கதை சொல்றோம் வாங்க

அறநெறிக் கதைகளையும், புராணக் கதைகளையும் ஒருகாலத்தில் பாட்டிகளும், தாத்தாக்களும் குழந்தைகளுக்கு கதை சொல்லி வளர்த்தனர். சமகால கதைகளை ஃபேன்டஸியாக அம்மாக்களும், அக்காக்களும் குழந்தைகளுக்கு சொல்லி வந்தனர். தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அந்த பகுதிகளில் இருக்கும் குழந்தைகளையும் ஒன்று திரட்டி வீட்டு திண்ணைகளிலும், மொட்டை மாடிகளிலும் கதைகளை சொல்லியிருக்கின்றனர். குழந்தைகளுக்கு கதை சொல்வதென்பது குறைந்து வரும் இன்றைய சூழலில் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கும், ஏழைக் குழந்தைகளுக்கும் தொடர்ந்து கதைகளை சொல்லி வருகின்றனர்.

கதைகளின் மூலம் குழந்தைகளை சிந்திக்க, வாசிக்க, கற்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் ‘கதை சொல்றோம் வாங்க’ எனும் அமைப்பை நடத்தி வருகின்றனர் குமார் மற்றும் பிரவீன். ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து 8 மாதங்களாக நண்பர்களுடன் இணைந்து குழந்தைகளுக்கு கதை சொல்லி வருகின்றனர், சென்னை சைதாபேட்டையில் திருவள்ளுவர் குருகுலம் எனும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் உள்ளனர். இங்கு தொடர்ந்து கூடி இவ்விளைஞர்கள் கதைகளை சொல்லி வருகின்றனர். அக்குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்புடன் இயங்குகிறார்கள். kadhai1ஏனெனில், இவர்கள் கதைகளை கேட்பது மட்டுமின்றி இவர்களாக கதைகளை நடித்துக் காட்டுகின்றனர்; கதையில் வரும் கதாபாத்திரங்களை வரைந்து காட்டுகிறார்கள்; தங்களுக்கு சொல்லப்படும் கதைகளையே மாற்றி வேறு வகையில் மிகுந்த கற்பனை நயத்துடன் சொல்லிக் காட்டுகிறார்கள். கதைகளை சொல்வதுடன் நின்றுவிடாமல் இவ்விளைஞர்கள் நம் சமூகம் சார்ந்த பாரம்பரிய விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுக்கின்றனர். இவ்விளையாட்டுகளை வைத்து சிறிய திருவிழா போல நடத்தி குழந்தைகளுக்கு பரிசுகளும் தருகிறார்கள்.

kadhai2இவர்களின் செயல்பாடுகளைப் பற்றி கேட்டறிந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த ‘வானம்’ அமைப்பும், பாண்டிச்சேரியில் உள்ள ஆனந்தா ஆசிரமும் இவர்களுடன் இணைந்து தங்கள் ஊர்களில் குழந்தைகளுக்கு கதை சொல்லி வருகின்றனர். சென்னையில் உள்ள அரசுப்பள்ளிகளிலும், மனநலம் குன்றிய குழந்தைகள் படிக்கும் பள்ளிகளிலும் இவ்விளைஞர்கள் கதை சொல்லும் நிகழ்வை செயல்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

kadhai3ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய இம்முயற்சிக்கு தற்போது ‘தோழமை’, ‘யாவருக்கும்’, JOIN HANDS’, ‘வானம்’, ‘குக்கூ’, ‘ஆதல் டிரஸ்ட்’, ‘கலை டிரஸ்ட்’ போன்ற அமைப்புகள் உதவிகளையும், ஆதரவுகளையும் வழங்கி வருகின்றன. குழந்தைகளுக்கு பொம்மலாட்ட முறைகளை கற்பிக்கும் முயற்சியில் இவ்விளைஞர்களுடன் இணைந்து ‘கலை டிரஸ்ட்’ ஈடுபட்டு வருகின்றது.

‘கதை சொல்றோம் வாங்க’ அமைப்பைத் தொடர்பு கொள்ள:
குமார் ஷா – 9944772911
பிரவீன் – 8939968998
மின்னஞ்சல் – indiastoryeducation@gmail.com
ஃபேஸ் புக் முகவரி – facebook.com/kumarshaw

Advertisements

நம்ம ஊர் நம்மாழ்வார்கள்

பசுமைப்புரட்சிக்கு பின்னர் இந்திய வேளாண்மை என்பது பேரழிவுக்கு உட்படுத்தப்பட்டது. இந்தியர்களின் பெரும்பகுதியினர் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்திய வேளாண்மையினரின் அறிவும், அனுபவமும் உலகளவில் ஈடு இணையற்றது தான். இத்தகைய வேளாண் கட்டமைப்பினை அழிவில் இருந்து மீட்கும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் நம்மாழ்வார் அவர்கள். அவர் அண்மையில் இயற்கையாகி விட்டார். அவரைப்போன்று நமது கிராமப்பகுதியில், இயற்கை வேளாண்மை, இயற்கை வளங்களைப் பாதுகாத்த, சித்த மருத்துவம், யோகக்கலை எனப் பல்வேறு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் எளிய மனிதர்களைக் கண்டறிந்து, மரியாதை செய்யும் விதமாக, ‘நம்ம ஊர் நம்மாழ்வார்கள்’ என அடையாளப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தோழர் பொழிலன், எழுத்தாளர் நக்கீரன், சமூக செயற்பாட்டாளர் இரமேசு கருப்பையா ஆகியோர் பங்கேற்றனர்.

– அ.செங்கொடி.

(2014 மார்ச் சஞ்சிகையில் வெளியான கட்டுரை)

“விழித்தெழு மதுரை” – செல்லூர் கண்மாய்

வைகை நதியின் வடகரையில் அமைந்திருக்கும் பகுதி “செல்லூர்”. ஒரு காலத்தில் குட்டி ஜப்பான் என்றழைக்கப்பட்ட ஊர்! காரணம் கைத்தறி துண்டுகள் உற்பத்திக்கு அவ்வளவு பெயர் பெற்ற ஊர் இந்த செல்லூர் ஆகும். திரும்பிய பக்கமெல்லாம் கைத்தறி சத்தம் ஒலித்து கொண்டே இருக்கும்.

“சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வர” என்று கைத்தறியின் பெருமையை பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் தமது பாடலில் வெளிப்படுத்தி இருப்பார்!

இப்படி பெருமை பெற்ற ஊரின் மேற்கே செல்லூர் கண்மாய் அமைந்துள்ளது. செல்லூரின் தெற்கு புறம் அனைத்தும் வயல்வெளிகளால் நிறைந்து பச்சைபசேலென காட்சியளிக்கும். அந்தக்காலத்தில் பெரியவர்களும் சிறியவர்களும் இந்தக் கண்மாயில் நீந்தி குளித்து உற்சாகமாய் திரும்புவர். மீன் பிடித்தொழிலும் நடைபெற்றது. கண்மாய் மீன்களுக்கு நல்ல கிராக்கி இருக்கும்.

அந்தோ…. ! அந்த கண்மாய் இன்று பரிதாப நிலையில். காரணம் முறையான பராமரிப்பு இல்லாமல். ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகளும் கொட்டப்படுவதாலும் இன்றைய மக்களே அதை கழிப்பறையாக பயன்படுத்துவதாலும் நீரும் வற்றியதாலும்..

1993 ஆண்டு வரை இந்த கண்மாய் எப்போதும் நீர் நிறைந்தே இருக்கும். 1993 நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் கண்மாய் உடைந்து, கண்மாய் கால்வாய் பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதால் நீர் போவதற்கு வேறு வழி இன்றி செல்லூர் முழுவதும் வெள்ளம் பெருகி நிறைய உயிர் சேதங்கள்; கோடிக்கணக்கில் பொருட் சேதங்கள். மாடுகளும் பிற உயிரினங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சி இன்றும் கண் முன்னே நிற்கிறது. உயிர் பிழைக்க மக்கள் வீட்டுக்கூரைகளிலும் மாடிவீடுகளிலும் மூன்று நாட்கள் பட்டினியாய் இருந்த நிலை. அதில் செல்லூர் மக்களின் வாழ்வாதாரமாய் இருந்த கைத்தறி தொழில் ஏறக்குறைய அழிந்தே விட்டது. இந்தப் பகுதி மக்கள் பிழைப்பிற்கு மாற்று தொழில் வேண்டி சென்று விட்டனர். மேலும் அதே போல 2005 ஆண்டும் இன்னொரு பெருவெள்ளம் வந்தது. ஆனால் செல்லூர் கண்மாய் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிக உயிர் சேதமின்றி பொருட் சேதங்களுடன் மிச்சம் மீதி இருந்த கைத்தறித் தொழிலை முற்றிலுமாக அழித்து சென்றது.

ஆக, 2005 ஆண்டு வரை இந்த கண்மாயில் நீர் வரத்து ஓரளவு பராமரிக்கப்பட்டு வந்ததால் நீர் நிறைந்தே காணப்பட்டு நீர் ஆதாரத்திற்கு எந்த பங்கமும் இன்றி கண்மாய் பயன்பட்டு வந்தது.

ஆனால் அதன் பிறகு கண்மாய் வரும் நீர் வரத்து கால்வாய்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கபளீகரம் செய்யப்பட்டதாலும், மழை பொய்த்ததாலும், விளைநிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மனைகளாக மாறிவிட்டன. இருந்தாலும் இந்த கண்மாய் தான் இந்த பகுதியின் 40000 குடும்பங்களுக்கு நீர் ஆதாரமாய் இன்றும் விளங்கி வருகிறது.

இது இப்படி இருக்க… இதையும் ஆக்கிரமிப்பாளர்கள் சிறுக சிறுக கண்மாய் கரைகளிலும் பிற பகுதிகளிலும் ஆக்கிரமிப்பை தொடர்வது வேதனை அளிக்கிறது.

இதை தடுக்கும் நோக்கத்தில் தான் தற்போது “விழித்தெழு மதுரை” என்ற குழு முனைந்துள்ளது. இந்தக் குழுவில் தற்போது இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் அந்த பகுதியில் உள்ள கண்மாய் பாதுகாப்பு இயக்கங்களும் மற்றும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டர்களும் தானாக முன்வந்து இணைந்து கைகோர்த்துள்ளனர்.

சமீபத்தில் 17-11-13 அன்று “விழித்தெழு மதுரை” சார்பாக இந்தக் கண்மாயில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி “நீர் நடை” நிகழ்வு நடைபெற்றது. மதுரை மாவட்டக் காவல்துறை ஆய்வாளர் உயர்திரு. சஞ்சய் மாத்தூர் அவர்கள் “விழித்தெழு மதுரை’யின் துணி பதாகையை திறந்து வைத்தார். மேலும் காவல்துறை கண்காணிப்பாளர் உயர்திரு. பாலகிருஷ்ணன் அவர்கள், அந்தக் கண்மாய் பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து சிறப்பித்தார்.

மேலும் பறவை ஆர்வலர்கள், கல்லூரி பேராசியர்கள், எழுத்தாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்தப் பகுதி பெருவாரியான மக்களும் கலந்து கொண்டது அந்தக் கண்மாயை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.

ஏறக்குறைய 210 ஏக்கரில் இருந்த கண்மாயின் பரப்பளவு… இன்று சுருங்கி வெறும் 94 ஏக்கர் என்ற பரிதாப நிலையிலே…! இந்த 94 ஏக்கர் கண்மாயையாவது காப்பாற்றத்தான் இந்த “விழித்தெழு மதுரை” குழு முழுமூச்சுடன் முனைத்துள்ளது. நீரின் தேவையை உணர்ந்த பிறகு மக்களின் ஆதரவும் பெருகி உள்ளது.

அந்த நிகழ்வுக்கு பிறகு, அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் கண்மாய் ஆர்வலர்களை இணைத்து ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. கண்மாய்களில் இனிமேல் கழிவுகள் கொட்டப்படாமல் பாதுக்காக்க அவர்கள் முன்வந்துள்ளனர். மேலும் கண்மாயை தூர் வார பொதுப்பணித்துறையிடம் முறையாக முறையிட்டுள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது.

“விழித்தெழு மதுரை” தொடர்ந்து அனைத்து விதங்களிலும் செல்லூர் கண்மாய் பாதுகாப்பு குழுவுக்கு ஆதரவும் அவர்கள் செயல்பாடுகளை கண்காணிப்பதிலும் கவனமாக உடனிருந்து வருகிறது.

மேலும் “விழித்தெழு மதுரை”யின் நோக்கம் மதுரையிலும் மதுரையை சுற்றி அமைந்துள்ள ஒவ்வொரு கண்மாயையும் மீட்டெடுக்கும் வேண்டும் என்பதே! அதற்காக மாதந்தோறும் ஒவ்வொரு கண்மாயை தேர்ந்தெடுத்து அந்தக்கண்மாயில் “நீர் நடை” நிகழ்வு நிகழ்த்தி மக்களுக்கும் அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து கண்மாய்களையும் பாதுகாத்து மதுரையின் நீர் பற்றாகுறையை போக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். மக்களின் ஆதரவோடும் அரசு அதிகாரிகளின் ஆதரவோடும் வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கையுடன் செயலாற்றிவரும் “விழித்தெழு மதுரை”

– செல்வம் ராமசாமி,
dhanaselvaa@gmail.com

‘சஞ்சிகை’ ஜனவரி இதழில் வெளிவந்த கட்டுரை.