நெஞ்சில் பதிந்த மிளிர்கல்

e0aeaee0aebfe0aeb3e0aebfe0aeb0e0af8de0ae95e0aeb2e0af8d

நாம பூம்புகாரிலிருந்து காவிரிக்கரையோரமா கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் நடந்த பாதையில் ஶ்ரீரங்கம். அங்கிருந்து மதுரை. அதுக்கப்புறம், எல்லாத்தையும் பறிகொடுத்துட்டு தன்னந்தனியா வலியும் வேதனையும், தாங்கமுடியாத கோபமுமா மலைமேல் நடந்த பாதை வரைக்கும் போறோம். வழிகேக்கறதுமாதிரி வழில நடக்கற எல்லாச் சம்பவங்களையும் சேர்த்து இயல்பான காட்சிகளோட ஒரு ட்ராவல் ஃபிலிமா எடுக்கணும். இடையிடையே சிலப்பதிகாரத்துல வர்ற காட்சிகளையும் காட்டலாம்னு நெனைக்கிறேன்.  

– முல்லை கூற்றாக மிளிர்கல் நாவலில்

மதுரையின் அதிதீவிர இரசிகனான எனக்கு கண்ணகியைப் பிடிக்காது. ஜெயமோகனின் கொற்றவை வாசித்த பிறகு கண்ணகியின் மீதான வெறுப்பு குறைந்தது. இரா.முருகவேளின் மிளிர்கல் வாசித்ததும் கண்ணகியை இக்கதையின் தலைவியாக ஏற்கும் பக்குவம் வந்துவிட்டது. கதைமாந்தர்களான முல்லை, நவீன், பேராசிரியர் ஶ்ரீகுமார், கண்ணன் இவர்களோடு நாமும் பயணிக்கலாம்.

முல்லை டெல்லியில் வாழும் தமிழ்ப்பெண். அவளுடைய அப்பா சொன்ன கதைகளினூடாக கண்ணகி முல்லையை ஆட்கொள்கிறாள். ஜர்னலிசம் படித்துவிட்டு பணிபுரியும் முல்லைக்கு கண்ணகி சென்ற பாதையை ஆவணப்படமாக எடுக்க வேண்டுமென்று ஆசை. தமிழகத்தில் வாழும் தன்னுடைய நண்பனான நவீனைத் தொடர்பு கொண்டு ஆவணப்படம் எடுக்க உதவி கேட்கிறாள். புரட்சிகர இயந்திமாக வாழும் நவீன் மக்களைப் புரிந்து கொள்ள இப்பயணம் உதவும் என்ற நோக்கில் சரியென்கிறான். இவர்களோடு தமிழகத்தில் கிடைக்கும் இரத்தினக்கற்கள் குறித்து ஆய்வு செய்து வரும் பேராசியர் ஶ்ரீகுமாரும் இணைகிறார். புகாரிலிருந்து கொடுங்களூர் வரையிலான விறுவிறுப்பான இந்தப் பயணத்தில் நம்மையும் இழுத்துச் செல்கிறது இரா.முருகவேளின் எழுத்து.

சிலப்பதிகாரம் நடந்த கதையா? புனைவா?. கண்ணகி கதையை மீனவர்களும், பழங்குடிகளும் தொடர்ந்து தங்கள் வடிவில் சொல்லிக்கொண்டே வருவதன் காரணமென்ன? கண்ணகியை போற்றி வழிபட காரணமென்ன? கண்ணகி மதுரையை எரித்தது உண்மைதானா? கோவலர் என்ற பெயர் கொங்கு பகுதியிலுள்ள பழங்குடி இடையர்களின் பெயர். மேலும், கண்ணகி சிலப்பதிகாரத்தில் கொங்கர் செல்வி என்றழைக்கப்படுகிறாள். இரத்தினக்கற்கள் காங்கேயம் பகுதியில் கிடைக்கின்றன. இதிலிருந்து கோவலன் கண்ணகியின் பூர்வீகம் கொங்குப் பகுதியாக இருக்குமோ? எனப் பலவிதமான கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது இந்நாவல். முல்லையின் கேள்விகளுக்கு பேராசிரியர் ஶ்ரீகுமாரின் பதில்கள் சிலப்பதிகாரம் மீது நமக்கும் புரிதலை ஏற்படுத்துகிறது.

மக்கள் பிரச்சனைகளுக்கு போராடும் போது நாம் ஏன் இறுதியிலேயே செல்கிறோம். முன்னரே இந்தப் பிரச்சனைகளைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கலாமே?, பிளாஸ்டிக் கப்களில் டீ கொடுப்பது தீண்டாமையின் புதிய முகமாயிருப்பது, பெரிய நிறுவனங்கள் சமூகப்பணிகளில் இறங்குவது தங்கள் ஆதாயத்திற்குத்தான் என்ற உண்மையை விளக்குவது, அந்தக் காலத்தில் வறுமை இல்லையா?, கொடுங்களூர் பகவதி கோயிலில் ஏன் பாலியல் கலந்த பாடல்கள் அம்மனை நோக்கி பாடப்படுகிறது? என்ற சந்தேகங்களும், கேள்விகளும் நவீன் வாயிலாக வெளிப்படுகிறது.

காங்கேயம் பகுதியில் கிடைக்கும் இரத்தினக்கற்களைத் தேடித்திரியும் கிருஷ்ணசாமி இதற்காக காசை தண்ணீராக செலவளிக்கிறார். இறுதியில் அந்தப் பகுதி அரசியல்பெரும்புள்ளியிடம் சேர்ந்துவிடுகிறார். அரசியல்வாதி அந்தப் பகுதியில் பெருநிறுவனம் வரப்போகிறது எனும் போது அதை எதிர்ப்பது, அவர்களுக்குள் ஒப்பந்தங்கள் ஏற்பட்டு அதைக் கைவிடுவது, கிருஷ்ணசாமியை வைத்து பேராசிரியர் ஶ்ரீகுமாரை கடத்தி பயம் ஏற்படுத்துவது, அங்குள்ள விவசாயிகள் கேம்ப் கூலிகளாக திருப்பூர் செல்வது என காங்கேயத்தின் மற்றொரு முகத்தையும் மிளிர்கல் பதிவு செய்கிறது.

வேர்களைத் தேடும் பயணத்தில் என்ன மாதிரியான இடர்கள் ஏற்படும் அதைத் தாண்டி நாம் எப்படி பயணிக்க வேண்டும் என்பதை நமக்கு இந்நாவல் கற்றுத் தருகிறது. மீனவர்கள் கண்ணகியைப் பாண்டியன் மகளென கதைசொல்வது மற்றும் பழங்குடிகள் மீனாட்சிதான் கண்ணகி எனக் கதைசொல்வது போன்ற விசயங்கள் மிளிர்கல் வாயிலாக அறிந்தேன். கண்ணகியின் பாதையில் பயணிக்கத் தொடங்கி இறுதியில் காங்கேயம் கற்களை நோக்கித் திரும்புகிறது முல்லையின் பார்வை. நவீனுக்கும் முல்லைக்கும் இடையில் இனி காதல் பூக்க வாய்ப்பிருப்பதை இறுதியில் மெல்ல சொல்லிச் செல்கிறார். ஶ்ரீகுமார் நேமிநாதன் என்ற பெயர் சமணர்களுடையது. எனக்கு கவுந்தியடிகளாக ஶ்ரீகுமாரும், கோவலன் கண்ணகியாக நவீனும் முல்லையும் தோன்றுகிறார்கள்.

 

திருச்சி, மதுரை, திருச்சூர் போன்ற ஊர்களில் வசிக்கும் பெண்கள் எல்லோரும் அடக்க ஒடுக்கமாக இருப்பது போல டெல்லியில் வாழும் முல்லைக்குத் தோன்றுகிறது. மேலும், மதுரையும்  திருச்சியும் ஒரே மாதிரியிருப்பதாக உணர்கிறாள். மதுரையில் தோழர் கண்ணன் உதவியோடு கோவலன் பொட்டல், யாதவர்கோயில் போன்ற இடங்களையும், சாந்தலிங்கம் அய்யாவையும் பார்க்கிறார்கள். மதுரையில் உள்ளவர்கள் ஓரளவு உள்ளூர் வரலாற்றை அறிந்திருப்பது போன்ற விசயங்கள் நாவலில் பதிவாகியுள்ளது.

சிலப்பதிகாரத்தை உரையோடு வாசிக்க வேண்டும். மதுரை குறித்த பகுதிகளைப் படித்து அலைய வேண்டும் என்ற புதிய ஆசையையும் இந்நாவல் ஏற்படுத்திவிட்டது. நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் இரா.முருகவேளின் உழைப்பு மிளிர்கிறது. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா வரும் பகுதிகள் மிகவும் இயல்பாக அமைந்துள்ளது. அவருடைய எளிமையும், வரலாற்றுப் புலமையும் நாவலில் மிக அருமையாக பதிவாகியுள்ளது. பூம்புகார், ஶ்ரீரங்கம், திருச்சி போன்ற இடங்களுக்கு இளமையில் சென்றிருக்கிறேன். இந்நாவல் வாசித்ததும் மீண்டும் அவ்விடங்களுக்குச் செல்ல வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது.

மிளிர்கல் – இரா.முருகவேள், பொன்னுலகம் பதிப்பகம், விலை ரூ200.

— சித்திரவீதிக்காரன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s