தென்மொழி – இதழ்

scan0035 copy_Fotorபத்திரிகை சமுதாயத்திற்கான மாமருந்து எனலாம். இப்போதுள்ள வியாபார காலத்தில் ஒரு சில பத்திரிக்கைகள் பணம் பார்க்க அம் மருந்தை விடமாக்குவது நாம் காண்பதே. பெரும் பத்திரிகைகளில் பெரும்பாலானவை பணம் தேடும் தொழிலாக மட்டுமே மாற்றப்பட்டுவிட்டன. இது போன்ற சூழ்நிலைகளிலும் சிறு பத்திரிகைகள், சமூக அவலங்களுக்கும் அநீதிகளுக்கும் எதிராக தொடர்ந்து ஒலித்துக் கொண்டேதானிருக்கின்றன.

அந்த வகையில் தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் சிந்தனையாளர் அய்யா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் 1959-ல் (தி.பி. ககூகூ0) உருவாக்கப்பட்ட “தென்மொழி” சிற்றிதழ் இன்றும் தன் தொன்மை மாறாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. “தென்மொழி” தூயதமிழ்த் திங்களிதழாக சென்னையில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதழின் நோக்கம் முதல் பக்கத்திலேயே புலனாகின்றது.
“இந்தியா ஒன்று இருக்கும் வரை இந்து மதம் இருக்கும். இந்து மதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப்பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகவே முடியாது; மதப்பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனிய பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாத வரை, தமிழ் மொழி தூய்மையுறாது; தமிழினம் தலை தூக்காது, தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே, இந்து மதத்தினின்றும், மதப் பூசல்களினின்றும், ஆரியப் பார்ப்பனியத்தினின்றும் விடுபட வேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடியினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே தமிழக விடுதலைதான் நம் மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.” என இதழின் கொள்கையினை வெளிப்படுத்தியுள்ளனர்.

தூயதமிழ்த் திங்களிதழ் என்ற அடையாளத்திற்கு சற்றும் வேறுபடாது, பிற மொழிச் சொற்கள் இல்லாத கட்டுரைகளும் கவிதைகளும் செய்திகளுமாக நிறைந்துள்ளது தென்மொழி. பிற மொழிச் சொற்களை வெளியிட வேண்டிய இடங்களில் அச்சொற்களை அடைப்புக்குறிகளுக்குள்ளும், அதற்கு இணையான தூயதமிழ்ச் சொற்களை வாங்கியங்களில் தொடர்ச்சியாக இட்டும் வெளியிடப்படுவது இந்த இதழின் தனிச்சிறப்பு. இதன் மூலம் நாம் வழக்கில் பழகிப்போன பிற மொழிச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ள சிறந்த தமிழ் அகராதி போலவும் விளங்குகின்றது இவ்விதழ்.

இளைஞர்கள் மாணவர்களுக்காக குறுக்குச் சொல் போட்டி மாதாமாதம் வெளிவருகின்றது. முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றது.

தமிழ் மொழி இன நாட்டு நலத் தொடர்பாகவும், அரிய தமிழ் ஆய்வுகள் தொடர்பாகவும் நடைபெறும் கருத்தரங்குகள், கூட்டங்கள், மாநாடுகள், போராட்டங்கள், தமிழரிஞர்களைச் சிறப்பு செய்யும் நிகழ்ச்சிகள் கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் செய்திகளை படங்களுடன் தென்மொழியில் வெளியிட ஏதுவாக அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

—-
ஆண்டுக்கட்டணம்: உரு.120.00
வாழ்நாள் கட்டணம்: உரு.1000.00 (பத்து ஆண்டுகள்)
தனி இதழ் உரு.10.00
வெளிநாடு ஆண்டுக்கட்டணம்: உரு.1000.00

அலுவலகத் தொடரப்பு முகவரி:
தென்மொழி,
மேடவாக்கம் கூட்டுச் சாலை,
சென்னை – 600100.
பேசி: 94444 40449, 94438 10662
இணைய அஞ்சல்: thamizhnilam@gmail.com

Advertisements

திசை எட்டும் – மொழியாக்க காலாண்டிதழ்

2003ம் ஆண்டு நெய்வேலியில் துவக்கப்பட்ட ‘திசை எட்டும்’ காலாண்டிதழ், தற்போது நெய்வேலிக்கு அருகேயுள்ள சின்னஞ்சிறிய ஊரான குறிஞ்சிப்பாடியில் இருந்து வெளிவருகிறது. இவ்விதழை திரு.குறிஞ்சிவேலன் அவர்கள் சிறப்பாக நடத்தி வருகிறார். கடந்த பத்தாண்டுகளாக தமிழிற்கு சிறந்த மொழியாக்கப் படைப்புகளை ‘திசை எட்டும்’ அளித்து வருகிறது.

‘திசை எட்டும்’ சொல்லை இவ்விதழுக்கு பெயராக சூட்டுயது பற்றி இதன் ஆசிரியர் குறிஞ்சிவேலன் கூறுகையில், “திசை எட்டும் என்ற சொல் எட்டு திசைகள் என்பது தவிர, பிற மொழிகளை அறிந்தால் எல்லா திசைகளும் கைக்கு எட்டும் தூரத்தில்தான் என்பதை சுட்டிக்காட்டுகிறது.” காலாண்டிதழ் என்பதால் வருடத்திற்கு நான்கு இதழ்கள் ஜனவரி-மார்ச், ஏப்ரல்-ஜூன், ஜூலை-செப்டம்பர், அக்டோபர்-டிசம்பர் என வெளிவருகின்றன. வருடத்திற்கு நான்கு இதழ்கள் தான் என்றாலும் ஒவ்வொரு இதழும் 160 பக்கங்களுக்கு வெளிவருகிறது. இதழ் என்று சொல்வதை விட ஒவ்வொன்றும் ஒவ்வொரு புத்தகம் என்றே சொல்லலாம். ஒவ்வொரு இதழும் ஒரு சிறப்பிதழாகவே வெளிவருகிறது. உதாரணத்திற்கு, அக்டோபர்-டிசம்பர் 2013 இதழ் திசை எட்டும் இதழ் கொங்கனி மொழி இலக்கியச் சிறப்பிதழாக வெளிவந்தது. கோவா பகுதிகளில் பேசப்படும் மொழி கொங்கனி என்பது குறிப்பிடத்தக்கது.

கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல், புத்தகங்களைப் பற்றிய அறிமுகம் என சிற்றிதழுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டு சிறப்பாக வெளிவருகிறது. இதழ் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தியிருப்பதைப்போல வடிவமைப்பிலும் அக்கறை செலுத்தி வருகின்றனர். இதழின் அட்டைப்படங்கள் மட்டுமே வண்ணத்தில் உள்ளன. 160 பக்கங்களும் கறுப்பு வெள்ளையில் தான் உள்ளது. இருந்தாலும், ஆங்காங்கே ஒளிப்படங்களை சிறப்பாக அச்சிட்டு படைப்புகளுக்கு மேலும் மதிப்பு சேர்க்கிறார்கள்.

சிறந்த மொழியாக்கப் படைப்புகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் விருது வழங்குகிறார்கள். இவ்விதழுக்கு தலைமைப் புரவலராக நல்லி குப்புசாமி செட்டியார் வணங்குவதால் இவ்விருது விழா இத்தனை வருடங்களாக சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழாவிற்கான அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்து வருகிறார் நல்லி குப்புசாமி செட்டியார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மொழியாக்கப் போட்டிகளை நடத்தி அவர்களுக்கும் பரிசுகள் வழங்குகின்றனர். இவ்விஷயத்தில் திசைஎட்டும் இதழாக இல்லாமல் ஒரு இயக்கமாக செயல்படுகிறது.

தற்போதைய இதழ் (2014 ஜனவரி-மார்ச்) உலகச் சுற்றுச்சூழல் இலக்கிய சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பான கட்டுரைகளும், சுற்றுச்சூழல் குறித்து வெளிவந்துள்ள முக்கிய நூல்களின் அறிமுகங்களும், சுற்றுச்சூழலுக்கு பெரும்பங்காற்றிய ஆளுமைகளைப் பற்றிய நேர்காணலும், குறிப்புகளும் என திசை எட்டும் ஜனவரி-மார்ச் 2014 இதழ் பாதுகாக்க வேண்டிய ஒரு ஆவணமாக உள்ளது.

திசைஎட்டும் மொழியாக்க காலாண்டிதழுக்கு சந்தாக்கட்ட விரும்புவார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

குறிஞ்சிவேலன்,
ஆசிரியர், திசைஎட்டும்,
6, பிள்ளையார் கோயில் தெரு,
மீனாட்சிப்பேட்டை,
குறிஞ்சிப்பாடி – 607302.
தொலைபேசி: 04142-258314, 9443043583.
மின்னஞ்சல்: thisaiettum@yahoo.co.in

ஆண்டு நன்கொடை: ரூ.200/-
ஆயுள் நன்கொடை: ரூ.2000/-
புரவலர் நன்கொடை – ரூ.5000/-
தனி இதழ் – ரூ.50/-

-கோவி.அழகரசன்,
kumargraajan@gmail.com

(2014 மார்ச் சஞ்சிகையில் வெளியான கட்டுரை)