மலையாள சினிமா: “1983”

பால்யகால சகி வெறும் நாவல் மட்டும்தானா? வெறுமனவே அதை படித்து முடித்து மூடிவைத்துவிட முடியுமா? தன்னை மஜீதாகவும், சுகராவாகவும் தொடர்பு படுத்திக்கொள்ள முடியாமல் வாசித்துவிட முடியுமா என்ன? ஏனென்றால் அதில் எழுத்தையும் மீறி இயல்பானதொரு வாழ்க்கை இருக்கிறது, காதல் இருக்கிறது. திரைப்படங்களும் அப்படி ஒரு தாக்கத்தை உண்டு பண்ண முடியும் என்று உணர்த்திய ஒரு படம்தான் ‘1983’.

1983-ம் ஆண்டு. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பையை வென்ற ஆண்டு. இந்தியா முழுவதும் சந்து பொந்துகள் எங்கும் கிரிக்கெட் ஒரு நோயைக் காட்டிலும் தீவிரமாக பரவத்தொடங்கிய காலம். தெருவெங்கும் கிரிக்கெட் முளைக்கிறது, இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாக மாறத் தொடங்கிய காலம். இளைஞர்களும், சிறுவர்களும் கையில் பேட்டும் பந்துமாக வெயில் மழை பாரமல் திரிந்தனர். எல்லோருக்கும் கபில்தேவ் ஆவதுதான் கனவு. அப்போது சச்சினுக்கு 10 வயது, அதே வயதில் கேரளாவில் பிரம்ம மங்கலம் எனும் சிறு கிராமத்தில் சாலிடர் டி.வியில், தூர்தர்ஷனில் தன் சகாக்களோடு கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் ரமேஷனின் கதைதான் இது. இந்தியா – கிரிக்கெட் – 1985-95, இந்த மூன்றிற்கும் தொடர்புடைய ஒவ்வொருவருக்குமான படம்தான் இது.

இது கிரிக்கெட்டின் கதையல்ல, சச்சினின் கதையுமல்ல. ஆனால் கிரிக்கெட்டை சுவாசமாகவும் சச்சினாவதை கனவாகவும் கொண்டவர்களின் கதை. சுருங்க சொன்னால் சச்சினாகாத சச்சின்களின் கதை.

ரமேசன் ஒரு சரியான கிரிகெட் பைத்தியம், கிரிக்கெட்டிற்காக எதையும் துறக்கத் தயாரானவன். சொந்தமாக லேத் பட்டறை நடத்தி வரும் அவனது தந்தைக்கோ அவனை பெரிய இன்ஜினியராக ஆக்கவேண்டுமென்பது கனவு, ஆனால் அவரது கனவெல்லாம் ரமேஷனின் பத்தாம் வகுப்புத் தேர்வோடு முடிந்து போகிறது. தேர்வில் தோற்ற அவனை தன்னுடன் ஒர்க்‌ஷாப்பில் உதவிக்கு வைத்துக் கொள்கிறார். எந்நேரமும் தன் சகாக்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டு தனக்கு நன்றாக வருகிற படிப்பையும், தான் ஆத்மார்த்தமாக காதலித்த தன் காதலியையும் கைவிட நேருகிறது. அனாலும் அது அவனை எங்கேயும் தொய்வுபடுத்துவதில்லை, வழக்கம்போல லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு, பந்துகளை சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விரட்டிக் கொண்டுதான் இருக்கிறான். அவனது எல்லா காயங்களுக்கும் இந்த கிரிக்கெட்டும் அதன் வெற்றியுமே மருந்தாக இருக்கிறது.

காலம் ஓடுகிறது, ரமேஷனனுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கேற்ப ஏதோவொரு வேலையில் இருக்கின்றனர். அவனது காதலிக்கு திருமணம் ஆகிறது, நண்பர்களின் வற்புறுத்தலில் அவனுக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால் அவன் மனைவியோ முதலிரவில் சுவற்றில் மாட்டியிருக்கும் சச்சின் படத்தை பார்த்து, இது யாரென்று கேட்குமளவிற்கு ஒரு சராசரி கிராமத்துப் பெண். திருமணத்திற்கு பின் தந்தையின் லேத்தை ரமேசன் நடத்துகிறான், மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் இப்ப்டி எல்லாவற்றையும் சரி செய்யும் மெக்கானிக்காக இருந்து கொண்டு, தன் பால்ய நண்பர்களோடு சேர்ந்து கிரிகெட் மேட்ச்களை டீவியில் பார்ப்பதும், தன் வயதுக்கு குறைவான சிறுவர்களோடு சேர்ந்தாவது கிரிக்கெட் விளையாடிக்கொண்டிப்பதுமாக, தான் நினைத்த வாழ்க்கை கிடைக்காவிட்டாலும், கிடைத்த வாழ்க்கையை எந்தப் புகாருமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஒருநாள் தற்செயலாக தனது ஏழு வயது மகன், தென்னை மட்டையால் பந்தை அடித்து விளையாடுவதையும், அவனுடைய பேட்டிங் ஸ்டைலையும் கவனிக்கிறான். தன் கனவு முடிந்துவிடவில்லை என்பதை உணர்கிறான், மீண்டும் தன் தந்தையின் ஏச்சுப் பேச்சுகளுக்கிடையே தன் மகனுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கிறான். தன் சிறுவயது நண்பன் மூலம் ஒரு கிரிக்கெட் கோச்சின் அறிமுகம் கிடைக்க, தன் ஏழ்மையான சூழலிலும் வாரம் இருமுறை அருகிலிருக்கும் நகரத்தில் அவரிவம் பயிற்சிக்கு அனுப்புகிறான். தான் வாழ்க்கையாக அனுபவித்த கிரிக்கெட்டின் வளர்ச்சியை நகரத்தில் அறிகிறான்.

வாழ்வில் தோற்றுப்போன ஒருவனாகவே தன் குடும்பத்தினரால் கருதப்பட்டு வந்த ரமேஷனின் தொடர் போராட்டங்கள், சிலவருடங்களில் அனைவராலும் புரிந்து கொள்ளப்படுகிறது. உடனே எந்த அதிசயமும் நடந்து விடுவதில்லை, தொடர்ந்து ரமேஷன் தன் மகனுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிப்பதுவும், அதற்கான முயற்சிகளுமே மீதமுள்ள படம். மகனை கிரிக்கெட் விளையாட ஊக்கப்படுத்துவதும், அந்த ஏழைத் தந்தை தன் மகனுக்கு கிரிக்கெட் கோச்சிங் கொடுக்க எடுக்கும் முயற்சிகளும்தான் மீதிப் படம்.

‘என் மகனுக்கும் கிரிக்கெட்தான் கனவு, அவன் அதை அடைய நெடுதூரம் பயணிக்க வேண்டும், அவனது சிறுகால்களால் அவன் அதைக் கடப்பான், அவன் கைகளைப் பற்றியபடி அவன் பயணம் முழுவதும், நான் அவன் கூடவே இருப்பேன்’ என்கிற ரமேசனின் குரலோடு ‘உன் கனவுகளை நேர்வழியில் துரத்து’ என்ற சச்சினின் வாசகத்தோடும் படம் முடிகிறது.

என் பார்வையில் இது ஒரு நிறைவான படம், இதில் வருகிற அனைத்து கதாப்பாத்திரங்களும் நிதர்சனம். எந்நேரமும் வீட்டில் அப்பா, அம்மா, தங்கை என அனைவராலும் திட்டு வாங்கியும் எதைப் பற்றியும் கவலையின்றி கிரிக்கெட்டை உயிராகப் பார்க்கிற ரமேஷன். தன்னோடு பள்ளியில் படித்த, காதலித்த பெண் கல்லூரி சென்று, டிகிரி முடித்து ஊர் திரும்பும் வழியில் ரமேசனைப் பார்க்கிறாள், அவன் 5 வருடங்களுக்கு முன்பு பார்த்தபடியே சைக்கிள் கேரியரில் கிரிக்கெட் பேட்டை வைத்துக்கொண்டு வயல்களின் நடுவில் சிரித்தபடியே பயணித்துக் கொண்டிருக்கும் ரமேஷன்….

எப்படியாவது இவனுக்கு புரிய செய்துவிடலாம், கிரிக்கெட்டையும் தாண்டி வாழ்க்கையில் வேறும் இருக்கிறது என்று முயன்று, தோற்று, வேறொருவனை திருமணம் செய்து அமெரிக்கா செல்லும் நாயகி…

சச்சினைக் காட்டி இவரைத் தெரியாதாவென கேட்கும்போது, இல்ல, மாமா! நான் ஹிந்தி படமெல்லாம் பாக்குறதில்ல எனும் அவன் மனைவி, கிரிக்கெட் கிட் வாங்க 2500 ரூபாய் வேண்டும் எனும்போது, எனக்கு கிரிக்கெட் கிட்டெல்லாம் தெரியாது ஆனா அத வாங்குற வரைக்கும் நீ தூங்கமாட்டேன்னு தெரியும்ன்னு தன் வளையலை கழட்டித் தரும் அந்த மனைவி…

தனது மகன் கிரிக்கெட் என்கிற பெயரால் தகர்த்துவிட்டான் என்கிற ஆதங்கத்தோடும், பின்னர் தனது பேரனையும், அதேபோல ஆக்கிவிடுவானோ என்கிற எரிச்சலோடும் இருக்கும் ரமேசனின் அப்பா, ஒரு சமயம் ரமேஷன் தனது மகனுக்காக, ஒரு பெளலிங் மெஷினைத் தயாரிப்பதைக் கவனிக்கிறார், ஆனால் அது வேலை செய்யாதிப்பதைப் பார்த்து கலங்கி நிற்கும்போது தன் வெறுப்புகளைக் களைந்து, அனுபவமுள்ள ஒரு ஆசானாக அந்த இயந்திரத்தின் குறைபாட்டை நீக்கி சரிசெய்து தருகிறார். அந்த அப்பா…

சச்சின் விளாயாடுறான், காசு வருது, சரி. நீயேன் விளையாடுற? நல்லா படிக்கிறத விட்டுட்டு விளையாடி விளையாடி இப்ப இந்த நிலையில் இருக்கிறான், இது இந்த புள்ளைய வேறன்ன்னு புலம்பியபடிக்கு வளைய வரும் அம்மா….

மேலும் படத்தில் வருகிற அனைத்து கதாப்பாத்திரங்களும் இப்படி இயல்பாகவே செதுக்கப்பட்டிருக்கின்றன, ரமேசனின் நண்பர்களாக வரும் அனைவரும், கிரிக்கெட் கனவோடு வாழும் பலரை நம் கண் முன்னே நிறுத்துகிறார்கள்.

பொதுவாக மலையாளப் படங்கள் எதைப் பார்த்தாலும் எங்கோ ஏதோவொரு படம் நினைவிற்கு வரும். ஆனால் அதை தங்கள் நேட்டிவிட்டியின் மூலமாக கிட்டத்தட்ட மறக்கடிக்கிற பக்குவம் அவர்களுக்கு உண்டு. ஆனால் இப்படி சில படங்களே இன்னொரு படத்தை நினைவூட்டுவதற்கு பதிலாக என் வாழ்க்கையை, என் நினைவுகளைக் கிளறி விடுகிறது. அவ்வகையில் திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு என்பது மட்டுமில்லாமல் ஒரு அனுபவமாக மாற்றிய படங்களில் 1983க்கும் ஒரு இடம் உண்டு.

– முரளிகுமார்

1983-malayalam-movie

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s