மின்னூல் படிப்பதென்பது ஒரு சுகானுபவம்

“புஸ்தகமா? அதெல்லாம் யாருங்க இப்ப படிக்குறா?”

“புக் படிக்கல்லாம் எனக்கு நேரமே இல்ல.”

“அதான், நியுஸ்பேப்பர் படிக்குறேனே. அப்புறம் புஸ்தகம் வேற எதுக்கு படிச்சிக்கிட்டு?”

இத்தகைய வாக்கியங்களை, நாம் தற்போது நிறையவே கேட்கிறோம். புத்தகங்கள் படிப்பதை ஒரு அன்றாட நிகழ்வாக, வேள்வியாக செய்கிறவர்களையும் நாம் தற்போது நிறையவே பார்க்கிறோம். இதுவரை அச்சில் மட்டுமே வெளிவந்த புத்தகங்கள் தற்போது மின்னூல்களாக கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை அளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஆங்கில நூல்கள் PDF என்னும் வடிவில், கணினியில் இலவசமாக படிக்க ஏதுவாய் அதிகம் கிடைக்கின்றன. தற்போது சில தமிழ் நூல்களும் PDF வடிவில் இலவசமாகக் கிடைக்கின்றன. மின்னூல்களை கணினியிலே எப்போதும் படிக்க முடியாதே. அதைக் கருத்தில் கொண்டே KINDLE READER எனும் சாதனத்தையும், TABLET எனும் சாதனத்தையும் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

KINDLEகணினியில் நீண்ட நேரம் தொடர்ந்து படிக்க இயலாது. ஏனெனில் அதன் திரை வெளிச்சம். KINDLE READER எனும் சாதனத்தின் திரையில் ஒளி வெளிச்சம் குறைவாக இருக்கும். எழுத்துகளும் தெளிவாக தெரியும்; நீண்ட நேரம் படித்தாலும் கண்களில் அயர்ச்சி உண்டாகாது. KINDLE READERல் புத்தகங்களைப் படிக்க AMAZON.COM இணையத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இவை PDF வடிவில் இருக்காது. KINDLEக்காகவே தயாரிக்கப்பட்ட வடிவில் இருக்கும். ஆனால், இவை இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆன்லைனில் பணம் செலுத்தித்தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும். KINDLEக்கான வடிவில் தமிழ் நூல்கள் அதிகமாக கிடைக்க இன்னும் சில காலங்கள் ஆகும். மின்னூல்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட KINDLE READER 6000 ரூபாய் முதல் 17000 ரூபாய் வரையில் கிடைக்கின்றது.

tABLETTABLET எனப்படுவது செல்பேசிக்கும் மடிக்கணினிக்கும் இடைப்பட்ட சாதனமாகும். செல்பேசி, மடிக்கணினி போல எங்கும் எடுத்து செல்லலாம். அவற்றின் மூலம் செய்யக்கூடிய வேலைகளை TABLETல் செய்யலாம். கணினியில் மின் நூல்கள் படிப்பது போல TABLETடிலும் படிக்கலாம். PDF, PUB, MOBI வடிவில் மின்னூல்களைப் படிக்கலாம். சேம்சங், லெனோவா, டெல், ஹெச்.சி.எல், மைக்ரோமேக்ஸ் என முன்னணி கணினி தயாரிப்பாளர்களும், செல்பேசி தயாரிப்பாளர்களும் TABLETஐ தயாரித்து விற்கின்றனர். 4500 ரூபாய் முதல் 58000 ரூபாய் வரையில் இவற்றின் விலை உள்ளது.

மின்னூல்களைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ள உதவும் இணையத்தளங்கள்:

தமிழ் மின்னூல்களுக்கான இணையத்தளங்கள்:
http://www.projectmadurai.org
http://www.books.tamilcube.com
http://www.freetamilebooks.com
http://www.tamilpdffree.com

ஆங்கில மின்னூல்களுக்கான இணையத்தளங்கள்:
http://www.planetebook.com
http://www.openreadingroom.com
http://www.amazon.com
http://www.google.com/playstore

மின்னூல் படிப்பதில் உள்ள சாதகங்கள்:
• தொடர்ந்து பயணங்களில் ஈடுபடும் போது, தேவையான எல்லாப் புத்தகங்களை
எடுத்து செல்ல இயலாது. துணிமணிகள், பிரயாணத்திற்கு தேவையானவை என பயணப் பைகள் நிரம்பியே இருக்கும். ஆக, மின்னூல் படிக்கும் சாதனம் ஒரு வரப்பிரசாதம் தான்.

• நம் சேகரிப்பில் உள்ள அனைத்து புத்தகங்களையும் வைத்துக்கொள்வதும், பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதும் சிரமமான காரியங்கள் தான். ஆனால், மின்னூல்களைப் பராமரிப்பது எளிது. ஆன்லைனிலும் வைத்துக்கொண்டால், சாதனங்கள் பழுதடைந்தாலோ, தொலைந்தாலோ ஆன்லைனிலுருந்து எடுத்துக் கொள்ளலாம்.

• மின்னூல்களைப் படிக்கும் போது எழுத்துருக்களின் அளவுகளை தேவைக்கேற்ப மாற்றிகொள்ளலாம்.

• படுக்கையில் இருந்து மின்னூல்களை படிக்க அறை முழுவதற்கும் விளக்கு எரியத்தேவையில்லை. மின்னூல் படிக்கும் சாதனங்களிலிருந்தே படிப்பதற்கு தேவையான வெளிச்சம் கிடைக்கும்.

அச்சு நூல்களைப் படிப்பதில் உள்ள நன்மைகள்:
• இதுவரை எழுதப்பட்ட எல்லா நூல்களும் மின்னூல்களாக கிடைப்பதில்லை. புகழ்பெற்ற நூல்களும், அச்சில் அதிக விற்பனை அடைந்த நூல்களும் தான் மின்னூல்களாக கிடைக்கின்றன. ஆய்வு நூல்களை வாசிக்க அச்சு நூல்கள் மட்டுமே உள்ளன.

• சிறிய நகரங்களுக்கு பயணப்படும் காலங்களில் எல்லா நேரங்களிலும், நாட்களிலும் புதிய மின்னூல்களைப் படிப்பது சாத்தியமல்ல. புத்தகக்கடைகள் எல்லா ஊர்களிலும் இருக்கும். அச்சுப்புத்தகங்களை வாங்கிப் படிக்கலாம்.

• அச்சு நூல்களைப் படிக்க எவ்வித சாதனங்களோ, குறைந்த பட்ச தொழில்நுட்ப அறிவோ தேவையில்லை. மின்னூல் சாதனங்களின் பேட்டரி குறைவதுப் பற்றியோ, தொழில்நுட்ப கோளாறு குறித்தோ கவலைக் கொள்ளத் தேவையில்லை.

– கோ.முருகராஜ்
murugaraj.g@outlook.com

(2014 மே சஞ்சிகையில் வெளியான கட்டுரை)

Advertisements