குழந்தைப் பாடல்கள்

பால் பல்லு

பால் பல்லு விழுந்தா புது பல்லு முளைக்கும்
ஆடுற பல்லு கொஞ்சமா வலிக்கும்

விழுந்த பின்னாலே அழகா இருக்கும்
பேசுற போது காத்து அடிக்கும்
சிரிக்கிற போது பொக்கையா தெரியும்

ஒவ்வொன்னா விழுந்து வரிசையா முளைக்கும்
முளைக்குற பல்லு என்னைக்கும் நிலைக்கும்

ராத்திரி காலை விளக்கணும் பல்லை
சுத்தமா வைச்சா சொத்தையே  இல்லை.

குட்டி மீனு

சின்ன குட்டி மீனு ஒன்னு ஆத்தில் துள்ளுது
காணோமுன்னு கடலுக்குள்ள அம்மா தேடுது

நல்ல தண்ணி சேராதுன்னு அம்மா பதறுது
உப்பு தண்ணி பிடிக்கலைனு குட்டி சொல்லுது

மூச்சு அடைக்கும் வேண்டாமுன்னு அம்மா கதறுது
புரிஞ்சிகிட்ட குட்டி மீனு கடலில் பாயுது

அம்மா மீனு அழுகையெலாம் கடலா கரிச்சது
குட்டி மீனு சேட்டை இப்ப அடங்கி போனது

கடலும் ஆறும் சேருமிடம் முகத்துவாரமாம்
சொன்ன பேச்சை குட்டிங்க கேட்டா சந்தோஷமாம்

– ராஜேஷ்
2018 பிப்ரவரி ‘சஞ்சிகை’ இதழில் வெளியான குழந்தைப் பாடல்கள்

Advertisements

ராசபார்ட்டின் சோககீதம்

அரிதாரம்பூசி அரங்கம் ஏறினால்
ஆரவாரங் கொள்ளும் கூடிய கூட்டம்
பட்டுக்கரை வேட்டியும்
பட்டைத்திருநீறும் பார்த்தால்
கைகுவித்து வணங்கும் பதினெட்டுப் பட்டியும்
தோள்பட்டை வரை தொங்கும் சிகைகண்டால்
கன்னியர் மனதிலும் புகையும் பொறாமை
வேடனாய் விருத்தனாய்
வள்ளியோடு தோன்றினால்
பரவசமாகும் பக்திப் பழங்கள் யாவும்
கட்டபொம்மனாகி கழுத்து நரம்பு புடைக்க
வெள்ளைத் துரைக் கெதிராய் வீரவசனம் பேசினால்
சட்டென எழுந்து கொள்ளும்
சாகக்கிடக்கும் கிழங்கட்டையும்
இங்ஙனம் சென்ற திசையெல்லாம்
செயக்கொடி நாட்டிய
‘ராசபார்ட்’ ரங்கசாமி
யாருமற்ற பொட்டலில் இசைக்கிறார்
தன் கந்தர்வ கானத்தை
செந்நிற விழிகளில் கண்ணீர் மல்க
ஆடலரசிகளும் அபிநய சரஸ்வதிகளும்
அலங்கரித்த திருவிழா மேடைகளை
மதன மோகினிகளும் மந்தகாசக் காமினிகளும்
கபளீகரம் செய்துவிட்ட கடுஞ்சோகத்தில்.

ஸ்ரீதர் பாரதி
2018 பிப்ரவரி சஞ்சிகையில் வெளியான கவிதை

தேயிலை மனிதர்கள்: அத்தியாயம் – 2

தேயிலை மனிதர்கள் முதல் அத்தியாயத்தைப் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்

அத்தியாயம் – 2

மலையக மக்கள், 1970 களில் இலங்கையின் துரோகத்தில் இருந்து தமிழ்நாட்டின் துரோகத்துக்கு கைமாற்றி விடப்பட்டார்கள்.

இங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் சொந்த ஊருக்கு திரும்புதல் என வந்தவர்களுக்குத் தாயகம் இரண்டு பாதைகளைக் காட்டியது. சொத்தும் இல்லாமல் பாதி சொந்தங்களையும் இலங்கையிலேயே விட்டு பிரிந்து வந்தவர்கள் மூன்று தலைமுறையாகப் பழகிப்போன தொழிலைத் தொடர தேயிலைத் தோட்டங்களுக்கு பயணித்தார்கள். முன்னோர்கள் விட்டு சென்ற சொத்துக்களையும் ஊரில் உள்ள சொந்தங்களையும் நம்பியவர்கள் சொந்த ஊருக்குப் பயணித்தார்கள்.

Read More »