கனிமொழி

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.” – குறள்

“தமிழ் சப்ஜெக்ட் மட்டும் சரியா எழுதமாட்றான். துணைக்கால் மாத்திப்போடுறான். ன–ந, ல–ள, ர-ற மாத்தி எழுதுறான். டெஸ்ட் எழுதுறபோ சில வார்த்தை, செண்டன்ஸ், லைன்ஸ்லாம் விட்டுடுறான். ஒப்பிக்க சொன்னா, கரெக்டா சொல்லிடுறான்.  நீங்க ஸ்பெஷல் அட்டென்ஷன் கொடுங்க.”

இப்படி எழிலின் டியுஷன் மிஸ் எழிலின் அம்மா கனிமொழியிடம் கூறி 2 மாசம் ஆகிவிட்டது. கனிமொழியும் தினமும் எழிலின் தமிழ் வீட்டுப்பாடம் எழுதும்போது கூட இருந்து ஒரு ஒரு வார்த்தையா சொல்லி கொடுக்கும்போது சரியாக எழுதி விடுகிறான். ஆனால் பள்ளியில், தேர்வுகளில் தவறாகவே எழுதுகிறான்.

எழில், மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அனைத்துப் பாடங்களிலும் 60-70 என மதிப்பெண் பெற்றாலும் தமிழில் மட்டும்  40-50 மட்டுமே எடுக்கிறான்.
கனிமொழி படித்தது பத்தாம் வகுப்பு வரைதான். இல்லத்தரசியாக உள்ளார். கனிமொழியின் தந்தை செல்வம், டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைத்துள்ளான்.

ஒருநாள், புத்தகங்களை வகை வாரியாக அடுக்கி வைத்து, புத்தக அலமாரியைச் சுத்தம் செய்யும்போது ஒரு யோசனை பளிச்சென வந்தது. அதை கணவனிடம் கூறுவதற்காக, மதிய உணவிற்காக அவர் வரும் நேரத்திற்காக காத்திருந்தாள்.

“என்னங்க. இன்னைக்கு சாப்பிட வர 3:30 மணி ஆச்சு?”

“ஸ்டாக் வந்து, அத கணக்குப்போட்டு எடுத்து வைக்க லேட் ஆயிடுச்சு.”

உணவை எடுத்து வைத்து, உணவருந்த அழைத்தாள் கனிமொழி. “எழில் தமிழ் சரியா எழுத மாட்றான்ல. அதுக்கு சம்மர் ஹாலிடேஸ்ல இராமாயணம் எழுத வைக்கலாம்ன்னு இருக்கேன்.”

“ஃபிஃப்த் படிக்குற பையனால இதல்லாம் முடியுமா.. எவ்ளோ இருக்கு. அதெல்லாம் எழுதுவானா. ஏன் உனக்கு இந்த வேல?”

“என் அம்மா சொல்லிக்கொடுத்த பக்தி கதை, ராமாயணம், மகாபாரதம்லாம் எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. புள்ளைங்களுக்கு அம்மா சொல்லிக்கொடுக்றது எப்பவும் மறக்காது. எழிலுக்கும் கொஞ்ச கொஞ்சம் சொல்லிக் கொடுத்துருக்கேன்.”

“சரி, கதையை அவன் கேக்குறதும், எழுதுறதும் ஒண்ணா?”

“இராமாயண கதைய குழுந்தைகளுக்கு ஏத்தமாதிரி சிம்பிளா சொல்லிக் கொடுத்து, நான் சொல்ல சொல்ல அவன எழுத வைக்குறேன்”

“சொல்ல, சொல்ல அவன் தப்பு இல்லாம எப்டி எழுதுவான்?”

“அத நான் பாத்துக்கறேன், அவன் படிக்குற மாதிரி படக்கதையா இருக்ற மாதிரி புக்ஸ், இல்லன்னா சிறுவர்களுக்கான இராமாயண புக் கிடைச்சா வாங்கித் தாங்க”

“ம்ம்க்கும்.. அத பாத்து, பாத்து, உன் புள்ள எழுதபோறான்” எனக்கூறிச் சிரித்தான்.

கனிமொழியும் சிரித்துக்கொண்டே, “அவனா எழுதுனா, உங்க புள்ள. பாத்து எழுதுனா என் புள்ளயா?” எனக் கேட்டாள்.

கோடை விடுமுறையில் மூவரும் கொடைக்கானலுக்குச் சென்றனர். ரயிலிலும் பேருந்திலும் இராமாயணக் கதையை எழிலிடம் சொல்லிக்கொண்டே வந்தாள் கனிமொழி. அவனும் ஆர்வமாக கேட்டுக்கொண்டே வந்தான். செல்வம், எழிலுடன் சேர்ந்து கதை கேட்பது போல அவ்வபோது ராமர் ஏன் அப்டி சொன்னார், லட்சுமணன் ஏன் இப்டி செய்தார் என்று கனிமொழியிடம் கதைப் பற்றி கேள்வி கேட்டான். எழிலின் தந்தை கொடைக்கானலில் ஓர் அழகான பேனா மற்றும் நோட்டை வாங்கி, கனிமொழியிடம் கொடுத்தான்.

ஏப்ரல் மாதம் முழுவதும் ஒரு ஒரு நாளும் தினமும், இரவு வேளைகளில் மூவரும் ராமாயணத்தைப் பற்றி பேசினர். படக்கதைகள், அனுமன் கார்ட்டூன் இவற்றையெல்லாம் பார்த்து எழில் மனதில் இராமாயணம் நன்கு பதிந்தது.

மே ஒன்றாம் தேதி, கனிமொழி எழிலை அழைத்து, “எழில், நான் உன்ட்ட சொன்ன இராமாயாணக் கதையை இந்த புது நோட்டுல எழுதப்போறேன். நான் எழுதுறத பாக்குறியா” எனக் கேட்டுக்கொண்டே, கொடைக்கானலில் வாங்கிய நோட், பேனாவை எடுத்தாள்.

“எழில் ரொம்ப ஆர்வமாகி, “ஹை ஜாலி மா”

“சரி வா. எழுதுறேன், நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எப்டி எழுதுறேன்னு பாரு. நான் கொஞ்சம் எழுதுறேன். அப்பாவ கொஞ்சம் எழுதச் சொல்றேன். நீ கொஞ்சம் எழுது.”

“ஏன்மா அப்பாவும் நானும் எழுதணும்?”

“நாம மூணு பேரும் சேந்து ராமாயனத்தப் பத்தி பேசுன மாதிரி, எழுதுனாலும் நல்லா இருக்கும், எழில்”

“ஓகே மா. நான் பிளாக் பென்ல தான் எழுதுவேன், பிளாக் பென்ன ஸ்கூல்ல எழுத விடமாட்ற. எனக்கு சூப்பரா பிளாக் பென் வாங்கித்தா அப்பா கடைல இருந்து.”

“சரி எழில்., முதல் பக்கம் நான் எழுதுறேன். ஸ்கெட்ச் பென்லாம் எடுத்துட்டு வா. ஹெட்டிங்லாம் கலர் அடிக்கலாம்.”

“ஹை, ஜாலி ஜாலி. நான்தான் கலர் அடிப்பேன்” என ஓடினான்.

நான்கைந்து பக்கங்கள் கனிமொழி எழுதினார், பின்னர் 2 பக்கங்கள் செல்வம் எழுதினான்.

“அப்பாவுக்கு, கடைல வேல இருக்குப்பா. நீ லீவுல தானே இருக்ற. நான் சொல்ல சொல்ல நீயே எழுதுப்பா. உன் பக்கத்துல இருந்து நான் சொல்லித் தரேன், உனக்கு” எனக் கனிமொழி கூறினாள்.

“என்னம்மா. அப்பா 2 பேஜஸ் கூட எழுதல. நான் எவ்ளோ பேஜஸ் எழுதணும்?” என சோர்வாகக் கேட்டான் எழில்.

“டெய்லி 2 பேஜஸ் எழுதுப்பா. நீ, ஃபுல்லா எழுதிடலாம் கொஞ்ச நாள்ல”

“ம்மா, ஃபுல்லா எழுதணுமா. கை வலிக்கும்மா”

“நான் உன்கூடவே உக்காந்து இருக்கேன்ப்பா. ப்ளீஸ் பா. நோட் ஃபுல்லா உன் ஹேன்ட்ரைட்டிங்கா இருந்தா நல்லா இருக்கும்ப்பா.”

“நான் எப்போ விளையாடுவேன். ஸ்கூல் இருக்றபோதான் ஹோம்ஒர்க். ஹாலிடேஸ்லயும் ஹோம்ஒர்க்கா?”

“இது ஹோம்வொர்க் இல்லப்பா, கேம்ஸ் விளையாடுற மாதிரி, டிராயிங் மாதிரி இதுவும் ஒரு ஹாபி. உன் இராமாயண நோட்ட யாரும் திருத்த மாட்டாங்க. உனக்கு மூட் இருக்றப்போ கொஞ்சம் கொஞ்சம் எழுது. நீ தினமும் கொஞ்சம் கொஞ்சமா எழுது, டெய்லி கடைல இருந்து அப்பா வந்ததும் இதைப் படிச்சா ஹேப்பி ஆவாங்க.” என கனிமொழி ஊக்கப்படுத்தினாள்.

எழிலும் ஒப்புக்கொண்டு, தினமும் கனிமொழி சொல்ல சொல்ல எழுதினான். கனிமொழி அருகிலேயே இருந்து பிழையின்றி எழுதப் பழக்கினான்.

ஒருநாள் காலையிலேயே எழிலை அழைத்து, “எழில், இன்னைக்கு எனக்கு கிச்சன்ல நிறைய வேல இருக்கு. கிச்சன்லயே நீ உக்காந்துக்கோ. நான் கத சொல்ல, சொல்ல நீ எழுது. ஒரே நேரத்துல நாம கிச்சன் வேலையும் பாக்கலாம், எழுதற வேலையும் பாக்கலாம்.”

“சரிமா, இதோ எடுத்துட்டு வர்றேன்” எனக்கூறி நோட், பிளாக் பென் எடுத்துவந்து அமர்ந்தான்.

“நேத்து கடைசியா எழுதுனது – லட்சுமணன் காட்டில் சிறியதாக ஒரு வீட்டை உருவாக்கத் தொடங்கினான்.”

“அடுத்து எழுதிக்கோ எழில். காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே வீட்டை அமைக்க ராமன் யோசனை கூறினார்” எனக் கனிமொழி கூறி, மதிய உணவை தயார் செய்ய தொடங்கினாள்.

“இரும்மா. எழுதிக்குறேன். காட்டுல என்னமா கிடைக்கும்?”

“உடைஞ்ச மரக்கிளை, தென்னை மர இலை, இப்டி நிறைய கிடைக்கும் எழில்”

“ஓகே. ஓகே. எழுதிட்டேன். அப்புறம்?”

“வீட்டை அமைப்பதற்கான பொருட்களை ராமனும், சீதையும் தேடிக் கொண்டு வந்து லட்சுமணனிடம் அளித்தனர்.”

“அளித்தனருக்கு சின்ன ‘லி’ யா, பெரிய ‘ளி’ யா, மா?”

“சரி, கொடுத்தனர்ன்னு இப்போ போட்டுக்கோ. கொடுக்கிறதுதுன்னா பெரிய ‘ளி’ போட்ட அளித்தனர். உடைக்குறதுன்னா சிறப்பு ‘ழி’ போட்ட அழித்தனர். ஞாபகம் வச்சுக்க, எழில்”

இப்படியே எழிலுக்கு தமிழையும், ராமாயணத்தையும் சிறிது சிறிதாக சொல்லிக்கொடுத்து, எழுத்துப்பயிற்சி அளித்தாள் கனிமொழி. கோடை விடுமுறை முடியும் முன் கனிமொழியும் எழிலும் சேர்ந்து இராமயணத்தை எழுதி முடித்துவிட்டனர். செல்வம், அவர்கள் இருவரையும் இராமாயணம் எழுதி முடித்ததற்காக, தீம் பார்க்கிற்கு அழைத்துச் சென்றான்.

பின்னர் ஒருநாள் கனிமொழி, எழிலிடம், “அப்பாவ, உன் இராமாயண நோட்டுக்கு அட்டை போட, கடைல இருந்து கிஃப்ட் ரேப்பர் கொண்டு வர சொல்லி இருக்றேன். அப்பா அட்டை போட்டுக் கொடுத்ததும், டியுஷன் மிஸ்ட்ட கொண்டுபோய் காட்டு. ஃப்ரீயா இருக்றபோ மிஸ்ஸ படிக்கச் சொல்லு எழில்.”

“ஏன்மா. யாரும் திருத்த மாட்டாங்கன்னு முன்னாடி சொன்ன. இப்போ அவங்க கிட்ட கொடுக்க சொல்ற. போம்மா. திட்டுவாங்க.”

“திட்டமாட்டாங்கப்பா, நீ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம தமிழ் எழுதணும்ன்னு அவங்க ரொம்ப ஆசைப்பட்டாங்க. இதப் பாத்தா அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க. உன்ன திட்ட மாட்டங்க”

“சரிம்மா.” எனக்கூறி விட்டு, அனுமன் கார்ட்டூன் ஒன்றை தன் இராமாயண நோட்டில் வரையத்தொடங்கினான் எழில்.

– கோ. முருகராஜ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s