காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள்

காட்டுக் கோழியைத் துரத்தி வந்த
பூனை திகைக்க
வழித்தடம் மறிபட்டு
யானை ஒதுங்க
வலசை கிளம்பிய
கதிர்க்குருவி தடுமாற
காட்டின் நெஞ்சைக் கீறிக்கீறி
எழுகிறது ஒரு தார்ச்சாலை
–  அவை நாயகன்

Read More »

Advertisements

காட்டுயிர்களை தொல்லைப்படுத்தும் பயணிகள்

பயணம் செல்லும்போது கண்ணில் படும் அனைத்தையும் கேமராவிலும், அலைப்பேசியிலும் படம் எடுக்கும் பழக்கம் அனைத்து தரப்பினரிடமும் நீக்கமற நிறைந்துள்ளது. பந்திப்பூர் பாதையில், தன் குட்டியுடன் சாலையை கடந்த யானைக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

0222இச்சம்பவத்தை தற்செயலாக தொலைவில் இருந்து நீண்ட குழியாடி (LENS) மூலம் படம்பிடித்த கானுயிர் ஒளிப்படக்கலைஞர் ஆஸ்டின் சேரப்புழா இதைப்பற்றி கூறுகையில், “சென்ற வெள்ளிக்கிழமை ஊட்டிக்கு செல்லும் பந்திப்பூர் பாதையில் ஒரு குடும்பம் தன் குட்டியுடன் சாலையை கடக்கும் யானையை படம்பிடித்துக் கொண்டிருந்தது. கேமராவின் ஃபிளாஷ் வெளிச்சம் யானையை பீதியடைய செய்திருக்கும். தன் குட்டியை அவர்களிடமிருந்து காக்க வேண்டி, அவர்களை நோக்கி நெருங்கியது, யானை. தங்களை நோக்கி யானை வருவதைக் கண்டதும், அக்குடும்பம் விரைவாக தங்கள் வாகனத்தில் ஏறிக்கொண்டனர். வண்டியின் கண்ணாடி ஜன்னல் திறந்திருந்ததால் தன் தும்பிக்கையினை காரினுள் விட்டு கைப்பை ஒன்றை எடுத்து, வாயில் இட்டு விரைவாக வயிற்றுனுள் தள்ளி, அந்த சாலையை விட்டு தன் குட்டியுடன் அகன்றது. அந்த யானையின் காலில் சங்கிலி இருந்தது. அது காட்டு யானை அல்ல. 24 பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் இந்த காட்டில் உள்ளன. அவற்றை தனியாக இனம்காண, காலில் சங்கிலி கட்டப்பட்டுள்ளன.

Untitledaaaபின்னர், அந்த இடத்தில் கூட்டம் கூடி விட்டது. தங்கள் கைப்பையில் பழங்கள், வங்கி அட்டைகள் (DEBIT CARDS), தங்க நகை இருந்ததாக அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தனர்.

ஒரு கானுயிர் புகைப்படக்காரனாக இதனை கடுமையாக எதிர்க்கிறேன். பந்திப்பூர் சாலையில் வண்டியை நிறுத்தி புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்ற கடுமையான விதிகளை இங்கு யாரும் பின்பற்றுவதில்லை. இதுபோன்ற பல சம்பவங்கள் இங்கு நடைபெற்றுள்ளன.”

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் இயக்குனர் கந்தராஜ் கூறுகையில், “பயணிகள் இவ்வாறு படம்பிடிப்பது எங்களுக்கு பெரும் தலைவலியை கொடுக்கிறது. காப்பகத்தை விட்டு வெளியேறும் போது வாசலில் எங்கள் காவலர்கள் வண்டிகளை நடுவழியில் நிறுத்தி புகைப்படம் எடுக்ககூடாது என பலமுறை எச்சரிக்கின்றனர். இது போதாதென்று, வழியெங்கும் அறிவிப்பு பதாகைகளை (NOTICE BOARDS) வைத்துள்ளோம். பயனில்லை. அடுத்த நடவடிக்கையாக, மூன்று காவலர்கள் கொண்ட ரோந்து வாகனத்தை இயக்கும் யோசனையில் உள்ளோம்.

“அந்த கைப்பையில் இருந்த பொருட்கள் யானையின் உள்ளுறுப்புகளை கண்டிப்பாக பாதிக்கும். அந்த பை பெண்களின் பையாக இருந்திருக்குமானால், அவற்றில் அழகுசாதனப் பொருட்களும், கைவினைப் பொருட்களும் மெல்லிய சங்கிலிகளும் இருக்ககூடும். அந்த பையில் உலோகங்கள் இருந்திருக்கும் பட்சத்தில் யானையின் உள்ளுறுப்பில் தசைகள் கிழிந்து, ரத்தம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. குறிப்பிட்ட அந்த யானையை சிலகாலம் கண்காணிப்பதும், மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதும் நன்று.” என்று கானுயிர் விலங்கு மருத்துவர் அருண் ஷா தெரிவித்தார்.

-கோ. முருகராஜ்

பாம்பின் பிழையன்று தீண்டிப் போதல்!

Snake1
அவன் மடிமேல் வலந்தது பாம்பு;
பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;
பாம்பு பூண்; பாம்பு தலைமேலது;
– பரிபாடல் 4 – திருமால்.

பழந்தமிழர் இலக்கியங்களில் பாம்பு பெரிதும் பாடப்பட்டுள்ளது. உலக மக்கள் வாழ்விலும், பண்பாடுகளிலும் பாம்புகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆயினும் பாம்புகள் குறித்த தவறான கருத்துக்கள், மூட நம்பிக்கைகள் நமது சமூகத்தில் ஆழமாக வேரூன்றிக் கிடக்கின்றன. இந்து வழிபாட்டு முறைகளில் பாம்புக்கு பெரியதோர் இடமுண்டு. நாக கன்னி, அரவான், உலுப்பி, சங்கன், புற்றீசர் என்று பலவகைகளில் நம் மக்கள் பாம்புகளை வழிபட்டு வந்துள்ளனர். இந்து மதம் மட்டுமன்றி பௌத்த மதத்திலும் சிந்து சமவெளி நாகரிகத்திலும் கூட நாக வழிபாடு காணப்படுகிறது.

காட்டுயிர்களில் முதன்மையான பாம்புகள் இடைநிலை கொன்றுண்ணிகளாய் பெரும்பங்காற்றுகின்றன. இந்தியாவில் காணப்படும் 200-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகளில் சுமார் ஐந்து வகை பாம்புகள் மட்டுமே நச்சுதன்மை கொண்டவையாக உள்ளன. இரையை பிடிப்பதற்கு மட்டுமே நஞ்சை பயன்படுத்துகின்றன.

பாம்பும் அவை சார்ந்த மூடநம்பிக்கைகளும்:
கல்வியறிவு நிறைந்த இந்த சமூகத்தில் பல்வேறு கட்டுக்கதைகள் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.

கொம்பேறி மூக்கன் – இந்த பாம்பு ஒருவரை தீண்டிவிட்டால் மரத்தின் உச்சியில் ஏறி நின்று அவர் எரிக்கப்படுகிறாரா என்று பார்க்குமாம். நச்சற்ற கொம்பேறி மூக்கனை என் கைகளில் வைத்து பார்த்த மகிழ்வான நேரங்களை எண்ணிப்பார்க்கும்போது, மூடநம்பிக்கையை நினைத்து வேதனை தான்பட முடிகிறது.

பாம்புக்கொலை: ஒரு பாம்பை கொன்றுவிட்டால் அதன் இணை கொன்றவரை தேடிச் சென்று பழிதீர்க்கும். உண்மை என்னவென்றால் ஒரு பாம்பு கொல்லப்படும் போது அது மஸ்க் என்ற ஒரு திரவத்தை வெளியேற்றும். இனச்சேர்க்கைக்கு உதவும் அந்த மஸ்க்கால் ஈர்க்கப்பட்டு பிற பாம்புகள் வருவதாக அறிவியல் குறிப்பிடுவதை அனைவரும் புரிந்துக் கொள்ளவேண்டும்.

இசைக்கேற்ப நடனமாடும்: காற்றில் வரும் ஒலி அலைகளை முழுவதும் கிரகிக்கும் தன்மையற்ற பாம்புகள், நிலவழி அதிர்வுகளின் மூலமே தன்னை சுற்றி நடப்பவற்றை அறிந்து கொள்கின்றன. வாசனைகளின் மூலம் அறிந்து கொள்ளும் திறனும் பாம்புகளுக்கு வாய்த்திருக்கிறது. நாக்கை நீட்டி நீட்டி பாம்பு பார்ப்பது தீண்டுவதற்கு அன்று. நாக்கை உள்ளிழுத்த பின் மேலண்ணத்தில் இருக்கும் ஜேக்கப்சன் உறுப்பை நாக்கால் தொடும். இந்த ஜேக்கப்சன் உறுப்பே வாசனைகளை பிரித்தறிய உதவுகிறது. பாம்புகளுக்கு செவிப்பறைகள் கிடையாது. மகுடிக்கு பாம்புகள் ஆடுவதுண்டு. ஆனால் இசைக்கு அல்ல. அந்த மகுடிக்கு பதில் நீங்கள் ஒரு வெள்ளைத்துணியை ஆட்டினால் கூட அதற்கேற்ப பாம்பு அசையும்.
பாம்பு நடனம்: நாகமும் சாரையும் இணையும் என்று நம்புகிறார்கள். உண்மையில் இரு பாம்புகள் பின்னிப் பிணைவது இரு ஆண் பாம்புகளின் எல்லைச்சண்டையாகவே உள்ளது. இனச்சேர்க்கை என்பது அதன் இனத்திற்குள்ளேயே நடைபெறுகிறது.

பாம்புக்கடி:
பாம்புகள் தேவையின்றி யாரையும் கடிப்பதில்லை. இரையை பிடிக்கும்போது பொய்க்கடியையும், தற்காப்பிற்காக உண்மை கடியையும் பாம்புகள் கடிக்கின்றன. மனிதர் நடமாட்டத்தை தவிர்க்கவே பாம்புகள் விரும்புகின்றன. அது வெளியேற ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்து விட்டால், அது தான் போக்கில் போய் விடும். மேலும் பல நேரங்களில் பாம்புகள் கடித்தாலும் நஞ்சை உள்செலுத்துவதில்லை. நஞ்சை செலுத்துதல் ஒரு இச்சைச்செயலாகும். அது அனிச்சை செயல் அல்ல. இதை ஆங்கிலத்தில் wet bite/dry bite என்பார்கள். எனினும் நஞ்சு உள்ளே சென்றிருக்கிறதா என்பதை பாம்பு மட்டுமே அறியும் என்பதால் அனைத்து பாம்புக்கடிகளும் wet bite ஆகவே கருதப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

பல் பிடுங்கிய பாம்புகளால் ஆபத்தில்லை என்பார்கள். முழுவதும் தவறான கருத்து இது. பாம்புகள் மனிதனை போல் அல்ல. அவற்றிக்கு வாழ்நாள் முழுவதும் பற்கள் விழுந்து முளைக்கும். இதை polyphodont என்பார்கள். மனிதன் Diphodont. ஆகையால் பாம்பின் பல் பிடுங்கப்பட்டு இருந்தாலும் அதன் பல் மறுபடி முளைத்து விடும். இதை அறியாமல் பல பாம்பாட்டிகள் கடிபட்டு மரணமடைந்திருக்கிரார்கள்.

சிகிச்சை:
பாம்பின் கடிக்கு சிகிச்சை மிகவும் அவசியம். கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றினால் கடி பட்டவரை காப்பாற்றலாம்.
• அமைதி காக்க வேண்டும். கடி பட்டவரை பதற்றம் அடைய செய்ய கூடாது.
• சாதாரண மாத்திரை ஒன்று கொடுக்கலாம். அது கடிபட்டவருக்கு ஆறுதல் அளிக்கவே.
• கடிபட்ட இடத்தில் கட்டு எதுவும் போடக்கூடாது. மேலும் கத்தியால் கீறி விட்டு ரத்தத்தை உறிவதும் தவறான அணுகுமுறையாகும்.
• உடனே கடிபட்டவரை நச்சுமுறி மருந்து உள்ள ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வேறு எந்த சிகிச்சையும் அளிக்கத்தேவையில்லை.

நாட்டு மருந்துகள், மந்திரம் ஓதுதல், லெக்சின் (Lexin), திரியாக் (Thiriyaq) போன்ற பதிவு பெற்ற மருந்துகள், போன்ற வழிமுறைகளை தவிர்க்க வேண்டும்.

இருளர் சமுதாயம் பாம்புகளின் மூலமே வாழ்வாதாரத்தை பெறுவதால் காலங்காலமாய் செய்த வேலையின் மூலம் சில நச்சுமுறி மூலிகைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த மூலிகைகளில் இருக்கும் மூலப்பொருள் பற்றி எந்தவித ஆராய்ச்சியும் இதுவரை நடந்ததில்லை.

முக்கியத்துவம்:
எலிகள் பெரும் கொறிவிலங்குகள். நம் நாட்டில் விளையும் தானியங்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை எலிகளால் பாழடிக்கப்படுகின்றன. இவற்றால் உண்டாகும் பொருளாதார சேதம் அதிகம். நீலகிரியில் உள்ள தேயிலை தோட்டத்தில் ஆண்டிற்கு 5 லட்சங்கள் வரை எலிகளால் சேதாரம் ஏற்படுவதாக ரோமுலஸ் விட்டேகர் (இந்திய பாம்புகள்) குறிப்பிடுகிறார். வளைகளுள் பதுங்கும் எலிகளை பிடித்து உண்ண பாம்புகள் தேவை. ஆனால் தேயிலை தோட்டங்களுக்காக காடுகளை அழித்ததில் பாம்புகளின் வாழ் சூழல் கடுமையாய் பாதிக்கப்பட்டது. இதே நிலை தொடர்ந்தால் எலிகள் பெருகி தானிய உற்பத்தி கடுமையாய் பாதிக்கக்படக்கூடும். உணவு உற்பத்தி பெருக வேண்டுமாயின் நாம் பாம்புகள் வாழ எதுவாய் உள்ள இடங்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. இயற்கை வேளாண்மை முறைக்கு பாம்புகள் மிகவும் அவசியமானவை என்பதை இதன் மூலம் அறியலாம்.

பாம்புகளின் நஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் மருத்துவத்துறையில் பல்வேறு சிகிச்சைகளுக்கு உதவுகின்றன. அதில் முக்கியமானவை நச்சுமுறி மருந்து தயாரிப்பு மற்றும் இருதய நோய்க்கான மருந்துகள். பாம்புக்கடிக்கான நச்சுமுறி மருந்து பாம்பும் நஞ்சில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. மேலும், மாரடைப்பு வந்தவர்கள் உட்கொள்ளும் எப்டிபிபடைட் (Eptifibatide) மற்றும் டிரோபிபான் (Tirofiban) போன்றவையும் குருதி உறையாமல் தடுக்கும் ரஸ்ஸல்ஸ் வைப்பர் வேனோம் போன்றவையும் மருத்துவத்துறைக்கு அத்தியாவசியமாய் இருக்கின்றன. சமீபகாலமாய், சில பாம்புகளின் நஞ்சில் இருந்து புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உடைய புரதங்களை எடுக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். மரத்துப் போகும் தன்மை கொண்ட நச்சுக்களில் இருந்து நரம்பியல் வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

snake2ஒன்றை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பாம்பு நம் வீட்டிற்குள் வருவதில்லை. நாம் தான் அதன் இருப்பிடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வருகிறோம். அடுத்த முறை பாம்பு ஒன்று வீட்டினுள் நுழைந்தால் அதை அடிக்க கட்டையை தேடாமல் உங்கள் அருகில் இருக்கும் தீயணைப்புத் துறைக்கு அல்லது வனத்துறை அலுவலகத்துக்கோ தொடர்பு கொண்டு தகவல் சொல்லுங்கள். அவர்கள் அந்த பாம்பை பத்திரமாக எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் விட்டு விடுவார்கள்.

மேலும் படிக்க:
இந்திய பாம்புகள் – ரோமுலஸ் விட்டேகர் – நேஷனல் புக் ட்ரஸ்ட்
Snakes of India (Field guide) – Romulas Whittaker – Draco books
The snakes of India – CKG Gharpurvey – Asiatic publishing house
My husband and other animals – Janaki Lenin – Westland books

– ராஜன்னா
Rajanna.dr@gmail.com