ரோமுலஸ் விட்டேகர்

பாம்பு என்று சொல்லும் போதே பல மனிதர்களுக்கு உள்ளூர பயம் அப்பிக் கொள்ளுகிறது. இதன் வெளிப்பாடாக பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற சொலவடைகள் தமிழ்சமூகத்தில் புழங்கப்பட்டு வருவதை குறிப்பிடலாம். இன்றும் பல்லிகளைக் கண்டு ஒவ்வாமையில் பலர் தகிக்கிறார்கள். தலையில் விழுந்தால் என்ன பலன், தொடையில் விழுந்தால் என்ன பலன் என பல்லி விழுந்த கணத்திலேயே பஞ்சாகத்தை பார்க்க கிளம்பிவிடுகிறார்கள். ஆந்தைகள் அலறினால் வீட்டுக்கு ஆகாது. வௌவால் அடைந்தால் வீடு விளங்காது. ஆமை புகுந்த வீடு உருப்படாது, ஆண்மை விருத்திக்கு தேவாங்கு லேகியமும், சிட்டுக்குருவி லேகியமும் அற்புத மருந்து என இன்னும் எத்தனை எத்தனையோ காட்டுயிர்கள் குறித்தான மூட நம்பிக்கைகள் தமிழ்ச்சமூகத்தில் பரவலாக நிலவுகிறது. காட்டுயிர் உணவுச்சங்கிலியில் முக்கிய கண்ணிகளான இவ்வுயிரினங்கள், மனிதர்களின் மூளையில் எதிர்மறை சிந்தனையாக வலுவாக உறுதிபடுவதற்கு நம்மைச் சுற்றியுள்ள பல்லுயிரினங்களின் வாழ்வியல் குறித்தான அறிவியல் கண்ணோட்டமற்ற சிந்தனைப்போக்குதான் காரணமாகிறது. இதனால் தான் அற்புதமான இவ்வுயிரினங்கள், மனிதர்களுக்கு தீங்கு செய்வதற்காக மட்டும்தான் பரிணமித்துள்ளது என்கிற பிற்போக்கான சிந்தனையோட்டத்திற்கு அடித்தளமைக்கிறது.

பல்லுயிரியம் குறித்த அரசின் கரிசனத்தை இங்கு சொல்லத்தேவையில்லை. ஒருபக்கம் உள்ளூர் வணிகர்களுக்கு காடுகளை பலிகொடுத்து மறுபக்கம் இலட்சம் மரங்களை நடுகிற முரணை என்னவென்று சொல்வது. வேளாண்மையில் வளர்ந்த நாடுகளின் இசைவிற்கேற்ப வேதியல் பூச்சிக் கொல்லிகளை நமது வேளாண்குடிகளிடம் பலவந்தமாகத் திணித்து உழவனின் குடியை கெடுக்கிறது. வயல்வரப்பில் கலந்த களைக்கொல்லியால் வேளாண் நிலத்தை அண்டி வாழுகிற பூச்சி பறவை எலி பாம்புகள் என பல்லுயிரியத்தையும் அழித்ததை சூழல் சமன்பாட்டுக்குலைவாகவும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. இது அரசின் இயற்கை பாதுகாப்பு, சூழல் குறித்த எதார்த்த நிலையை எடுத்துக்கூறுகிற சில சான்றுகள். நிற்க.

பல்லுயிரிய வளத்தையும் அதன் நுட்பமான வலைப்பின்னலையும் நாம் புரிந்துகொள்ள முதலில் அவ்வுயிரினங்கள் குறித்தான தப்பெண்ணங்களை நாம் களைவது அவசியமாகிறது. குறிப்பாக, பாம்புகள் போன்ற ஊர்வன விலங்குகள் குறித்தான அச்சம் கலந்த பய உணர்வைப் போக்குவதும், சூழலியல் மண்டலத்தில் இவ்வுயிரினங்களின் முக்கியப் பங்களிப்புக் குறித்தானப் புரிதலைப் பரவலாக்குவதும் காட்டுயிர் ஆர்வலர்களின் முதன்மைக் கடமையாக உள்ளது. அவ்வகையில் மூடநம்பிக்கைகளின் திரட்சியாக இருக்கின்ற இந்திய சமூகத்தில் இது குறித்தான முன்னெடுப்பு என்பது ஓர் அசாதாரண முயற்சி என்றே சொல்லலாம். அவ்வகையில் இந்தியப் பாம்புகள் மற்றும் ஊர்வன குறித்தான வாழ்வியலை அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியவிதத்தில் ரோமுலஸ் விட்டேகரின் பங்களிப்பும் அர்ப்பணிப்புணர்வும் நம்மை மலைக்க வைக்கிறது. தனது வளர் இளம்பருவத்தில் இந்தியாவிற்கு வருகிற ரோமுலஸ், அதன் பிறகான தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இந்தியக்கிராமங்களில் பாம்புகளைத் தேடுவதிலும் அது குறித்தான ஆய்வுகளிலும் செலவிடுகிறார்.

ரோமுலஸ் விட்டேகர் 1943 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார். தாயார் டோரிஸ் நோர்டன் ஒரு ஓவியர், தந்தை அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்தார். அவர்களுக்குள் விவாகரத்து ஆனபின் ரோமுலசின் தாயார் இந்தியரான சார்ந்தரமை மணந்து கொள்கிறார். அதன்பின் 1951 ஆம் ஆண்டில் ரோமுலசின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்கிறது. கொடைக்கானல் சர்வதேச பள்ளி, வியோமிங் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற ரோமுலஸ் 1989 ஆம் ஆண்டில் பசிபிக் மேற்கு பல்கலைக்கழத்தில் காட்டுயிர் பேணல் துறையில் இளங்கலை பட்டம் பெறுகிறார்.

05.Romulas article_image3ஐந்து வயதில் அமெரிக்காவின் நியூயார்க் வடக்கு மாகாணத்தில் வசிக்கும் போது அங்கிருக்கும் விடமற்ற பாம்புகளை பிடித்து வந்து செல்லப்பிராணியாக வளர்க்கத் துவங்கிய ரோமுலசுக்கு பூச்சிகள் சிலந்திகள் மீதான ஆர்வத்தினை விட பாம்புகள் மீதான லயிப்பு அதிகமாக இருந்தது. இதுவே பின்னாட்களில் சென்னை பாம்புப் பண்ணையை உருவாக்க வித்திட்டது.

ஆம், இன்று சென்னை அடையாரில் உள்ள சென்னை பாம்புப் பண்ணையை 1970-ஆம் ஆண்டில் துவக்கியவர் ரோமுலுஸ் விட்டேகர். இப்பண்ணையானது, பாம்புகள் குறித்தான விழிப்புணர்வையும் பாதுகாப்பையும் முன்னெடுப்பதோடு பாம்புகளைச் சார்ந்து தங்கள் வாழ்வாதரங்களை அமைத்துக்கொண்ட இருளர் சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்கிறது. அதாவது பாம்புகளின் தோள்களை விற்று வாழ்வை நடத்தி வந்த இருளர்கள், பாம்பு தோள்களை விற்பதற்கான தடை உத்தரவு வந்த பிற்பாடு செய்வதறியாமல் நின்றிருந்தனர். இந்நிலையில் விஷ முறிவு மருந்திற்காக பாம்புகளைப் பிடித்து விஷத்தினை சேகரிக்கும் வழக்கத்தின் வாயிலாக அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை உறுதி செய்த விதத்தில் ரோமுலசின் முயற்சி என்றும் போற்றத்தக்கது.

05.Romulas article_image2பாம்புகளோடு மட்டும் ரோமுலஸ் தனது ஆர்வத்தை சுருக்கிக்கொள்ளவில்லை. அவரின் ஆர்வம் முதலைகளின்பால் திரும்பியதன் விளைவாக 1976-ஆம் ஆண்டில் மெட்ராஸ் முதலை வங்கி உருவாகிறது. முதலைகளின் தோல்களுக்காக வேட்டையாடப்பட்டு அருகிவந்த அதன் எண்ணிக்கையை உயர்த்தவும் முதலைகள் குறித்தான விழிப்புணர்வை பரவலாக்கவும் இம்முயற்சியை அவர் மேற்கொண்டார். இதன் விளைவாக தற்போது பதினான்கு வகை முதலைகளும் பதினான்கு வகை ஆமைகளும் மற்றும் பல்லிகள் பாம்புகளின் புகலிடமாக மெட்ராஸ் முதலை வங்கி திகழ்கிறது. முன்னதாக முதலைகளுக்கான பண்ணை அமைத்து அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு முதலைகளை காட்டுயிர் சூழலில் பாதுகாக்க விருப்பம் கொண்டிருந்தார் விட்டேகர். மாறாக ரோமுலசின் இத்திட்டத்திற்கு அரசு இயந்திரம் செவிமடுக்கவில்லை. இச்சூழலில் இருளர் இன மக்களின் உதவியுடன் முதலைப்பண்ணை திட்டத்தினை ரோமுலுஸ் முன்னெடுத்தார். தற்போது முதலை வங்கிகளில் உள்ள முதலைகள் இடும் ஆயிரக்கணக்கான முட்டைகளை இந்த மக்களுக்கு வழங்கி அவற்றின் அழிவிலிருந்து காக்கும் வகையிலான திட்டங்களை முறைப்படுத்தியுள்ளார்.

தற்போது ரோமுலஸ், கேரளாவின் ஆகும்வேவில் மழைக்காடு ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவி, மழைக்காடுகளின் பாதுகாப்பு குறித்த கல்வியையும் விழிப்புணர்வையும் மாணவர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் கொண்டு சேர்த்துவருகிறார்.

05.Romulas article_image1 - Copyதனது அயராத பணிக்காக ரோமுலஸ் விட்டேகர் 2005 மற்றும் 2006-ஆம் ஆண்டுக்கான விட்லே விருதினைப் பெற்றுள்ளார். சாஞ்சுரி “ஏபிஎன் ஆம்ரோ (ABN AMRO) வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றுள்ளார். காட்டுயிர் தொடர்பான தனது அனுபவங்களை தொகுத்து பத்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மேலும் ரோமுலுஸ் சிறந்த காட்டுயிர் ஆவணப்பட இயக்குனரும் கூட. பி.பி.சி மற்றும் நேஷனல் ஜியாகரபிக்காக அவர் எடுத்த ஆவணப்படங்கள் பல விருதுகளை பெற்றுள்ளன. குறிப்பாக கருநாகம் குறித்த அவரின் ஆவணப்படம் சிறந்த படத்திற்கான எமி விருது பெற்றது குறப்பிடத்தக்கது. பாம்புகள், பல்லிகள் முதலைகள் போன்ற காட்டுயிர்கள் மேல் அச்சம் கொண்டிருந்த மனிதர்களை ஐயமற்று அவைகளிடம் அணுகிட பெருங்காரணமாக இருந்த ரோமுலசின் இந்திய காட்டுயிர் துறைக்கு செய்த பங்களிப்பு அசாதாரணமானது.

ரோமுலஸ் சொல்வது இதுதான் “ஊர்வன, நீர்நில வாழ்விகள் உலகின் மிக அழகுமிகுந்த உயிரினங்கள் ஆகும். இவ்விலங்குகள் அருமையானவை, உபயோகமானவை என்ற விழிப்புணர்வை தொடர்ச்சியாக வளர்த்தெடுப்பது மிகக்கடினமான பணியாகும். இயற்கையின் அற்புதங்கள் குறித்து, பெரும்பாலும் வயதானவர்கள் சிந்திப்பதில்லை. சிந்தனை குழந்தைகளிடம்தான் உள்ளது. மேலும் காட்டுயிர்கள், காட்டுயிர் வாழ்நிலைகளின் உயிர்பிழைப்பிற்கு நாம் பொறுப்பாளர்கள் என்பதை குழந்தைகளுக்கு சிந்திக்க வையுங்கள்.”

– சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s