துப்பாக்கிகள், கிருமிகள், எஃகுகள்

பெர்னாட்ஷாவிடம் அவர் காதலி, ஒருமுறை “கேள்வி எதனால் வருகிறது?” என்று கேட்டார். அதற்கு பெர்னாட்ஷா “பதிலிருப்பதால் வருகிறது” என்றார்.

thuppaakkiஅதுபோல நியுகினியாவை சார்ந்த யாளி என்ற இளைஞனின் கேள்விக்கு பதிலைக் கூற முயற்சிக்கும் புத்தகம், “துப்பாக்கிகள், கிருமிகள், எஃகுகள்”. இப்புத்தகத்தின் ஆசிரியர் ஜாரெட் டைமண்ட் பறவையியல் தொடர்பான ஆராய்ச்சி பொருட்டு, நியுகினியாவில் பயணித்தபோது யாளி என்ற அந்த தீவை சார்ந்த சந்திப்பில், அவ்விளைஞன் இவரிடம் கேட்ட கேள்வி, “வெள்ளையர்களாகிய நீங்கள் இவ்வளவு சரக்கை (கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், புதிய பொருட்கள்) தயாரித்து அதை நியுகினியாவுக்கு கொண்டு வந்தீர்கள். ஆனால், நாங்கள் ஓரளவு சரக்கையே சொந்தமாக வைத்திருக்கிறோம். ஏன்?”

இவ்வினாவை இன்னும் தெளிவுப்படுத்த வேண்டுமானால், “ஏன் செல்வமும், அதிகாரமும் யூரேசிய (ஆசியா, ஐரோப்பா, ரஷ்யா – இவற்றின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பு) மக்களிடம் குறிப்பாக, ஐரோப்பிய மக்களிடம் அதிகமாக பங்கிடப்பட்டுள்ளது? ஏன், பூர்விக ஆப்பிரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இல்லை”

இக்கேள்விக்கு சர்வபொதுவாக அளிக்கக்கூடிய பதில் “காலனியாதிக்க விரிவாக்கமும், தொழில்நுட்ப வளர்ச்சிகளும்” என்று. இந்த இடத்தில் இந்த புத்தகம் சற்று வித்தியாசப்பட்டு ஏன் இந்த காலனியாதிக்கமும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் யுறேசியாவால் – அமெரிக்காவின் மீதோ, ஆப்பிரிக்காவின் மீதோ செய்ய முடிந்தது? ஏன் மாற்றாக, ஆப்பிரிக்காவோ, அமெரிக்காவோ ஐரோபாவின் மீது செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு சாதகமான, புவியியல் காரணிகளை அலசுகிறது. பிரமாண்ட கேன்வாஸில் தீட்டப்பட்ட வான்கா ஓவியம் போல், கிட்டத்தட்ட 600 பக்கங்களில் கி.மு. 13000 தொடங்கி மனிதகுல வரலாற்றை சுருக்கமாக கூறுகிறது.

ஏன், பெரிய சாதகமான துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு ஆகிய அனைத்தும், யுரேசியாவிலேயே தோன்றின? ஏன் அவை ஆப்பிரிக்காவிலோ, ஆஸ் திரேலியாவிலோ தோன்றவில்லை என கி.மு.13000 ஆண்டிலிருந்து ஆராய்கிறது. கி.மு.13000 என்பது தொல்பொருள் ஆய்வின்படி ஏறக்குறைய அக்காலத்தில் அனைத்து கண்டங்களில் வாழ்ந்த மக்களும் வேட்டை உணவு வாழ்க்கை முறை கொண்டவர்களாகவே இருந்ததாக கருதப்படுவதால், அதிலிருந்து புத்தகம் விளக்கத்தை தொடர்கிறது.

குரங்கிலிருந்து மனிதப்பரிமானத்தில் தொடங்கி, எவ்வாறு மனிதப் பரவல் உலகம் முழுவதும் சென்றது, உணவு வேட்டை சமூகத்திலிருந்து உற்பத்தியின் தோற்றம், மந்தை வளர்ப்பு, பழக்குவதற்கு கிடைத்த காட்டுத் தாவரங்கள், விலங்குகள், மைய அரசாங்கத் தோற்றம், எழுத்து முறை கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆஸ்திரிய நியூகினிய வரலாறு இவற்றை ஆராய்ந்து யாளியின் வினாவிற்கு பதிலளிக்க முயற்ச்சிக்கிறது. வரலாற்றுப் பூர்வமான நூலென்றாலும், படிப்பதற்கு சுவாரசியமான வகையில் மிக அதிக புள்ளிவிவரங்கள் அல்லாமல், உதாரணமான சம்பவங்கள் வழி விளக்க முற்படுகிறது.

உதாரணமாக, பழக்கிய விலங்குகளும், எழுத்து முறையும் எவ்வாறு பெரிய சாதகமாய் இருந்த புறக்காரணி என்பதை விளக்கும் அத்தியாயம் 3ல் (கானுமர்காவில் நிகழ்ந்த மோதல்) 1532ல் நடந்த இன்கா-ஸ்பெயின் மோதலில் 168 ஸ்பானிய வீரர்களைக் கொண்ட “பிஸாரோ”, 80,000 மக்களைக் கொண்ட இன்கா பேரரசின் தலைவரான ‘அடவாப’வை தோற்கடித்தார். இதற்கு முக்கிய சாதகமாக கூறப்படுவது குதிரைகள் மற்றும் எஃகு. ஏனெனில் அந்தப் போரில் தான் இன்கா குடிமக்கள் முதல்முறையாக ஒரு மனிதன் ஒரு விலங்கின் மீது அமர்ந்து சவாரி செய்வதை பார்க்கின்றனர். அது ஏற்படுத்திய உளவியல் தாக்கம், மற்றும் உயரமாக குதிரையில் அமர்ந்து பாதுகாப்பாக போராடக்கூடிய சாதகம், வெறும் தரையில் நின்று போராடும் இன்கா மக்கள் மீது தாக்க பெரிதும் உதவியது.

ஸ்பானிய வீரர்கள் பெரும்பாலும் கவசம் அணிந்து போரிடுகையில், இன்கா மக்கள் வெறும் பஞ்சாலான கவசத்தையே அணிந்து போரிட்டனர். ஸ்பானிய வீரர்கள் எஃகாலான கூர்மையான வாளைக் கொண்டு போரிடுகையில், இன்கா மக்கள் வெறும் குறுந்தடிகளைக் கொண்டு போரிட்டனர். இவ்வாறு இந்தப்போரில் குதிரைகளும், எஃகும் மிகப்பெரிய சாதகத்தை ஸ்பானிய படைக்கு அளித்தனர். இதில் ஆச்சர்யமான விஷயமாக கூறப்படுவது, இதில் ஒரு ஸ்பானிய வீரர் கூட இறக்கவில்லை.

இவ்வாறு துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு எவ்வாறு ஐரோப்பிய காலனியாக்கத்திற்கு உதவியது என்று விளக்கியப் பின், சற்று பின்னோக்கி சென்று, ஏன் இவை யூரேசிய கண்டத்தில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது, மற்ற கண்டங்களில் ஏன் நிகழவில்லை என்பதற்கான காரணிகளை விளக்குகிறது.

அதுபோன்று விலங்குகளின் பங்களிப்பை பற்றிய அத்தியாயம் மிக சுவாரசியமானது. இதில் ஆசிரியர் கூறுவது – பழக்குவதற்கு தகுந்த விலங்குகளான குதிரை, மாடு போன்றவை இயற்கை தேர்விலேயே யூரேசிய கண்டத்திலேயே தோன்றின. மாறாக, ஆஸ்திரேலியாவிலேயே அவர்களுக்கு அப்படி இருக்கும் விலங்குகள் எல்லாம் கங்காரு போன்ற சவாரி செய்ய இயலாத விலங்குகளே. இந்த யுரேசியாவின் சாதகத்தன்மை இந்த ஏற்றத்தாழ்விற்கு மிகப்பெரிய பங்களிக்கிறது.

வரலாற்று நோக்கில் செல்லும் நூல் என்றாலும் நாவல் போள எழுத்து முறைக்கும் கவனம் கொண்ட நூலாகவே உள்ளது. உதாரணமாக, அன்னா கரீனாவில் முதல் வரியான, “சந்தோஷமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால், சோகமான குடும்பங்கள் யாவும் அதனதன் வழியில் தனித்துவமானவை” என்ற வரியை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த மக்கள் விலங்குகளை பழக்குதலில் உள்ள இடர்களை சுட்டிக் காட்டுகிறார்.

யாளியின் ஒரு கேள்விக்கு பதிலளிக்க முற்படும் நூல் என்றாலும், ஒவ்வொரு அத்தியாயமும் அதனளவில் முழுமையானதாகவே உள்ளது இதன் சிறப்பு. சமகாலத்தில் நாம் பதில் தேடும் சில கேள்விகள் கூட, ஊடுபாவாய் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் தெளிவை தருகின்றன. உதாரணமாக – பொதுவுடைமை சமூகம் பற்றி கூறுகையில் அவரது நண்பருடனான சந்திப்பு மூலமும் எழுத்து முறை கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இன்கா-ஸ்பானிய போர்களின் மூலம் வரலாற்று ரீதியாக தெளிவடைய வைக்கும் தகவல்களும் சிதறி பரவியுள்ளன.

யூரேசியாவிற்கு அடுத்து மிக முக்கிய சாதகமாக ஜாரெட் கருதுவது நில அமைப்பை, அதாவது யூரேசிய கண்டம் மட்டும் நெடுக்குவாட்டில் (HORIZONTAL) உள்ளது, மற்ற அமெரிக்காவோ ஆப்பிரிக்காவோ குறுக்கு வாட்டில் (VERTICAL) அமைந்துள்ளதை அட்சகோடுகளின் அமைப்பின் படியும், யூரேசிய கண்டங்கள் இந்த முனையிலிருந்து மறுமுனை வரை கிட்டத்தட்ட ஒரே தட்ப வெப்பநிலை நிலவியதால் அது பயிர்கள், தொழில்நுட்பம் பரவ ஏதுவாயிற்று.

மனித பரிமாணத்தில் தொடங்கி, விலங்கு, பயிர்கள், கிருமிகள் இவற்றின் பரிணாம சுழற்சியையும் ஆராய்வதன் வழி இந்நூலைப் படிக்கும் நமக்கு ஒரு முழுமையான பூமியின் வரலாற்றை சுருக்கி சொல்வது இதன் மற்றொரு சிறப்பு.

இவ்வளவு சிறப்புகளுக்கிடையேயும், இது யூரேசிய கண்டங்களின் சாதகங்களை தெளிவாக விளக்குவது போல, ஏன் ஐரோப்பா மட்டும் அதில் அதிக சாதகம் கொண்டுள்ளது என்பதை அவ்வளவு தெளிவாக கூறவில்லை.
சுயமுன்னேற்ற நூல்களில் பெரும்பாலும் கூறப்படும் ஒரு வாசகம், “உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய நூல்” என்று. அது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், இந்த நூல் படிப்பவரின் சிந்தனை முறையில் நிச்சயம் ஒரு மாற்றத்தை அல்லது குறைந்தபட்சம் சிறிய தாக்கத்தையாவது ஏற்படுத்தும் என்பது சந்தேகமில்லை.

– அருண் மகாலிங்கம்
mrarunca@yahoo.co.in

Advertisements

கவிதை உதிரி

ஜன்னல் மூடிய என்
அறையிலும் இன்று வெட்டவெளி;
காரணம் நிலவொளி அல்ல;
உன் கண்களின் நினைவொளி.
– குணா.

——-

அடைமழை
முடிந்தபின்,
செடிமழையாக
அலாரம் அடித்தப் பின்
ஒரு அசட்டுத் தூக்கம்.
– உதயகுமார் பாலகிருஷ்ணன்

——

கானல்
குடித்தே
கழிக்கின்றேன்
நீ தந்த
தாகத்தினை.
– முகிழ்

——

ஆற்று நீரில்
தலை முழுகுகிறான்
மணல் திருடன்.
– கி.சார்லஸ்

——

அள்ளி அணைத்து
அமுதூட்டி விட,
ஆயா இருக்கிறாள்
அணைத்து உறங்கிட
அன்னையாய் என்னருகே
அழகு பொம்மை இருக்கிறது
கண்மூடி தூங்கும்போது
கனவிலாவது எனது
அன்னையும், தந்தையும்
எண்ணற்ற கதைகள்
என்னோடுப் பேசிக்கொண்டு
என்னருகே உறங்கட்டும்
எழுப்பாது விடுங்கள் என்னை.
– கலைக்கண்ணன்

——–

“நீயே தான் நானடி!

உன் கம்மலடி,
உன் கண்ணின் கருவிழியடி!
உன் இதழடி,
உன் கன்னக்குழியடி!
உன் பார்வையடி;
அது அன்று என் கர்வத்தை
உன் காலடியில் சுருட்டிக்கொண்ட நொடி,
மனதில் மின்னலாய் பாயந்ததடி!
உன் இமையடி,
அறியாமையிலும் உன்னுள்
என்னை அடக்கிய நீ யாரடி?
என் தவிப்பின் ஏக்கமடி,
அது நீயே தானடி!
திரும்பித் தான் பார்த்தாயடி,
உள்ளில் ஓர் குரலில் ‘நீயே தான் நானடி!
ஆம், ‘நீயே தானடி என் தோழி! நீயே தானடி நான்!
-யுக குணா.

(2014 பிப்ரவரி சஞ்சிகையில் வெளியானவை)

சிறுவர் இலக்கியம்

சமூக வலைத்தளங்களில் நடக்கும் இலக்கிய சண்டைகளின் மத்தியில் அவ்வப்போது ஒருவரின் குரல் சிறுவர் இலக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறது. சென்ற ஆண்டு ஆனந்தவிகடனின் சிறுவர் இலக்கிய விருதையும் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் குழந்தை இலக்கியத்திற்கான விருதையும் வாங்கிய எழுத்தாளர் விழியனின் குரல் தான் அது. ஆங்கிலத்தில் சிறுவர்களுக்கு விதவிதமாக‌ கிடைக்கும் புத்தகங்கள் போல தமிழிலும் கிடைக்க வேண்டும் என்பதே அவரது ஆசை.
vikatan-viruthu
அவரது சின்ன சின்ன ஆசைகள் தான் இன்று எழுத்துக்களாக உருமாறி “மாகடிகாரம்” , “டாலும் ழீயும்”, “பென்சில்களின் அட்டகாசம்”, “வளையல்கள் அடித்த லூட்டி”, “அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை” என்ற குட்டிஸ் புத்தகங்களாக கிடைக்கின்றன.

சென்ற தலைமுறையிலிருந்தே பாட்டி கதைகள் மெல்ல மெல்ல மறைய துவங்கிவிட்டன. இன்று ஒரு குழந்தையிடம் “ஏ…எனக்கு ஒரு கதை சொல்லேன்..” என்று கேட்டால் நமக்கு கிடைப்பது மெளனம் மட்டுமே. அதுவே ஒரு சீரியலின் கதையையோ அல்லது ஒரு திரைப்பாடலையோ அவர்களால் முழுவதுமாக சொல்ல முடிகிறது. ஏனென்றால் அவர்களுக்கு தீனியாக இருப்பது தொ(ல்)லைக்காட்சிகள் மட்டும் தான். இந்த நிலை பெற்றோர்களுக்கும் தான் நீதி கதைகள் தாண்டி புது கதைகளை உருவாக்குவது சிரமம் என்பதை மறுப்பதற்கல்ல. எழுத்தாளர் விழியன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அடிக்கடி சொல்வது இது தான். குழந்தைகளிடம் அதிகம் உரையாட வேண்டும். அதற்கு ஒவ்வொரு பெற்றோரும் கதை சொல்லியாக மாறிட வேண்டும். அதற்கு முதலில் நல்ல வாசகனாக மாறிட வேண்டும். இது தான் வழி என்பதல்ல. இதுவும் ஒரு வழி என்பது தான். அப்படி வாசகனாக மாறி நான் படித்த சில சிறுவர்கள் புத்தகங்களில் ஒன்று தான் “மாகடிகாரம்”.

maakadikaaram_bookஉலகத்தை காக்க ஏதோ ஒரு மூலையில் ஒரு மிகப்பெரிய கடிகாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் அடுத்த காவலனாக கதையின் நாயகன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அவன் நீர்மூழ்கிப் கப்பல் துணைக்கொண்டு அந்த இடத்தினை அடைகிறான். அங்கு அவனுக்கு அந்த கடிகாரம் தான் உலகத்தினை இயக்குவதாக சொல்லப்படுகிறது. அதற்கு சாவிக் கொடுக்கும் பொறுப்பு நாயகன் கையில் வருகிறது. அவன் பொறுப்பினை தவறும் பட்சத்தின் உலகம் அழிந்து விடும் என மாயன் காலண்டர் குறிப்புடன் கதை நகர்கிறது. மகாகடிகாரத்தின் ரகசியத்தினை நாயகன் உடைப்பதுடன் கதை முடிகிறது. மெல்லிய கதையாக இருந்தாலும் சிறுவர்களுக்கு மெல்ல மெல்ல அறிவியல் சார்ந்த அறிமுகங்கள் ஆங்காங்கே கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

DSC00431_thumb2கதையின் துவக்கத்தில் ஏலகிரி மலையில் நாயகன் அப்பாவுடனும் தங்கையுடனும் செல்வதாக வரும்.அந்த வரியை படித்த உடனே நமது முதலாவது மலைப் பயணம் கண்டிப்பாக நினைவில் வரும். நீர்மூழ்கி கப்பல், கதாப்பாத்திரங்கள், மகாகடிகாராத்தின் அமைப்பு என ஒவ்வொன்றையும் நம் மனது கற்பனை செய்து கொள்வதையும் ஒரு கட்டத்தில் அந்த சிறுவனாக நம்மை நாமே உணர்வதும் இந்த புத்தகத்தின் வெற்றி என சொல்லலாம். நமது கற்பனா சக்திகளை இந்த புத்தகம் தூண்டிவிடும் பட்சத்தில் சிறுவர்களது கற்பனா சக்திகளை கண்டிப்பாக தூண்டும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

நாளைய‌ கண்டுப்பிடிப்புகளுக்கும், வளமான சமுதாயத்துக்கும் வித்தாக அமைய போவது குழந்தைகளின் கற்பனா சக்திகளே. அவர்களின் கற்பனா சக்திகள் மென்மேலும் வளர இனி பெற்றோர்கள் கதை சொல்லியாக மாறிட வேண்டும். அதற்கு கண்டிப்பாக விழியனின் புத்தகங்கள் உதவியாக இருக்கும்.

– பிரபு ராஜேந்திரன்,
prabhu.thi@gmail.com

(2014 பிப்ரவரி சஞ்சிகையில் வெளியான கட்டுரை)