ஜிக்காட்டம்

கற்பதற்குரியவை அனைத்தும் கலை எனப்படுகிறன. எளிமையாக கற்கக்கூடிய செயல்களை கலைகள் என்றும், நீண்ட கால பயிற்சி முறைகளை கொண்டடக்கியவைகளை நுண்கலைகள் என்றும் அழைத்தனர். ஆதிகாலங்களில் மனிதர்கள் கலையை அதிகம் போற்றி வளர்த்தனர். மனிதர்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயல்களுக்கும் ஏற்றவாறு ஒரு கலை தொடர்ப்பில் இருந்துள்ளது. இயல், இசை மற்றும் கூத்து (இன்று நாடகமாக மாறியுள்ளது) போன்றவை கலைகளின் தொகுப்பாக அமைகிறன. கலையை ரசிக்க யாரும் சொல்லியோ, பழகியோ தரவேண்டியதில்லை. அது நம் ரத்தத்தில் கலந்துள்ளது. எங்காவது கலை நிகழ்ச்சிகளின் ஆட்டம் பாட்டமோ, அல்லது சத்தமோ வந்துவிட்டால் நம்மையறியாமல் ஒலி வரும் திசை நோக்கி நகர்வோம். இது இயல்பு. அந்த அளவிற்கு நாட்டுப்புறக் கலைகள் நம் வாழ்வோடு ஒருங்கிணைந்துள்ளன.

இன்று நாட்புறக்கலைகளை பார்க்க வேண்டும் என்றாலே அதற்கு ஒரே வழி சென்னைத் தொலைக்காட்சி மட்டுமே. நானும் அதில் தான் கண்டிருக்கின்றேன். தற்போது, மக்கள் தொலைக்காட்சியிலும் நாட்டுப்புறகலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி வருகின்றனர். நாட்டுப்புறக்கலைகள் இன்று வேகமாக வளர்ந்துவரும் மேற்கத்திய நாகரிகத்தில் மெல்ல பின் தள்ளப்பட்டு வருகின்றன. எவ்வளவுதான் பின்னால் தள்ளினாலும், திரைப்படங்களில் மேற்கத்திய சாரல்களில் நான்கு பாடல்களும், நாட்டுப்புறப் பாடல் மெட்டில் ஒரு பாடல் இருந்தால். நாட்டுப்புறப் பாடலின் வெற்றிதான் முக்கியபங்கு வகிக்கும். இது அனைவரும் அறிந்தது. சின்ன உதாரணம்… ‘கும்கி’ திரைப்படத்தில் வந்த “ சொய்ங் சொய்ங் “ பாடலின் வெற்றி ஒன்றே போதும். நமது பண்பாடு நிறைந்த நாட்டுப்புறக்கலைகளின் முக்கியத்துவம் என்னவென்று.

நாட்டுப்புறக்கலைகளில், கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், தெம்மாங்கு, காவடியாட்டம், புலியாட்டம் என பல்வேறு கலைகள் உள்ளன. இதில் புதிதாக கண்களுக்கு காணக்கிடைத்த ஆட்டம் தான் ஜிக்காட்டம்.

ஜிக்காட்டம்

மதுரையில் “மாமதுரை போற்றுவோம்” நிகழ்ச்சியிலும், கோவையில் ஒரு நிகழ்ச்சியிலும் ஜிக்காட்டம் கலையைப் பார்க்க முடிந்தது. அதில் முதன் முறையாக, ஒரு புதுவிதமான கலை உத்தியை கையாண்டு கொண்டிருந்தனர். காண்பவர்களை கண் இமைக்க விடாமல், நிற்கும் இடத்தைவிட்டு நகர விடாமல் ஆட்டத்தையே காணும் அளவிற்கு அமைந்தது ஜிக்காட்டக் குழுவினரின் ஆட்டம். இசை இசைப்பதற்க்கு ஒரு குழு, ஆடலுக்கு தனிக்குழு என இரு வகையான குழுவினர் உள்ளனர். இசையை இசைப்பவர்களை ரசிப்பதா அல்லது ஆடுபவர்களை ரசிப்பதா என்றிருந்தது.

ஜிக்காட்டம் என்பதும் தமிழர்களின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளில் ஒன்றுதான். புதிய கலை நிகழ்ச்சி அல்ல. இந்த ஆட்டமுறை ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய கலை நிகழ்வுதான். அன்றைய காலத்தில் கையில் முரசு போன்ற வாத்தியக் கருவிகளையும் வைத்துக் கொண்டு இசையிட்டுள்ளனர். இந்த கலை நிகழ்ச்சிக்கு “ஜிக்குஅடி” என்று பெயர். அதுவே பிற்காலத்தில் இசையோடு சேர்ந்த சிறு சிறு நகர்வுகள் கொண்ட ஆட்ட முறையும் இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. “ஜிக்காட்டம்” ஆட்டம், இசைக்குழுவில் உள்ள உருட்டு வாத்தியத்திலிருந்து இருந்து எழும் ஜக்கு, ஜக்கு, ஜிக்கு… ஜிக்கு, ஜிக்கு, ஜக்கு என்ற இசைக்கேற்ப நடனக்குழுவினர் ஆடிக்கொண்டிருந்தனர்.

இந்த ஆட்டத்தில், முரசு போன்ற அமைப்பை உடைய வாத்தியத்தையும், ஜில், ஜில் என ஒலி தரும் உருட்டுவையும் கொண்டுள்ளனர் இசைக் குழுவினர். இதில பெரிய முரசுகளை கையாளும் நால்வரும், சிறிய ரக முரசுகளை கையாளும் ஐவரும், ஜில், ஜில் என ஒலி தரும் உருட்டுவை கையில் கொண்ட ஒரு நபரும் உள்ளனர். ஆட்டக் குழுவில் ஆறு பேர் என ஜிக்காட்டக் குழுவில் மொத்தம் 16 பேர் உள்ளனர். இவர்களது ஆட்டமுறையில் ஒயிலாட்டமும், டிஸ்கோவும் கலந்து ஆடப்படுகிறது. ஆடுபவர்களில் ஒருவரிடம் மட்டும் விசில் ஒன்று உள்ளது. அவரின் விசில் சமிக்ஞைகளுக்கு ஏற்றவாறு ஆட்டத்தின் அடவு முறை மாற்றப்படுகிறது.

ஜிக்காட்டம்

இசையும் ஆட்டமும் நம்மை கிரங்கடித்து கொண்டிருந்தது. முரசுப் போன்ற வாத்தியத்தை வாசிப்பவர்களின் திறமையை எழுத்துக்களில் விவரிக்க முடியவில்லை. ஜிக்காட்டக் கலைஞர்கள், கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் அதிகம் வசிக்கின்றனர். கோவில் திருவிழாக்களில், தமிழர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து வருகின்றனர். இவர்களை போன்ற கலைஞர்களை நமக்கு நெருங்கிய விழாக்களில், சுபநிகழ்ச்சிகளில் வாய்ப்பளிப்பதன் மூலம் இக்கலையை அனைவரும் அறிய செய்திட முடியும். அத்தோடு கலையையும் வாழச் செய்தவாறும் அமையும்.

– இளஞ்செழியன்,
மதுரை.
ilanchezhiyankathir@gmail.com

Advertisements

தோல்பாவை கூத்து

என்ன செய்ய நானும்
தோல்பாவைதான்
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும்
நூல் பாவைதான்!

– வாலி, தசாவாதாரம்.

தோல்பாவைக்கூத்து திரைப்படக் கலையின் முன்னோடி. இராமாயணமும், புராணக்கதைகளும் அன்று எளிய மக்களைச் சென்றடைய பாவைக்கூத்து உதவியது. ஆனால், இன்று அழிவின் விளிம்பில் உள்ள பல நாட்டுப்புறக்கலைகளில் தோல்பாவைக்கூத்தும் அடங்கும்.

1

ஆறு ஆண்டுகளுக்கு முன் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அண்ணல் அம்பேத்கார் வாழ்வில் நிகழ்ந்த சிறு பகுதியை தோல்பாவைகூத்தில் பார்த்தேன். அம்பேத்காரும் காந்தியும் சந்திக்கும் காட்சியெல்லாம் அதில் காண்பித்தார்கள். மறக்க முடியாத மிக அற்புதமான நிகழ்வு. மற்றொருமுறை, மதுரை கிழக்கு சித்திரை வீதியில் தெருவோரத் திருவிழாவில் இராமாயணக்கூத்து பார்த்தேன். போர்க்காட்சிக்கு தீ அம்புகள் பாய்வதை தத்ரூபமாக செய்து காண்பித்தார்கள்.

தோல்பாவைகள் ஆட்டுத்தோலில் செய்யப்படுகின்றன. தோலை நன்கு ஊறவைத்து அதிலுள்ள ரோமங்களை நீக்கி நீட்டி காயவைத்து விடுகின்றனர். அதில் கரித்துண்டால் படங்களை வரைந்து பிசினில் வண்ணப்பொடிகளைத் தோய்த்து வண்ணங்களைத் தீட்டுகின்றனர். இப்படி வரையப்பட்ட பாவைகள் பல ஆண்டுகள் சாயம் இழக்காமல் இருக்கும். உச்சிகுடும்பன், உளுவத்தலையன் போன்ற நகைச்சுவைக் கதாப்பாத்திரங்களின் தலை, கை, கால்களை அசைக்கும்படி பாவைகளை செய்கின்றனர்.

இசைக்கருவியை ஒருவர் வாசிக்க மற்றொருவர் பாடல்களைப் பாடிக்கொண்டு பாவிகளை கதைக்கு ஏற்றாற்போல வேகமாக அசைக்கின்றனர். நூற்றுக்கும் அதிகமான பாவைகளை வைத்து பாவைக்கூத்துகளை நிகழ்த்துகின்றனர்.

கள ஆய்வாளரும், எழுத்தாளருமான அ.கா.பெருமாள் தோல்பாவைக்கூத்து குறித்தும், அக்கலைஞர்களின் வாழ்க்கை குறித்தும் எழுதியுள்ளதை வாசித்திருக்கிறேன். இவர் இக்கலை நிகழ்த்த நிதியுதவி பெற்றுத்தந்து கலைஞர்களுக்கு பல உதவிகள் செய்திருக்கிறார்.

2

மதுரை விழாவில் தோல்பாவைக்கூத்து கலைஞருடன் பேசிக்கொண்டிருந்த போது இப்போதெல்லாம் இதைப்பார்க்க யாரும் விரும்புவதில்லை. விழாக்களுக்கு நிகழ்த்தவும் அழைப்பதில்லையென வருத்தத்தோடு சொன்னார். பள்ளி, கல்லூரிகளில் நாட்டுப்புறக்கலைகளை பாடமாக்கி இக்கலைஞர்களை பேராசிரியர்களாக்கினால் நன்றாக இருக்கும். நம்மூரில் இதெல்லாம் சாத்தியமில்லையெனத் தெரிந்தாலும் மனம் சும்மா இப்படி எதையாவது யோசிக்கிறது.

3

எஸ்.ராமகிருஷ்ணன் ‘இலைகளை வியக்கும் மரம்’ கட்டுரைத்தொகுப்பில் தோல்பாவைக்கூத்து கலைஞர்களைப் பார்க்க கோயில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு பகுதிக்கு சென்றிருந்த அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார். “நாங்க எங்க போனாலும் எங்க கூடவே ராமனும் வர்றார். எங்களுக்கு அவருதான் துணை. இப்போ பிழைக்க வழியில்லாம நாதியத்து கிடக்கிறோம். அதுவும் அவர் கொடுத்ததுதான்னு நினைச்சுட்டு இருக்கோம். ஒரேயொரு மனக்குறைதான் எங்களுக்கு… நாங்க ஊர் ஊராக போயி ராமன் புகழைத்தானே பாடினோம். வேறு ஏதாவது தப்பு செய்திருக்கிறோமா? எதுக்கு எங்களுக்கு இந்த நிலை, ஏன் இப்படி ஒரு வாய் சோற்றுக்கு வழியில்லாம அல்லாடுகிற பிழைப்பா போச்சு. சொல்லுங்க.” அங்கு உள்ள பாவைக்கூத்து கலைஞரான பாப்பாத்தியம்மா கேட்கும் கேள்வி நம்மையும் உலுக்குகிறது.

தோல்பாவை கூத்து

ஏழுமலையானுக்கு வரும் கூட்டம் நம்மூரில் உள்ள பழமையான நிறைய கோயில்களுக்கு வருவதில்லை. கலைகளிலும், கடவுள்களிலும் பிரமாண்டங்களை நோக்கியே மக்கள் படையெடுக்கின்றனர்.

தோல்பாவை கூத்து

இராமாயணப் பாவைக்கூத்து நடக்கும் நாட்களில் பட்டாபிஷேகத்தன்று மழை பெய்யும் என்ற நம்பிக்கை நம் முன்னோர்களிடமிருந்தது. இன்று பாவைக்கூத்து நடக்காததால் தான் மழை பெய்ய மறுக்கிறதோ என்னவோ? நேரங்காலமில்லாமல் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும் தொலைக்காட்சிகளை நிறுத்துவோம். மக்கள் கலைகளை மீட்டெடுப்போம்.

வாழ்க்கையை கொண்டாடுவோம்.

– சித்திரவீதிக்காரன், மதுரை.
maduraivaasagan@gmail.com

புலியாட்டம்

தெருக்கூத்து, தோற்பாவை நிழற்கூத்து, பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற தமிழ்நாட்டு நாட்டாற்கலை வடிவங்கள் நிகழ்கலைகளாக விளங்குகின்றன. ஊர்வலங்களிலும், உற்சவங்களிலும், ஆன்மீக, சமூக விழாக்களிலும், மொகரம், ஓணம் பண்டிகைகளிலும் நிகழ்த்தப்படும் ‘புலியாட்டம்’ ஒரு நிகழ்கலைதான்.

நிகழ்கலை என்பது ஒருவரோ, ஒரு குழுவினரோ பிறருக்காக பாடியோ, ஆடியோ, நடித்தோ, சொல்லியோ காட்டுவது. பிறருக்கு நிகழ்த்திக் காட்டுவதால் நிகழ்த்துதல் என்று பெயர் பெற்றது.

புலிபோல வேடமிட்டு ஆடுவதைப் புலியாட்டம், புலிவேஷ ஆட்டம் என்று அழைப்பார்கள். தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் புலியாட்ட நிகழ்ச்சிகல் நடத்தப்படுகிறன. புலியாட்டம் சாதி, சமய, இன, மொழி எல்லை ஆகியவற்றை கடந்து ஆடப்படும் ஆட்டம்.

புலி பற்றிய அறிவும், புலியின் இயல்பும் புலியாட்டத்தை ஆடுபவனுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், மனிதனின் ஆட்டத்தை மனிதன் பார்த்து ஆடும் ஆட்டமல்ல; புலியின் இயல்பை மனிதன் கற்று ஆடப்படும் ஆட்டம்.

புலியாட்டக்காரர் புலியின் செய்கைகளை, இயல்புகளை தன் கைகளின் அசைவுகளாலும், முகபாவத்தாலும் வெளிப்படுத்தித் தன்னை ஒரு புலியாக பார்ப்பவர் உள்ளங்களில் நிலை நிறுத்துவார்.

புலி போல உறுமிக்கொண்டு பதுங்கியும், அங்கும் இங்கும் பாய்ந்தும் ஆடும் ஆட்டம் பயத்தை உண்டாக்கினாலும் ரசிக்ககூடியதாக இருக்கும். சிறுவர்களை அதிகம் கவரும். தரையோடு தரையாக பதுங்குவது, ஒளிவது, உடம்பையும் பாதங்களையும் நக்குவது போன்ற அசைவுகளை மேலத்தாளத்திற்கு ஏற்ப செய்து காட்டுவார்கள்.

புலியாட்டம் சிலம்பாட்டத்துடன் கலந்து ஆடும் பழக்கமும் உள்ளது. ஒன்று முதல் நான்கு வரை உள்ள சிலம்பாட்ட அடிகள் அப்படியே புலியாட்டத்தில் இடம் பெறுகின்றன. அதனால் தான் சிலம்பாட்டத்திற்குரிய பக்க இசை அப்படியே புலி ஆட்டத்திற்கும் பொருந்துகிறது. புலி ஆட்ட கலைஞரும், சிலம்பாட்ட கலைஞரும் உபயோகிக்கும் கால் வைப்பு முறைகளும் ஒன்றாகவே இருக்கும். புலியின் மிக மெதுவான பம்முதலையும் மிக விரைந்த பாய்ச்சலையும் இந்த கால் வைப்பு முறை பிரதிபலிக்கிறது.

புலிக்கு இரட்டை வால் இல்லை. ஆனால் புலிவேடம் போடும் கலைஞர்களில் சிலர் இரட்டைவால் கட்டும் பழக்கம் தென் தமிழகத்தில் உள்ளது. ஒருவர் இரட்டை வால் கட்டினால் தன்னை எதிர்க்க யாருமில்லை என்று சவால் விடுவதாக பொருள். இரட்டை வால் கட்டி வருவோருக்கு பல சோதனைகள் வைக்கப்படும். அவற்றில் வெற்றி பெறுபவரே இரடைவால் கட்டத் தகுதியுடையவர்கள் என ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

சேலம் பகுதிகளில் உள்ள புலி ஆட்டக்கலைஞர்கள் பக்க இசையில் வாசிக்கப்படும் தாளப்போக்கிற்கேற்ப ஆடுவார்கள். பெரும்பாலும் சிலம்பாட்ட கால்வைப்பு முறைகளையே பின்பற்றுவார்கள். சென்னைப்பகுதிகளில் உள்ள கலைஞர்கள் புலியின் செயல்களைப்போலவே அதிகம் செய்வார்கள். தாக்க வருபவரை அடித்து குதறுதல் போன்ற செயல்களை செய்வார்கள். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கலைஞர்கள் முதலில் தரையைத் தொட்டு வணங்கி பின்பு ஆட்டத்தை தொடங்குவார்கள்.

புலிவேடம் போட நாமக்கட்டியை நீரில் குழைத்து உடல் முழுவதும் பூசிக்கொள்வார்கள். அது உலர்ந்தபின் அதன் மேல் பிற வண்ணங்களைப் பூசுவர். வேறு சிலர், முதல் நாள் வடித்த அரிசிக்கஞ்சியில் கருவேல மரப்பிசினை கலந்து ஊறவைத்து அதில் வண்ணங்களை குழைத்து பூசிக்கொள்வர். புலி வேடத்திற்கு வண்ணம் பூச பிரத்யேக ஒப்பனைக்காரர்கள் இருக்கிறார்கள். சில நேரங்களில் புலி வேடக்காரர்களே ஒருவருக்கொருவர் ஒப்பனை செய்து கொள்வதும் உண்டு. இந்த வேலைக்கு பல மணிநேரங்கள் கூட ஆகும். புலியின் உடல் வண்ணங்களை போலவே மஞ்சள் நிறமும் கருப்பு வரிகளும் தீட்டப்படும்.

கலையிலிருந்து தான் சினிமா தோன்றியிருந்தாலும், சினிமாக்களில் புலியாட்டத்தையும் புலியாட்ட கலைஞர்களையும் சிறப்பாக காட்டியதில்லை. வெகுசில படங்களில் மட்டுமே பாடல்காட்சிகளில் புலியாட்டத்தைக் காட்டுகிறார்கள்.

கலையை ரசிப்பதுபோல கலைஞர்களின் வாழ்வை ரசிக்க முடியாது. சமீப காலங்களில் நாட்டுப்புற கலைகள் பரவலாக நலிந்து வருகின்றன. இதற்கு புலியாட்டமும் விதிவிலக்கல்ல. இக்கலைக்கே உயிர்ப்பாக விளங்கும் புலிகளும் நம் நாட்டில் குறைந்து வருகின்றன. புலிகளையும் புலியாட்டத்தையும், புலியாட்ட கலைஞர்களையும் அழிவிலிருந்து மீட்க வேண்டியது நம் கட்டாயக் கடமைகளில் ஒன்று.

சமீபக்காலங்களில் இளைஞர்கள் குறும்படங்களை இயக்குவது அதிகமாகி வருகிறது. அத்தகைய இளைஞர்கள் நாட்டுப்புற கலைஞர்களுடன் இணைந்து குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் எடுக்க முன்வரவேண்டும். சமூக விழாக்களிலும், ஆன்மீக விழாக்களிலும் புலியாட்டக் கலைஞர்களை வரவழைத்து ஆட செய்து அவர்களை கௌரவப்படுத்த வேண்டும்; அவற்றை காணும் இந்த தலைமுறைக் குழந்தைகளுக்கும் புதிய வகை பொழுதுபோக்காக இருக்கும்.

– முருகராஜ்