கல்வித்துறையில் மாற்றத்தை நோக்கிய பயணம் – வாழை

பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட சமூகத்தில் தனது வாழ்விலும் தன்னைச் சுற்றி அனைத்து துறைகளிலும் ஒடுக்குமுறைகளையும் சுரண்டல்களையும் பார்த்துக்கொண்டே வளரும் ஒவ்வொரு தலைமுறைக்கும் இதற்கான காரணம், அதைச் சரி செய்வதற்கான வேட்கை வளரும்போதே துளிர்விட தொடங்கிவிடும். அதைத் தண்ணீர் ஊற்றி வளரச்செய்வதும், கடந்து போவதும் ஒவ்வொரு மனிதரின் ஆற்றல் மற்றும் புரிதலைப் பொறுத்தது.

இப்படி ஒரு தேடலில் நமது சமூக மாற்றத்திற்கான பங்களிப்பு, கல்வித் துறையில் இருக்கவேண்டும் என ஐந்து முதல் தலைமுறை பட்டதாரிகளின் முயற்சியில் 2005 ஆம் ஆண்டு ஏரியூர் – தருமபுரி மாவட்டத்தில் உருவானதுதான் வாழை என்ற அமைப்பு. மேலும் சிலர் இப்பயணத்திற்கு தோள் கொடுக்க, வாழை தனது சமூக மாற்றத்திற்கான பங்களிப்பை அனந்தபுரம் – விழுப்புரம் கிராமத்திலும் தொடங்கியது.    .

வாழை அமைப்பினருடன் ‘சஞ்சிகை’ இதழுக்காக மேற்கொண்ட நேர்காணல்

வாழை என்றால் என்ன? என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்? வாழையின் மூலம் நீங்கள் கற்றது என்ன?

முதல் தலைமுறை மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் தொடர்ந்துச் செயல்படும் வாழை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் கைகளைப் பிடித்து அவர்களுக்கான தேடலில் பயணம் செய்ய வைத்து, ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் அவர்களுக்கான பாதையை அவர்களே தேர்ந்தெடுக்க தோழனாக உதவுகிறது.

வாழை இயங்கும் விதத்தைப் பற்றிக் கூறுங்கள்

ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கத்திலும் ஜூன் மாதம் மாணவர் தேர்வு நடைபெறும். வீடுகளில் கற்றலில் உதவ ஆட்கள் இல்லாத முதல் தலைமுறை மாணவர்களைப் பள்ளி ஆசிரியர்கள் உதவியோடு தேர்ந்தெடுப்போம், தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் வீட்டிற்கு சென்று வாழை சார்பாக அவர்களின் பெற்றோர்களிடம் பேசுவோம். அவர்களின் மகன்/மகள் வாழையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெரிவித்து, இரண்டு நாட்கள் பயிலரங்கத்திற்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்வோம்.

இரண்டு நாட்கள் பயிலரங்கம் என்றால்…

மாணவர்களுக்கு அடிப்படை மொழி அறிவு மற்றும் கணிதத்தை வலுப்படுத்த குழுவாகப் பிரித்து அவர்களுக்கு புரியும்படி எளிய முறையில் கற்பிப்போம். உதாரணத்திற்கு Basic Learning – English, Tamil, Maths என்ற மூன்று குழுக்கள் எங்களுக்குள் பிரித்துக்கொண்டு பயிற்சி கொடுப்போம். ஒவ்வொரு குழுவும் மாணவர்கள் கற்றலில் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றாற்போல் பயிற்சி கொடுத்து அவர்களை அடிப்படை கல்வியில் மெருகேற்றுவோம். அதுமட்டுமல்லாமல் திறமை கண்டறிதல், சமூக நீதி வகுப்பு, வாழ்வியல் கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு அமர்வுகள் அந்த இரண்டு நாட்கள் பயிலரங்கத்தில் நடைபெறும். குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை வெளியே கொண்டுவர பல்வேறு புதிய முயற்சிகளைச்  செய்துக் கொண்டே இருப்போம்.

தருமபுரி மாவட்டம் ஏரியூர் கிராமத்தில் இரண்டு நாட்கள் பயிலரங்கம் நடைபெறும். அதேபோல் விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் கிராமத்தில் இரண்டு நாட்கள் பயிலரங்கம் நடைபெறும். சென்னையிலுள்ள தன்னார்வலர்கள் அனந்தபுரத்திலும், பெங்களூரில் உள்ள தன்னார்வலர்கள் ஏரியூரிலும் இப்பயிலரங்கங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த முறையில் மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த முடிகிறதா?

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தன்னார்வலரை நியமித்து விடுவோம். அவர் இரண்டு நாட்கள் பயிலரங்கத்தில் எப்போதும் அவருக்காக நியமிக்கப்பட்ட குழந்தையுடன் நேரம் செலவழிப்பார், அக்குழந்தைக்கு என்ன தேவை, என்ன பிரச்சனை, படிப்பில் ஏதேனும் பிரச்சனையா, குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனையா போன்ற பலவற்றைத் தெரிந்துகொள்வார். சவால்களை எதிர்கொள்ள இயன்ற உதவிகளைச் செய்திடுவோம். குழந்தைகளுக்கு பொருளாதார உதவிகள் இன்றி, அறிவு பரிமாற்றத்தில் மட்டுமே பங்களிப்பு இருக்க வேண்டும் என்பது வாழையின் கொள்கை.

பள்ளிகளுக்குக்கிடையே திறன் வளர் போட்டிகள் நடத்துகிறீர்களா?

மாணவர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் விதமாக வருடத்திற்கு ஒருமுறை பள்ளிகளுக்கான திறன் வளர்க்கும் போட்டிகளை நடத்துவோம். அதில் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கதைசொல்லும் போட்டி, வார்த்தை விளையாட்டு, கிராமிய நடனம் போன்ற பல போட்டிகள் இளநிலை, முதுநிலை என்று பிரித்து நடத்தப்படும். நாங்கள் பயிலரங்கம் நடத்தும் பகுதியைச் சுற்றி உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் திறமையை வெளியே கொண்டுவந்து அவர்களின் திறமையை ஊக்கப்படுத்த நடத்தப்படும் நிகழ்வு இது. இந்த திறமை திருவிழாவில் வாழை அல்லாத மற்ற மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பதை அடிப்படை விதியாக வைத்துள்ளோம்.

மாணவர்களின் அறிவியல் அறிவை எவ்வாறு மேம்படுத்துகிறீர்கள்?

இந்திய அரசு நடத்திவரும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்குத் தொடர்ந்து எங்கள் வாழை மாணவர்களை ஒவ்வொரு வருடமும் தயார் செய்து அவர்களை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பங்குபெற வைக்கிறோம். இந்த வருடம் நடந்த மாநாட்டில் தேசிய அளவிற்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வான தலைப்புகளில் வாழைக் குழுவின் தலைப்பும் ஒன்று. தமிழ்நாட்டில் இந்த தேசிய குழந்தைகள் மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்துவது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். மாவட்ட அளவில் போட்டிகளை வைத்து அதில் இருந்து மாநில அளவிற்கான ஆய்வுகளை தேர்ந்தெடுப்பார்கள். மாநில அளவில் தேர்வான 600 ஆய்வுகளில் 30 ஆய்வுகள் தேசிய அளவிற்கு தேர்வாகின. அதில் வாழையிலிருந்து ஓர் ஆய்வு சென்றது குறிப்பிடத்தக்கது. எங்களின் வாழை மாணவர் ஒருவர் ஒரு வாரம் குஜராத்தில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் மாநாட்டிற்கு சென்று வந்துள்ளார். இருபத்தைந்து வருடங்களாக இந்திய அரசு நடத்தும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தருமபுரி மாவட்டத்திலிருந்து தேசிய அளவிற்கு சென்ற முதல் ஆய்வு வாழை மாணவரின் ஆய்வு என்பதை ஊக்கமாக எடுத்துக்கொண்டு இன்னும் ஈடுபாட்டுடன் செயல்படுகிறோம்.

தன்னார்வலர்கள் எல்லாம் யார்? அவர்கள் எவ்வாறு தங்களுக்குள் பணிகளை ஒருங்கிணைக்கிறார்கள்?

பெங்களூர் மற்றும் சென்னையில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் இளம்தலைமுறையினரின் நேரம், உழைப்பு எனப் பதிமூன்று வருட உழைப்பின் வெளிப்பாடுதான் மேலே குறிப்பிட்ட அனைத்தும். ஒவ்வொரு மாதமும் புதிய தன்னார்வலர்களைச் சேர்க்க வாழை பற்றிய அறிமுக கூட்டம் ஒன்று சென்னை மற்றும் பெங்களூரில் நடைபெறும். ஒரு தங்கைக்கு ஒரு அக்காவையும் ஒரு தம்பிக்கு ஒரு அண்ணாவையும் நியமிப்பதுதான் வாழை அமைப்பின் அடிப்படை. அவர்கள் தொடர்ந்து அந்த குழந்தையிடம் தொடர்பிலேயே இருப்பார்கள். சிறார்கள் அவர்களுககான சந்தேகம், குழப்பங்கள் என எல்லாவற்றையும் தங்களது அண்ணா/அக்காவிடம் பகிர்ந்து கொள்வார்கள். இதற்காக MENTORING SESSION பயிற்சியும் அவ்வபோது நடைபெறும், ஒவ்வொரு பயிலரங்கத்திலும் வழிகாட்டியாக இருக்கும் தன்னார்வலர் புதிய தன்னார்வலர்களுக்கு தனது அனுபவத்தைப் பகிர்ந்து அவரின் வழிகாட்டுதலைச் செழுமைப்படுத்த உதவுவர்.

வாழையின் இந்த நெடிய பயணத்தில் உங்கள் அணியினர் கண்டடைவது என்ன?

மக்கள் நலனுக்காக எழுதப்பட்ட சட்டங்களும், கொள்கைகளும் கிராமத்தில் உள்ள கடைக்கோடியில் வாழும் சாமான்ய மக்களுக்கு எப்படி எட்டாக்கனியாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு பயணத்திலும் கற்றுகொண்டே இருக்கிறோம். ஒரு பக்கம் தொழில்நுட்பமும் அறிவியல் வளர்ச்சியும் வளர, இன்னொரு பக்கம் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கிராமங்களில் பள்ளிப் படிப்பைப் பாதியில் விடும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இம்மூன்றையும் ஒரு புள்ளியில் வைத்து பார்க்கவேண்டிய தேவை இன்று உள்ளது,  கல்வியில் இருந்தும் பள்ளிகளில் இருந்தும் மாணவர்களைப் பிரித்தெடுப்பது எது? ஏன் அந்த மிகபெரும் இடைவெளி உருவாகிக்கொண்டே இருகின்றது?  இது போன்ற கேள்விகள் தொடர்ந்து எங்கள் விவாதப்பொருளாக இருந்துகொண்டே இருக்கின்றன.

நீங்கள் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறீர்கள்?

தொடக்கப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என ஒவ்வொரு கிராமத்திற்கும் பள்ளிகள் இருந்தாலும் கிராமத்து குழந்தைகளுக்கு கல்வி கிடைத்ததா என்பதுதான் சவால். இந்தப் புள்ளியில் கல்வி என்பது என்ன, எதை நாம் கல்வி என்கிறோம் போன்ற கேள்விகள் மிகவும் மறுபரிசீலனை செய்து பார்க்கவேண்டிய தேவை உள்ளது. பதிமூன்று வருடங்களில் கல்வித்துறையில் நடந்த மாற்றங்கள், சமூகத்தில் நடந்த பொருளாதார மாற்றங்கள் எல்லாமே ஒருசேர கிராமப்புற மக்களின் சூழ்நிலைகளையும் நசுக்குகிறது. அந்த நெருக்கடியில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் மனநிலையைப் பக்குவப்படுத்துகின்ற, செழுமைபடுத்துகின்ற சவாலான வேலையைத்தான் வாழை செய்துகொண்டு இருக்கிறது. பொருளாதார நெருக்கடியும் சமூக நெருக்கடியும் நம்மை நசுக்கிகொண்டேதான் இருகின்ற. அதில் தினம் தினம் போராடவேண்டியது நமது கடமை. இந்த போராட்ட களத்திற்கு அவர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்காமல் இந்தச் சமூகம் புறக்கணித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப ஒவ்வொரு வருடமும் புதிய தன்னார்வலர்களும் எங்களோடு கை கோர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் பல கைகளை எதிர்பார்த்துகொண்டே சமூகத்தில் சிறு அசைவை நிகழ்த்த பல இலட்சியங்களோடு வாழை தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது.

2018 சஞ்சிகை இதழில் வெளியான கட்டுரை


வணக்கம்.
சஞ்சிகை இதழைத் தொடர்ந்து இணையதளத்தில் படித்து, ஆதரவளிப்பதற்கு நன்றி.
சஞ்சிகை இதழை அச்சுப் பிரதியாகவும் ஒவ்வொரு மாதமும் கொண்டு வருகிறோம்.
ஆண்டுச் சந்தா ரூ.200 மட்டுமே.
இதழைச் அச்சிடுவதற்கும் தபாலில் அனுப்பி வைப்பதற்கும் ஆகும் செலவை நேர்செய்யவே வாசகரான உங்களை சந்தாதாரர் ஆகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Bank Details:
City Union Bank
Savings a/c
Acc no. 003001001761671
Murugaraj G
Madurai Anna Nagar branch
IFSC: CIUB0000195

சந்தாத் தொகையைச் செலுத்திய பின், தங்களது முகவரியை அனுப்பி வைக்கவும்.
‘சஞ்சிகை’ இதழை ஒவ்வொரு மாதமும் நீங்கள் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம்.

சந்தா செலுத்திய விவரத்தையும் உங்கள் முகவரியையும் அனுப்ப வேண்டிய முகவரி:

sanjigai@gmail.com
அல்லது
+91-95007 86088 (Whatsapp)

சஞ்சிகை ஆசிரியர் குழு


 

Advertisements

காமிக்ஸ் நேசர் இன்னசெண்ட் ராஜ் உடன் ஒரு சந்திப்பு

எழுத்து தோன்றுவதற்கு முன்பே ஆதிமனிதன் பாறைகளில் சித்திரங்களை வரையத் தொடங்கிவிட்டான். சித்திரங்கள் வழியாகத் தான் அம்மனிதர்கள் தங்களின் கதைகளைச் சொல்லத் தொடங்கினார்கள். வாசிப்பை நோக்கி நம்மை ஈர்க்கும் முதல்படி சித்திரக்கதைகள்தான். சித்திரக்கதைகள் (காமிக்ஸ்) வாசிப்பதை நேசிக்கும் இன்னசெண்ட் ராஜ் அவர்களுடன் உரையாடிய போது…

Read More »

காட்ஃபாதர் உருவான விதம்

பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல்

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் நம்மில் பலர் பலமுறை பார்த்திருக்கிறோம். வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் ஏற்படும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் பலரை வசீகரித்திருக்கின்றன. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்துக்குள்ளாக்கியது.

Read More »