிலவுகிற நீர் புட்டி விற்பனை, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், கூட்டுக் குடிநீர் திட்டம்,நதி நீர் இணைப்புத் திட்டம் போன்ற நீர் சார்ந்த அரசின் சமூகப்பொருளாதார அசைவுகளை தடுமாற்றத்துடனே எதிர்கொள்வதற்கான காரணம் நிலவுகிற பொருளாதர கட்டமைப்பை புரிந்துகொள்ளத் தவறியதில் வேர்விட்டுள்ளது எனலாம்.

முப்பந்தைந்து நதிகளும் முப்பத்தொம்பதாயிரம் ஏரிகளையும் கொண்ட தமிழகத்தில், நீர் மேலாண்மையில் இறுக்கமாக கடைபிடிக்கப்படும் வர்க்க நலன் முடிவுகளை பெரும்பாண்மையானவர்கள் அவதானிக்கத்தவறியது, சிக்கலின் பரிமாணத்தை புரிந்துகொள்வதற்கான சாத்தியப்பாட்டை நோக்கி நகர விடாமல் அண்டை மாநில தேசிய இன மக்களின் மீதான தேசியப் பகைமைகளை உருவாக்கிய அளவோடு சுருங்கிவிட்டது. இந்நிலையில் மனித உழைப்பின் உற்பத்திப் பொருளாக ஒருபோதும் இருந்திராத “நீர்” எப்படி ஒரு பண்டமாக மாற்றப்பட்டு சந்தையில் விற்கப்படுகிறது? அனைவருக்கும் பொதுவாக இருந்த நீர் விநியோக அமைப்பு தனியார் விநியோகத்திற்கு எப்படி எதனால் மாற்றப்பட்டது? உணவில்லாமல் சில வாரங்கள் தாக்குப்பிடிக்கும் மனித உயிர், “நீர்” இல்லாமல் நான்கு நாட்கள் வாழ முடியாத சூழலில் மனித உயிர்ப் பிழைப்பிற்கு மாற்றே இல்லாத அத்தியாவசியத் தேவையான உயிர் நீருக்கு தனியார் நிறுவனங்களின் விருப்பம் போல் மக்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையை யார் அவர்களுக்கு தந்தது? போன்ற எண்ணற்ற நீர் விநியோக உரிமை சார்ந்த கேள்விகளை முன்வைத்து நீர் விநியோகம் மற்றும் நீர் மேலாண்மையில் அரசின் பாத்திரம் மற்றும் சமூகப்பொருளியல் தளத்தில் அரசின் ஆளுமையை கிட்டத்தட்ட துடைத்தெறிந்துவிட்ட உலக நிதி மூலதனத்தின் பாய்ச்சல் வளர்ச்சியை அரசியல் பொருளாதார நோக்கிலிருந்து விமர்சிக்க முயல்வதே இக்கட்டுரையின் உருப்பொருளாகும்.

நீர் அரசியல்:
“நற்பண்பு, அன்பு, துணிவு, அறிவு, மனசாட்சி முதலியவை – சுருக்கமாக சொன்னால் எல்லாமே வியாபாரத்திற்கு வந்து விட்ட காலம் அது.” தத்துவத்தின் வறுமை நூலில் கார்ல் மார்க்சு.

மார்க்சு விவரிக்கும் காலம் நிலவுகிற நவதாராளவாத முதலாளித்துவ காலத்தின் குழந்தைப் பருவம் குறித்ததாகும். இன்றைய நவ தாராளவாத சந்தைப் பொருளாதரத்தில் மார்க்சு குறிப்பிடாததும் விற்பனைக்காக சந்தைக்கு வந்துவிட்டது. சமூகத்திற்கு தேவையா தேவை இல்லையா என்ற கேள்வி அதனிடம் இருக்காது. மாறாக தேவை இல்லை என்றாலும் கூட தேவையை உருவாக்கி பொருளுற்பத்தியில் ஈடுபட்டு லாபம் குவிக்கும் கொள்ளைக் கலையை நிலவுகிற முதலாளிய சமூகம் நன்கரியும். பரிமாற்றத்தின் இந்தக் கட்டமே அதாவது விற்பனைக்காக உலகின் அனைத்து இயற்கை வளங்களும் மனித உழைப்பும் வரைமுறையற்ற வேகத்தில் சுரண்டப்படுகிற நிலவுகிற முதலாளித்துவ குற்றவியல் பொருளாதார கட்டமைப்பே நீரையும் விற்பனை பண்டமாக பாவித்து அதன் மீதான உரிமையைக் கோரி கட்டுப்படுத்தி லாபம் கொழிக்கிறது. அரசோ தான் உருவாக்கப்பட்ட காலம்தொட்டே இயங்குகிற தன் வரலாற்றுப் பணியை தொடர்வதிலேயே அதிக கரிசனம் கொண்டு இயங்குகிறது. அதாவது சுரண்டும் வர்க்கத்திற்கு ஆதரவாகவும் சுரண்டப்படும் வர்க்கத்தை அடக்கி ஒடுக்குவதற்குமான சாதானக் கருவியாக தன்னளவில் அது சிறப்பாகவே செயல்படுகிறது. இந்நிலையில் “நீர் அரசியல்” என்பது உள்மாநில, உள்நாட்டு வரையறைக்கு உட்பட்ட முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ அரசின் கட்டுப்பாட்டை மீறிய உலக அரசியலை கொண்டதாகும். அதாவது வடகோள கார்பரைட் நிறுவனங்களுக்கு இசைவான உலகளவிளான பொருளாதரக் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும் உலக வங்கி, சர்வதேச பண நிதியம் மற்றும் ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளோடு இணைவாக்கம் பெற்ற சர்வதேச நீர் சந்தையைக் குவி மையமாக கொண்டு செய்லபடுகிற வர்த்தக உலக அரசியலாகவே இச்சிக்கலை நாம் பார்க்கவேண்டியவர்களாக உள்ளோம்.

தேவை நிர்வாகமும் நவ தாராளவாதமும்:
முன்னதாக இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டிருந்த முதலாளிய நாடுகள் தங்களின் உற்பத்தி சாதனங்களை பெருமளவில் போரில் இழந்துவிட்டிருந்தன. அதே வேலையில் மூன்றாம் உலக நாடுகளின் மீதான நேரடியான அரசியல் பொருளாதார ஆதிகத்தின் வாயிலாக அந்நாடுகளின் வளங்களை சுரண்டிவந்த போக்கும் தேசிய விடுதலை அலையால் முடிவுக்கு வந்தது. இதன் விளைவாக தங்கள் நாடுகளின் கூர்மையாக உச்சம் பெற்ற வேலை வாய்ப்பின்மை, விலையேற்றம் போன்ற சமூகப் பாதுகாப்பற்ற சூழலை சமாளிக்கவும் (உலகப்போரில் ஈடுபட்ட) முதலாளிய நாடுகளில் நிலவிவந்த பொருளாதாரத் தேக்கத்தை நேர்செய்யும் பொருட்டும் கெய்ன்ஸ் என்ற முதலாளித்துவ பொருளாதார அறிஞரால் முன்வைக்கப்பட்ட “தேவை நிர்வாகம்” என்ற பொருளாதாரப்பாணி நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்பொருளாதாரப் பாணி “கெய்னீசிய கோட்ப்பாடு” என்றே அழைக்கப்படுகிறது. “பிரட்டன் வுட்ஸ்” உடன்படிக்கையின்படி ஐநா, உலக வங்கி, சர்வதேச பண நிதியம் போன்ற பல அமைப்புகளின் வாயிலாக உலகளாவிய உறவு பேணப்பட்டு ஒரு புதிய அடுக்கு உருவாக்கப்பட்டது. மூலதனத்திற்கும் தொழிலாளருக்குமான வர்க்க சமரச ஏற்பாட்டை சனநாயக அமைதியின் நிலைப்புத்தன்மைக்காக ஆளும் முதலாளித்துவ சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இப்பொருளாதார கொள்கைகளின்படி பொருளாதரத்தில் அரசின் பாத்திரமானது முதன்மையாக நிறுவப்பட்டது.

அதாவது முக்கியமான உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். தொழிற்கொள்கைகள் மற்றும் தொழிளார் நலப்பாதுகாப்பு கொள்கைகளை அரசே தீர்மானித்தது. பொருளாதர வளர்ச்சி,குடிமக்களின் நலன் பேணல், வேலையின்மை வீழ்ச்சி என அரசின் உள்ளீடு சந்தை நிகழ்முறையிலும் சமூக நடவடிக்கைகளிலும் செல்வாக்கு செலுத்தியது. உலகப்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்த்த அறிவியல் கண்டுபிடிப்புகள் போர்ச்சூழல் காரணமாக நடைமுறைக்கு வராத நிலைமையில், “தேவை நிர்வாக” காலத்தில் தொழில்நுட்ப புரட்சியாக நுகர்வு தளத்தில் எழுச்சிபெற்றது. அறிவியல் தொழிநுட்ப எழுச்சியுடன் கூடிய பொருளாதர ஏற்றம் முதலாளியத்தின் “பொற்காலமாக” பெரும்பாண்மையான முதலாளித்துவ பொருளாதாரவாதிகளால் விதந்தோம்பப்பட்டது. இதன் காரணமாக முந்தைய சூழலை விட ஒப்பீட்டு அளவில் ஓரளவிற்கு சமூகப்பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்த மேற்சொன்ன பொற்காலமும் தகர்ந்தது. வேலை வாய்ப்பின்மை மற்றும் பொருளாதார தேக்க நிலைமை உலகெங்கிலும் பரவ கெய்னீசிய கொள்கை வீழ்ச்சிப்பாதையில் பயணிக்கதொடங்கியது. இந்நிலையில் உலகப்போர் நிகழ்ந்த காலத்திலேயே திரட்சி பெற்ற மூலதன குவிப்பு, நிதி மூலதனமாக புதிய வடிவெடுத்து (மேற்கொண்டு அது இறுக்கமடைந்து பொருளாதார தேக்கநிலைக்கும் போருக்கு வித்திடும் என்ற அவதானிப்புக்கு மாறாக) உலக நிதி மூலதனமாக எழுச்சிப்பெற்றது. உலக நிதிமூலதனத்தின் முக்கியப் பண்புகளில் ஒன்று பொருளாதரத்தில் அரசின் கட்டுப்பாட்டை விலக்குவது. அதாவது தன் நலனுக்கான நவ தாராளவாத பொருளாதரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஆர்வம் செலுத்துகிற அரசையே அது விரும்பும். சுதந்திர சந்தைக்கு இடையூரான அரசின் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டங்களை அது ஏற்காது. சமூக நலத்திட்டங்கள் மீதான அரசின் செலவீனத்தை அது கட்டுப்படுத்தும்.

மேலும் தனது கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வர முரண்படும் நாடுகளிலிருந்து தனது மூலதனத்தை உடனடியாக வெளியேற்றி அந்நாடுகளின் பொருளாதார சீர்குழைவிற்கு வழிசெய்யும். முதலாளித்துவ பொருளாதார சூத்ராதாரிகளான “சிக்காகோ பாய்சும்” அவர்களை வளர்த்தெடுத்த அமெரிக்காவும் புவியின் அழிவிற்கான நவ தாராளவாத பொருளாதாரப் பரிசோதனையை உலக நிதி மூலதனத்தின் அழுத்தத்தின்பேரில் முதன் முதலாக லத்தீன் அமெரிக்க நாடான சிலியில் மேற்கொண்டார்கள். அதன் முதல் கட்டமாக பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாரின்வசம் கையளிக்கப்பட்டது. அதுவரை உள்நாட்டு நிறுவனங்களால் “வழக்கமாக” மேற்கொள்ளப்படும் இயற்கை வளச்சுரண்டல், உலக கார்பரைட் நிறுவனங்களின் லாப நோக்க வர்த்தக நலன்களுக்கு ஒரு திட்டத்தின் கீழ் அனைவருக்குமான சுதந்திரம் என்ற முழக்கத்துடன் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில் நகைமுரண் என்னவென்றால் உலகின் மிகப்பெரும் கம்யூனிச நாடான சீனாதான் நவ தாராளவாத பொருளாதாரப் பாணியை 1978 ஆம் ஆண்டு முதல் முதலாக உலகில் அமல்படுத்தியது. சமூகப் பொருளியில் வரலாற்றின் மாபெரும் திசைமாற்ற நிகழ்வான நவ தாராளவாதக் கொள்கையை நோக்கிய முதல் அடியை சீன அதிபர் டென் சிஒபெங் எடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் மார்கெட் தாட்சரும் அமெரிக்காவில் ரொனால்ட் ரீகனும் தாராளவாதப் பாதைக்கான கொள்கை மாற்றங்களை அமெரிக்காவின் பெடரல் வங்கித் தலைவர் வோல்கரின் ஆலோசனையின் பேரில் செவ்வனே செய்து முடித்தனர்.

நவதாரளவாதமும் நீர் விநியோகமும்:
நவதாராளவாத மூலவர்களான வோல்கர், ரீகன், தாட்சர் மற்றும் டென் சிஒபெங் தனியார்மையம், கண்காணிப்பு ஒழுங்கிற்கு விலக்களித்தல், அரசின் கட்டுப்பாட்டை/அதிகாரத்தை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளின் வாயிலாக மனிதகுல வரலாற்றுக்கும் இயற்கை வரலாற்றுக்குமான “திட்டமிட்ட அழிவை” சட்டக ஒப்புதலோடு அரேங்கேற்றிவர்கள் ஆவார்கள். இந்நிலையில் உலகின் முதல் முதலாளித்துவ நாடான இங்கிலாந்தில்தான் நவதாராளவாதப் பொருளாதர ஏற்பாட்டில் நீர் மீதான அரசின் கட்டுப்பாடு விலக்கப்பட்டு தனியாருக்கு கையளிக்கப்பட முக்கிய குற்றவியல் நிகழ்வு அரங்கேறியது. 1989 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசுக்கு சொந்தமான நீர் விநியோக அமைப்புககளை குறைவான விலைக்கு தனியாருக்கு தாரை வார்த்தார் நவதாராளவாதத்தின் அடிவருடியும் அந்நாட்டின் பிரதமருமான மார்க்கெட் தாட்சர். பின் நடந்தவற்றை சொல்லத்தேவையில்லை. தனியார் நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம்,தொழிலாளர் வேலை நீக்கம் என அனைத்து அராஜக நிகழ்வுகளும் அரசின் சட்டக ஒப்புதலுடன் தாரள சந்தைப் பொருளாதார ஏற்பாட்டில் நிகழ்ந்தது. இதைத்தொடர்ந்து நீர் விநியோகம் மீதான தனியாரின் ஆளுமை பொலிவியா, அர்ஜென்டினா போன்ற லத்தின் அமெரிக்கா நாடுகளைக் கடந்து ஆசியாவின் பக்கம் திரும்பியது. இதற்கு உவப்பாக நீர் விநியோகம் மீதான உரிமையை பெக்டல்,சூயஸ்,வியோலியா போன்ற கார்பரைட் கொள்ளையர்களுக்கு வழங்க மூன்றாம் உலக நாடுகளை நிர்பந்திக்கும் தன் வரலாற்றுக் கடமையை ஆசிய வளர்ச்சி வங்கிகளின் வாயிலாக உலக வங்கி ஏற்றுச் செய்தது.

இதன் எதிரொலியானது 2002 ஆம் ஆண்டில் இந்திய நடுவண் அரசு வெளியிட்ட தேசிய நீர்க் கொள்கையில் அம்மணமாக தெரிந்தது. அதாவது நீர் விநியோகத்தில் மாநில அரசுகள் நம்பமுடியாத அளவிற்கு நிதியை செலவிடுவதாகவும், இதைக் களைந்து ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் பொருட்டு தேசிய நீர்க் கொள்கையில் தனியாரின் பங்களிப்பை ஊக்கப்படுத்தவேண்டும் எனவும் வரைவு அறிக்கை கோரியது. முன்னதாக நீர் விநியோக உரிமையை பெக்டல் (Bechtel) போன்ற பன்னாட்டு கார்பரைட்களுக்கு தாரை வார்த்ததில் தமிழகம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னோடியாகவே செயல்பட்டது எனலாம். ஏனெனில் திருப்பூர் நகர நீர் சேவைகளில் ஈடுபட 90களிலேயே பெக்டல் நிறுவனதிற்கு தமிழக அரசு அனுமதித்திருந்தது. பவானி ஆற்றிலிருந்து குழாய் மூலமாக நீர் உறுஞ்சப்பட்டு நகர நீர் விநியோகத்தில் ஈடுபட்ட பெக்டல் நிறுவனம் லாபத்தை குவித்தது. முன்னதாக நீர் விநியோகத்தை ஏற்கும் தனியார் நிறுவனகங்களுக்கு மக்களிடம் கட்டணம் பெற்றுகொள்ள அரசு சலுகை வழங்கிய போதிலும் குழாய் அமைப்பது மற்றும் மராமரத்துப் பணிக்கான செலவை தனியார் நிறுவனங்களே ஏற்கும் வகையாகவே மேற்குலகில் ஒப்பந்தங்கள் போடப்பட இந்தியாவிலோ அதீத சலுகை என்ற ஏற்பாட்டின்பேரில் நீர் விநியோகத்திற்கான அனைத்து கட்டுமான மராமரத்து செலவையும் அரசே ஏற்றது. தனியார் -அரசு கூட்டு ஒப்பந்தம் என்ற போர்வையில் நிகழும் இவ்வராஜக நீர் சேவைகள் இந்தியாவில் திருப்பூர்,பெங்களூரு,நாக்பூர்,விசாகப்பட்டினம்,ஆக்ரா எனப் பெரும்பாண்மையான நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. இதன் உச்சகட்டமாக சத்தீசுக்கர் மாநிலத்தில் உள்ள “சியோனாத்” என்ற ஆற்றின் இருபத்தேழு கி.மீ நீளத்திற்கான நீர் உரிமையை இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை என்னெவென்று சொல்வது ! காலம் காலமாக அப்பகுதியில் மீன் பிடித்து வந்து மரபு உரிமைக்கூட அந்நிறுவனங்களால் பறிக்கபட்டது. சூயஸ், பெக்டல் போன்ற நிறுவனங்கள் தமிழக நகரங்களில் தங்களின் கிளைகளை ஊன்றி வரும் வேகத்தைப் பார்கையில் நம் காவிரியும் வைகையும் தாமிரபரணியும் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை எனலாம். முன்னதாக அதீத மணல் கொள்ளையாலும் வரைமுறையற்ற கழிவுகளாலும் குற்றுயிரும் கொலையுருமாக உள்ள நம் ஆறுகளின் நிலைமை நீர் சேவை நிறுவனங்களின் எழுச்சியால் விரைவில் காணாமல் போகும் நிலைமையே வரலாம். பொலிவிய நகரங்களான லா பாசு மற்றும் கோச்சம்பாவில் தனியார்மயமாக்கப்பட்ட நீர் விநியோகத்திற்காக எதிராக போர்க்குணமிக்க போராட்டங்களை முன்னெடுத்த அம்மக்களின் எதிர்ப்பால் பெக்டல் நிறுவனம் விரட்டியடிக்கப்பட்டது போல நாமும் நீருக்கான உரிமைப் போராட்டத்தை காலந்தாழ்த்தாமல் முன்னெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம். ஆனாலும் இப்போராட்டங்கள் அரசை ஒரு சனநாயக கட்டுப்பாட்டில் வைப்பதற்கான தற்காலிகமாக முயற்சியாக மட்டுமே இருக்க முடியும். தனியார்மயமாகும் நீர் விநியோகத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் நிகழ்கிற வாதப்பிரதிவாதங்களில் அரசை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தது கூட தற்காலிக ஆறுதல்தான்! இவ்வாதத்தில் நீதிபதி கூறுகிறார் “இந்தியா போன்ற சனநாயக நாட்டில் தண்ணீர் மீதான அரசின் கட்டுப்பாட்டை விலக்கி தனியார்மயமாக்குவது என்பது தண்ணீருக்கான குடிகளின் உரிமையைப் பறிப்பதாகும்”. மேலும் அவர் கூறுகிறார் “அரசியல் சாசனத்திற்கு மேலானது எதுவுமில்லை. தண்ணீர் மீதான தன் உரிமையை விலக்கி அதை தனியார் நிறுவனங்களுக்கு கையளிக்க முனைகிற அரசின் செயல்பாடானது மதசார்பற்ற, சனநாயக இந்தியா என்று முன்மொழிகிற அரசியல் அமைப்புச்சட்டத்தை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும்.” இவ்வாறு நீர் விநியோகத்தை தனியார்மயப்படுத்தல் விவகாரத்தை கடுமையாக சாடும் நீதிபதிகள் நவீன மறுகாலனியாக்கதிற்கான குற்றவியல் பொருளாதர கட்டமைப்பை விமர்சிக்காமல் கள்ள மௌனம் சாதிப்பது வெள்ளிடைமலை.

“முதலாளித்துவம் அகற்றப்படவில்லையெனில் அதனால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பெரும் உற்பத்தி சக்திகள் அழிவுச்சக்திகளாக உருமாறும்” என 150 ஆண்டுகளுக்கு முன்பாக கார்ல் மார்க்சு அவதானித்தது மிகச்சரியாக இன்றைய சந்தைப்பொருளாதார கட்டத்தில் மெய்மையடைந்துள்ள வேலையில், நிலவுகிற முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை அப்புறப்படுத்தாமல் நீடித்த மனித மேம்பாட்டிற்கும் சமூக நீதிக்கும் இயற்கை வளப்பாதுகாப்பான மாற்று முகாம் என்பது சாத்தியமற்றதே.

குறிப்புகள்:
1)நீராதிபத்தியம்-எதிர் வெளியீடு
2)உலக நிதி மூலதனம்-பிரபோத் பட்நாயக்(பாரதி புத்தகாலயம்)
3)A Brief History of Neoliberalism-David Harvey
4)http://www.thehindu.com/news/cities/Delhi/water-privatisation-is-not-for-india/article4528871.ece

– அருண் நெடுஞ்செழியன்
arunpyr@gmail.com


(இக்கட்டுரை சஞ்சிகை – 2014 செப்டம்பர் இதழில் வெளியானது)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s