காவிரி விவசாயிகள் தற்கொலை – கண்டனக் கூட்டம்

“இறந்தாய் வாழி காவிரி – விவசாயிகள் தற்கொலை” – ஆவணப்படத் தொகுப்பு வெளியீடு சென்னை சூளைமேடு, அமீர் ஜான் சாலையில் உள்ள BEFI அரங்கில் நேற்று (05-02-2016) நடைபெற்றது.

தமிழகத்தில் விவசாயமும், விவசாயிகளும் எந்த நிலையில் உள்ளனர் என்பதை, விவசாயத்திற்காக வாங்கிய கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கும் கருத்துகள் ஆவணப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

16472937_10154352612957776_1397384674590309601_nதிரையிடலுக்கு பின் R.R. சீனிவாசன் நிகழ்வில் பேசியது, “இந்த ஆவணப்படத் தொகுப்பு இத்துடன் முடிவடையவில்லை. இன்னமும் தமிழகம் முழுவதும் தற்போதைய விவசாயிகளின் நிலை குறித்து ஆவணப்படுத்தி, இத்துடன் சேர்க்க உள்ளோம். கர்நாடகாவில் அதிகமான விவசாயிகளின் தற்கொலைகள் நடக்கின்றன. பூச்சிக்கொல்லி மருத்துகளை அருந்திவிட்டு தங்கள் நிலங்களில்/ குத்தகைக்கு எடுத்துள்ள நிலங்களிலேயே விழுந்து தற்கொலை செய்துகொள்வது இந்தியா முழுவதும் நேர்ந்துள்ள விவசாயிகளின் தற்கொலைகளில் பொதுவாகக் காணப்படுகிறது. தற்கொலை செய்துகொள்பவர்களின் பெரும்பாலும் குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் பார்த்தவர்கள். விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதும், கடனைத் தள்ளுபடி செய்வதும் நடைமுறையில் இருந்தாலும், குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் பார்ப்பவர்களுக்கோ, விவசாயக் கூலிகளுக்கோ வங்கிக்கடனோ கடன் தள்ளுபடியோ கிடைப்பதில்லை. விதை நெல், உரங்கள் போன்றவற்றை வாங்கவும், நிலத்தில் வேலை செய்பவர்களுக்கு கூலி வழங்கவும், போர்வெல் அமைப்பதற்கும் அவர்கள் தனிநபர்களிடமிருந்தும், கந்துவட்டிக்காரர்களிடமிருந்து தான் கடன் வாங்குகிறார்கள். காலநிலை மாற்றத்தால், காடுகள் அழிக்கப்படுவதால் மழை பெய்வதில்லை, காவிரியில் தண்ணீர் வருவதில்லை. நிலத்தடி நீரை எடுக்க ஆழ்துளை பைப்புகள் அமைத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் நெல்லுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. விவசாயிகளின் தற்கொலைகளுக்கு இவை மட்டும் காரணம் அல்ல. எம்.எஸ்.சுவாமிநாதன், சி. சுப்பிரமணியன் உருவாக்கிய பசுமைப் புரட்சியின் விளைவாக அறிமுகப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகளால் விவசாய நிலத்திற்கும் நெல் விளைச்சலுக்கும் மூன்று மடங்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படுகிறது.”

அடுத்துப்பேசிய அருண் நெடுஞ்செழியன், நிலச்சீர்த்திருத்த முறைகளானது தமிழகத்தில் அரசர்களின் காலத்திலிருந்து நியாயமாக அமைக்கப்படவில்லை. இவை காலனி ஆதிக்க காலத்திலும் தொடர்ந்தது. இந்தியச் சுதந்திரத்திற்கு பிறகும் அவை தொடர்வதை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். வறட்சிக் காலங்களில் மத்திய அரசும், மாநில அரசுகளும்  விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது ஒன்றைத் தான் கொள்கையாக காலம் காலமாக பின்பற்றி வருகின்றன. தள்ளுபடி மட்டுமே விவசாயிகளைக் காப்பாற்றி விடாது. ஆறுகளில் மணல் எடுப்பதை நிறுத்தினால் தான் நிலத்தடி நீர் உயரும். விவசாய நிலங்களின் நெகிழ்வுத்தன்மையை அழிக்கும் பூச்சிக்கொல்லி மருத்துகளைத் தடை செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பகிர்தலை முறைப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய பாமயன், “தாவரங்களை உண்ணும் சைவப்பூச்சிகள், பூச்சிகளையே உண்ணும் அசைவப்பூச்சிகள் என இரண்டு வகைப் பூச்சிகள் உள்ளன. விவசாயிகளுக்கு கெடுதல் செய்யும் பூச்சிகளை விட நன்மை செய்யும் பூச்சிகள் தான் அதிகம். ஆனால், அதிக விளைச்சலைக் காரணம் காட்டி, பசுமைப் புரட்சிக்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளானது நிலங்களைச் சுற்றியுள்ள அனைத்து பூச்சிகளையும் கொல்கின்றன. மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் உள்ள யூரியா, உப்பு போன்றவை அதிகளவில் நீரை உறிஞ்சுகின்றன. இதனால் மூன்று, நான்கு மடங்கு அதிகமான தண்ணீரை நிலங்களுக்கு பாய்ச்ச வேண்டியுள்ளது. விதர்பா உள்ளிட்ட இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இயற்கை விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்வதில்லை. அரசின் திட்டங்களும் விவசாயத்திற்கு சாதகமாக இருப்பதில்லை. இரண்டு ஐந்தாண்டு திட்டங்கள் மட்டுமே ஓரளவு விவசாயிகளுக்கு சாதகமாக ஓரளவு இருந்தன. மரத்தை நட்டால் GDP கிடையாது. மரங்களை வெட்டினால் தான் தற்போது GDP. இப்படித்தான் அரசின் போக்கு உள்ளது.” எனத் தெரிவித்தார்.

சென்னை ஆவடிக்கு அருகே இயற்கை விவசாயம் செய்து வரும் SAFE FOOD ALLAINCE பார்த்தசாரதி, பேசியது, “பூக்கள் பூக்கும் நிலங்களுக்கு, உணவுப்பயிர்கள் வளரும் நிலங்களில் செயற்கை உரங்களை SPRAY செய்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் எதுவும் உண்ண முடியாமல், வாந்தி, ஒவ்வாமை எனத் தவிக்கின்றனர். மேலும் அவர்களுக்கு கண்பார்வை மங்கல் அடைதல், கை நடுக்கம் போன்றவை உண்டாகின்றன. Master of Social Works படிக்கும் மாணவர்கள் எங்கள் பகுதியில் சமீபத்தில் நடத்திய ஆய்வில், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துபவர்களில் 60 சதவீதத்தினர் Cervical Cancer நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கண்டறிந்துள்ளனர். பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வோர் தங்கள் வருமானத்தில் 70 சதவீதத்தை உரங்களுக்கும், தங்களின் மருத்துவச் செலவுகளுக்கும், குடிப்பழக்கத்திற்கும் செலவழிக்கின்றனர்.”

18farmers1

நிகழ்வின் இறுதியாக, அரசின் மானியம், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், விவசயக்கூலிகளின் அவல நிலை, விவசாயிகளின் இன்னல்கள் தீர நடத்தப்பட வேண்டிய போராட்டங்கள் என நிகழ்வில் கலந்துக்கொண்ட பார்வையாளர்கள் கேட்ட கேள்விகள் விவாதிக்கப்பட்டன.
– முருகராஜ்

Advertisements