வனவழிகாட்டியுடனான ஒரு நேர்காணல்

02-interview-article_image2

சரணாலயங்களில் வழிகாட்டியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும் வேலை செய்வதென்பது சுலபமானது அல்ல. பெரும்பாலான சுற்றுலாபயணிகள் வழிக்காட்டிகளை மிக சாதாரணமாக, மரியாதை குறைவுடன் நடத்துவர். ஆனால், சிலர் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தங்கள் பணியினை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் 39 வயதாகும் ராமராவ் நெகர். மகாராஷ்டிர மாநிலத்தின் டடோபா கிராமத்தில் உள்ள அம்ரேட் – கர்ஹன்ட்லா சரணாலயத்தில் வழிகாட்டியாக இருக்கும் ராமராவ் நெகரை பிட்டு சேஹல் நேர்காணலுக்காக சந்தித்து உரையாடினார். ராம்ராவின் அறிவும், சமநிலையும் அவரை ஒரு இயற்கையிலாளராக வெளிப்படுத்துகிறது. இந்தியாவில், வனசுற்றுலாவை சூழலியல் பாதுகாப்பிற்கு சிறந்த முறையில் பயன்படுத்தலாம் என திடமாக நம்புகிறார் ராமராவ்.

வக்தோஹ்வின் வீட்டில் வசிப்பது மகிழ்ச்சியாக உள்ளதா? (வக்தோஹ் – டடோபாவில் உள்ள பெரிய ஆண் புலி)
அவன் புலி அல்ல. எங்களுக்கு கடவுள் அவன். கடந்த நான்காண்டுகளில் ‘டெலியா’ பெண்புலியையும், அதன் நான்கு குட்டிகளையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ஆனால், வக்தோஹ்வும் அவற்றுடன் வாழ்கிறது எனவும் தன் இணைக்காகவும், குட்டிகளுக்காகவும் வேட்டையாடித் தருகிறது என்பதையும் வெகுசிலர் தான் அறிவர். தன் குட்டியுடன் வக்தோஹ் நிதானமாக நடந்துசெல்வதை நான் பார்த்திருக்கிறேன். பல ஒளிப்படக்காரர்களுக்கு வக்தோஹ்வை படமெடுக்கவும் உதவியுள்ளேன்.

02-interview-article_image1உங்கள் ஜீவனத்திற்கான வழியாக இயற்கையை எப்போது உணர்ந்தீர்கள்?
தோராயமாக, 10 வருடங்களுக்கு முன்பாக டடோபா தேசிய பூங்காவில் பதிவுசெய்துக் கொண்டபோதுதான். ஆனால், இயற்கையுடனான என் உறவு நவேகான் கிராமத்தில் நான் பிறந்தபோதே தொடங்கியது. அங்கு, புலிகள் சுதந்திரமாக உலாவும். காட்டு மிருகங்களின் இருப்பும், பறவைகளின் ஒலியும் அங்கு வெகு இயல்பாக இருக்கும். அவை எங்களின் தெய்வங்கள். நாங்கள் அவற்றின் மீது மரியாதை வைத்துள்ளோம்; பயமல்ல. விளையும் பயிர்களை உண்ணும்போதுகூட இயற்கையின் கொடையாகத் தான் அவற்றைப் பார்க்கிறோம்.

பிரபலமடையாத முன்னாட்களில் டடோபா பூங்கா எப்படி இருந்தது?
பார்வையாளர்கள் மிக குறைவாக இருந்ததால், வருமானம் சொற்ப அளவே கிடைத்தது. இந்த வருமானத்தில் எப்படி இவன் பிழைப்பை நடத்துகிறான் என என் உறவினர்கள் ஆச்சர்யப்பட்டனர். இவ்வனத்தில் இருப்பதை நான் பெரிதும்  விரும்பினேன். வேறு எதுவும் பெரிதாக தேவைப்படவில்லை. உண்ண உணவு, இருக்க இடம், உலகின் பிற பகுதிகளைப் பற்றிய கவலை இல்லாமல் வாழத் தொடங்கிவிட்டேன்.

இங்கு பணிபுரிய முறையான பயிற்சி பெற்று இருக்கிறீர்களா?
முன்னாட்களில் வனகாவலர்கள், பிற பகுதிகளில் இருந்து வரும் வழிகாட்டிகள், ஏன், பார்வையாளர்களிடமிருந்து கூட ஏராளமாக கற்றுக்கொண்டு உள்ளேன். அனுபவமிக்க இயற்கை ஆர்வலர்களுக்காக காத்திருந்துள்ளேன். ஏனெனில், அவர்கள் எனக்கு பறவைகளைப் பற்றியும், மரங்களைப் பற்றியும், காட்டுயிர்களையும் பற்றியும் நிறைய தகவல்களைத் தருவார்கள். அவற்றிற்காக, ஏதாவது பணம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளேன் (சிரிக்கிறார்). என்னைபோல் இங்கு பணிபுரியும் மற்றவர்களுடன் எங்களுக்குள் உரையாடி சிலவற்றை கற்றுக் கொள்கிறோம். வனத்துறையும் அவ்வபோது பயிலரங்குகளையும், கற்றல் வகுப்புகளையும் நடத்துகிறது.

02-interview-article_image3வனவாழ்க்கை என்பது முன்னாட்களில் நன்றாக இருந்ததா?
இல்லை. பாதுகாப்பு குறைவாக இருந்தது. நகரங்களில் இருந்து மக்கள் பூங்காவிற்கு வெளியே வேட்டையாடினார்கள். சில கிராம மக்களும் அவர்களுக்கு உதவினார்கள். ஏனெனில், காட்டு பன்றிகள் பயிர்களை மேய்ந்துவிடும்; புலிகள், சிறுத்தைகள் போன்ற விலங்குகள் ஆடுகளையும், மாடுகளையும் கொன்றுவிடும். பார்வையாளர்களுக்கான வசதிகள் அப்போது அவ்வளவாக செய்யப்படவில்லை. சிலநேரங்களில், பார்வையாளர்களை மோட்டார் சைக்கிள்களில் வனத்திற்குள் அழைத்துசென்றுள்ளேன்; நடத்தியும் கூட்டி சென்றுள்ளேன். ஆனால், தற்போது பூங்கா சிறப்பாக உள்ளது. புலிகள் அதிகமாக உள்ளன. அவற்றைப் பார்க்க பார்வையாளர்களும் அதிகமாக வருகின்றனர்.

தற்போது பார்வையாளர்கள் அதிகமாக வருவது மகிழ்ச்சி தானே?
இருக்கலாம். ஆனால், சில நேரங்களில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். எல்லோரும் இங்கே அமைதியாக சுற்றிப்பார்ப்பதில்லை.

ப்ராஜெக்ட் டைகர் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின், புதிய சுற்றுலா வழிகாட்டு முறைகள் உங்களை பாதித்துள்ளனவா?
எங்களையா? அவை எங்களை பாதிக்கவில்லை. சொல்லப்போனால், முன்னேப்போதும் இல்லாததை விட தற்போதுதான் வனத்துறை அதிகமாக வழிகாட்டிகளை நியமித்துள்ளது. ஆனால், வழித்தடங்களின் மீதான கட்டுப்பாடு தான் சரியில்லை. பூங்காவினுள் 20 சதவீத தூர அளவே எல்லா வாகனங்களும் செல்ல அனுமதியளிக்கப்படுகின்றன. அதுவும், அதே இடங்களுக்கு தான் எப்பவும் செல்ல வேண்டும். புலிகளைப் பார்க்கும் நேரங்களில் அந்த வழித்தடங்கள் நெரிசலாகி விடுகின்றன. ஏனெனில், எல்லா வாகனங்களும் அங்கேயே தான் இருக்கும். அவ்வேளைகளில் மக்கள் எழுப்பும் குரல்களும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யும். நான் வெறும் வனவழிகாட்டி தான். இவற்றை சமாளிக்க வனஅலுவலர்கள் தான் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

02-interview-article_image5சிலர், வன விலங்குகளை வனசுற்றுலா தொந்தரவு செய்வதாக கூப்பாடு போடுகிறார்களே?
ஆமாம். அது உண்மை தான். பெரும்பாலான பார்வையாளர்கள் புலியைப் பார்த்தாலும் கூச்சலிடுவார்கள்; எந்த விலங்கையும் பார்க்காவிட்டாலும் விரக்தியில் இரைச்சலை ஏற்படுத்துவார்கள். அவ்வேளைகளில், நாங்கள் மரங்களை, வண்ணத்துபூச்சிகளை, பறவைகளை, அவற்றின் ஒலிகளை கவனிக்க சொல்வோம். வெகு சிலர் தான் பொறுமையாக இருப்பார்கள். புலியைப் பார்க்க முடியாததற்கு நாங்கள் தான் காரணம் என எங்களைக் குற்றம் சாட்டுவார்கள்;  தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைப்பார்கள். புலி நம்மை கவனித்துவிட்டது; அதனால் தான் நம் கண்ணில் படவில்லை என நான் சொன்னாலும், புலியை நாம் கண்டுவிட இன்னும் ஆயத்தமாக இருந்திருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

மக்களின் இம்மனநிலை எவ்வாறு மாறும்?
வழிகாட்டிகளால் மாற்ற முடியாது. தங்கும் விடுதிகளிலும், உணவு விடுதிகளிலும், வரும் வழியில் உள்ளூர்வாசிகளும் இங்கு புலிகளை நன்றாக பார்க்க முடியும் என பார்வையாளர்களிடம் சொல்கிறார்கள். இது பார்வையாளர்களின் ஆவலை மேலும் அதிகப்படுத்திவிடுகிறது. தாங்கள் கதவைத் தாண்டி உள்ளே வந்ததும், பூங்காவின் சாலைகளில் புலிகள் நின்று கொண்டு வரவேற்க வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தாண்டியும் வாகனங்களில் சென்று மறைந்திருக்கும் புலிகளைத் தேடிக் கண்டுபிடித்து தங்களுக்கு காட்ட வேண்டும் என்று பணம் கொடுப்பார்கள். அப்படி சென்றாலும் புலிகளை காண முடியாது என்று சொன்னாலும் நாங்கள் வேண்டுமென்றே புலிகளை ஒளித்து வைத்துள்ளதைப் போல கோபப்படுவார்கள். பூங்காவின் விதிமுறைகளை பொறுமையாக எடுத்து சொன்னாலும் கேட்க மாட்டார்கள். எதற்கு இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்பது கூட மக்களுக்கு ஏன் தெரிவதில்லை என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. நிர்வாக தேவைகளுக்காக வனத்தின் சில பகுதிகள் எப்போதும் சுற்றுலாவுக்கென அனுமதிப்பதில்லை. வாகனங்களை தனித்தனியாக பூங்காவினுள் அனுமதியளித்தால், தொந்தரவுகள் வெகுவாக குறையும்.

வன சுற்றுலா குறித்து உங்களிடம் யோசனைகள், கருத்துகளை பூங்கா நிர்வாகம் கலந்தாய்வில் ஈடுபடுமா?
கலந்தாய்வு என்று சொல்லமுடியாது. ஆனால், அவர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யும்போது எங்கள் யோசனைகளை சுதந்திரமாக சொல்வோம். பார்வையாளர்கள் பூங்காவினுள் ஒளிப்படக்கருவிகளை உபயோகிக்க, வசூலிக்கப்படும் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து சொல்லி வந்தனர். இவற்றை நாங்கள் நிர்வாகத்தினரிடம் சொல்லியதால், சமீபத்தில் ஒளிப்படக்கருவிகளுக்கான கட்டணங்களை 500 ரூபாயாகவும், நீண்டவிழியாடிகளுக்கான (long lenses) கட்டணங்களை 200 ரூபாயாகவும்  குறைக்கப்பட்டுள்ளன. வனத்துறையினருக்கு நாங்கள் தான் கண்களாகவும், காதுகளாகவும் செயல்படுகிறோம். தவறாக ஏதாவது தென்பட்டால், உடனடியாக வனகாவலர்களிடமும் (Forest Guards), காட்டு இலாகா அதிகாரிகளிடமும் (Rangers) தெரியப்படுத்தி விடுவோம். நாங்கள் வெறும் வனவழிகாட்டிகள் மட்டும் அல்ல; பூங்காவின் பாதுகாவலர்களும் நாங்கள் தான். அதிகாரிகளால் காட்டின் எல்லா இடங்களுக்கும், எப்போதும் செல்ல முடியாது. சுற்றுலா வாகனங்களில், பார்வையாளர்களுடன் செல்வதால் எங்களால் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

02-interview-article_image4பூங்கா அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் உங்களை மரியாதையாக நடத்துகிறார்களா?
சிலர் அதிக மரியாதையுடன் எங்களிடம் நடந்து கொள்வார்கள். சிலர் மதிக்கவே மாட்டார்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். சொல்லப்போனால், எங்களை மரியாதையாக நடத்த வேண்டும். இந்த பூங்காவின் தூதுவர்கள் நாங்கள். பறவைகளையும், விலங்குகளையும் சுட்டிக்காட்டுவதும், வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு பாதைகளை காட்டுவதும் மட்டுமே எங்கள் வேலை அல்ல. எண்களின் பண்பாடுகளையும், இப்பூங்காவின் வரலாற்றையும் தெரிந்துக்கொள்வதில் சிலர் வெகு ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் எங்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். சிலர், எங்கள் வேலை மிக சுலபமானது என நினைப்பார்கள். ஆனால், எனது நாள் தினமும் காலை 4 மணிக்கு தொடங்கும். பூங்காவின் கதவருகே சென்று எனக்கான முறை வரும் வரை காத்திருக்க வேண்டும். சிலவேளைகளில் எவ்வித வருமானமும் இன்றி வீடு திரும்ப நேரும். வெகுசில பார்வையாளர்கள் உள்ளே நுழையும்போதே சொல்லி விடுவார்கள் ““Tu apna muh bandh rakh, aur tiger dikha.” (வாயை மூடிக்கொண்டு புலியை மட்டும் காட்டு!) இப்பொழுதெல்லாம், மிக கண்ணியமாக நடந்துகொள்ளும் பார்வையாளர்கள் வருகிறார்கள். அவர்கள் உண்மையாகவே பூங்காவின் மீதும், சூழலியல் மீதும் அக்கறை உள்ளவர்களாக இருக்கின்றனர்.

உம்ரத் கர்ஹான்ட்லா சரணாலயத்தின் வாசலில் ரோஹித் கரூவும், ராம்ராவும் 30 வனவழிகாட்டிகளுடன் உரையாடல் நிகழ்த்தினர். அவற்றிலிருந்து சில பகுதிகள்.

டடோபா புலிகள் காப்பகம் போல உம்ரத் கர்ஹான்ட்லா சரணாலயம் சிறந்து விளங்குமா?
கண்டிப்பாக. புலிகளை தற்போது காண முடிகிறது. ஒரு காலத்தில், மான் ஒன்றினை காண்பது கூட மிக அரிதாக இருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளில் தீ அணைப்பு, திருட்டுத்தனமாக வேட்டையாடுதலை தடுக்கும் ரோந்துப்பணி, நீர்நிலைகள் உருவாக்கம் போன்றவை சிறப்பாக அமைக்கப்பட்டு, சரியாக பராமரிக்கப்படுகின்றன. இவற்றால் வேட்டையாடுதல், முறையற்ற மேய்ச்சல் மற்றும் விறகுகளுக்காக அதிகமாக மரங்களை வெட்டுவது போன்றவை வெகுவாக குறைந்துள்ளன.
உண்மையாக தான் சொல்கிறீர்களா? உங்கள் வாழ்வை வருங்காலங்களிலும்  இங்கேயே செலவிடுவீர்களா?
ஆமாம். இது காப்புக்காடு (Reserved Foresst). இயற்கை வளங்களை சுரண்டுவது தவறு என தெரிந்தும் நாங்கள் இதை எங்கள் தேவைகளுக்காக வீணடித்துள்ளோம். சரணாலயமாக அறிவிக்கப்பட்டபோது, புதிய கட்டுப்பாடுகளால் நாங்கள் முதலில் அதிர்ச்சியடைந்தோம். வனத்தின் சில பகுதிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவில்லை. எனவே, எங்கள் தேவைகளை அந்தப் பகுதியில் இருந்து பூர்த்தி செய்து கொள்கிறோம். இரண்டாண்டுகளுக்கு முன் நாங்கள் கற்பனை செய்து வைத்திருந்ததை விட சுமார் 100 குடும்பங்கள் தற்போது அதிகமாகவே சம்பாதிக்கிறோம்.

சரி., ஆனால் பார்வையாளர்கள் வருகிறார்களா?
எங்கள் அனைவரையும் கவனியுங்கள். நாங்கள் உள்ளூரில் வசிப்பவர்கள் தான். வனத்துறை அலுவலர்களுடன் இணைந்து டடோபாவை விட, ரன்தம்போரை விடவும் சிறந்த இடமாக மாற்றும் முயற்சியில் உள்ளோம். நாக்பூரில் இருக்கும் எங்கள் பகுதி மக்களை ஐந்து வருடங்களுக்கு பின் வந்து பாருங்கள். பார்வையாளர்கள் தொடந்து வருவதால் தான் நம்பிக்கையில் இவ்வாறு கூறுகிறோம்.

உங்கள் குடும்பத்தாரும், உங்கள் கிராமங்களில் வசிக்கும் முதியவர்களும் என்ன சொல்கிறார்கள்?
அவர்கள் முதலில் வருத்தப்பட்டார்கள். ஆனால், தற்போது நாங்கள் அதிகமாக சம்பாதிகிறோம்; விவசாயத்திள் ஈடுபடுகிறோம்; கட்டுமானத் தளங்களில் வேலை செய்கிறோம்; காட்டுப்பழங்களையும், மூலிகைகளையும், விறகுகளையும் சந்தைகளில் விற்கிறோம். எங்களுக்கு ஊரில் தற்போது மரியாதையும் கிடைக்கிறது. சுற்றுலாவின் மூலம் வரும் வருமானம் உண்மையில் இங்குள்ள கிராமங்களில் பகிர்ந்தளிக்கப்பட்டால், சில அதிசயங்களை நாங்கள் நிகழ்த்திக்காட்டுவோம். இது ‘காடு’ அல்ல; எங்கள் ‘வீடு’.

ஏப்ரல் 2014 சன்ச்சுவரி இதழில் (Vol. XXXV No. 2) வெளியான நேர்காணலின் மொழிபெயர்ப்பு கட்டுரை.

பிட்டு சேஹல்
தமிழில்: கோ. முருகராஜ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s