தமிழில் தண்ணீர் குறித்து வெளிவந்துள்ள நூல்கள் – ஓர் அறிமுகம்

தமிழில் தண்ணீர் குறித்து வெளிவந்துள்ள நூல்கள் – சிறுவர்களுக்கான நூல்கள்.

Blog1
1. தண்ணீர் – சித்தார்த்.டி – தமிழாக்கம் – நேஷனல் புக் டிரஸ்ட் – 2005.
ஆசிய நாடுகளில் தண்ணீர் குறித்த தொன்மை கதைகள், குளம், ஏரி, கடல், பாடல்கள், நீர்நிலைகளை மாசுபடுவதில் இருந்து காத்தல் என்பதை குழந்தைகளின் மொழியில் எளிய நடையில் பேசும் அழகிய நூல். மக்களுக்கும், தண்ணீருக்கும் உள்ள உறவின் வெளிப்பாடு, தாய்லாந்து, மங்கோலியா போன்ற பல்வேறு நாடுகளில் உள்ள தொன்மை கதைகள், உலகின் பல பகுதிகளில் உள்ள நீர் நிலைகளைப் பற்றிய கதைகள், ஓவியங்கள், பாடல்கள், ஒளிப்படங்கள் வாயிலாக விவரிக்கும் போது குழந்தைகளின் குதூகலம் பன்மடங்கு அதிகரிக்கிறது என்றால் மிகையல்ல. குழந்தைகளுக்கு பரிசாக கொடுக்க ஏற்ற நூல் இது.

2. தண்ணீர் – நேஷனல் புக் டிரஸ்ட் – துளசிதாஸ். தமிழில் ருத்ர ராமா – 1996.
நம்மை சூழ்ந்திருக்கும் கடல் நீரோடைகள், அழகிய பனிப்பாறைகள், ஏரிகள், ஆறுகள், மனிதர்களின் வாழ்வுடன் பிரிக்க முடியாத இணைப்பை பெற்றுள்ள நீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

3. நம் நதிகள் – பகுதி இரண்டு – நேஷனல் புக் டிரஸ்ட் – அழ.வள்ளியப்பா – 2005.
காவிரி, நர்மதை, துங்கபத்திரா, கிருஷ்ணா, கோதாவரி என நம் நாட்டின் முக்கிய ஆறுகளை சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது. புத்தகத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த ஓவியங்கள் நிரம்பிய இவ்வகை புத்தகங்கள் உதவும்.

4. நமது கடல்கள் – செய்தி ஒலிபரப்பு பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் – சி.பி.கணேசன் – 1992.
கடல்களின் தோற்றம், முதன்மையான துறைமுகங்கள், பூமியை சூழ்ந்துள்ள கடல்கள், நதிகளை அழகுபட அறிமுகப்படுத்துகிறது. கடல்வாழ் உயிரினங்களையும், பருவ மழைகளையும் விளக்கமாக பேசும்போது கடல்கள் குறித்த அறிமுகத்தையும், தண்ணீரின் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்துகிறது.

தண்ணீர் குறித்த நூல்கள் – பொது

1. புதையல் தேடி கடலில் மூழ்குதல்
கடல் அகழாய்வுகள் குறித்த தமிழில் வெளிவந்துள்ள நூல்களுள் இதுவும் ஒன்று. அகழாய்வின் தோற்றம், கடலில் மூழ்குபவர்களின் செயல்பாடுகள், கடலுக்குள் ஒளிப்படங்கள் எடுக்கும் முறை பற்றியும் பேசுகிறது இந்நூல்.

2. நீரின் குணங்கள் – பூவுலகின் நண்பர்கள்.
சங்க இலக்கியம் தொட்டு தமிழர் மருத்துவத்தில் தண்ணீரின் குணங்கள் குறித்து பேசப்படும் குறுநூல் இது.

3. நமது நீர்வளங்கள் – தமிழில் இளம்பாரதி – இராமா – நேஷனல் புக் டிரஸ்ட் – 2002.
‘அனைவருக்கும் அறிவியல்’ வரிசையில் தேசிய புத்தக அறக்கட்டளை வெளியிட்டிருக்கும் நூல்களில் முக்கியமான நூல் ‘நமது நீர்வளங்கள்’. நீர்வளத்திட்டங்கள், தண்ணீர் குறித்த ஆய்வுகள், நீர் மாசுபடுதல், நிலத்தடி நீர் என பலத்தளங்களில் நூல் விரிவாக பேசுகிறது.

4. இந்திய ஆறுகள் – வி.இராமகிருஷ்ண சாஸ்திரி.
ஆறுகளின் தோற்றம், இந்திய பெரு நதிகள், ஆறுகளின் பெருமை என ஆறுகள் குறித்த விரிவான அறிமுகத்தையும் இந்நூல் வாசிப்பு தருகிறது.

5. நமது ஆறுகள் – நேஷனல் புக் டிரஸ்ட் – 1998.
கங்கை, நர்மதை, தாமிரவருணி, காவிரி, பெரியாறு ஆறுகள் குறித்த அழகான அறிமுகத்துடன் நூல் நடை அமைந்துள்ளது.

6. சிறுவாணி – கோயம்புத்தூரின் குடிநீர் – சி.ஆர்.இளங்கோவன்.
சிறுவாணியின் தோற்றம், கோயம்புத்தூர் நகரின் தண்ணீரின் தேவையை முன் வைக்கிறது. சிறுவாணியின் மூலம் பெறப்படும் குடிநீரின் திட்டம் உருவான விதம், கோயம்புத்தூரின் அன்றைய, இன்றைய நிலை ஆகியவற்றை மையப்படுத்தி இந்நூல் பேசுகிறது.

7. தமிழக பாசன வரலாறு – பழ.கோமதிநாயகம் – பாவை பப்ளிகேஷன்ஸ்.
சங்ககாலங்களில் தமிழக பாசன வரலாறு முதல் இன்றைய நிலை வரை ஆதாரங்களுடன் பேசுகிறார் நூலாசிரியர். உலகளவில் இருந்த பாசன முறையை பேசுவதுடன் நாயக்கர் காலம் என பண்டைய தமிழ்ச்சமூகத்தின் மன்னர்களின் காலங்களில் இருந்த காலம் முறையையும் அறிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.

8. தாமிரவருணி – சமூக பொருளியல் மாற்றங்கள் – கோமதி நாயகம் – பாவை பப்ளிகேஷன்ஸ்
சங்ககாலம் தொட்டு இன்றுவரை தாமிரவருணி பெற்று வந்துள்ள பொருளியல் மாற்றங்களையும், தாமிரவருனியால் பயன்பெறும் விளைநிலங்கள் போன்றவற்றை விரிவாக பேசுகிறது. விவசாய சங்கங்களின் தோற்றம், தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீரின் அளவு என பல தளங்களில் பேசி செல்கிறார் நூலாசிரியர்.

Blog2

Blog3
தண்ணீர் குறித்தான அரசியல் நூல்கள்

1. முல்லைப்பெரியாறு மெய்யும், பொய்யும் – திராவிடர் கழகம்.
முல்லைப்பெரியாறு அணையின் வரலாறு, அணையை தமிழர்களுக்காக கட்டிய ஆங்கிலேயர்கள் குறித்தும், இன்றைய கேரளாவின் நிலை குறித்தும், அன்றைய அதிகாரி பென்னி குக் குறித்தும், கேரளாவின் வாதம் குறித்தும் கேள்வி-பதில் வடிவில் சிறப்பாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

2. முல்லைப் பெரியாறு ஆணை – இரா.வேங்கடசாமி; தமிழோசை பதிப்பகம்.
முல்லைப் பெரியாற்றின் வரலாற்றையும் இன்றைய சிக்கல்களையும் விரிவாக பேசியுள்ளார் நூலாசிரியர். இவர் கண்காணிப்பு பொறியாளாராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.

3. காவிரியில் துரோகம் செய்துள்ள தமிழக ஆட்சியாளர்கள் – பெ.தங்கராசு; தங்கம் பதிப்பகம்.
காவிரி பாயும் பரப்பு. காவிரி மன்ற தீர்ப்புகளும், அரசியல்வாதிகளின் தன்னலவாதத்தையும் தோலுரித்து காட்டியுள்ளார் நூலாசிரியர்.

4. காவிரி – திராவிட இயக்க அரசியல் தலைமையின் தோல்வி. – அர.பூ.குப்புசாமி.
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்டு வருகிற திராவிட கட்சிகள் காவிரி நீர் சிக்கலில் கண்ட தோல்வியை உறுதியுடன் எடுத்து வைக்கிறார் நூலாசிரியர்.

Blog4

5. காவிரி – உலகநீதியும், உள்நாட்டு அநீதியும் – பெ.மணியரசன் – புதுமலர் பதிப்பகம்.
சர்வதேச சட்டங்களின்படி தமிழகத்திற்கு காவிரியில் இருக்கும் உரிமை, அவற்றை கெடுத்து வரும் அண்டை மாநிலம், மௌன சாட்சியாக இருக்கும் மைய அரசு என காவிரியில் பின்னிப் பிணைந்திருக்கும் அரசியல் வலைப்பின்னலை தோழர் பெ.மணியரசன் ஆணித்தரமாக பேசுகிறார்.

6. தமிழக ஆறுகளின் குமுறல்கள் – மு.தனராசு – வைகை பதிப்பகம்.
தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஆறுகள் மாசடைந்தும், மணல், கழிவு நீர் குட்டைகளாகவும், வீட்டு மனைகளாகவும் மாறி இருப்பதை நெஞ்சு பொறுக்காமல் தங்களை காப்பாற்ற ஆறுகள் தமிழனிடம் முறையிடுவது போல பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

7. தமிழக நதிகளின் பின்னே – சி.மகேந்திரன் – நியு செஞ்சுரி புக் ஹவுஸ்.
தமிழக நதிகளுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைக்கு மூலகாரணமாக அமைந்துள்ள அரசியல், பொருளாதார சிக்கல்களை பேசுகிறது இந்நூல்.

8. தண்ணீர்…தண்ணீர்…தண்ணீர் – ஆர்.சந்திரா – பாரதி புத்தகாலயம்.
தண்ணீர் விற்பனைப் பொருளாக மாறியதையும், இன்று தமிழக நீரின் அபாயகரமான நிலையையும் பேசிச் செல்கிறது. இன்று தமிழகத்தில் தண்ணீர் விற்பனை உச்சத்தை தொட்டு நிற்பதை சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே பேசியுள்ளார் இந்நூலாசிரியர்.

9. மக்கள் விரோத தேசிய நீர் கொள்கை வரைவு 2012 – தமிழில்: பூங்குழலி – தொகுப்பு – கா.தமிழ்வேங்கை.
மனிதனின் அடிப்படை பொதுச்சொத்தான தண்ணீரை அவனிடமிருந்து அந்நியப்படுத்த மைய அரசு கொண்டு வந்த நீர் வரைவுக் கொள்கையின் தமிழாக்கம் இச்சிறு வெளியீடு.

10. அந்நியப்படும் கடல் – வறீ தியா கான்ஸ்தந்தீன் – கீழைக்காற்று வெளியீட்டகம்.
நெய்தல் நில மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கடலில் இருந்து அவர்களை வலுக்கட்டாயமாக பியத்தெறிய நடைபெற்று வரும் பல்வேறு முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழகத்தின் திணை மக்கள், அந்தந்த திணைகளில் இருந்து முற்றுரிமை பறிக்கப்பட்டு அகதிகளாக வெளியேற்றப்படும் நிலையை சமகாலத்தில் முற்றாக உணர முடிகிறது.

11. தண்ணீர் தாகத்திற்கா? இலாபத்திற்கா? – கீழைக்காற்று வெளியீட்டகம்.
முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையில் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை இலாப நோக்கத்தில் சுரண்டுவதையே போக்காக கொண்டுள்ளது. இன்று தண்ணீர் விற்பனையையும், தனியார் மயத்தையும் காணும்போது எதிர்காலத்தில் மிகப்பெரிய அபாயம் நேரும் என்ற அச்ச உணர்வு மனதில் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.

Blog5
12. தலித்துகளும், தண்ணீரும் – கோ.ரகுபதி – காலச்சுவடு பதிப்பகம்.
நீராதாரங்கள் மாசடைதல், அழிப்பு, விற்பனை பற்றி ஆராய்கிறது இந்நூல். நீருக்காகவும், மற்ற உரிமைகளுக்காகவும், தீண்டப்படாத மக்கள் என அதிகார வர்க்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ள மக்கள் போராடியதை சோகத்துடனும், அழுத்தத்துடனும் பதிவு செய்கிறது.

13. கண்ணுக்கு தெரியாமல் களவு போகும் நீர் – நக்கீரன்; இயல்வாகை பதிப்பகம்.
சர்வதேச அளவில் மையம் கொண்டுள்ள மறைநீர் என்ற கருத்தாக்கத்தை தமிழில் பதிவு செய்திருக்கும் முதன்மையான நூல். மறைநீர் சுரண்டப்படுவதன் பின்புலம், ஒவ்வொரு பொருளுக்கு பின்பும் ஏற்றுமதி, அந்நிய செலவாணி என்ற பசப்பு வார்த்தைகளுக்கு பின் ஒளிந்து கொண்டிருக்கிற இம்மண்ணின் இயற்கை வளமான மறைநீர் கொள்ளை போவதை ஆதாரத்துடன் நூலாசிரியர் விரிவாக பேசுகிறார்.

14. தமிழக ஆறுகளின் அவல நிலை – எஸ்.ஜனகராஜன் – பாரதி புத்தகாலயம்.
தமிழகத்தின் பின்னலாடை, தோல் சாயப்பட்டறை தொழிற்சாலைகளால் பெரும்பாலான ஆறுகள் கழிவு நீர் குட்டைகளாக மாறிக்கொண்டிருக்கும் வேதனையை பதிவு செய்தது நூல்.

15. இந்தியாவின் ஆற்றுநீர் பிரச்சனை – தோற்றுவாய்களும், தீர்வுகளும். – தமிழில் – க.காமராசன் – முகம் வெளியீடு.
இந்தியப்பொருளாதாரம் பற்றிய நோக்கில் (Aspects of India’s Economy) என்ற ஆய்விதழின் 43வது இதழில் வெளிவந்த என்ற “What keeps Disputes on River Waters’ கட்டுரையின் மொழியாக்கமே இச்சிறு நூல். ஆற்றுநீர் சிக்கலை பொருளாதார அடிப்படை நோக்கில் விவாதிக்கும் நூல்.

– ஏ. சண்முகானந்தம்
Shanmugam.wildlife@gmail.com

(இக்கட்டுரை 2014 செப்டம்பர் சஞ்சிகை இதழில் வெளியானது)

Advertisements

கடல் நீரை குடிக்கலாமா?

கடல் நீர் இவ்வளவு பெரிய கடல் இருக்கின்றதே, அத்தனையும் நன்னீராக இருந்தால் எப்படி இருக்கும்? குடிக்கத் தண்ணீர் பஞ்சமே இருக்காது இல்லையா! அட என்ன ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு! கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டமாமே, எவ்வளவு அருமையான திட்டம்! இனி மழை பெய்தது, பெய்யவில்லை என்று கவலைப்படத்தேவையில்லை. கடல் நீர் இருக்கின்றது, அறிவியல் தொழில்நுட்பம் இருக்கின்றது, இனி தண்ணீருக்கான சிக்கலே இருக்காது போன்ற சிந்தனைப் போக்குகளை நாம் அன்றாடம் கல்வி பெற்ற மாந்தர் பலரிடத்தில் நிலவுவதைப் பார்க்கிறோம். இது சரியான திட்டம் தானே! இதில் என்ன கோளாறு இருக்கிறது என்று நமக்குத் தோன்றும்.

முதலில் நாம் வாழும் நிலத்தைப்பற்றியும், நாம் அண்டியிருக்கும் கடலைப்பர்ரியும் புரிதல் நமக்கு இல்லாத போக்குதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. மாந்தர் உயிர் வாழத் தண்ணீர் தேவை. அதற்காக அவர்கள் எதுவேண்டுமானாலும் செய்துவிட ஆயத்தமாக இருக்கிறார்கள். இயற்கையின் அடிப்படையில் தண்ணீரின் தோற்றுவாய் எதுவென்று நமக்குத் தெரியாதா, இல்லை நாம் மறந்து விட்டோமா?

இந்த நிலக்கோளில் உயிர்கள் தோன்றக் காரணியமே அன்று பெய்த ஓயாத வான்மழை தானே. மண்ணில் வாழும் உயிர்களெல்லாம் வான் நோக்கி வாழ்பவை தானே. கடல் நீர், ஆவியாகி, முகிலாகி, மழையாகி வந்தவழி மறந்து, நேரடியாக இப்போது நம்மை கடளை நோக்கி கையேந்த வைத்த நிலைதான் மாந்தகுல வளர்ச்சியா? அடிப்படையையே மாற்றியமைப்பதுதான் அறிவியல் தொழில்நுட்பமா?

இந்த கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் என்ற கருத்துருவாக்கத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் வணிகத்தையும் அரசியலையும் உப்பு நீக்கும் தொழில்நுட்பம் போன்று நாமும் சிலவற்றை வடிகட்டிப்பார்த்தால் உள்ளே மறைந்திருக்கும் நச்சு உப்புகள் நம்மை நிலைகுலையச் செய்யும்.

“கடல்நீரினை மக்கள் குடிக்கிறார்களோ இல்லையோ, இந்த திட்டம் மக்களைக் குடித்து விடும்.” உப்புநீரில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் தொழில்முறையில், உப்பினை நீக்குவதற்காக ஆவியாக்கல் மூலமாகவோ, ஒரு மெல்லிய வடிகட்டு சவ்வின் மூலமாகவோ உப்புநீரின் விசையின் மூலம் வடிகட்டப்பட்டு நன்னீரும், குடிநீரும் பிரித்தெடுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 155 நாடுகளில் 15,000 உப்பு பிரிப்பலைகள் செயல்படலாம் என்றும் அவை நாளொன்றுக்குப் பல்லிலக்கம் கனச்சீர்படித் தண்ணீரை இவ்வாறாக பிரித்தெடுக்கப்படுகின்றன என்கிற செய்தியும் நமக்கு கிடைக்கிறது. இவற்றில் பல ஆலைகள் சிறிய அளவில், ஒரு குறிப்பிட்ட இடத்தை நடுவமாகக் கொண்டு, அந்த தொழிற்சாலையின் தேவைக்கேற்ப செயல்படுகின்றன. இவ்வாறான ஆலைகள் பாலைவன அரபுநாடுகளில் அதிகப்படியாக அமையப்பெற்று இருக்கின்றன. இந்த ஆலைகளைக் கொண்டே இந்நாடுகள் தங்களின் பெரும்பகுதி குடிநீர் தேவையை நிறைவேற்றுகின்றன. பல வளர்ந்த நாடுகளிலும் கூட கடல்நீரை உப்பு நீக்கி குடிக்கின்றனர். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மிகவும் செலவு பிடிக்கும் நடைமுறையாகும். மிகவும் தண்ணீர் நெருக்கடியுள்ள, போதிய மழை இல்லாமல், ஆறுகள், குளங்கள் என அடிப்படை வழியற்ற நாடுகள் மட்டுமே இம்முறையை தேர்ந்தெடுக்கின்றன. இதுபோன்ற திட்டங்கள் சில இடங்களில் தண்ணீர் தேவையை நிறைவு செய்தாலும் ஆயிரத்தில் மூன்று பங்கைத்தான் நிறைவேற்ற முடியும் என்று ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன.

முதலில் இந்த திட்டம் அதிகப்படியான ஆற்றலை உட்கொள்ளக்கூடியதாகும். மிகப்பெரும் அளவில் மின்சாரம் போன்ற எரி ஆற்றலை இந்த நிறுவனங்களுக்காக திருப்பிவிட வேண்டி இருக்கும். இது மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி, நெருக்கடியை தரக்கூடியதாக அமையும். இவ்வாறு எரி ஆற்றல் உருவாக்கத்திற்காகப் பெருமளவு உலக வேப்பவயமாக்கலை விளைவிக்கும் நச்சுக்காற்றினை வெளியிட வேண்டி வரும்.

இரண்டாவதாக, இந்த ஆலைகள் நன்னீரை பிரித்தெடுத்தலின்போது மரணம் விளைவிக்கக்கூடிய நச்சுப்பொருட்களை உருவாக்குகின்றன. நன்னீர் உருவாக்கத்தின்போது பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்கள் கலந்த அடர் உப்பு ஆகியவை நச்சுப்பொருட்களை கொண்டதாகும்.

கடல் நீர் கடல்நீரிலிருந்து குடிநீராக்கப்பட்ட ஒரு சீர்படித் தண்ணீர், மீண்டும் கடலுக்குள் ஒரு சீர்படி நஞ்சினை அனுப்புகிறது. சவூதி அரேபிய ஆலைகள் மீது எடுக்கப்பட்ட வான்வழிப்படங்கள், மெல்லிய கருப்புப்படலங்கள் கடல் மேல்பரப்பில் அலைபோல் உலவிக்கொண்டிருப்பதை காட்டின. இதுபோன்று, ஒவ்வொரு நாளும், பல மடங்கு நச்சுக்கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. இந்த ஆலைகள் கடலில் இருந்து இழுக்கும்போது பல்வகைப்பட்ட உயிரினங்கள், குழாய் வழியாக வந்தடைகின்றன. அவ்வளவும் பின்னர் அழிக்கப்பட்டுக் கடலிலேயே விடப்படுகின்றன.
மூன்றாவதாக, இந்த ஆலைக்குள் சவ்வினால் உள்ளிழுக்கப்பட்ட கடல் தண்ணீர் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் நச்சுபொருட்களை கொண்டுள்ளன. இதி உயிரியல் கழிவுகளான நுண்ணுயிர்களையும், நாலமிலா சுரப்பிகளையும் தாக்கும் வேதியியல் நச்சுகளும் உள்ளன. கழிவுகளை நேரடியாக கடலில் கொட்டிப்பின்னர், அவற்றையே உறிஞ்சி நன்னீராக்குகின்றன. இதில் உப்புகள் மட்டுமே சவ்வுகளால் வடிகட்டப்படும். மற்ற வேதியியல் நச்சுகள் எந்த அளவுக்கு பாதுகாப்பாக நீக்கப்படும் என்பதை உறுதியாக கூற முடியாது.

பெரும்பாலும் மூன்றாம் உலக நாடுகள் தங்களின் 90 விழுக்காடு கழிவுகளை நேரடியாக கடலில்தான் கலக்க விடுகின்றனர். பரந்த அளவிலான இந்த திட்டமானது, கடலின் அறிய அமைப்புகளை அழிக்கவல்லது. தொடக்க நிலையில் தண்ணீர் தேவைக்கு சிறந்த தீர்வாக கருதப்பட்ட இந்த தொழில்நுட்பம், பெரும் சாபக்கேடாக உள்ளது என்று நல்லெண்ணம் கொண்ட சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

கடல் நீர் இந்த உப்பு நீக்கும் தொழில்நுட்பத்தை ஒட்டியே மற்ற பல வணிகங்களும் காத்திருக்கின்றன. இவற்றை இயக்குவதற்கு தேவைப்படும் ஆற்றல் பற்றாக்குறையினை ஈடுசெய்ய அணு உலை வணிகர்களும், அனல்மின் ஆற்றல் வணிகர்களும் காத்திருக்கின்றனர். மேலும், வடிகட்டும சவ்வினை உருவாக்குவதற்கென்றே உள்ள நிறுவனங்களும் பற்பல. இதில், மேலும் உப்பு நீக்குவதில் மூலக்கூறு மட்டத்தில் அணுகும் புதிய பயன்பாட்டு அறிவியல் தொழில்நுட்பமான ‘நானோ தொழில்நுட்பமும்’ புகுத்தப்படவுள்ளது.

தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரும் உப்புநீக்கும் தொழிற்சாலை முதன்முதலில் இந்தியாவில் வந்தமைந்தது இந்த தமிழ்நாட்டில்தான். சென்னைக்கு வடக்கே ‘மீஞ்சூர்’ நிலையம்தான் இந்த வரலாற்றுப் பெருமைமிக்க சிறப்பினை பெற்றிருக்கிறது.

தனியாரால் கட்டப்பட்ட இந்த ‘மீஞ்சூர்’ தொழிற்சாலை 25 ஆண்டுகள் வரை தொழிற்சாலையை இயக்கி, பின் அரசிடமே ஒப்படைத்துவிட்டுப் போகும் திட்டப்படி ஒப்பந்தம போடப்பட்டுள்ளது. அதுவரை 10 கோடி சீர்படி உப்பு நீக்கப்பட்ட தண்ணீரை அவர்கள் கூறும் அதிகப்படியான விலையை செலுத்தி அரசு பெற்றுக்கொள்ள வேண்டும். இவை மக்களின் குடிநீர் தேவையை தீர்ப்பதாக கூறப்பட்டாலும், இதுபோன்று ஒப்பந்தம போடப்பட்டு, நமக்கு தண்ணீர் மிகுதியான நாட்களில் தேவைப்படாவிட்டாலும், இவர்களிடம் தண்ணீரைப் பெற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இல்லையெனில், அதற்கான தொகையினை செலுத்தியாக வேண்டும்.

இப்போது, தென்சென்னையின் குடிநீர்ப் பற்றாக்குறையினை நீக்கப்போகிறோம் என்ற பெயரில் கிழக்கு கடற்கரைசாலையில் ‘நெமிலி’ என்ற இடத்தில் புதிதாக உப்பு நீக்கும் தொழிற்சாலையை தொடங்கியிருக்கிறார்கள். இதுவும் 10 கோடி சீர்படி தண்ணீர் தருவதற்காக தொடங்கப்பட்டது தான். இது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை பல சிக்கல்களை கொண்டதாகவே உள்ளது. மூன்றாவதாக, மேலும் ஒரு உப்புநீக்கும் தொழிற்சாலையை இப்போதைய இடத்திலிருந்து தெற்கில் அமைக்கிறார்கள். இவ்வாறு கொண்டுவரப்படும் ஒவ்வொரு நிலையத்திற்கும் ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

அண்மையில் அறிவிக்கப்படி இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் பல் கோடி ரூபாய் மதிப்பிலான நீர் நிலையங்கள் வரப்போகின்றன. இவ்வாறாக தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை போக்க, பல்வேறு உப்பு நீக்கும் நிலையங்கள் வரவிருக்கின்றன. இவைதாம் எதிர்காலத்தில் தமிழர்களின் தண்ணீர்த்தேவையை நிறைவு செய்யவிருக்கின்றன.

கடல்நீரை குடிநீராக மாற்ற பல கோடி ரூபாய்களில் சில கோடிகளை செலவு செய்தாலே நமது நீர்நிலைகளை தூர்வாரிவிடலாம். மழைநீர் சேமிப்புக்கான கட்டமைப்புகளை உருவாக்கி விடலாம். அவ்வாறெல்லாம் செய்துவிட்டால், இவர்களால் தண்ணீரை தனியார்வயமாக்க முடியாது. தண்ணீரை வணிகப்பொருளாக மாற்ற முடியாது.

உள்நாட்டு நீர் கட்டமைப்புகளைப் பற்றி சிறிதும் உணர்ந்திராத, இந்தியாவின் அறிவியல் பெருமக்களும், படித்த மேன்மக்களும் மின் பற்றாக்குறைக்கு, அணுமின் நிலையங்களையும், தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு உப்பு நீக்கும் நிலையனகளையுமே தீர்வாக முன்வைக்கின்றனர்.

தமிழகத்தின் பருவநிலையை அறிந்திருந்த முன்னோர்கள், இந்த சிக்கலுக்கு தீர்வாகத்தானே, ‘மழைநீரைச் சேமிக்கும் கட்டமைப்புகளை’ உருவாக்கியிருந்தனர். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்துதான் பெரிய ஆறுகள் உருவாகின்றன. இவையாவும் பல எரி, குளங்களை நிரப்பிய பின்னர்க் கிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளவிரிகுடாவில் கலக்கின்றன. தண்ணீரைப் பொறுத்தவரை, கிழக்கே கடலில் கலக்குமிடமாகவும், மேற்கே மலையில் தோன்றுமிடமாகவும் இருந்தன. இன்று, தண்ணீர் தேவைக்காக நம் திசையை மாற்றிக்கொண்டுள்ளோம். வான் நோக்கியும், மலை முகடி நோக்கியும் வாழ்ந்த மரபினர், வங்ககடல் நோக்கி வாழத்தலைப்படுதல் வளமாகுமா?

கடல்நீரை தேக்கி, உப்பு விளைவிக்கும் நெய்தல் நிலத்தினை ‘உப்பு வயல்’ என்றுதானே அழைக்கிறோம்; பாத்திக்கட்டி தான் நீரை ஆவியாக்குகிறோம்; உப்பு உருவாவதை, ‘உப்பு விளைச்சல்’ என்றுதானே கூறுவோம். கடல்நீரிலிருந்து உப்பெடுத்த தமிழ் நாட்டினர், இப்போது உப்பை நீக்கித் தண்ணீர் எடுக்கப்போகின்றனர்.
சென்னைக்கு இதுநாள்வரை குடிநீர் தந்தது கூவம், அடையாறு போன்ற ஆறுகள் தாமே. இன்று நாகரீகம் வளர்ந்ததாகக் கூறும் நாம், என் இவற்றை நாற்றமெடுக்க வைத்திருக்கிறோம்?

கழிவுநீராக மாறிவிட்ட கூவமும், அடையாறும், பக்கிங்காம் கால்வாயும், வடசென்னை தொழிற்சாலை கழிவுகளும், துறைமுக கழிவுகளும் கலக்கும் கடலிலிருந்து நன்னீர் என்ற தண்ணீரை எடுக்கமுடியும் எப்படி நம்பச்சொல்கிறார்கள்?

கடலோரத்தில் கொண்டுவரப்படும் ஒவ்வொரு திட்டமும் பல மீனவகுப்பங்களை காவு கொள்கின்றன. இந்த நிலையங்களிலிருந்து கடலை நோக்கி செல்லும் பல சீரடி நீளமுள்ள குழாய்கள் இடையூறாக அமைந்து சில மீனவர்கள் இறந்து விட்டனர். அவற்றை ஒரு வழக்காக கூட பதிவு செய்யவவில்லை, காவல்துறையினர். பல குறுக்கம் கடல்பரப்பினை இந்த ஆலைகள் பறித்துகொள்வதால் மீனவர்கள் கட்டுமரத்தை நிறுத்தவும், வலையினை உலர்த்தவும் இடமின்றி தவிக்கின்றனர்.

இவற்றிலிருந்து வெளியாகும் நாற்றம் கடற்கரையோரம் நெருங்கமுடியாத அளவிற்கு மாற்றிவிட்டது. உப்புநீக்கும் நிலையத்திற்காக தண்ணீர் உறிஞ்சப்படும்போது மீன்வளமும் ,கடல்வளமும் அழிக்கப்படுகின்றன.
இவ்வாறாக, எவ்வகையிலும் பெருநன்மைகளைத் தராத இந்தத்திட்டத்தை எக்காலத்தும் இதுவே சரியான தீர்வு என்று மக்கள் முன் தொடர்ந்து ஆட்சியாளர்களாலும் அறிவியலாளர்களாலும் பதிவு செய்யப்படுகின்றன. இவர்களின் தன்னலப் போக்கினாலும், தொலைநோக்கற்ற செயல்திறத்தாலும் நாம் பல்லாயிரக்கணக்கான நீர்நிலைகளை அழித்துவிட்டோம். மழைதரும் காட்டினைக் கூறுபோட்டுச் சுற்றுலா இடமாக்கிவிட்டோம். நீருக்கான அடிப்படையை நோக்கி நகராமல், மக்களையும் புரிந்துகொள்ள வைக்காமல், சிக்கலுக்குத் தீர்வாக மென்மேலும் சிக்கலையே தீர்வாக வைக்கும் போக்கு தீங்கானது.

– ரமேஷ் கருப்பையா.
mazhai5678@gmail.com

(இக்கட்டுரை 2014 செப்டம்பர் சஞ்சிகை இதழில் வெளியானது)

நீர் அரசியல்

“நீரையும் சோறையும்” விற்பதை இழிவெனக் கருதுகிற செறிவான பண்பாட்டு அசைவுகளைக் கொண்ட தமிழ்ச்சமூகம் இன்றைய நவ தாராளவாத வர்த்தக சுழலில் தனது பண்பாட்டு விழுமியங்களை மெல்ல இழந்து வருகிறது. நீர்ப்பந்தல் அமைத்து வெக்கை தனித்த தமிழர் மனம் இன்று நீருக்கு விலை வைத்து புட்டியில் விற்கும் தமிழக அரசை விதந்தோம்பும் நிலைக்கு திசைமாற்றம் அடைந்ததுதான் நகைமுரண். லாப நலனுக்காக தனியார் நிறுவனங்கள் நீரை வர்த்தக பண்டமாக மாற்றியதில் வியப்பில்லை என்றாலும் குடிகளின் அடிப்படை உரிமையான நீரை அனைவருக்கும் பொதுவதில் வைத்து இலவசமாக விநியோகிப்பதே அரசின் கடமையேத் தவிர மலிவான விலைக்கு அரசே நீரை விற்கும் அவல சூழலானது நமக்கு முந்தைய தலைமுறையினரின் கற்பனைக்கு எட்டாதது. நீர் குறித்த எண்ணிலடங்கா நம்பிக்கைகளைக் கொண்ட தமிழ்ச்சமூகம் நிலவுகிற நீர் புட்டி விற்பனை, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், கூட்டுக் குடிநீர் திட்டம்,நதி நீர் இணைப்புத் திட்டம் போன்ற நீர் சார்ந்த அரசின் சமூகப்பொருளாதார அசைவுகளை தடுமாற்றத்துடனே எதிர்கொள்வதற்கான காரணம் நிலவுகிற பொருளாதர கட்டமைப்பை புரிந்துகொள்ளத் தவறியதில் வேர்விட்டுள்ளது எனலாம்.

முப்பந்தைந்து நதிகளும் முப்பத்தொம்பதாயிரம் ஏரிகளையும் கொண்ட தமிழகத்தில், நீர் மேலாண்மையில் இறுக்கமாக கடைபிடிக்கப்படும் வர்க்க நலன் முடிவுகளை பெரும்பாண்மையானவர்கள் அவதானிக்கத்தவறியது, சிக்கலின் பரிமாணத்தை புரிந்துகொள்வதற்கான சாத்தியப்பாட்டை நோக்கி நகர விடாமல் அண்டை மாநில தேசிய இன மக்களின் மீதான தேசியப் பகைமைகளை உருவாக்கிய அளவோடு சுருங்கிவிட்டது. இந்நிலையில் மனித உழைப்பின் உற்பத்திப் பொருளாக ஒருபோதும் இருந்திராத “நீர்” எப்படி ஒரு பண்டமாக மாற்றப்பட்டு சந்தையில் விற்கப்படுகிறது? அனைவருக்கும் பொதுவாக இருந்த நீர் விநியோக அமைப்பு தனியார் விநியோகத்திற்கு எப்படி எதனால் மாற்றப்பட்டது? உணவில்லாமல் சில வாரங்கள் தாக்குப்பிடிக்கும் மனித உயிர், “நீர்” இல்லாமல் நான்கு நாட்கள் வாழ முடியாத சூழலில் மனித உயிர்ப் பிழைப்பிற்கு மாற்றே இல்லாத அத்தியாவசியத் தேவையான உயிர் நீருக்கு தனியார் நிறுவனங்களின் விருப்பம் போல் மக்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையை யார் அவர்களுக்கு தந்தது? போன்ற எண்ணற்ற நீர் விநியோக உரிமை சார்ந்த கேள்விகளை முன்வைத்து நீர் விநியோகம் மற்றும் நீர் மேலாண்மையில் அரசின் பாத்திரம் மற்றும் சமூகப்பொருளியல் தளத்தில் அரசின் ஆளுமையை கிட்டத்தட்ட துடைத்தெறிந்துவிட்ட உலக நிதி மூலதனத்தின் பாய்ச்சல் வளர்ச்சியை அரசியல் பொருளாதார நோக்கிலிருந்து விமர்சிக்க முயல்வதே இக்கட்டுரையின் உருப்பொருளாகும்.

நீர் அரசியல்:
“நற்பண்பு, அன்பு, துணிவு, அறிவு, மனசாட்சி முதலியவை – சுருக்கமாக சொன்னால் எல்லாமே வியாபாரத்திற்கு வந்து விட்ட காலம் அது.” தத்துவத்தின் வறுமை நூலில் கார்ல் மார்க்சு.

மார்க்சு விவரிக்கும் காலம் நிலவுகிற நவதாராளவாத முதலாளித்துவ காலத்தின் குழந்தைப் பருவம் குறித்ததாகும். இன்றைய நவ தாராளவாத சந்தைப் பொருளாதரத்தில் மார்க்சு குறிப்பிடாததும் விற்பனைக்காக சந்தைக்கு வந்துவிட்டது. சமூகத்திற்கு தேவையா தேவை இல்லையா என்ற கேள்வி அதனிடம் இருக்காது. மாறாக தேவை இல்லை என்றாலும் கூட தேவையை உருவாக்கி பொருளுற்பத்தியில் ஈடுபட்டு லாபம் குவிக்கும் கொள்ளைக் கலையை நிலவுகிற முதலாளிய சமூகம் நன்கரியும். பரிமாற்றத்தின் இந்தக் கட்டமே அதாவது விற்பனைக்காக உலகின் அனைத்து இயற்கை வளங்களும் மனித உழைப்பும் வரைமுறையற்ற வேகத்தில் சுரண்டப்படுகிற நிலவுகிற முதலாளித்துவ குற்றவியல் பொருளாதார கட்டமைப்பே நீரையும் விற்பனை பண்டமாக பாவித்து அதன் மீதான உரிமையைக் கோரி கட்டுப்படுத்தி லாபம் கொழிக்கிறது. அரசோ தான் உருவாக்கப்பட்ட காலம்தொட்டே இயங்குகிற தன் வரலாற்றுப் பணியை தொடர்வதிலேயே அதிக கரிசனம் கொண்டு இயங்குகிறது. அதாவது சுரண்டும் வர்க்கத்திற்கு ஆதரவாகவும் சுரண்டப்படும் வர்க்கத்தை அடக்கி ஒடுக்குவதற்குமான சாதானக் கருவியாக தன்னளவில் அது சிறப்பாகவே செயல்படுகிறது. இந்நிலையில் “நீர் அரசியல்” என்பது உள்மாநில, உள்நாட்டு வரையறைக்கு உட்பட்ட முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ அரசின் கட்டுப்பாட்டை மீறிய உலக அரசியலை கொண்டதாகும். அதாவது வடகோள கார்பரைட் நிறுவனங்களுக்கு இசைவான உலகளவிளான பொருளாதரக் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும் உலக வங்கி, சர்வதேச பண நிதியம் மற்றும் ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளோடு இணைவாக்கம் பெற்ற சர்வதேச நீர் சந்தையைக் குவி மையமாக கொண்டு செய்லபடுகிற வர்த்தக உலக அரசியலாகவே இச்சிக்கலை நாம் பார்க்கவேண்டியவர்களாக உள்ளோம்.

தேவை நிர்வாகமும் நவ தாராளவாதமும்:
முன்னதாக இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டிருந்த முதலாளிய நாடுகள் தங்களின் உற்பத்தி சாதனங்களை பெருமளவில் போரில் இழந்துவிட்டிருந்தன. அதே வேலையில் மூன்றாம் உலக நாடுகளின் மீதான நேரடியான அரசியல் பொருளாதார ஆதிகத்தின் வாயிலாக அந்நாடுகளின் வளங்களை சுரண்டிவந்த போக்கும் தேசிய விடுதலை அலையால் முடிவுக்கு வந்தது. இதன் விளைவாக தங்கள் நாடுகளின் கூர்மையாக உச்சம் பெற்ற வேலை வாய்ப்பின்மை, விலையேற்றம் போன்ற சமூகப் பாதுகாப்பற்ற சூழலை சமாளிக்கவும் (உலகப்போரில் ஈடுபட்ட) முதலாளிய நாடுகளில் நிலவிவந்த பொருளாதாரத் தேக்கத்தை நேர்செய்யும் பொருட்டும் கெய்ன்ஸ் என்ற முதலாளித்துவ பொருளாதார அறிஞரால் முன்வைக்கப்பட்ட “தேவை நிர்வாகம்” என்ற பொருளாதாரப்பாணி நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்பொருளாதாரப் பாணி “கெய்னீசிய கோட்ப்பாடு” என்றே அழைக்கப்படுகிறது. “பிரட்டன் வுட்ஸ்” உடன்படிக்கையின்படி ஐநா, உலக வங்கி, சர்வதேச பண நிதியம் போன்ற பல அமைப்புகளின் வாயிலாக உலகளாவிய உறவு பேணப்பட்டு ஒரு புதிய அடுக்கு உருவாக்கப்பட்டது. மூலதனத்திற்கும் தொழிலாளருக்குமான வர்க்க சமரச ஏற்பாட்டை சனநாயக அமைதியின் நிலைப்புத்தன்மைக்காக ஆளும் முதலாளித்துவ சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இப்பொருளாதார கொள்கைகளின்படி பொருளாதரத்தில் அரசின் பாத்திரமானது முதன்மையாக நிறுவப்பட்டது.

அதாவது முக்கியமான உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். தொழிற்கொள்கைகள் மற்றும் தொழிளார் நலப்பாதுகாப்பு கொள்கைகளை அரசே தீர்மானித்தது. பொருளாதர வளர்ச்சி,குடிமக்களின் நலன் பேணல், வேலையின்மை வீழ்ச்சி என அரசின் உள்ளீடு சந்தை நிகழ்முறையிலும் சமூக நடவடிக்கைகளிலும் செல்வாக்கு செலுத்தியது. உலகப்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்த்த அறிவியல் கண்டுபிடிப்புகள் போர்ச்சூழல் காரணமாக நடைமுறைக்கு வராத நிலைமையில், “தேவை நிர்வாக” காலத்தில் தொழில்நுட்ப புரட்சியாக நுகர்வு தளத்தில் எழுச்சிபெற்றது. அறிவியல் தொழிநுட்ப எழுச்சியுடன் கூடிய பொருளாதர ஏற்றம் முதலாளியத்தின் “பொற்காலமாக” பெரும்பாண்மையான முதலாளித்துவ பொருளாதாரவாதிகளால் விதந்தோம்பப்பட்டது. இதன் காரணமாக முந்தைய சூழலை விட ஒப்பீட்டு அளவில் ஓரளவிற்கு சமூகப்பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்த மேற்சொன்ன பொற்காலமும் தகர்ந்தது. வேலை வாய்ப்பின்மை மற்றும் பொருளாதார தேக்க நிலைமை உலகெங்கிலும் பரவ கெய்னீசிய கொள்கை வீழ்ச்சிப்பாதையில் பயணிக்கதொடங்கியது. இந்நிலையில் உலகப்போர் நிகழ்ந்த காலத்திலேயே திரட்சி பெற்ற மூலதன குவிப்பு, நிதி மூலதனமாக புதிய வடிவெடுத்து (மேற்கொண்டு அது இறுக்கமடைந்து பொருளாதார தேக்கநிலைக்கும் போருக்கு வித்திடும் என்ற அவதானிப்புக்கு மாறாக) உலக நிதி மூலதனமாக எழுச்சிப்பெற்றது. உலக நிதிமூலதனத்தின் முக்கியப் பண்புகளில் ஒன்று பொருளாதரத்தில் அரசின் கட்டுப்பாட்டை விலக்குவது. அதாவது தன் நலனுக்கான நவ தாராளவாத பொருளாதரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஆர்வம் செலுத்துகிற அரசையே அது விரும்பும். சுதந்திர சந்தைக்கு இடையூரான அரசின் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டங்களை அது ஏற்காது. சமூக நலத்திட்டங்கள் மீதான அரசின் செலவீனத்தை அது கட்டுப்படுத்தும்.

மேலும் தனது கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வர முரண்படும் நாடுகளிலிருந்து தனது மூலதனத்தை உடனடியாக வெளியேற்றி அந்நாடுகளின் பொருளாதார சீர்குழைவிற்கு வழிசெய்யும். முதலாளித்துவ பொருளாதார சூத்ராதாரிகளான “சிக்காகோ பாய்சும்” அவர்களை வளர்த்தெடுத்த அமெரிக்காவும் புவியின் அழிவிற்கான நவ தாராளவாத பொருளாதாரப் பரிசோதனையை உலக நிதி மூலதனத்தின் அழுத்தத்தின்பேரில் முதன் முதலாக லத்தீன் அமெரிக்க நாடான சிலியில் மேற்கொண்டார்கள். அதன் முதல் கட்டமாக பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாரின்வசம் கையளிக்கப்பட்டது. அதுவரை உள்நாட்டு நிறுவனங்களால் “வழக்கமாக” மேற்கொள்ளப்படும் இயற்கை வளச்சுரண்டல், உலக கார்பரைட் நிறுவனங்களின் லாப நோக்க வர்த்தக நலன்களுக்கு ஒரு திட்டத்தின் கீழ் அனைவருக்குமான சுதந்திரம் என்ற முழக்கத்துடன் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில் நகைமுரண் என்னவென்றால் உலகின் மிகப்பெரும் கம்யூனிச நாடான சீனாதான் நவ தாராளவாத பொருளாதாரப் பாணியை 1978 ஆம் ஆண்டு முதல் முதலாக உலகில் அமல்படுத்தியது. சமூகப் பொருளியில் வரலாற்றின் மாபெரும் திசைமாற்ற நிகழ்வான நவ தாராளவாதக் கொள்கையை நோக்கிய முதல் அடியை சீன அதிபர் டென் சிஒபெங் எடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் மார்கெட் தாட்சரும் அமெரிக்காவில் ரொனால்ட் ரீகனும் தாராளவாதப் பாதைக்கான கொள்கை மாற்றங்களை அமெரிக்காவின் பெடரல் வங்கித் தலைவர் வோல்கரின் ஆலோசனையின் பேரில் செவ்வனே செய்து முடித்தனர்.

நவதாரளவாதமும் நீர் விநியோகமும்:
நவதாராளவாத மூலவர்களான வோல்கர், ரீகன், தாட்சர் மற்றும் டென் சிஒபெங் தனியார்மையம், கண்காணிப்பு ஒழுங்கிற்கு விலக்களித்தல், அரசின் கட்டுப்பாட்டை/அதிகாரத்தை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளின் வாயிலாக மனிதகுல வரலாற்றுக்கும் இயற்கை வரலாற்றுக்குமான “திட்டமிட்ட அழிவை” சட்டக ஒப்புதலோடு அரேங்கேற்றிவர்கள் ஆவார்கள். இந்நிலையில் உலகின் முதல் முதலாளித்துவ நாடான இங்கிலாந்தில்தான் நவதாராளவாதப் பொருளாதர ஏற்பாட்டில் நீர் மீதான அரசின் கட்டுப்பாடு விலக்கப்பட்டு தனியாருக்கு கையளிக்கப்பட முக்கிய குற்றவியல் நிகழ்வு அரங்கேறியது. 1989 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசுக்கு சொந்தமான நீர் விநியோக அமைப்புககளை குறைவான விலைக்கு தனியாருக்கு தாரை வார்த்தார் நவதாராளவாதத்தின் அடிவருடியும் அந்நாட்டின் பிரதமருமான மார்க்கெட் தாட்சர். பின் நடந்தவற்றை சொல்லத்தேவையில்லை. தனியார் நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம்,தொழிலாளர் வேலை நீக்கம் என அனைத்து அராஜக நிகழ்வுகளும் அரசின் சட்டக ஒப்புதலுடன் தாரள சந்தைப் பொருளாதார ஏற்பாட்டில் நிகழ்ந்தது. இதைத்தொடர்ந்து நீர் விநியோகம் மீதான தனியாரின் ஆளுமை பொலிவியா, அர்ஜென்டினா போன்ற லத்தின் அமெரிக்கா நாடுகளைக் கடந்து ஆசியாவின் பக்கம் திரும்பியது. இதற்கு உவப்பாக நீர் விநியோகம் மீதான உரிமையை பெக்டல்,சூயஸ்,வியோலியா போன்ற கார்பரைட் கொள்ளையர்களுக்கு வழங்க மூன்றாம் உலக நாடுகளை நிர்பந்திக்கும் தன் வரலாற்றுக் கடமையை ஆசிய வளர்ச்சி வங்கிகளின் வாயிலாக உலக வங்கி ஏற்றுச் செய்தது.

இதன் எதிரொலியானது 2002 ஆம் ஆண்டில் இந்திய நடுவண் அரசு வெளியிட்ட தேசிய நீர்க் கொள்கையில் அம்மணமாக தெரிந்தது. அதாவது நீர் விநியோகத்தில் மாநில அரசுகள் நம்பமுடியாத அளவிற்கு நிதியை செலவிடுவதாகவும், இதைக் களைந்து ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் பொருட்டு தேசிய நீர்க் கொள்கையில் தனியாரின் பங்களிப்பை ஊக்கப்படுத்தவேண்டும் எனவும் வரைவு அறிக்கை கோரியது. முன்னதாக நீர் விநியோக உரிமையை பெக்டல் (Bechtel) போன்ற பன்னாட்டு கார்பரைட்களுக்கு தாரை வார்த்ததில் தமிழகம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னோடியாகவே செயல்பட்டது எனலாம். ஏனெனில் திருப்பூர் நகர நீர் சேவைகளில் ஈடுபட 90களிலேயே பெக்டல் நிறுவனதிற்கு தமிழக அரசு அனுமதித்திருந்தது. பவானி ஆற்றிலிருந்து குழாய் மூலமாக நீர் உறுஞ்சப்பட்டு நகர நீர் விநியோகத்தில் ஈடுபட்ட பெக்டல் நிறுவனம் லாபத்தை குவித்தது. முன்னதாக நீர் விநியோகத்தை ஏற்கும் தனியார் நிறுவனகங்களுக்கு மக்களிடம் கட்டணம் பெற்றுகொள்ள அரசு சலுகை வழங்கிய போதிலும் குழாய் அமைப்பது மற்றும் மராமரத்துப் பணிக்கான செலவை தனியார் நிறுவனங்களே ஏற்கும் வகையாகவே மேற்குலகில் ஒப்பந்தங்கள் போடப்பட இந்தியாவிலோ அதீத சலுகை என்ற ஏற்பாட்டின்பேரில் நீர் விநியோகத்திற்கான அனைத்து கட்டுமான மராமரத்து செலவையும் அரசே ஏற்றது. தனியார் -அரசு கூட்டு ஒப்பந்தம் என்ற போர்வையில் நிகழும் இவ்வராஜக நீர் சேவைகள் இந்தியாவில் திருப்பூர்,பெங்களூரு,நாக்பூர்,விசாகப்பட்டினம்,ஆக்ரா எனப் பெரும்பாண்மையான நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. இதன் உச்சகட்டமாக சத்தீசுக்கர் மாநிலத்தில் உள்ள “சியோனாத்” என்ற ஆற்றின் இருபத்தேழு கி.மீ நீளத்திற்கான நீர் உரிமையை இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை என்னெவென்று சொல்வது ! காலம் காலமாக அப்பகுதியில் மீன் பிடித்து வந்து மரபு உரிமைக்கூட அந்நிறுவனங்களால் பறிக்கபட்டது. சூயஸ், பெக்டல் போன்ற நிறுவனங்கள் தமிழக நகரங்களில் தங்களின் கிளைகளை ஊன்றி வரும் வேகத்தைப் பார்கையில் நம் காவிரியும் வைகையும் தாமிரபரணியும் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை எனலாம். முன்னதாக அதீத மணல் கொள்ளையாலும் வரைமுறையற்ற கழிவுகளாலும் குற்றுயிரும் கொலையுருமாக உள்ள நம் ஆறுகளின் நிலைமை நீர் சேவை நிறுவனங்களின் எழுச்சியால் விரைவில் காணாமல் போகும் நிலைமையே வரலாம். பொலிவிய நகரங்களான லா பாசு மற்றும் கோச்சம்பாவில் தனியார்மயமாக்கப்பட்ட நீர் விநியோகத்திற்காக எதிராக போர்க்குணமிக்க போராட்டங்களை முன்னெடுத்த அம்மக்களின் எதிர்ப்பால் பெக்டல் நிறுவனம் விரட்டியடிக்கப்பட்டது போல நாமும் நீருக்கான உரிமைப் போராட்டத்தை காலந்தாழ்த்தாமல் முன்னெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம். ஆனாலும் இப்போராட்டங்கள் அரசை ஒரு சனநாயக கட்டுப்பாட்டில் வைப்பதற்கான தற்காலிகமாக முயற்சியாக மட்டுமே இருக்க முடியும். தனியார்மயமாகும் நீர் விநியோகத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் நிகழ்கிற வாதப்பிரதிவாதங்களில் அரசை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தது கூட தற்காலிக ஆறுதல்தான்! இவ்வாதத்தில் நீதிபதி கூறுகிறார் “இந்தியா போன்ற சனநாயக நாட்டில் தண்ணீர் மீதான அரசின் கட்டுப்பாட்டை விலக்கி தனியார்மயமாக்குவது என்பது தண்ணீருக்கான குடிகளின் உரிமையைப் பறிப்பதாகும்”. மேலும் அவர் கூறுகிறார் “அரசியல் சாசனத்திற்கு மேலானது எதுவுமில்லை. தண்ணீர் மீதான தன் உரிமையை விலக்கி அதை தனியார் நிறுவனங்களுக்கு கையளிக்க முனைகிற அரசின் செயல்பாடானது மதசார்பற்ற, சனநாயக இந்தியா என்று முன்மொழிகிற அரசியல் அமைப்புச்சட்டத்தை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும்.” இவ்வாறு நீர் விநியோகத்தை தனியார்மயப்படுத்தல் விவகாரத்தை கடுமையாக சாடும் நீதிபதிகள் நவீன மறுகாலனியாக்கதிற்கான குற்றவியல் பொருளாதர கட்டமைப்பை விமர்சிக்காமல் கள்ள மௌனம் சாதிப்பது வெள்ளிடைமலை.

“முதலாளித்துவம் அகற்றப்படவில்லையெனில் அதனால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பெரும் உற்பத்தி சக்திகள் அழிவுச்சக்திகளாக உருமாறும்” என 150 ஆண்டுகளுக்கு முன்பாக கார்ல் மார்க்சு அவதானித்தது மிகச்சரியாக இன்றைய சந்தைப்பொருளாதார கட்டத்தில் மெய்மையடைந்துள்ள வேலையில், நிலவுகிற முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை அப்புறப்படுத்தாமல் நீடித்த மனித மேம்பாட்டிற்கும் சமூக நீதிக்கும் இயற்கை வளப்பாதுகாப்பான மாற்று முகாம் என்பது சாத்தியமற்றதே.

குறிப்புகள்:
1)நீராதிபத்தியம்-எதிர் வெளியீடு
2)உலக நிதி மூலதனம்-பிரபோத் பட்நாயக்(பாரதி புத்தகாலயம்)
3)A Brief History of Neoliberalism-David Harvey
4)http://www.thehindu.com/news/cities/Delhi/water-privatisation-is-not-for-india/article4528871.ece

– அருண் நெடுஞ்செழியன்
arunpyr@gmail.com


(இக்கட்டுரை சஞ்சிகை – 2014 செப்டம்பர் இதழில் வெளியானது)