பறவைகளும் வேடந்தாங்கலும்

“பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. எந்தப்பறவையும் தன் தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைத்துக்கொள்வது இல்லை. அலைந்து திரிய அலுத்துக்கொள்வது இல்லை. பறவை, வாழ்வை ஒவ்வொரு நாளும் புதிசாகச் சந்திக்கிறது.” – எஸ்.ராமகிருஷ்ணன்

‘வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்’ என்கிறார் பாரதி. இன்று நாம் வானத்தைப் பார்ப்பதே அரிதாகி வருகிறது. பிறகெங்கு பறவைகளைப் பார்ப்பது? இயந்திர வாழ்க்கை தரும் போலியான சுகங்களுக்கு ஆட்பட்டு இயற்கையோடான உறவை இழந்துகொண்டே வருகிறோம். செயற்கையின் பிடியிலிருந்து வாசிப்பும், பயணங்களும் நம்மை மீட்டெடுக்கும் அற்புதக் கருவிகளாகவே இருக்கின்றன. பறவைகளைப் பராக்குப் பார்க்கும் பழக்கம் இளமையிலிருந்தே தொடர்கிறது. புதிதாய் ஏதேனும் பறவைகளைப் பார்க்கும் போதெல்லாம் அப்பறவைகளின் பெயரை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் எனக்குண்டு. அதைக்குறித்து அறிந்தவர்களிடம் கேட்டும், புத்தகங்களில் பார்த்தும் தெரிந்துகொள்வேன்.

தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்கு’ வாசித்து நிறைய கானுயிர்கள் பற்றி அறிந்து கொண்டேன். அதில் தான் கானுயிர் வல்லுநர் மா.கிருஷ்ணனைப் பற்றி வாசித்தேன். பிறகு, எழுத்தாளர் பெருமாள் முருகனின் வலைத்தளத்தில் மா.கிருஷ்ணனின் பறவைகளும் வேடந்தாங்கலும் என்ற நூலின் முன்னுரை வாசித்தேன். எனக்கு அந்தப் புத்தகத்தை உடனே வாசிக்க வேண்டும் போலிருந்தது. புத்தாண்டன்று சென்னையிலிருந்து வந்த சகோதரர் கொடுத்த நூலைப்பார்த்ததும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால், அவர் கொடுத்தது நான் வாங்க நினைத்த அதே புத்தகம். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் பெருமாள்முருகன் இந்நூலை தொகுத்தது கூட இது போன்ற தேடலில்தான். பெருமாள்முருகனின் குலக்குறிச்சின்னமான ‘பனங்காடை’ பற்றி மா.கிருஷ்ணனின் மழைக்காலமும் குயிலோசையும் என்ற நூலில் தேடியிருக்கிறார். அதில் பனங்காடையைப் பற்றிய குறிப்பில்லை. ஒருநாள் கல்லூரி நூலகத்தில் கலைக்களஞ்சியம் வாசித்துக்கொண்டிருந்தபோது அதில் பனங்காடையைப் பற்றிய கட்டுரையை வாசித்திருக்கிறார். அந்த எழுத்துநடை மா.கிருஷ்ணனுடையது போல இருக்கிறதே என எண்ணி ஆசிரியர் குறிப்பை பார்த்தால் அதை எழுதியவர் மா.கிருஷ்ணன்தான். அவர் எழுதிய இதுபோன்ற கட்டுரைகளை எல்லாம் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வர முதல்தொகுதியிருந்து பத்தாம் தொகுதிவரையுள்ள கலைக்களஞ்சியங்களை எல்லாம் தேடி 59 கட்டுரைகளைத்தொகுத்து விட்டார். அத்துடன் கானுயிர் வல்லுநர் தியடோர் பாஸ்கரன் கொடுத்த மா.கிருஷ்ணனின் ‘வேடந்தாங்கல் நீர்ப்பறவைக் காப்புச்சாலை’ என்ற சிறுநூலையும் சேர்த்து மொத்தமாக ‘பறவைகளும் வேடந்தாங்களும்’ என்ற நூலை காலச்சுவடு பதிப்பகம் மூலம் பதிப்பித்துள்ளார்.

பெருமாள்முருகன் இந்நூலை மிக அற்புதமாக தொகுத்து பதிப்பித்திருக்கிறார். கட்டுரைகளை அகர வரிசையில் தொகுத்திருக்கிறார். இறுதியில் உள்ள குறுநூலான ‘வேடந்தாங்கல் நீர்ப்பறவைக் காப்புச்சாலை’ என்ற கட்டுரையும் அகர வரிசைப்படி இறுதியாகவே வந்தமைகிறது. இந்நூலின் இறுதியில் பறவைகளின் ஆங்கிலப்பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொருளடைவில் இந்நூலிலுள்ள பெயர்கள் எந்தப்பக்கங்களில் உள்ளன என்று தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக மாம்பழச்சிட்டு 90,91,92.

Paravaikalum Vedanthankalum

மா.கிருஷ்ணன் சக உயிர்கள் மீது அன்பு கொண்ட நல்ல மனிதர், அற்புதமான ஓவியர் மற்றும் புகைப்படக்கலைஞர். ஒவ்வொரு கட்டுரையிலும் தன் எழுத்தால் அப்பறவைகளை நம் கற்பனைக்குள் கொண்டு வந்துவிடுகிறார். பறவைகளைப் பற்றிய அவரது வர்ணனைகளை எழுத்துச்சித்திரமென்றே சொல்லலாம். பறவைகளின் சித்திரங்களையும் அவரே வரைந்திருக்கிறார். மைனாவை குறித்த அவரது அறிமுகத்தைப் பாருங்கள்:

“காப்பிக்கஷாய நிற உடலும் கருந்தலையும் இறக்கைகளிலும் வால் நுனியிலும் வெள்ளைப்பட்டைகளும் மஞ்சள்நிற அலகும் கால்களும் வாய்ந்த பாங்கான மைனா எல்லோருக்கும் தெரிந்த பறவை. இதுவேதான் நாகணவாய் என்ற புள்.”

வாசிக்கும் போதே மைனா நினைவில் சிறகையசைக்கத் தொடங்கிவிடுகிறது. இப்படி ஒவ்வொரு பறவையைப் பற்றியும் ஆழ்ந்த அனுபவத்துடன் எழுதியிருக்கிறார். இளமைக்காலத்தில் ரெட்டை மைனா பார்த்தால் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். அதனால் எங்காவது மைனா வழியில் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே செல்வேன். மா.கிருஷ்ணன் சொல்வதுபோல மைனா எப்போதும் இணையுடனோ, குழுவாகவோதான் இருக்கும்.

மைனாவைப்போலத்தான் தவுட்டுக்குருவியும் கூட்டங்கூட்டமாக திரியும். ‘பறவைக் கூட்டங்களின் ஒற்றுமையின் அறிகுறி கூக்குரல். கீச்சுக் குரலில் ஒன்றோடொன்று சம்பாஷிப்பதுபோல் தவிட்டுக்குருவிக் கூட்டங்கள் சதா சப்தமிடும்’ என மா.கிருஷ்ணன் சொல்வது போல நானே பலமுறை தவுட்டுக்குருவிகள் கூட்டமாகக் கூத்தடிப்பதைப் பார்த்திருக்கிறேன். சிலநேரங்களில் தவுட்டுக்குருவி ஒரமாக நிற்கும் வண்டிக்கண்ணாடியில் தனியே தன்நிழலோடு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பறவைகளைக் கூட்டமாக பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியை சொல்லில் அடக்க முடியாது.

மா.கிருஷ்ணனின் புத்தகத்தை வாசித்தப் பிறகுதான் பறவைகள் குறித்து எனக்கிருந்த சில அறியாமைகள் விலகின. செம்போத்தை ஆண்குயில் என்றெண்ணியது, மடையானை கொக்கு என்று எண்ணிய மடையன் நான் என்பதெல்லாம் இந்நூலை வாசித்துதான் அறிந்து கொண்டேன். செம்போத்து குயிலினம் ஆனாலும் குயிலைப்போல அல்லாமல் தன்னுடைய முட்டையைத்தானே அடைக்காக்கும். மடையானை குருட்டுக்கொக்கு என்று சொல்வார்களாம். இது நிலத்தின் நிறத்திலேயே இருப்பதால் நமக்கு இது அமர்ந்திருப்பது தெரியாது. அருகில் செல்லும்போது அது பறக்கும்போதுதான் அங்கு மடையான் அமர்ந்திருந்ததே தெரியும். புறா, கொக்கு, சிட்டு போன்றவற்றில்தான் எத்தனை வகைகள் இருக்கின்றன. வாசிக்கும் போதுதான் ஒவ்வொன்றிலும் எவ்வளவு வித்தியாசமான வகைகள் இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.

ஆட்காட்டிக்குருவி, இருவாய்க்குருவி, உழவாரக்குருவி, ஊர்க்குருவி, கரிக்குருவி, கருங்குருவி, கல்லுக்குருவி, கீச்சாங்குருவி, கொண்டைக்குருவி, தவிட்டுக்குருவி, தினைக்குருவி, தூக்கணாங்குருவி, பட்டாணிக்குருவி, வாலாட்டிக்குருவி என குருவிகளில் மட்டுமே பல வகைகள் உள்ளன. இப்படி ஒவ்வொரு குருவியைக் குறித்தும் தனித்தனியாக அவற்றின் வித்தியாசங்கள் என்ன என்பதை அழகாக விவரிக்கிறார்.

பறவைகளைக் குறித்த நாம் அறியாத பல விசயங்கள் இந்நூலில் உள்ளன. ஏதோ கலைக்களஞ்சியத்திற்குத்தானே கட்டுரை எழுதுகிறோம் என்றில்லாமல் ஒவ்வொரு கட்டுரையிலும் தன் சொந்த அனுபவத்தில் பல அரிய விசயங்களை தொகுத்திருக்கிறார். தூக்கணங்குருவிக்கூடு எல்லாப்பறவைகளின் கூடை விட சற்று வித்தியாசமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், சிலர் தூக்கணங்குருவியையே பழக்கி ஏடுகளைப் புரட்டிப்பார்த்து சோதிடம் சொல்ல பயன்படுத்துவார்களாம். அதே போல பச்சைக்கிளியைப் பேச வைக்கலாம் என்று தெரியும். மைனாவையும் அது போல் பேசப் பழக்கலாமாம். ஆனால், மைனாவைவிட அதன் இனமான மலைநாகணவாய்க்கு பேச்சு கற்றுக் கொடுத்தால் வியக்கத்தக்க தெளிவுடன் பேசுமாம். மற்ற பறவைகளைப் போல இது கூவிக்காட்டுமாம்.

இந்தியாவில் உள்ள வனவிலங்குப் புகலிடங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இளமையை அதிகரிக்கும் மந்திர சக்தி காண்டாமிருகத்தின் கொம்புக்கும், மற்ற உறுப்புகளுக்கும் உண்டு என்ற மூடநம்பிக்கையால் அது அதிகளவில் வேட்டையாடப்பட்டு வந்த போது அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள கசிரங்கா புகலிடத்தில் இதை காப்பதற்காக எடுத்த முயற்சியின் விளைவால் இவை கொஞ்சம் பிழைத்திருக்கின்றன. இந்தியாவில் அப்போது இருபது புகலிடங்கள் இருந்தனவாம்.

‘வேடந்தாங்கல் நீர்ப்பறவைக் காப்புச்சாலை’ என்ற புத்தகம் 1961ல் கான்துறையால் வெளியிடப்பட்டது. இந்நூலில் வேடந்தாங்களின் பெயர்க்காரணம், நீர்ப்பறவைகளின் வாழ்க்கைமுறை, பறவைக்காப்புச் சாலையின் வரலாறு மற்றும் இங்கு கூடுகட்டும் பறவைகளைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. இதிலுள்ள புகைப்படங்களை மா.கிருஷ்ணனே எடுத்திருக்கிறார். வேடந்தாங்கலுக்கு அந்த பெயர் வந்தது குறித்து பலரும் தவறான தகவல்களை கூறிக்கொண்டு வர மா.கிருஷ்ணன் மிக அருமையாக அதன் பெயர்க்காரணத்தை விளக்குகிறார். ‘தாங்கல்’ என்ற சொல் ஊரையடுத்த தடாகத்தையோ குளத்தையோ குறிக்கும். வேடன் என்ற சொல் இராமாயணக் கதையில் வரும் வேடர்தலைவன் குகனைக் குறிக்கும். ஏனென்றால், இந்த ஊருக்கு அருகில் சித்திரக்கூடம் என்ற ஊர் இருக்கிறது. இராமாயணக்கதையில் சித்திரக்கூடத்தில்தான் குகன் வசிப்பான்.

வேடந்தாங்கலில் நீர்ப்பறவைக்காப்புச்சாலை ஆங்கிலேயர் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டுவிட்டது. கி.பி.1798ல் இந்த ஊர்மக்கள் இங்கு பறவைகளை யாரும் வேட்டையாடக்கூடாது என்று அப்போது செங்கல்பட்டு மாவட்டத்திற்கு முதல் கலெக்டராக வந்த ‘லயனல் ப்ளேஸி’டம் வேண்டுகோள் வைக்க அவரும் அதற்கான ஒரு உரிமையை விளக்குமொறு உறுதிப் பத்திரத்தை தந்திருக்கிறார். பறவைகளின் எச்சத்தால் நிரம்பிய நீரைக் கொண்டு பாசனம் செய்வதால் இவர்களுக்கு நல்ல விளைச்சலும் கிடைக்கிறது.

ஏரியின் நடுவிலுள்ள கடப்பமரத்தில்தான் பறவைகள் வந்து தங்குகின்றன. இங்கு நவம்பர் முதல் மார்ச் வரை இருந்து தங்கள் இனம் பெருக்கி செல்கின்றன. நீர்க்காகங்கள், பாம்புத்தாரா, வெண்கொக்குகள், உண்ணிக்கொக்கு, மடையான், வக்கா, நரையான், நத்தைக்குத்தி நாரை, துடுப்புமூக்கு நாரை, கங்கணம் ஆகிய பறவைகள் இங்கு வந்து கூடுகட்டும் பறவைகள். இன்னும் நிறைய பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. பாம்புத்தாரா என்னும் பறவையின் தலையமைப்பு தொலைவிலிருந்து பார்க்கும்போது பாம்பு போலவே இருக்கும். உண்ணிக்கொக்கை ‘மாட்டுக்கொக்கு’ என்றும் அழைக்கிறார்கள். இது மாட்டுமந்தைகளைப் பின்பற்றிச் சென்று பூச்சிகளை பிடித்து உண்ணும். கங்கணம் என்னும் பறவையை வேடந்தாங்கலில் ‘அரிவாள்மூக்கன்’ என்றழைக்கிறார்கள்.

பறவைகள் குறித்து அறிந்து கொள்வதற்கு இந்நூல் ஒரு அற்புதமான கையேடு. நம்முடைய இளைய தலைமுறையிடம் பறவைகளை அறிமுகப்படுத்துவது நமது கடமை. இல்லையென்றால் அலைபேசியை ஐந்து நிமிடத்தில் அக்குவேறு ஆணிவேராகப் அலசிப்பார்ப்பவர்களிடம் குருவி மற்றும் மைனாவைப் பற்றி கேட்டால் ஏதேனும் நடிகர் மற்றும் நடிகை பெயரைச் சொல்வார்கள். இதுபோன்ற இழிநிலை வராமலிருக்க இயற்கையோடான தொடர்பு அவசியம். பறவைகளுக்கு தினமும் உணவு மற்றும் குடிநீர் வைப்பது நமது கடமை. இதை பரிகார நோக்கிலோ, பரிதாப நோக்கிலோ செய்யவேண்டாம். நிறைய மரங்களை வளர்ப்போம், நீர்நிலைகளை மீட்டெடுப்போம், பறவைகளை வேட்டையாடுவதைத் தடுப்போம். ஏனென்றால் பறப்பது என்பது சுதந்திரத்தின் குறியீடு.

எங்கோ வாசித்த வரிகள் ஞாபகம் வருகிறது: ‘எந்தப்பறவையும் உணவு தேடி மட்டும் பறப்பதில்லை. பறப்பது சுகம், பறப்பது கொண்டாட்டம், பறப்பது தியானம், பறப்பது வாழ்க்கை’. பறவைகளைப் பற்றி வாசிப்பதோடு நில்லாமல் அவைகளை ஆவணப்படுத்துவதும், காப்பாற்றுவதும் நமது கடமை. நம் வீட்டுக்கருகில் திரியும் பறவைகளைக் கூடப் பார்க்க நேரமில்லையென்றால் சங்கடந்தான். ‘பறவைகளோடு இயைந்து வாழும் மகிழ்ச்சி பெருகும் வாழ்வை அவாவும் உள்ளங்களுக்கு மா.கிருஷ்ணனின் எழுத்துகள் நெருக்கமானவை’ எனப் பெருமாள்முருகன் சொல்வது முற்றிலும் உண்மை.

– சித்திரவீதிக்காரன்
maduraivaasagan@gmail.com

(2014 மார்ச் சஞ்சிகையில் வெளியான கட்டுரை)

Advertisements