பறந்து போக வேண்டும்

எந்திரமோ தந்திரமோ எதுவுமில்லாமல்

சுயமாய் சுதந்திரமாய் – எதிர்பாரா ஒருநொடியில்

பிஞ்சு விரல் பிடி நழுவிய பலூனைப் போல

மெல்ல மிதந்து காற்றிலேறி விசை கெட்டு

வாழ்ந்திருந்த கூடும் கிளையும் துறந்து
Read More »

Advertisements

மேற்கிலிருந்து வந்த செம்பரிதி

மதுரை ரயில்நிலையம் திருவிழா போல களைகட்டியிருந்தது. அவரை வழியனுப்ப ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.  அவரை அறியாதவர்கள் கூடக் கேட்டறிந்து வந்து வணங்கி நின்றார்கள். நீலநிறக் கவுனும், பழுப்புநிறச் சிகையும், கண்ணாடிக்கு உள்ளிருந்து தீர்க்கமான பார்வையும், உதட்டில் புன்சிரிப்புமாய் தன்னை நோக்கி வருபவர்களின் கரம் பற்றி நெகிழ்வோடு விடை கொடுத்துக் கொண்டிருந்தார் அவர். அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் பிறந்து பெண் கல்விக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்த கேட்டிவில்காக்ஸ் அம்மையார்தான் அவர். ரயில் புறப்படும் போது வாசலருகே வந்து நின்று கேட்டி அம்மையார் கையசைத்த போது அவரது பிரிவை எண்ணி எல்லோர் கண்களிலும் நீர் துளிர்த்தது.

ரயிலில் சன்னலோரம் அமர்ந்து நகரை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தார். நாற்பதாண்டு கால மதுரை வாழ்க்கை அவரையும் இந்நகரோடு நெருக்கமாக்கியிருந்தது. ரயில் மெல்ல நகர்ந்து செல்லச் செல்ல ஹார்வி(மதுரா) மில், கேப்ரன்ஹால் பள்ளி, வைகையாறு, செல்லூர் கண்மாய் அதைத் தாண்டி தொலைவில் தெரிந்த பனந்தோப்பையும் பார்த்துக் கொண்டே சென்றார். அந்த இடங்களுக்கும் அவருக்குமான தொடர்பு சொல்லுக்கடங்காது. ரயில் கரிசல்குளத்தைக் கடக்கும் போது பாத்திமா கல்லூரியைப் பார்த்த போது மதுரையில் பெண் கல்வி நன்றாக வேரூன்றிவிட்டதாக உணர்ந்தார்.

ரயில் முன்னே செல்லச்செல்ல அவர் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னோக்கி நகர 1915இல் கார்த்திகை மாதத்தில் முதன்முதலாக மதுரைக்கு வந்த காட்சிகள் நினைவிற்கு வந்தன. மதுரையை நெருங்கும் போது கூடவே நாகம் போல நீண்டு தெரிந்த மலை, நீர்நிறைந்த கண்மாய்கள், வயலில் களை பறித்துக் கொண்டிருந்த பெண்கள், பெருக்கெடுத்து ஓடிய வைகைக் காட்சிகள் மெல்ல, மெல்ல நினைவுக்கு வந்தன. ஆற்றுப்பாளையம் பகுதியிலிருந்த பள்ளி நோக்கிச் சென்ற வழியில் பார்த்த வீடுகளிலெல்லாம் விளக்கேற்றி வைத்திருந்தார்கள். இரயிலை விட்டிறங்கி காரை வீடுகளிலிருந்து கூரை வீடுகள் வரை; வாசல், கிணற்றடி, மாட்டுக்கொட்டம், மரத்தடி வரை; வெண்கல விளக்குகளிலிருந்து மண்குழியாஞ்சுட்டி வரை விதவிதமான விளக்குகளைப் பார்த்துக்கொண்டே வந்தார். உடன்வந்த ஆசிரியையிடம் யார், என்ன என்று விசாரித்த பாட்டி ஒன்று கைகளைத் தூக்கி கேட்டியின் முகத்தருகே கொண்டு சென்று நெட்டி முறித்து ‘தாயி! மகராசியா இரும்மா!’ என வாழ்த்தியதையும், மொழி புரியாவிட்டாலும் மேல்முழுக்க சுருக்கங்களோடு பொக்கைவாய்ச் சிரிப்போடு வாழ்த்திய பாட்டியின் கைகளை அன்போடு பிடித்துக் கொண்டதையும் நினைவுகூர்ந்தார் கேட்டி.

அச்சமயம் ரயில் மதுரையைக் கடந்திருந்தது. அருகிலிருந்த சகபயணியொருவர் ஆனந்தவிகடனைப் பக்கத்திலிருந்தவரிடம் காட்டி சில்பி வரைந்த சித்திரத்தைக் சிலாகித்துக் கொண்டிருந்தார்.

லேடிடோக் கல்லூரியிலிருந்து அவருக்குக் கொடுத்த நினைவுப்பரிசை எடுத்துப் பிரித்துப்பார்த்தார். அதில் அவரே ஆச்சரியப்படும்படி அவரது பல நிழற்படங்களும், அதற்குப் பக்கத்தில் அவரைக் குறித்த பலரது நினைவுகளும் எழுதப்பட்டிருந்தன. ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிப் பார்க்கும் போதும் காலம் கரைந்து ரயிலைவிட வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. மேரிநாய்ஸ் உடன் கேட்டி எடுத்த நிழற்படத்தைப் பார்த்ததும் கேட்டி கேப்ரன்ஹால் பள்ளிக்கு முதல்முதலாகச்ச் சென்ற நாளுக்குள் நுழைந்தார். அப்போது அப்பள்ளி முதல்வராகயிருந்த சகோதரி மேரிநாய்ஸ் அவரை ஓடிவந்து கட்டிப்பிடித்து வரவேற்றதோடு, கடவுள் அனுப்பி வைத்த தேவதை எனச் சொன்னதையும் மறக்கமுடியுமா என்ன? கடவுளின் குரலை ஏற்று மிஷினரிக்குச் சேவை செய்யத் தொடங்கி நாற்பதுக்கும் மேலான ஆண்டுகளைக் கடந்து பயணித்துக் கொண்டிருந்தார். ரயில் செல்லச் செல்ல வெயில் மெல்ல ஏறிக் கொண்டே வந்தது.

ஒவ்வொரு படங்களுக்குப் பக்கத்திலும் அவரைப் பற்றி எழுதப்பட்ட வரிகளை வாசித்தார். ஆங்கிலத்தையும், கணிதத்தையும் கதைபோல, விளையாட்டுப் போல சொல்லிக்கொடுத்த அவரது கல்வி முறையால் அப்பாடங்கள் மீது விருப்பம் வந்ததை எழுதியிருந்தார் கேப்ரன்ஹால் பள்ளியின் முன்னாள் மாணவியொருவர். அதேபள்ளியின் ஆசிரியையொருவர் கேட்டியைப் பார்த்துத்தான் சேரிகளுக்குச் சென்று சமூகசேவை செய்துவருவதாக எழுதியிருந்தார். கேட்டியிடம் பியானோ கற்ற ஓ.சி.பி.எம்.பள்ளி ஆசிரியை தனக்கிருந்த மனக்குழப்பத்தை அந்த இசை மீட்டதைக் குறிப்பிட்டிருந்தார். மதுரையில் முதன்முதலாகப் பள்ளிப் பேருந்தைக் கொண்டு வந்ததைப் பெருமையாகக் குறிப்பிட்டுருந்தார் நாய்ஸ் பள்ளி ஆசிரியையொருவர். பூனை போன்ற விலங்குகள் மீதான கேட்டியின் பாசம் தங்களையும் தொற்றிக் கொண்டதாக லேடிடோக் கல்லூரி மாணவி எழுதியதைப் படித்து மெல்ல புன்னகைத்துக் கொண்டார்.

ரயில் தடக்தடக்கென திருச்சி காவிரியாற்றைக் கடந்து கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் ஏதோ விழா போல மக்கள் கூடியிருந்ததைப் பார்த்தார். வைகையாற்றங்கரையில் புட்டுத்திருவிழாக் காட்சிகள் அவருக்கு நினைவுக்கு வந்தன. கேப்ரன்ஹால் பள்ளிக்குச் சற்றுத்தொலைவில்தான் புட்டுத்தோப்பு மண்டபம் இருந்தது. அதைநோக்கி தம்பட்டமாடு, கோயில்யானை முன்செல்ல கைலாய வாத்தியம் இசைத்து அடியவர்கள் ஆடிவர சாமி உலாப்போவதைப் பார்த்ததுண்டு. அதைக்குறித்து மாணவிகளிடம் உரையாடியபோது புட்டுத்திருவிழா கதையைச் சொன்னார்கள். வைகையில் வெள்ளம் வந்து கரையடைக்க வந்த சிவனின் கதையை ரசித்துக் கேட்டார். அவருக்கு நாடகம், நடிப்பு இவைகளில் எல்லாம் விருப்பம் அதிகம். அதேவேளையில் ஆற்றில் வெள்ளம் வந்தால் அக்கரையில் உள்ள மாணவிகள் பள்ளிக்கு எப்படி வருவார்கள் என்ற அக்கறையும் மனதில் உதித்தது அப்போதுதான்.

ரயிலில் எதிரேயிருந்த ஒருவர் அருகிலிருந்தவரிடம் எம்.ஜி.ஆரின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரை வீரன் படங்களின் வெற்றியைப் பற்றி மகிழ்வாகப் பேசியபடி வந்தார். இந்த ஊர் மக்கள் நடிகர்கள் மீதும், திரைப்படங்கள் மீதும் கொண்டிருந்த அபிமானத்தை வியந்து பார்த்தார்.வேடிக்கை பார்த்தபடி வந்த கேட்டியின் நாசியில் மெல்ல பனங்கிழங்கு வாசம் அடித்தது. அந்த வாசம் அவரைத் தல்லாகுளம் அருகிலுள்ள பனந்தோப்பிற்குள் கொண்டு சென்றது.

மேரி நாய்ஸூம், கேட்டியும் கோரிப்பாளையம் வரை டி.வி.எஸ் பேருந்தில் சென்றது, அங்கிருந்து இறங்கி குதிரை ஜட்கா வண்டியில் ஜம்புரோபுரம் பகுதியை அடைந்தது, அப்பகுதியில் வாழ்ந்த மக்களிடம் உரையாடியது, மெல்ல பனந்தோப்பினூடாக நடந்து வந்து சொக்கிகுளம் கண்மாய்க்கரை அரசமரத்தடியில் அமர்ந்தது எல்லாம் அவர் நினைவிற்கு வந்தன. அங்கு வைத்துதான் அவர்கள் ஆற்றுக்கு வடபுறம் கட்ட வேண்டிய பள்ளி கல்லூரி குறித்து திட்டமிட்டார்கள். எதிர்பாராத விதமாக சில வருடங்கழித்து மேரிநாய்ஸ் காலமாக, கேட்டி வில்காக்ஸ் கேப்ரன்ஹால் பள்ளி தலைமைப் பொறுப்பேற்றார். தங்கள் கூட்டுக்கனவான பள்ளியைக் கட்ட நிதி திரட்டப் பெரும்பாடு பட்டார். அமெரிக்காவிலிருந்து நிதி வருவதிலும் நிறைய சிக்கல்கள் இருந்ததால் பெரும் செல்வந்தர்களிலிருந்து முன்னாள் மாணவிகள் வரை தேடிச் சென்று சந்தித்து நிதி திரட்டிய நாட்கள் நினைவிற்கு வந்தன. ஓ.சி.பி.எம் பள்ளியை ஏற்படுத்தியதும், அதன்பின் ஆங்கிலவழியில் கற்க மேலும் ஒரு பள்ளியையும் கட்டி அதற்கு சகோதரி நாய்ஸ் பெயரை வைத்ததுமான நினைவுகள் நிறைவை அளித்தன.

ரயிலில் கூட்டம், கூட்டமாக வேலைக்குச் செல்பவர்கள் ஏறத் தொடங்கினர். அவர்களைப் பார்த்தபோது வேலை பார்க்கும் இடத்திற்கே ரயிலில் தொழிலாளர்களை அழைத்து வந்த மதுரை ஹார்விமில் நினைவு எழுந்தது. அக்காலத்தில் ஹார்வி மில் மதுரையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பணியாளர்கள் வசிக்க திருப்பரங்குன்றம் அருகே ஹார்விப் பட்டி உருவாகி அவர்கள் வந்து போக வசதியாக ரயிலும் ஓடியது. அங்குதான் கல்லூரிகட்ட பெருநிதி அளித்த ஜேம்ஸ்டோக் – ஹெலன் டோக் தம்பதிகளைச் சந்தித்து உரையாடுவார்.

ரயிலில் சன்னலோரம் வேடிக்கை பார்த்தபடி வந்த கேட்டி ஊர்தோறும் கம்பங்களில் பல வண்ணங்களில் கட்சிக் கொடிகள் பறப்பதைப் பார்த்தார். அந்தக் கொடிகளைப் போல அவர் நினைவும் 1948ற்குப் பறந்தது. இந்தியாவின் முதலாவது சுதந்திர தினக் கொண்டாட்டமும், லேடிடோக் கல்லூரி தொடங்கி ஒரு மாத நிறைவும் ஒன்றாக வந்த காலமது. மாணவியர் பல்வேறுவிதமான கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். பாரதியின் ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே போன்ற பாடல்களைப் பாடி ஆடினர். அதைப்பார்த்துக் கொண்டிருந்த கேட்டி தமிழகத்திற்கு முதன்முதலாக பாரதியின் பிறந்த தினத்தன்று வந்தது, காந்தி மதுரையில் அரையாடைக்கு மாறியது அக்காலப் பள்ளி மாணவிகளிடம் உரையாடியது, கேப்ரன்ஹால் பள்ளிக்கு அருகிலுள்ள திலகர் திடலில் தலைவர்கள் உரைவீச்சு நிகழ்ந்தெல்லாம் ஞாபகம் வந்தன. அவர் மாணவிகளிடம் உரையாற்றும் போது சுதந்திரம் என்பது எல்லோருக்கும் சமமாய் விளங்க வேண்டும். பெண்களுக்குக் கல்வி, சமத்துவமாய் அமைய வேண்டும் என்றார். எண்பது மாணவிகளும் அவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் கேட்டியின் உரைக்கு எழுந்து நின்று கரவொலியெழுப்பினர். அவர் நினைவைக் கலைக்கும் விதமாக ரயிலைப் பார்த்து கையசைத்து பள்ளிச் சிறுவர்கள் ஆரவாரம் செய்ததைப் பார்த்தார். காமராசர் முதல்வரான பிறகு ஏராளமானோர் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லத்துவங்கிய காலம்.

மேற்கே சூரியன் ஆரஞ்சுப் பழம் போலக் கனிந்து நின்றது அவர் நினைவுகளைப் போல. லேடிடோக் கல்லூரியின் காலேஜ் ஹால் மேல்தளத்தில் நின்றபடி மாலை வேளைகளில் தொலைவில் மலைகளினூடாக மறையும் சூரியனை, கதீட்ரல் தேவாலயத்தின் சிலுவையை, சொக்கிகுளம் கண்மாயில் கூடடைய வரும் பட்சிகளின் அரவத்தை, குவிமாடங்களுடன் கோட்டை போன்ற ஓ.சி.பி.எம் பள்ளியின் மேல்தளத்தைப் பார்த்து ரசிப்பார். “பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்; வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல்” என்ற விவிலிய நீதியின் புதிய விளக்கமாய், தமது பொன்னையும் வெள்ளியையும்  இல்லாதவர் ஞானமும் கல்வியும் பெற செலவழிப்பதே வாழ்க்கையின் பொருள் என்பதாக உணர்ந்தார்.

ரயில் சென்னைப் பட்டினத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அங்குலத்திலும் உறைந்த தொன்மமும், உயிர்ப்பின் துடிப்புமாய் இருந்தாலும் பழுத்த நிதானத்துடன் இயங்கும் மதுரை தமக்குள்ளும் ஏறிவிட்டதாகவே தோன்ற ஏக்க உணர்வும் எழுந்தது. மேற்கிலிருந்து வந்து கிழக்கில் சுடரேற்றி மீண்டும் மேற்குத் திசை ஏகிக் கொண்டிருந்தது செம்பரிதி.

[Miss Katie wilcox – An Inspiration (Biography of the Founder) நூலில் உள்ள தகவல்களைத் தழுவி]

 

சித்திரவீதிக்காரன்

ஆகஸ்ட் 2018 சஞ்சிகை இதழில் வெளியான கட்டுரை

 

தமிழர் ஆறும் – நீரும்

அத்தியாயம் – 1

உலக அளவில் இயற்கை வளங்கள் அனைத்தும் தனிப்பெரும் முதலாளிய வர்க்கத்தின் லாப வெறிக்காக சூறையாடப்படுகிற சூழ்நிலையில், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் கட்டுப்பாடினின்றி சூறையாடப்பட்டு, அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி கொண்டிருக்கின்றன. இயற்கை வளங்கள் மீதும் பன்னெடுங்காலமாக உழைக்கும் மக்கள் கொண்டிருந்த பன்மயப்பட்ட பண்பாட்டு உற்பத்தி உறவை வளர்ச்சி என்ற வசிய சொல்லலால் அறுத்தெறிந்து, பணமிருப்பவருக்கே வாழும் உரிமை ஒற்றை பண்பாட்டை உலகம் முழுக்க உருவாக்கி லாபவெறியில் கொழிக்கிறது ஏகபோக முதலாளிய வர்க்கம்.

வளர்ச்சி என்பது எந்த வர்க்கத்திற்க்கானது? வளர்ச்சி என்ற பெயரில் தமிழக சூழலில் நாம் சந்தித்த பேரிழப்புகள் என்ன?  இயற்கை வளங்களின் மூல ஆதாரமான நீர் மீது தமிழர்கள் கொண்டிருந்த பன்மயப்பட்ட பண்பாட்டு உற்பத்தி உறவுகள் என்ன?  மூலதன குவிலுக்கான போட்டியில் தமிழக பூர்வக்குடிகளின் நீராதாரங்கள் மீதும் நீராதாரங்கள் மேல் உரிமை பாராட்டும் எளிய மக்கள் மீதும் முதலாளிய நலன் பேணும் அரசுகள் நிகழ்த்திய வன்முறை என்ன என்பதை அணுகுவதுதான் இத்தொடரின் நோக்கமாக இருக்க முடியும்.

சூழலியல் சிக்கல் என்பது ஏதோ தனித்த ஒரு சிக்கலோ, அதற்கென்று தனித்த தீர்வோ ஏதுமில்லை. அரசியல், பொருளாதாரம், சமூக நிலை, கல்வி, பாலினம், சூழலியல் என அனைத்தின் மீதும் தீர்க்கமான தத்துவார்த்த கொள்கைகளைக் கொண்ட உழைக்கும் மக்களுக்கான இறையாண்மை கொண்ட சனநாயக குடியரசை அமைப்பதே இங்கு நிலவுகிற எல்லாவித சிக்கல்களுக்கும் தீர்வு காணுகிற முதல்படியாக இருக்க முடியும்.

ஆறும் பேரும்
ஆறு என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப் பகுதிகளில் தொடங்குகின்றன. உற்பத்தியாகி சிறு தொலைவிலேயே ஆவியாகி அல்லது வறண்டு போகும் ஆறு சிற்றாறு. மழை காலத்தில் திடீரென ஒருசில நாட்கள் மட்டும் ஓடும் ஆறு காட்டாறு ஆகும். ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர்நிலையை அடையும் முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வறண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும் சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது. மலைக்காடுகளில் இருந்தோ,  ஊற்றுக்களில் இருந்தோ, ஏரிகளில் இருந்தோ, மலை பனிக்கட்டிகள் உருகுவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ ஆறுகள் உருவாகக் கூடும். மலைக்காடுகளில் அல்லது பனிமலை உருகி என தனக்கென ஒரு உற்பத்தியிடம் அல்லது பிறப்பிடம் கொண்ட ஒரு ஆறு கடலில் சென்று கலக்கிறது. அவ்வாறு தானாக தோன்றும் ஒரு ஆறு மற்றொரு ஆற்றுடன் கலந்தால் அதை துணையாறு (Tributary) என்பர். நிலமைப்புக்கு ஏற்றவாறு ஒரு ஆற்றிலிருந்து தனியாக அல்லது கிளையாக பிரிந்து பயணிக்கும் ஆற்றை கிளையாறு (Distributary) என்பர். ஆண்டு முழுவதும் நீரோடும் ஆற்றை வற்றாத ஆறு (perennial river) என்றும், சில காலங்கள் மட்டும் நீர் ஓடும் ஆற்றை பருவக் கால ஆறு (Non-perennial river) என்றும் கூறுவார். தமிழக மரபில் இயற்கையாக உற்பத்தியாகி ஓடும் நீரை பேரியாறு. சிற்றாறு, காட்டாறு, ஓடை, ஊற்று, என வகைப்படுத்தி அழைப்பது வழக்கம்.

ஆறும் நதியும் ஒரே பொருளை தருபவையா? பிற்கால இலக்கிய நூல்களில் நதியென்ற சொல் ஆளப்படுகிறது. நதியும் ஆறும் ஒரே பொருளை தருபவை என்ற கருத்துக்கு ஐயமூட்டம் விதமாக “நதியாறு கடந்து நடந்துடனே” (கலிங்கத்துப்பரணி 367) என்ற சொல்லாட்சியை  ஜெயங்கொண்டார் கலிங்கத்துபரணியில் பயன்படுகிறார். ‘நிலத்தை நீரால் அறுத்துக்கொண்டு ஓடுவதால் அப்பெயர் பெற்றது. நிலத்தைப் பிரிக்குமளவுக்கு ஓடுகின்ற நீர்ப்பாய்வுகள் அனைத்துமே ஆறுகள்தாம். ஆறு நிலத்தை அறுத்து நிற்றலால் அதைக் கடக்க நீங்கள் பரிசல், படகு, ஓடம் போன்றவற்றை நாடவேண்டும். இறங்கிக் கடக்குமளவுக்கு ஓடும் நீர்வழி ஆறு ஆகாது. அவை ஓடைகள். நதி என்பது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்ற ஆறுகளை மட்டுமே குறிக்கும். நம் புவியியற்படி மேற்குத் தொடர்சசி மலையில் தோன்றும் ஆறுகள் பலவும் கிழக்கே வங்கக்கடல் நோக்கிப் பாய்கின்றன. அவ்வாறுகள்தாம் நதிகள் என்று வழங்கப்படும். கிழக்கில் தோன்றி மேற்கு நோக்கிப் பாயும் ஆறு ‘நதம்’ எனப்படும். ஆனால், வழக்கில் ஆற்றுக்கு மாற்றுச்சொல்லாக எல்லாவற்றையும் நதி என்றே வழங்குகிறோம்’ என கவிஞர் மகுடேஸ்வரன் கூறுகிறார்.

கன்னியாகுமரி கோதை ஆறு முதல் சென்னை ஆரணி ஆறு வரை தமிழகத்தில் சிறிதும் பெரிதுமாக 33 ஆற்றுப்படுகைகள் உள்ளன என பொதுப்பணித்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. சர்வதேச விதியின்படி  80 கி.மீ அதிகமான நீளமுடைய ஆறுகளைத் தான் ஆறு என்று கணக்கிடுவார்கள்.  கால்வாய் மற்றும் வாய்க்கால் மனிதனால் கட்டப்பட்டது அல்லது வெட்டப்பது.

ஆறுகளுக்கு பெயரிட்ட பன்டைய மக்கள் ஆற்று நீரின் தன்மை, அது உற்பத்தியாகுமிடம், நிலம், அது கலக்குமிடம், அது செல்லும் ஊர் பெயர்கள் ஆகியவற்றை கொண்டு பெயரிட்டுள்ளனர். சில ஆறுகளுக்கு பெண்பால் பெயர் சூட்டியுள்ளனர்.

குடகு நாட்டு மலை சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று போற்றப்பட்டது (ஆவூர் மூலங்கிழார் – புறநானூறு 166). பொன் போலத் தோன்றும் மலை என்பது பொருள். பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரி ஆற்றிற்கு பொன்னியாறு என்றும் பெயரிட்டனர். பால் போன்ற வெண்ணிறமுடைய நீரோடுவதால் பாலாறு என்று பெயரிட்டுள்ளனர்.  நொய்யல் என்கிற ஊர் அருகே பொன்னியாற்றில் கலக்கும் ஆற்றை நொய்யல் என்று பெயரிட்டுள்ளனர்.

வேம்பாறு கடலில் கலக்குமிடத்து உள்ள ஊர் வேம்பாறு. அடையாறு கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் அடையாறு. இந்த ஊரில் பாய்வதால் ஆறு இப்பெயர் பெற்றதா அல்லது இந்த ஆறு பாய்வதால் இந்த ஊர் இப்பெயர் பெற்றதா என்பது  ஆய்வுக்குரியதே. ஒரே ஆற்றுக்கு அது பாயுமிடத்திற்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களை சூட்டும் வழக்கமும் உண்டு. ஒரே ஆற்றுக்கு பல்வேறு பெயர்கள் தமிழக மக்கள் வழங்கியிருக்கிறார்கள். மதுரை அழகர்மலையில் உற்பத்தியாகும் உப்பாறு வெவ்வேறு பெயர்களால் அது செல்லும் ஊர்களின் பெயராலோ அல்லது வேறு பெயர்களாலோ அழைக்கப்படுகிறது. அதனை சிலம்பாத்தோடை, பதினெட்டங்குடி ஓடை, உப்பாறு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. அதே போல மதுரை திருமங்கலம் பகுதியில் பாயும் குண்டாறுக்கு, தெற்காறு , மலட்டாறு என்று செல்லுமிடம் பொறுத்து மக்களால் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. உப்பாறு, பொருநை / பொருந்தல், மணிமுத்தாறு, பாலாறு, குண்டாறு, மலையாறு, மஞ்சளாறு, வெள்ளாறு, சிற்றாறு என்ற பெயர்களை கொண்ட ஆறுகளை தமிழகத்தில் பல இடங்களில் பார்க்கலாம்.

திருநெல்வேலி மற்றும் மதுரையில் பாயும் இரு வேறு ஆறுகளுக்கு குண்டாறு என ஒரே பெயரை சூட்டியுள்ளனர். அமராவதிக்கும் தாமிரபரணிக்கும் சங்க இலக்கியம் பொருநை என குறிப்பதையும் காண முடிகிறது.

ஒன்றை ஆக்கவோ அழிக்கவோ அல்லது வசப்படுத்தவோ எத்தனிக்கும் போது முதலில் அப்பொருளின் பெயரை மாற்றுவதில் இருந்து துவங்க வேண்டுமென சொல்வார்கள். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளின் தமிழ் பெயர்கள் சமஸ்கிரதமயபடுத்தபட்டுள்ளதை நாம் பரவலாக பார்க்க முடியும்.

காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு நாட்டு மலை சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று போற்றப்பட்டது (ஆவூர் மூலங்கிழார் – புறநானூறு 166 ). பொன் போலத் தோன்றும் மலை என்பது பொருள். பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரியாற்றை பொன்னியாறு என்றும் கூறுவர். காவிரி என்ற சொல்லின் பொருள் ‘தோட்டங்களின் வழியாகப் பாய்ந்து வருவது’ என்பதாகும். இதன் வடமொழி வடிவம் காவேரி ஆகும்.

தற்போது தாமிரவருணி என்று அழைக்கப்பெறும் ஆற்றின் தமிழ் பெயர் பொருநை என்பதாகும். இந்த ஆற்றை  வடமொழி மகாபாரதமும், வால்மீகி ராமாயணமும் தாமிரபரணி என்றே குறிக்கிறது. காவிரியின் துணையாறான அமராவதி ஆற்றின் பண்டைய பெயர் ஆன்பொருனை என்பதாகும். கொடைக்கானல் மலைப்பகுதியை பழனி மலைத்தொடர் என்று அழைப்பர். அம்மலையில் உற்பத்தியாகும் ஆறு பழனியாறு. காலப்போக்கில் அதை பன்னியாறு என்று மருவி, சமஸ்கிரப்படுத்தும் போது அதை வராகநதி என்று மாற்றிவிட்டனர். மதுரை அழகர்மலையில் உற்பத்தியாகும் சிலம்பாறு நூபுர கங்கை என்று சமஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அசுவமா நதி, கமண்டல நதி, அர்ஜுனா நதி, வசிட்டா நதி, சண்முகா நதி, கொசஸ்தலை  நதி  என்று சமஸ்கிரதமயப்படுத்தப்பட்ட ஆறுகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பல ஆறுகளின் பழைய தமிழ் வழக்கு பெயர்களை மக்களே மறந்துவிட்டனர். ஆறுகளை மீட்டெடுப்பது என்பது இழந்த அதன் இயற்கை சூழலை மட்டுமல்ல. அதன் வரலாற்றையும்தான். அடுத்த சந்திப்பில் சங்க இலக்கியம் காட்டும் ஆறுகள் குறித்து பேசுவோம்.

தமிழ்தாசன்

சஞ்சிகை 2018 ஆகஸ்ட் இதழில் வெளியான கட்டுரை